05 ஜூலை 2013

அய்யா GMB அவர்களுடன் சில நிமிடங்கள் ...


      கடந்த இரண்டு வருடங்களாக, நான் வலைப் பூவில் தொடர்ந்து எழுதி வருவதைத் தாங்கள் நன்கறிவீர்கள்.

     என் கரங்களைப் பற்றி இழுத்துச் சென்று, என் வாழ்வின் பாதையை மாற்றியது வலைப் பூ. வலைப் பூவில் தயங்கித் தயங்கிக் காலடி எடுத்து வைத்துத் தவழத் தொடங்கிய என்னைக் கைக் கொடுத்துத் தூக்கி, நடை பயில வைத்த பெருமை, வலைப் பூ நண்பர்களாகிய தங்களையேச் சேரும்.

     வலைப் பூ நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில பெரிதும் மகிழ்கின்றேன்,

     நேருக்கு நேர் சந்திக்க இயலாவிடினும், நண்பர்கள் ஒவ்வொருவரையும் எழுத்தின் வழி சந்திப்பதில் ஏற்படுகின்ற ஆனந்தமே அலாதி.

                     முகநக நட்பது நட்பன்று – நெஞ்சத்து
                     அகநக நட்பதே நட்பு
என்ற  குறளின் வரிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம், நினைக்கும் பொழுதெல்லாம், வலைப் பூ வாசகர்களுக்காகவே வள்ளுவர் இக்குறளினை எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

     கடல் பல கடந்து உலகின் எம் மூலையில இருந்தாலும், இராமன் கண்ட சேது பாலம் போல், வலைப் பூ தந்த எழுத்துப் பாலத்தின் வழி இணைந்தவர்கள் அல்லவா நாம். முகமறியாத நெஞ்சத்து அகநக நட்பினர் நாம், என்பதில் பெருமை கொள்ளுவோம்.

     எழுத்துக்களின் வழி நட்பு பாராட்டி, மகிழ்ந்த ஒருவரை, எதிர்பாராமல் நேரில் சந்திக்க நேர்ந்தால், ஏற்படும் மகிழ்விற்கு எல்லைதான் ஏது.

    அப்படி ஒரு வாய்ப்பு, ஒரு மகிழ்ச்சி எனக்குக் கிட்டியது. அதனைத் தங்களுடன் பரிந்து கொள்வதில், முரசம் கொட்டி முழங்குவதில் பெருமையடைகின்றேன்.

     கடந்த 27.6.13 அன்று திரு ஹரணி அவர்களின் நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கி முத்தெடுத்த எனது அனுபவத்தினை பகிர்ந்திருந்தேன். மறு நாள் 28.6.13 மாலை, பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கம் போல் வலைப் பூவில் நுழைந்தேன்.



      திரு. ஹரணி பற்றிய பல செய்திகள் புதிது. இன்னுமா அவர் தினமும் அண்ணாமலைப் பல் கலை கழகத்துக்கு தினமும் பயணிக்கிறார்.? அவரது மின் அஞ்சல் மற்றும் தொலை பேசி எண் எதிர்பாராமல் கிடைத்தது. உங்களுடைய தொலை பேசி எண் தெரியவில்லையே. வருகிற வாரம் திருச்சி , வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் என்று பயணிக்கத் திட்டம். என் தொலைபேசி எண். 080-28394331 லாண்ட் லைன் எண். .

    GMB  அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன், மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க, கைகளோ அணிச்சையாய் அலைபேசியை எடுத்து, எண்களைத் தட்டின.

     பெங்களூரில் தொலை பேசி ஒலிக்கும் ஒலி கேட்கிறது. GMB அய்யா அவர்களின் காந்தக் குரலை, நேசக் குரலை முதன் முறையாக்க் கேட்டேன்.

     4.7.13 வியாழக் கிழமை காலை 7.15 மணி. கரந்தைத் தமிழ்ச் சங்க வாயிலில், உமாமகேசுவரனாரின் திரு உருவின் காலடியில் காத்திருந்தேன். சிறித நேரத்தில் காரொன்று வந்து நிற்க, மலர்ந்த முகத்துடன் சிரித்தவாறு GMB  அய்யா.

       அய்யா, அம்மா மற்றும் அவர்களின் திருமகனார். வணக்கம் கூறி வரவேற்றேன்.

     அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நால்வரும், திரு ஹரணியின் இல்லத்தில் இருந்தோம். ஹரணி அவர்கள் வீட்டின் மாடியில் இருந்த தனது அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார்.

          புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
          புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்
என்பார் பாரதிதாசன்.

      பாரதிதாசன் கூறும் புத்தக்க் சாலைக்குள், புத்தகச் சோலைக்குள், நுழைந்ததைப் போல் ஓர் உணர்வு. அறையெங்கும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள் மட்டுமே.

கையளவு கற்க ஆசை, கடுகளவிலேய உழன்று கொண்டிருக்கிறேன்
என்பார் ஹரணி. இதுவே கடுகளவென்றால், எனது அறையினை நினைத்துப் பார்த்தேன். மௌனமாய் அமர்ந்தேன்.




     உணவருந்த ஹரணி அவர்கள் அழைத்த போது, அய்யா சிரித்துக் கொண்டே மறுத்தார். உணவு வேண்டாம். காபி மட்டும் போதும். உங்களை காணவும், கண்டு பேசி மகிழ்ந்திடவுமே வந்தேன். உணவு உண்ண அமருவோமேயானால், நாம் பேசும் நேரம் குறைந்து விடுமல்லவா? ஒரு நொடியினைக் கூட வீணடிக்காமல் உரையாடி மகிழ  விரும்புகின்றேன்.

      பெங்களூரில் இருந்து திருச்சிக்கு, தொடர் வண்டியில் வந்து, பின்னர் திருச்சியிலிருந்து வைத்தீசுவரன் கோயிலுக்குப் பேருந்தில் செல்வது என்று முடிவு செய்திருந்தோம்.

     ஆனால் பேருந்தில் வந்தால் உங்களைச் சந்திக்க இயலாமல் போய் விடுமே என்றுதான், பெங்களூரில் இருந்து காரிலேயே வந்து விட்டோம் என்றார்.

     நெகிழ்ந்து போனோம்.



     நேற்று திருச்சியில் திரு வை.கோபால கிருஷ்னன் அவர்களையும், திரு தி. தமிழ் இளங்கோ அவர்களையும் சந்தித்தேன். திரு ரிஷிபன் அவர்களும், திரு ராமமூர்த்தி அவர்களும் அலைபேசியில் பேசினார்கள் என மகிழ்ந்து கூறினார்.

      பொறியாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று ஆண்டுகள் 16 கடந்த போதிலும், 16 வயது இளைஞராகவே GMB  அய்யா அவர்கள் காட்சியளித்தார். ஆம் அவரின் அனுபவத்தின் வயது 74, உள்ளத்தின் வயதோ என்றும் 16தான்.

     அய்யா அவர்களின் மகன் கூறினார். அப்பாவிற்கு எழுதும் பழக்கம் உண்டு. நிறைய எழுதுவார். வாழ்வியல் அனுபவத்தை, கேட்டதை, பார்த்ததை, ரசித்ததை, படித்ததை என நிறைய எழுதுவார். நான்தான் ஐந்து வருடங்களுக்கு முன்னர், ஒரு மடி கணினியை கொடுத்து, இதில் எழுதிப் பாருங்களேன் என்றேன். அன்று தொடங்கியவர் என்றார்.

      அம்மா அவர்கள் கூறினார், காலையில் எழுந்த்தும் இவர் காபி குடிக்கிறாரோ இல்லையோ? நேராக கணினிக்குச சென்று விடுவார்.

      தமிழ் தட்டச்சு தெரியுமா? என்று கேட்டோம். அய்யா கூறிய பதில் எங்களை வியப்பின விளிம்பிற்கே கொண்டு சென்றது.

      தெரியாது.

     அடுத்த கேள்வியைக் கேட்க, எங்களுக்கு வார்த்தையே வரவில்லை. அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

      எனக்குத் தமிழ் தட்டச்சுத் தெரியாது. கணினியின் விசைப் பலகையில் இருக்கும், ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் உரிய, தமிழ் எழுத்தை பலவாறு முயன்று, மனதில் ஒரு பதிவாக பதிய வைத்துக் கொண்டேன். வலது கையின் ஆள் காட்டி விரல் ஒன்றினை மட்டுமே பயன்படுத்தி, ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்வேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.

     வலைப் பூவில் ஒவ்வொரு பதிவையும், நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குக்  குறையாமல் எழுதுகிறீர்களே, ஒரு பதிவை முழுமையாய் தட்டச்சு செய்து முடிக்க, எவ்வளவு நேரமாகும் என்றோம்.

     ஒரு பதிவை தட்டச்சு செய்ய எனக்கு ஒரு நாளாகும். காலை முதல் மாலை வரை, ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்வேன்.

     பிரமித்துப் போய்விட்டோம். அய்யா அவர்களின் ஆர்வத்திற்கும், மனம் தளரா, விடா முயற்சிக்கும், நாமெல்லாம் தலை வணங்கியே ஆக வேண்டும்.

அய்யா, அம்மா, ஹரணியின் மகன் குகன், ஹரணி மற்றும் நான்

      அப்பொழுதுதான் ஒரு உண்மை பளிச்சென்று விளங்கியது. ஊன்று கோலை நாட வேண்டிய வயதில், கம்பீர நடைபோடும் காரணம் புரிந்தது. இவரது கரமும் மனமும், எழுது கோலை அல்லவா இறுகப் பற்றியிருக்கிறது.

     தூயஉள்ளம்  அன்புள்ளம்  பெரிய உள்ளம்
           தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
      தாயுள்ளம்  தனிலன்றோ  இன்பம்  ஆஙகே
           சண்டையில்லா  தன்னலந்தான்  தீர்ந்த தாலே

என்று முழங்குவார் பாரதிதாசன். அய்யா அவர்களின் வலைப் பூவில் நுழைந்து, அவர் பற்றிய தன்னிலை விளக்கத்தைப் பார்ப்போமானால், மனதினை மகிழச் செய்யும் வாசகம் ஒன்றினைக் காணலாம்

When are we going to feel all are equal and love all?

      ஆம் உண்மைதான். தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்று கூறும் பாரதிதாசனின், பாடல் வரிகளுக்கு உரு கொடுத்த தாயுள்ளத்திற்குச் சொந்தக்காரர்தான் GMB  அய்யா அவர்கள்.

வாழ்வின் மறக்க இயலா சந்திப்பு, இச்சந்திப்பு.

27 ஜூன் 2013

கரந்தை - மலர் 14


------- கடந்த வாரம் -----
திரிப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள், தன் உரையில், இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத் தக்கதாகும் என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள்

     தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் மூன்று கூறுகளை உடையது. முத்தமிழ் என்று போற்றப்படும் தமிழில், பழமையான இயற்றமிழ் நூல்கள் கிடைத்த அளவிற்கு, இசைத் தமிழ் நூல்களும், நாடகத் தமிழ் நூல்களும் கிடைத்தபாடில்லை. இக்குறையினைப் போக்க பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் நாடகத்தையும், பரிதிமாற் கலைஞர் அவர்கள், மானவிஜயம் என்னும் நாடகத்தையும், மறைமலை அடிகள் அவர்கள் சாகுந்தலம் என்னும் நாடகத்தையும் எழுதி நாடகத் துறைக்கு வித்திட்டார்கள்.
 
பரிதிமாற் கலைஞர் - சுந்தரம் பிள்ளை - மறைமலை அடிகள்
     சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் சிலப்பதிகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதனால்தான் தமிழ்ப் பெருமன்றம் அமைத்த வேளையில், தமிழ்ப் பெருமன்ற மேடையினைக் கூட, சிலப்பதிகாரத்தில் மாதவி நடனமாடிய மேடையின் அளவினை ஒத்த வகையில் அமைத்துப் பெருமிதம் அடைந்தார்.
 
வேங்கடாசலம் பிள்ளை
     உமாமகேசுவரனாரின் விருப்பத்திற்கு இணங்க கவிஞர் அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி வழங்கினார்.  சிலப்பதிகாரத்தில் குடுகுடுப்பைக் காரன் பாத்திரத்தை புதிதாய் உருவாக்கி, சுவையூட்டியதோடு, அப்படைப்பின் வாயிலாகவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் ஊட்டினார். சிலப்பதிகார நாடகத்தில், குடுகுடுப்பைக் காரன், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே கூறுவது போல், ஒரு காட்சியினை அமைத்தார். இனி குடுகுடுப்பைக் காரன் கூறுவதைக் கேளுங்கள்,


    ஓ, ஓடிவாடி, ஓடிவாடி உதிரக் காட்டேரி, இரத்தக் காட்டேரி, உண்மையைச் சொல்லடி, ஒளிக்காமற் சொல்லடி, மறைக்காமற் சொல்லடி, இந்த சங்கத்துக்கு அதிட்டம் வருகுது, அதிட்டம் வருகுது, வந்திட்டுது, வந்திட்டுது. இந்தச் சங்கத்துக்கு அதிட்டம் வந்திட்டுது. பணம் வருகுது, பணம் வருகுது, ஆயிரக் கணக்கா, இலட்சக் கணக்கா பணம் வருகுது. பணம் வருகுது, பணம் வருகுது. இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், விழித்துக் கொண்டாங்கள், விழித்துக் கொண்டாங்கள். இனிமேல் ஊர் ஊராய் போவாங்கள், கொடுத்ததை வாங்குவாங்கள், காற்காசு வாங்குவாங்கள், ஒரு பிடி அரிசி வாங்குவாங்கள், எதைக் கொடுத்தாலும் இன்பமாய் வாங்குவாங்கள். ஓ அதிட்டம் வந்திட்டுது. காசு பணம் ஆகுது, பணம் பத்து ஆகுது, பத்து நூறு ஆகுது, நூறு ஆயிரம் ஆகுது, ஆயிரம் இலட்சம் ஆகுது. இந்த நாட்டிலே இருக்கிற பணக்காரரு, நிலக்காரரு, சொந்தக்காரரு, சுகக்காரரு,, பெரிய வக்கீல்மாரு, உத்தியோகத்தரு,  பெரிய பெரிய மடத்துக்காரரு, இவர்களாலே ஒரு காசுமில்லை, ஒரு தூசுமில்லை. இவர்கள் பணம் தாசிக்காகுது, வேசிக்காகுது, கோர்ட்டுக்காகுது - அது பாவச் சொத்து. அந்த பாவச் சொத்து, எப்படியாவது போகட்டும். இந்த சங்கத்துக்கு வேண்டாம். அதிலேயும் நல்லவங்க இருக்காங்க, அவங்க கொடுக்குறாங்க, கொடுப்பாங்க.

    இப்பகுதி, நாடகத்தைப் பார்க்கும் இளைஞர்களுக்குச் சுவையூட்டுவதற்காக எழுதப்பட்டது என்று கூறுவார் கவிஞர். ஆயினும் அது மட்டுமே உண்மையன்று. தமிழ் நாட்டுச் செல்வர்கள், தம்முடைய காசு, பணத்தை தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், தாசிக்கும், வேசிக்கும் செலவிடுவதைச் சுட்டிக் காட்டிச் சாடுகிறார். உண்மையான தமிழ் ஆர்வமுடைய ஏழை, எளியவர்களிடம் நிதி திரட்ட வேண்டும். அதனைக் கொண்டு, சங்கத்தை ஒரு பெரிய பல்கலைக் கழகமாக வளர்க்கின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று சங்க  உறுப்பினர்களுக்கு எழுச்சியினையும், கடமை உணர்ச்சியினையும் ஊட்டவே இப்பகுதி எழுதப் பெற்றுள்ளது.

     கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களின் இச்சிலப்பதிகார நாடகமானது, பதினான்காம் ஆண்டு விழாவில், செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி மாணவர்களால், நாடகமாக நடிக்கப் பட்டது.

     இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தை நாடகமாய் எழுதி அரங்கேற்றியதைத் தொடர்ந்து, இன்னொரு காப்பியமாகிய மணிமேகலையையும் நாடக வடிவில் எழுதினார். இந்நாடகமானது தனியொரு நூலாக, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

தமிழ்ப் பல்கலைக் கழக முயற்சிகள்

     ஆந்திரர் தங்கள் மொழிக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் கண்டாற்போல, வங்காளிகள் தங்கள் மொழிக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் பெற்றார்போல, உசுமானியர் தங்கள் மொழிக்கென உசுமானியப் பல்கலைக் கழகம் கண்டாற் போலத், தமிழரும் தங்கள் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து நடத்த வேண்டும் என்று முதன் முதலில் முழங்கியவர், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்களேயாவார்.

      உமாமகேசுவரனார் உள்ளத்து முகிழ்த்தெழுந்த, தமிழ்ப் பல்கலைக் கழக ஆசையினை, தமிழர்தம் தேவையினை நிறைவேற்றும் முகத்தான், கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்களில் தீர்மானங்கள் பலவற்றை நிறைவேற்றி, அரசியலாருக்கு அனுப்பி வற்புறுத்தினார். அரசியலார் இத் தீர்மானத்தை நிறைவேற்ற முயலாமை கண்டு வருந்தி, இனியும் வாளாவிருத்தல் கூடாதென்று எண்ணி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், திருவனந்தபுரத்திலும் மேலும் இலங்கையிலும் உள்ள தமிழறிஞர்களைக் கொண்டு, மாவட்ட வாரியாக பல குழுக்களை அமைத்து, அவ்வப்பகுதி மக்களின் ஆதரவினைப் பெற்று அரசியலாரை வற்புறுத்தவும் ஏற்பாடுகளைச் செய்தார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அவர்கள் அற நிலையத்தில், சங்கத்தின் காப்பாளர்களுள் ஒருவராகிய, கீழையூர் சிவ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக் கழகம் இருக்க வேண்டுவது இன்றியமையாதென்று இக் கூட்டத்தார் துணிபுற்று, இம் முயற்சியில் ஈடுபட வேண்டுமென, தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதுடன், இதனை மேற்கொண்டு செய்விக்க வேண்டுமென அரசியலாரையும் வேண்டிக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் உமாமகேசுவரனார் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.


     
இத்தீர்மானமே, தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டுமென, தமிழ்கூறும் நல்லுலகில் இயற்றப்பட்ட முதல்  தீர்மானமாகும்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா

                      --------------------------------------------------------------- 



ஹரணியின்

நத்தையோட்டுத் தண்ணீர்

     இன்று (27.6.2013)  வியாழக் கிழமை காலை 11.30 மணியளவில், ஆசிரியர் ஓய்வு அறையில் அமர்ந்திருந்தேன். ஜெயக்குமார். குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிரே ஹரணி. வாருங்கள் வாருங்கள், அமருங்கள் என மகிழ்வோடு வரவேற்றேன். ஒரு நிமிடம் வாருங்கள் என வெளியே அழைத்துச் சென்றார். தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து, நூலொன்றினை எடுத்து வழங்கினார். மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.


     
ஹரணி. தமிழ்  கூறும் நல்லுலகில் அனைவரும் அறிந்த பெயர். வலைப் பூ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். ஹரணி அவர்கள் குறித்து எனக்கு ஒரு தனித்த பெருமை உண்டு. அவரும் கரந்தை. நானும் கரந்தை. சிறு வயது முதலே அவருடன் நல்ல பழக்கமுண்டு.

     ஹரணி அவர்கள் பற்றி பலரும் அறியாத செய்தி ஒன்றுண்டு. இவர் கல்லூரிப் படிப்பை, இளங்கலைப் படிப்பை அறிவியலில் தொடங்கி, ஆய்வுப் படிப்பைத் தமிழில முடித்தவர்.

     தமிழை நேசிப்பவர்கள் பலருண்டு. ஆனால் இவரோ தமிழை சுவாசிப்பவர்.
வாசிக்காத நாட்களெல்லாம், சுவாசிக்காத நாட்கள்
என்னும் உயரிய, உன்னத கொள்கையினை உடைவர்.

     ஹரணி அவர்களின் இல்லம் இருப்பதோ கரந்தையில். பணியாற்றுவதோ அண்ணாமலையில். நாள்தோறும் 200 கி.மீ பயணிப்பவர். பேரூந்தில் பயணித்த நாட்களை நெஞ்சில் நிறுத்தி பேரூந்து என்னும் புதினத்தைப் படைத்தவர். தற்பொழுது தொடர் வண்டியில் பயணிப்பவர். தொடர் வண்டிப் பயணத்தில், நாள்தோறும் குறைந்த்து 200 பக்கங்களையாவது படிப்பவர். இப்பழக்கத்தினை இன்று வரையில் தொடர்பவர். விரைவில் தொடர் வண்டி என்னும் புதினத்தைப் படைத்தாலும் படைப்பார்.

      படைப்பிலக்கியத் துறையில் கதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு, ஆங்கிலக் கவிதைகள், பெண்ணியம் என்னும் நிலைகளில், தனது படைப்புத் திறனை வெளிப்படுத்திவரும், பன்முக ஆளுமை உடையவர்.

நத்தையோட்டுத் தண்ணீர்
ஹரணி அவர்களின் கைவண்ணத்தில ஓர் புதிய படைப்பு. புதுமைப் படைப்பு.

     நூலின் மூன்றாவது பக்கத்திலேயே, நம்மை முழுவதுமாய் நூலுக்குள் ஈர்த்து விடுகிறார்.

       சூழல்களாலும் ...
       இயலாமையாலும் ...
       மனம் புழுங்கும்
       சத்திய
       உள்ளங்களுக்கு....
       இச்சிறு நூல்

     14 கட்டுரைகள். ஒவ்வொன்றும் நம்மை பெருமூச்சு விட வைக்கும். ஆம் உண்மைதான்.

    நல்ல வாழ்க்கை வாழ்வது என்பது
    நல்ல புத்தகங்களை வாசிப்பது போல

    வாசிப்பு என்பது ஒரு கலை
    வாசிப்பு என்பது ஒரு தவம்
    வாசிப்பு என்பது ஒரு பரவசம்
    வாசிப்பு என்பது ஓர் உணர்வு
என தொடர்ந்து எழுதி, நம்மையும் அந்தச் சுழலுக்குள் இழுத்து விடுகிறார்.

நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது
என்ற ஒரு வரியே, இவர் அனுபவம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

     கடிதம் ஓர் வாழ்வின் உன்னத அடையாளம்
     கடிதம் எழுதுதல் ஒரு கலை
     நாம் தொலைத்தவற்றுள் இதுவும் ஒன்றல்ல
     இதுதான் ஒன்று
சம்மட்டி கொண்டு நம்மைத் தாக்குகின்றன் இவரின் எழுத்துக்கள். வளர்ச்சி என்னும் பெயரில் நாம் இழந்தது அதிகம். எதை எதை இழந்தோம் என்பதையே அறியாமல், உணராமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     ஓடி பிடித்து விளையாடல்
     சடுகுடு
     திருடன் போலிஸ்
     கிச்சு கிச்சு தாம்பாளம்
     சில்லு செதுக்கல்
     கிட்டிப் புள் விளையாட்டு
     பளிங்கு உருட்டல்
இப்படி பல விளையாட்டுக்களை, இருள் சூழும் வரை, தெருவிலே நின்று விளையாடினோமே நினைவிருக்கிறதா? ஆனால் இன்று நம் பிள்ளைகளுக்கு, இவ்விளையாட்டுக்களின் பெயராவது தெரியுமா?

நாம் குழந்தைகளை ஏமாற்றுகிறோம்
நாம் குழந்தைகளுக்கு எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை
தேவையில்லை என நாமாகவே தன்னிச்சையான முடிவு எடுக்கிறோம்
என நம்மைச் சாடுகிறார். உண்மை சுடுகிறது.

     கூட்டுக் குடும்பம் என்கிற அற்புதத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே. அது சுக்கு சுக்கலாகிவிட்டதே
என இவர் வருந்துவதைப் படிக்கும் பொழுது, நமது மனதில் வலி, மெல்ல மெல்ல கூடுகிறது.

     அவர்கள் எங்கே இருக்கிறார்கள்... எப்படியிருக்கிறார்கள்... இருக்கிறார்களா? புகழுடம்பு எய்திவிட்டார்களா? தெரியாது. ஆனாலும அவர்கள் இன்றைக்கும், அன்றைக்கு பார்த்த்து போலவே மனத்தில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அழியாப் பிம்பமாய், அதே ஆசிரியர்களாக. மிடுக்குடன்
என ஹரணி அவர்கள், தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூற, கூற, நாமும் நமது இளமைக் கால, பள்ளிக் கால நினைவலைகளில் மூழ்கி மூச்சுத் திணறுவதை உணர முடிகிறது.

நத்தையோட்டுத் தண்ணீர்
இந்த நத்தையோட்டில் தேங்கியிருப்பது வெறும் தண்ணீரல்ல. தெளிந்த அனுபவம். அந்த அனுபவம் புகட்டிய பாடம். அந்தப் பாடத்தால் விளைந்த உயர் ஞானம்.

     ஆழ்கடலில் மட்டுமல்ல, இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கினால் கூட நல் முத்தெடுக்கலாம்.
வாருங்கள். வாசித்துப் பாருங்கள்.

ஹரணி அவர்களின்
அலைபேசி 9442398953
மின்னஞ்சல் uthraperumal@gmail.com

நூல் வெளியீடு
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,
31, பூக்குளம் புது நகர்,
கரந்தை,
தஞ்சாவூர் – 613 002






20 ஜூன் 2013

கரந்தை - மலர் 13


------ கடந்த வாரம் ------
ஏழூர் திருவிழாவானது சிறக்கப் பல்லாற்றானும் பாடுபட்ட பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்
-------------------------

இராதாகிருட்டினன் மறைவு

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பெருமையினைப் பெற்றமையால், சங்கம் நிறுவிய துங்கன் எனப் போற்றப் பெற்றவர் இராதாகிருட்டினன். தன் முயற்சியால் தோன்றிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்விதப் பதவியினையும் ஏற்காமல், அடிப்படை உறுப்பினராய் இருந்து பெருந்தொண்டாற்றிய பெருமைக்கு உரியவர் இவர். சங்கம் வளர உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதுதான் முதற் படி என்பதை உணர்ந்த இராதாகிருட்டினன், தான் பணியாற்றிய தனுக்கோடி அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும் சக அலுவலர்களையும், தனுக்கோடியின் வணிகர்களையும், ஒப்பந்தக் காரர்களையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாக்கினார்.

    தன் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்களையும், 1916 ஆம் ஆண்டிலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினராக்கினார். இராதா கிருட்டினனின் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்கள்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையினைப் பெற்றவராவார.
 
இராதாகிருட்டினன்
     இத்தகு பெருமை வாய்ந்த சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன், அவர்கள், 27.2.1918 அன்று தனது 33 ஆம் வயதில் அகால மரணமடைந்து, அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்றார்.
 
அரங்க. வேங்கடாசலம் பிள்ளை
             என்றிளைய  பருவத்தே  எழுந்துநின்  னட்பம்மா
             அன்றுமுதல்  யாமெய்துஞ்  சீரெல்லாம்   அதன்பயனே
             நன்றுதரும்  நண்பாவோ  நண்பாவோ  நண்பாவோ
             ஒன்றுளத்து  நினையன்றெம்  மூக்கமதே  யிழந்தனமே

             வள்ளுவர்தம்  திருநாளே  நின்னாளா  மாண்புற்றோய்
             ஒள்ளியசீர்  நின்மக்கள்  உன்புகழை  ஏந்துவரால்
             நள்ளிய  நின்காதலியை,  நம்முன்னை  நண்பர்களை
             விள்ளரிய  துயரடக்கிப்  பொறுமைகொள வேண்டுதுமே

என்று அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களும்,
 
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
             மதிவலி  யானே  பதிநலம்  பேணினை
             நவிறொறு  நூனயம்  போலத்  தவிரா
             வின்பு சுரக்க  வியைந்த  கேண்மையி
             னட்டனை  மன்னே  முன்னே  யெம்மொடு
             விட்டனை  யினியாம்  விழுமங்  கூர
             இனையை  யாகலின்  இராதா  கிருட்டின
             ஒளியு  மிருளும்  போல
             அளியகண்  டேமிவ்  வகனில  வாழ்க்கையே

என்று பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும்,
 
இராமசாமி வன்னியர்
            சீரார்  கரந்தைத்  திருப்பதியி  லங்குரித்த
            பேரா  ரிராதா  கிருட்டினப்பேர்  பெற்றவனே
            ஏராரு  நின்புகழை  யிவ்வுலகி  லேநிறுத்தி
            நீரார்  சடைமுடியோன்  நீள்கழல்சென்  றுற்றனையே

            தீந்தமிழி  லாங்கிலத்திற்  றேர்ச்சிபெறு  நுண்ணறிவாய்
            ஏய்ந்த  கரந்தை  யெழிலார்  தமிழ்ச்சங்கம்
            வாய்ந்த  புகழ்பரவ  மன்னுவித்தா  யக்கழகம்
            பாய்ந்து  பெருகுவதைப்  பாராது  சென்றனையே

என்று கூடலூர் வே. இராமாசாமி வன்னியர் அவர்களும் கையறு நிலைச் செய்யுட்களைப் இயற்றி இராதாகிருட்டினன் பிரிவு தாளாது துயருற்றனர்.

இராதாகிருட்டினன் கழகம்

     சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில கலாசாலையில், அதன் தலைமையாசிரியரும், இராதாகிருட்டினனின் ஆருயிர் நண்பருமான கவிஞர் அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களால், இராதாகிருட்டினன் கழகம் தோற்றுவிக்கப் பட்டது.

     தமிழ் மொழியில் மாணவர்கள் தேர்ச்சியுறுவது போல், ஆங்கிலத்திலும் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில், இக் கழகத்தின் சார்பில், ஒவ்வொரு திங்கட் கிழமையும், ஒரு கூட்டம் கூட்டப் பெற்றறு, இக்கூட்டத்தில், கட்டுரை வரைதல், பேசப் பழகுதல், செய்யுள் இசைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பெற்றன.

இராதாகிருட்டினன் படத் திறப்பு

     இராதாகிருட்டினப் பிள்ளையின் மறைவினைத் தொடர்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவானது ஒத்திவைக்கப் பட்டது.

      எனவே 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாக்கள் சேர்ந்து, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்கள் கொண்டாடப் பெற்றன.

      முதல் நாள் விழாவின் போது 24.5.1919 இல், கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்டு, தண்டமிழ்த் தொண்டின் வழிதுறை காட்டிய பெருந்திருவாளர் இராதாகிருட்டினனின் நண்பர்களால், சங்கத்திற்கு உதவப்பெற்ற, இராதாகிருட்டினனது, திருஉருவப் படம், உயர்திரு ஞானியார் சுவாமிகளால் திறந்து வைக்கப் பெற்றது.

தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்களில் கொண்டாடப் பெற்ற, ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாவின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே என்னும் தீர்மானம் இயற்றப் பெற்றது.

      தமிழ் மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர் தனிச் செம்மொழியென உறுதிபட, பல திறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார், தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றி, தமிழ் உயர் தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத் தென்னாட்டுப் பல்கலைக் கழகத்தில், அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. இத் தீர்மானமானது, சங்க உறுப்பினர்களான, திரு டி.எஸ்.சபாபதி பிள்ளை அவர்களால் முன்மொழியப்பட்டு, திரு எம். அப்பாவு முதலியார் அவர்களால் வழி மொழியப் பட்டது.

     இத்தீர்மானமே தமிழ் மொழியை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று, அமைப்பு ரீதியாக இயற்றப்பெற்ற முதல் தீர்மானமாகும். இத் தீர்மானமானது, சென்னைப் பல்கலைக் கழகத் தலைவர் அவர்களுக்கும், துணைத் தலைவர் அவர்களுக்கும், சென்னை ஆட்சி அமைச்சர் அவர்களுக்கும் முறைப்படி அனுப்பப் பட்டது.

1919 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பிய  கடிதம்


     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழாவானது, 21.8.1920 அன்று திருவாளர் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, எவ்வளனும் இனிது வாய்ந்துள்ள தமிழ் மொழியை, உயர் தனிச் செம்மொழி வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பலமுறையும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரை வற்புறுத்தியும். அவர்கள் இன்னும் அவ்வாறு செய்யாமலும், கட்டாயப் பாடமாக ஏற்படுத்தாமலும் இருப்பது பிசகென்று அறிவிப்பதோடு, இனியாவது அவர்கள், தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொள்வதுடன், கட்டாய முறையாகவும், கூடியவரை கல்லூரிகளில் கலை பயில் கருவி மொழியாகவும் கொண்டு, தங்கள் முதற் கடமையை செலுத்தும்படி அவர்களை இப்பொருங்கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் என்னும் தீர்மானம் இயற்றப் பட்டது. இத் தீர்மானத்தினை திருவாளர் வி.ஏ. சகராயப் பிள்ளை அவர்கள் முன் மொழிய, திருவாளர் ஐ.குமாரசாமி பிள்ளை அவர்கள் வழி மொழிந்தார்.

     1921 ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆட்சித் தலைவர் அவர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்தபோது, செந்தமிழ் மொழியினை, உயர்தனிச் செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாகக் , கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, திருவாளர் ராவ் பகதூர் வீ.அ. வாண்டையார் அவர்கள் தலைமையில், ஒரு குழுவினர் சென்று சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை நேரில் எடுத்துரைத்தனர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்ககத்தின் பதினோராவது ஆண்டு விழாவானது, 18.11.1922 மற்றும் 19.11.1922 ஆகிய தேதிகளில், திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின்போது, விசுவபாரதிக் குடையார் தமிழை உயர்தனிச் செம்மொழியாகச் சம்மதித்து, அதனை அவர்கள் பாட வரிசையில்  சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் தொன்மை வரலாறு எழுதுவோர்க்குத் தென் இந்திய வரலாறு இல்லையாயின், முற்றுப் பெறாததாலும், வேண்டிய செய்திகள் சங்கத் தமிழ் நூல்களில் மட்டும் கிடைக்குமாதலாலும், உலகத்து நாகரீகமுற்ற நாடுகளில் தமிழ் நூல், தமிழ் அறிவுப் பரப்பை மிகுவிக்க வேண்டுமென்றும், அவர்களை இப்பெருங்கூட்டாத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் இயற்றப் பட்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு விழா, 22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய தேதிகளில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது,  உலகத்து உயர் தனிச் செம்மொழிகளில், முதல் மொழியென கருதுப் படுவதற்கு உரித்தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாக இருப்பதால், அதனை அத்தகைய மொழியாக ஆட்சியாளர்கள் கருதி, ஐ.சி.எஸ்., பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, இந்திய அரசியலாரை இப்பெருங் கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் இயற்றப் பட்டது.

     இதே விழாவில் மீண்டும், மிகவும் பழைமையான காலந்தொட்டு, நாகரிகம் அடைந்துள்ள நாடுகளில், தமிழ் நாடும் ஒன்றாகலானும், இலக்கியச் செழிப்பிலும், தத்துவ அறிவின் உயர்விலும், பண்டைய நாகரிகத்தின் பயனுடைமையிலும், உலகத்து பழைமையான மொழிகளில் எவ்வகையிலும் குறைவுபடாது, அழியா நிலைமை எய்தியுளதாய் தமிழ் மொழி சிறப்பெய்தி வரலானும், இந்திய நாட்டின் தொன்மை வரலாற்றை வரைவோர்க்குத், தென்னிந்திய வரலாறு இல்லையாயின் மிகவும் முடைப் படுவாராகையாலும், அவ்வாறு முடைபடாதிருத்தற்கு வேண்டிய செய்திகள், சங்கத் தமிழ் நூல்களில் மட்டுமே கிடைக்கக் கூடுமாதலாலும், விசுவபாரதிக்கு உடையார், தமிழை உயர் தனிச் செம்மொழியாகக் கொண்டு, தற்காலத்து நாகரிகமடைந்த எல்லா நாடுகளிலும் தமிழ் நூலையும், தமிழறிவுப் பரப்பையும் மிகுவிக்க வேண்டுமென்று அவர்களை இப்பெருங் கூட்டத்தார் கேட்டுக் கொள்கின்றனர் எனும் தீர்மானம் இயற்றப்பட்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவானது, 1938 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வெள்ளி விழாவிற்குத் தலைமையேற்ற, திரிப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள், தன் உரையில், இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை, உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத் தக்கதாகும் என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே மீண்டும் சந்திப்போமா