01 ஜூன் 2012

கரந்தைப் புலவர் கல்லூரி
உமாமகேசுவரனார்
      உலகின் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்று போற்றப்படும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற ஆண்டு 1911 ஆகும். தமிழ் வளர்ச்சிப் பணிகளையும், கல்வி வளர்ச்சிப் பணிகளையும் தனது இரு கண்களெனக் கருதிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்,1916 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியானது தொடங்கப் பெற்றது.

        தமிழோடு கைத் தொழில்களையும் கற்றுக் கொடுக்கும்படியான கலாசாலைகளை ஏற்படுத்துதலே பயன் விளைவிக்கும் என்று தமிழவேள் உமாமகேசுவரனார் எண்ணினார். இக்கல்லூரியில் பயின்று வெளிவரும் மாணவர்கள், அரசு வேலை வாய்ப்புகளை மட்டுமே நம்பியிராமல், சொந்தமாகத் தொழில் செய்து நாட்டை வளமாக்க வேண்டும் என்பதே உமாமகேசுவரனாரின் விருப்பமாகும். எனவே எட்டாம் வகுப்பு வரை பயிற்று விக்கப் பட்ட, இக்கல்லூரியில், நெசவு, நூல் நூற்றல், பாய் முடைதல், மரவேலைகள், நூற் கட்டு, அச்சுத் தொழில் முதலியனவும் கற்றுத் தரப்பெற்றன.

     கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியில் பயின்று, மேற் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்காக ஒரு தனித் தமிழ்க் கல்லூரியினை நிறுவிட உமாமகேசுவரனார் விரும்பினார்.

ஞானியார் அடிகள்
     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற நாள் தொடங்கி, சங்கத்தை அண்டாது, அணுகாது விலகியிருந்தது செல்வம் மட்டுமே. போதிய நிதி வசதியின்மையால், உமாமகேசுவரனாரின் கல்லூரிக் கனவானது, ஆண்டுகள் பல உருண்டோடியும் கானல் நீராகவே நீடித்தது.

     சற்றும் அயராத உமாமகேசுவரனாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, 1938 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது தனித் தமிழ்க் கல்லூரி ஒன்றினை, கரந்தைப் புலவர் கல்லூரி என்னும் பெயரில் தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற ஆண்டு 1911 ஆகும். எனவே 1936 ஆம் ஆண்டிலேயே வெள்ளி விழாவினைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் பொருளாதார வசதி இடம் கொடுக்காததால், இரண்டு ஆண்டுகள் தாமதமாகவே வெள்ளி விழா கொண்டாடப் பெற்றது.

     திரு க.வெள்ளைவாரணன் என்பார் இப் புலவர் கல்லூரியின் முதல் ஆசிரியராக நியமனம் செய்யப் பெற்றார். பின்னாளில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராய் அமர்ந்து, அரும் பணிகள் பல ஆற்றிய பேராசிரியர் வெள்ளைவாரணனார் இவர்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவானது, 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள் சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளின் சீரிய தலைமையில், சங்கத் தமிழ்ப் பெருமன்றத்தில், தமிழ் மணம் கமழ நடைபெற்றது.  தமிழ் நாட்டின் பல இடங்களில் இருந்தும், இலங்கை, மைசூர் முதலிய நாடுகளிலிருந்தும் தமிழன்பும், தமிழறிவும், தமிழ்த் தொண்டாற்றலுமுடைய தமிழ்ப் பெருமக்கள் சுமார் ஐயாயிரம் பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கரந்தைப் புலவர் கல்லூரி

   
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
வெள்ளி விழாவின் இரண்டாம் நாளான 16.4.1938 சனிக் கிழமை காலை 8.00 மணிக்கு தமிழ்ப் பெருமன்றத்தில் கடவுள் வணக்கமும், தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பெற்ற பின் கரந்தைப் புலவர் கல்லூரியின் தொடக்க விழா தொடங்கியது.


     விழாத் தலைவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் அவர்கள், தம் பொருளுரைகளை அழகு மிகத் திரட்டி கல்லூரியினைத் திறந்து அருளினார்கள். அப்போது நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்,
             நன்மா  ணவராகும் வண்டர்  நனிபயின்று
             பன்மான்  கலைத்தேன்  பருகுமா  -  மண்மான்
             கரந்தைத் தமிழ்ச் சங்கச் கல்லூரிப்  பூங்கா
             பரந்தொளிர்ந்து  வாழியார்இப்  பார்
எனப் பாடி வாழ்த்தினார்.

     கல்லூரிக் கட்டிடத்தில் அலங்கரிக்கப் பெற்று வைக்கப்பெற்றிருந்த தமிழ்க் கடவுள் முருகன் திருவுருவத்திற்கு வழிபாடு செய்யப் பெற்றது. தொடர்ந்து ஞானியாரடிகளும் மற்றவர்களும் வகுப்பறைக்குச் சென்றனர். நாதமுனி என்னும் பெயருடைய மாணவர் உட்பட பத்தொன்பது மாணவர்களுடன் புதிய கல்லூரியின் முதல் வகுப்பானது தொடங்கப் பெற்றது.

வெள்ளைவாரணனார்
     ஞானியார் அடிகள் அவர்கள் வித்துவான் வெள்ளைவாரணன் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி, தமிழ் கற்பிக்கத் தொடங்குமாறு வேண்டினார். வெள்ளைவாரணன் அவர்களும், திருக்குறளின் தலைக்குறளாகிய அகர முதல என்னும் அருமைத் திருக்குறளைக் கற்பித்தார். அவரைத் தொடர்ந்து ஞானியாரடிகள் அவர்கள் புதிதாக தொடங்கப் பெற்றுள்ள கல்லூரியை வாழ்த்தி, அகரமுதல எனத் தொடங்கும் திருக்குறளின் பருப் பொருளும், நுண் பொருளும் இனிது விளக்கினார்.

     தமிழ் வளர்ச்சிக்காகப் பெருந்தொண்டு புரிந்து வரும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைக் கண்டு மகிழ்வடைந்த பலரும், கல்லுரியானது தழைத்து சிறந்தோங்க நன்கொடைகளை வழங்கினர். திருச்சிராப்பள்ளி திருவாளர் டி.எஸ். பொன்னுசாமி பிள்ளை என்பார், தாம் நடத்தி வருகின்ற அறக்கட்டளையின் வருவாயினை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தரும சாசனம் எழுதி முடிக்க எண்ணியிருப்பதாக,  விழா மேடையிலேயே அறிவித்தார்.

சிவ, குப்புசாமி பிள்ளை
    மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச விடுதி வசதி, இலவச உணவு வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பெற்றன.கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியின் தலைமையாசிரியரான திரு சிவ. குப்புசாமி பிள்ளை அவர்கள், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேற்பார்வையாளர் பணியினை ஏற்று தமிழ் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்கு அயராது பாடுபட்டார்.

     தமிழவேள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குடந்தை பாணாதுறை உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தொண்டு செய்து வந்தவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பகுதியில் வரலாற்றுத் துறையில் பல ஆண்டுகள் தொண்டு செய்து ஓய்வு பெற்றவரும், தமிழ் நாட்டின் தலைசிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளருமாகிய திரு சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்,சனிக் கிழமைகள் தோறும், தனது சொந்த செலவிலேயே, கரந்தைக்கு வந்து, கல்வெட்டு பற்றிய விளக்கங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.


சதாசிவ பண்டாரத்தார்
      தமிழவேளும் தனது பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டாக்டர் கால்டுவெல் என்னும் மேல்நாட்டு அறிஞரால் எழுதப் பெற்ற, இன்றளவும் உலக மொழி வரலாற்றில், திராவிட மொழிகளுள் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கிய, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் அரிய பெரிய ஆங்கில நூலை, மாணவர்களுக்கு மொழிபெயர்த்து தக்க விளக்கங்களோடு போதித்து வந்தார்.

     கல்லுரி ஒன்றை நடத்துவது என்றால் போதிய பொருள் வருவாய் வேண்டுமல்லவா? சங்கத்தை நடத்துவதற்கே போதிய பொருள் இல்லாதபோது, கல்லூரியினை நடத்துவது எவ்வாறு இயலும்? ஆனாலும் தொடங்கிய பணியினை இடையிலேயே நிறுத்தி விடுவது இழுக்காகிவிடுமல்லவா? எனவே மனம் தளராத உமாமகேசுவரனார் தமிழ்ப் பெருமக்களுக்கு கீழ்க்கண்ட ஒரு வேண்டுகோளினை விடுத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் இப்போது தமிழ்நாடு முற்றுமே மதிக்கத்தகும் அரும்பணியை மேற்கொண்டிருக்கிறது. கரந்தைத் தமிழ்க் கல்லூரி, முதல் வகுப்புடன் அரும்பியிருக்கின்றது. மேலும் நான்கு வகுப்புகள் நாளடைவில் தோன்றி முற்றுப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது. இதன் இன்றியமையாத அங்கங்களாகிய இசை, ஓவியம், மருத்துவம், சிற்பம் போன்ற தொழிற் கலைகளும் ஈண்டு முகிழ்ததுப் பிஞ்சு, காய் கனிகளாகி நற்பயன் நல்க வேண்டும். இவ்வெண்ணங்கள் சிறு அளவிலாவது உருப்பெற வேண்டுமானால் நூறு மாணவர்களுக்காவது, உண்டியும், உறையுளும் தருதற்கான மாணவர் இல்லமும், பத்து ஆசிரியர்களாகினும் பணி செய்தற்குரிய வசதிகளும் அமைக்கப்பட வேண்டும். ஆண்டு தோறும் ரூபாய் ஐயாயிரத்திற்குக் குறையாத வருவாய் தட்டில்லாது வந்து கொண்டே இருத்தல் வேண்டும்.  இதுபோது தொடங்கியிருக்கும் முதல் வகுப்பில் பத்தொன்பது மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். திருச்சி, நெல்லை, கோவை, வட தென் ஆற்காடுகள், ஆய பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர் ஒன்பதின்மர். யாழ்பாணத்து மாணவர் ஒருவர் வருவாரென்று எதிர்பார்க்கப் படுகிறது. மலேயா நாட்டிலிருந்தும் விண்ணப்பம் வந்துள்ளது. இவர்களின் பன்னிருமாணவர்கள் சங்கத்தார் அமைத்திருக்கும் இல்லத்தே இருந்தும், ஏனோர் வெளியே இருந்தும் கல்வி பயின்று வருகின்றனர். இதனை உய்த்து நோக்குவோர் இக்கல்லூரி தமிழ் நாட்டிற்கு உரியதெனவும், இதனைப் பேணி வளர்த்தல் தத்தம் கடமை எனவும் தமிழன்பர்கள் கருதுவர் என்று எண்ணுகிறோம். தமிழ்ப் புலமையும், தொழிற் கலையும் ஒருங்கே பயிற்றப்படும் கல்வி முறை சாலச்சிறந்த நன்முயற்சியாகும். இம் முயற்சி உரம் பெறுவதற்கு, இலக்கிய இலக்கண நூல்களேயன்றிக் கலை நூல்களையும் எளிய விலைக்கு வெளியிடுதல் வேண்டும். இத்தகைய பொறுப்புள்ள வேலைகளை மேற்கொள்ளவும், செவ்வனம் இயற்றவும் அறிவாளிகள், செல்வர்கள், அன்பர்கள் ஆகிய அனைவரின் துணையும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.

     இவ்வேண்டுகோள் விரும்பியவாறு பலனளிக்கவில்லை. ஆயினும் கல்லூரி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருந்தது. கல்லூரியானது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தபோது, மேலும் ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப் பட்டார். சங்கத்தின் புகழ்பாடும் நல்ல கவிஞராகவும், தமிழையும் தமிழ் நாட்டு அரசியலையும் அறியாது சோம்பிக் கிடந்த தமிழ் மக்களிடையே, உணர்ச்சி ஊற்றெடுக்கச் செய்யும் வகையில் சொற்பொழிவாற்றும் நாவன்மை உடையவருமாகிய திரு கோ.வி.பெரியசாமிப் புலவர் அவர்கள் இரணட்வது விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

பேரிடியாய் விழுந்த தடை

      1940-41 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் பின் மூன்றாமாண்டில் கல்லூரியானது காலடி எடுத்து வைப்பதற்குள், பேரிடியாய் தடை என்னும் உத்தரவு ஒன்று சென்னைப் பல்கலைக் கழகத்தால் பிறப்பிக்கப் பெற்றது. கரந்தைப் புலவர் கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க முடியாது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்து விட்டார்.

      காரணம். ரூபாய் ஐம்பதாயிரம் தொகையினை இணைப்புக் கட்டணமாய் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது ரூபாய் ஐம்பதாயிரம் பொறுமானமுள்ள சொத்துக்களுக்கு உரிய பத்திரங்களைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். கரந்தைத் தமிழ்ச் சங்கமோ, இரண்டில் எதையுமே நிறைவேற்றும் நிலையில் இல்லை. ஒரு வருடம் கல்லூரியினை நடத்துவதற்கான ரூபாய் ஐயாயிரத்திற்கே வழி இல்லாதபோது, ரூபாய் ஐம்பதாயிரத்திற்குச் சங்கம் எங்கே போகும். எனவே கரந்தைப் புலவர் கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதோ, அங்கீகாரம் வழங்குவதோ முடியாது.கல்லூரியினை உடனே மூடுங்கள் என்று சென்னைப் பல்கலைக் கழகம் உறுதியாய் அறிவித்தது.

     கரந்தைப் புலவர் கல்லூரி மூடப்பட்டது. கல்லூரியில் பயின்ற மாணவர்கள் திசைக்கொருவராய் சென்றனர். அகப்பட்ட தொழிலில் அமர்ந்தனர் பலர். சிலர் வெள்ளத்தில் அகப்பட்டவன் துரும்பைப் பிடித்துக் கரையேறுதல் போல, தனியே கல்லூரியும், ஆசிரியரும் இல்லாவிட்டாலும், தனிமையில் பயின்று தமிழ்க் கலைகளில் அறிஞராயினர். சிலர் வேலையின்றித் தவித்தனர்.

     எடுத்த செயலினை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் திறன் வாய்ந்த உமாமகேசுவரனார் மட்டும் உள்ளம் தளர்ந்தாரில்லை. தமிழ்ப் பெருமக்களை நோக்கி, கரந்தைப் புலவர் கல்லூரிக்குப் போதிய முதற்பொருள் இன்மையான் சென்னைப் பல்கலைக் கழகத்தார் ஒப்ப மறுக்கின்றனர். தமிழ் நாட்டின் எல்லைக்குள் ஆங்கிலம் போன்ற பிறமொழிகளின் வளர்ச்சியைக் கருதி உழைக்கும் கலைக்கூடங்கள் எத்தனை? அவற்றிற்காகப் பணி செய்து செழுமையுடன் தருக்குற்று வாழும் கணக்காணர் எத்துணையர்?  இந்நிலையில் தமிழ் மொழி ஒதுக்கிடம் பெறுவதும், தமிழ்ப் புலவர்கள் வீணர்கட்கு எளியராய் அஞ்சி வாழ்வதும் இழிவன்றோ? தமிழ் மக்கள் இப் புலவர் கல்லூரிக்குப் பொருளுதவி புரிந்து தம் கடனாற்றுவார்களாக என மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுததார்.

     தஞ்சை வட்டக் கழகத் தலைவராக செல்வாக்குடைய பதவியினையும், சிறந்த வழக்கறிஞர் என்னும் பெயரினையும் பெற்றிருந்த தமிழவேள் அவர்களால், தம்மிடம் ஆதரவு நாடிவரும் செல்வந்தர்களிடமிருந்து, எளிதில் பெரும் பொருளைத் திரட்டியிருக்க முடியும். ஆனாலும் அதனைச் செய்தாரில்லை. அதற்கும் அவரே காரணத்தைக் கூறுகிறார். கேளுங்கள். பொய்யும் புரட்டும் உடையவர்கள்கால் பெறும் பொருள் நம் சங்கத்திற்கு வேண்டியதில்லை. தமிழ் வளர வேண்டும் என்ற விருப்பத்துடன் யாரேனும் ஒரு காசு கொடுத்தாலும் அதனைப் பெரும் தொகையாக ஏற்று மகிழ்வோம் என்றார்.

      சங்கநிதி  பதுமநிதி  இரண்டுந்  தந்து
           தரணியொடு  வானாளத்  தருவ  ரேனும்
      மங்குவார்  அவர்செல்வம்  மதிப்பேம்  அல்லேம்
           மாதமிழுக்  கேகாந்தர்  அல்லராகில்
     அங்கமெலாம்  குறைந்தழுகு  தொழுநோ  யராய்
           ஆவுரித்துத்  தின்றுழலும்  புலைய  ரேனும்
     தங்குபுகழ்ச்  செந்தமிழ்க்கோர்   அன்ப  ராகில்
           அவர்கண்டீர்  யாம்வணங்குங்  கடவு  ளாரே

     தமிழ் மக்களிடம் இருமுறை கோரிக்கை வைத்தும் பயனில்லை. இப்புலவர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டத்துடன் வெளிவரும் முதல் மாணவனைக் கண்ணாரக் கண்டால்தான் எனது இப்பிறவி முழுமைபெறும். புலவர் பட்டத்துடன் வெளிவரும் மாணவனைக் கண்ட அடுத்த விநாடியே எனது உயிர் பிரியுமானால் மிகவும் மகிழ்வேன் என்று தமிழன்பர் சிலரிடம் கூறி வருந்திய உமாமகேசுவரனாருக்கு, வெள்ளி விழாவின் போது தனது உறவினரான, திருச்சி டி.எஸ்.பொன்னுசாமி பிள்ளை அவர்கள் தனது அறக்கட்டளையின் வருவாயினை சங்கத்திற்காக எழுதி வைக்க முன்வந்தது நினைவிற்கு வரவே, திருச்சி நோக்கிப் பயணமானார்.

டி.எஸ். பழனிசாமி பிள்ளை அறக்கட்டளை

     திருச்சி தென்னூரில் வசித்து வந்த செல்வந்தர் திருவாளர் சண்முகம் பிள்ளை அவர்களுக்கு திருமக்களாய் உதித்தோர் மூவர். மூத்தவர் ச.முத்துசாமி பிள்ளை, இரண்டாமவர் ச. பொன்னுசாமி பிள்ளை, மூன்றாமவர் டி.எஸ்.பழனிசாமி பிள்ளை ஆவர்.

   
வள்ளல்  தி.ச.பழனிசாமி பிள்ளை
திரு டி.எஸ்.பழனிசாமி பிள்ளை அவர்கள் வழக்கறிஞராய் பணியாற்றி பெரும் செல்வம் சேர்த்தவர். இவர் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் காலமானார்.  இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததாலும், மேலும் இவர் தனது இறுதிக் காலத்தில் உயில் எதனையும் எழுதி வைக்காததாலும், இவரது சகோதரர்களே இவரின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்கள் ஆனார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் சொத்துக்களை இருவரும் பங்கிட்டுக் கொண்டிருக்கலாம்.  ஆனால் அவ்வாறு செய்தார்களில்லை. உண்மையின் உறைவிடமாகவும், பெருந்தன்மையின் இலக்கணமாகவும் விளங்கிய இவரது சகோதரர்கள் ச.முத்துசாமி பிள்ளை மற்றும் ச.பொன்னுசாமி பிள்ளை ஆகிய இருவரும் இணைந்து, 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் நாள், தங்களது தமையனாரின் சொத்துக்களை மூலதனமாக வைத்து, அவர் பெயரிலேயே,  டி.எஸ்.பழனிசசாமி பிள்ளை அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார்கள்.

ஈஸ்வரன் கிருபையால் எங்களுக்கு வேண்டிய சொத்துக்கள் இருப்பதாலும், எங்களுடைய பிள்ளைகளும் சம்பாதிக்கத் தக்கவர்களாயிருப்பதாலும் காலஞ்சென்ற எங்கள் சகோதரர் பழனிசாமி பிள்ளை, தனக்குப் பின் தன் சொத்துக்களை தரும வாசக சாலையும், தரும பள்ளிக்கூடமும் Elementary Education and Industrial School , அதாவது தன்னுடைய பள்ளிக் கூடம் விட்டுப் போகும் பொழுதே  பையன்கள் 4 அணாவாவது சம்பாதிக்கும்படியான கைத் தொழில் எதாவதொன்று கற்றுக் கொண்டு போக வேண்டுமென்றும், Non Brahmin Hostel and Scholarship நம்முடைய வகுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் யோசித்தார் என்பதனைப் பதிவு செய்து இவ்வறக்கட்டளையினை நிறுவினார்கள்.

     இதுமட்டுமா? தங்களுக்குப் பின் இவ்வறக்கட்டளையைப் பராமரிக்க தக்கவர் யார் என்பதைக் குறிப்பிடும் போது, ச.முத்தசாமி பிள்ளை மற்றும் ச.பொன்னுசாமி பிள்ளை ஆகியோரின், கறை படியாத, நேர்மையான பெருந்தன்மையான உள்ளத்தினையும், அவர்கள் தங்கள் தமையனாரிடத்தும், அறக்கட்டளையின் பேரிலும் வைத்திருந்த பற்றும் பாசமும் வெளிப்படுவதைக் காணலாம்.

     எங்கள் ஆயுசுக்குப் பிறகு, எங்களில் ச.முத்துசாமி பிள்ளையின் குமாரர்களாகிய பாலசுப்பிரமணிய பிள்ளை, அருணாசலம் பிள்ளை மற்றும் எங்களில் ச.பொன்னுசாமி பிள்ளையின் குமாரர்களாகிய ரெத்தின சபாபதி பிள்ளை, டி.இராமலிங்கம் பிள்ளை ஆகியோரை எங்களுக்குப் பிறகு தருமங்கள் நடத்திவர நியமிக்கிறோம். இந்த வாரிசுகளுக்குப் பின்னால் யாருடைய ஸ்தானமாவது காலியானால், அந்த ஸ்தானத்தை மற்றவர்கள் ஒருமித்து, நம்மடைய குடும்பத்தில் தரும சிந்தனையும் யோக்கியதையும் உள்ளவருமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பதிவு செய்தனர்.

     அறக்கட்டளையினை நிறுவியவுடன், பொன்னுசாமி , முத்துசாமி இருவரும் தரும வாசக சாலையைத் தொடங்கினர். பள்ளிக் கூடம், தொழிற் பயிற்சிப் பள்ளியும் நிறுவிட கட்டிடம் கட்ட அஸ்திவாரம் போட்டார்களே தவிர, போதிய வருமானம் இல்லாமையால்,  அக் கல்வி நிறுவனங்களைத் தொடங்க அவர்களால் இயலவில்லை. இவ்வறக்கட்டளையில் சொத்துக்கள் இருந்தனவே தவிர, அச்சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைந்த அளவாகவே இருந்தது.

     மேலும் இவ்வறக்கட்டளையினை நிறுவியவர்களில் ஒருவரான எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்கள் 23.11.1934 இல் காலமானார். இதனால் அறக்கட்டளைப் பணிகளில் பெரிதும் தொய்வு ஏற்பட்டது.

    இந்நிலையில்தான் 1938 இல் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட டி.எஸ்.பொன்னுசாமி பிள்ளை அவர்கள் அறக்கட்டளையின் வருவாயினைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவித்தார்.

அறக்கட்டளையில் மாற்றம்

     போதிய முதற்பொருள் இன்மையால் சென்னைப் பல்கலைக் கழகத்தார், கரந்தைப் புலவர் கல்லூரியை அங்கீகரிக்க மறுத்ததும், கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்கு பல்லாற்றானும் முயன்ற தமிழவேள், இறுதியாக திருச்சிக்குப் பயணம் செய்து டி.எஸ. பொன்னுசாமி பிள்ளை அவர்களைச் சந்தித்தார்.

     இச்சந்திப்பின் பயனாக தி.ச.பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையின் குறிக்கோளில் சில மாற்றங்களைச் செய்து, அம்மாற்றங்களை அதிகாரப் பூர்வமாக பத்திரப் பதிவு செய்யவும் பொன்னுசாமி பிள்ளை அவர்கள் முன்வந்தார்.

     இதன்படி, ஏழை மாணவர்கட்குத் தொழிலும் கல்வியும் அளித்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் தம்பி டி.எஸ்.பழனிச்சாமி பிள்ளை அவர்களும், எனது அண்ணன் டி.எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்களும், நானும் ஆகிய மூவர்களும் கொண்டிருந்த எண்ணமாயிருந்தும், இதில் கண்டிருக்கும் சொத்துக்களை கொண்டே, அதை முடிப்பது முடியாத கருமமாயிருப்பதாலும், இதே கருத்துக்களை நிறைவேற்றும் எண்ணத்துடன் தஞ்சாவூரிலுள்ள, கருந்தட்டாங்குடி, தமிழ்ச் சங்கமானது மாணவர்களுக்கு இல்லங்கள் அமைத்து உண்டி, உறையுள் முதலியன கொடுத்து, தொடக்கக் கல்வியும் தமிழ்ப் புலவர் கல்லுரியும் ஏற்படுத்தி, மாணவர்கட்கு தொழிற் கல்வியும் பெற வசதிகள் செய்தது நடத்தி வருகின்றமையால், அதன் வாயிலாகவே, எமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் சாலச் சிறந்தது எனக் கருதி, 1.11.1930 இல் நானும், டி.எஸ்.முத்துசாமி பிள்ளையும் எழுதி வைத்த டிரஸ்ட் பத்திரத்தை, இப்போதைய தேவைக்குத் தக்கவாறு மாறுதல் செய்து, இதுமுதல் நடந்து வர வேண்டிய தரும பரிபாலன ஏற்பாடுகளை இதன் மூலமாக எழுதி வைக்கின்றேன் என 1940 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் நாள் திருச்சி பத்திரப் பதிவு அலுவலகத்தில், மாற்றியமைக்கப் பட்ட அறக்கட்டளையானது பதிவு செய்யப்பட்டது.

உயிர் பெற்ற கல்லூரி

    தி.ச.பழனிசாமி பிள்ளை அறக்கட்டளையில் மாற்றங்கள் செய்து, பதிவு செய்யப்பெற்ற பத்திரத்தின் நகலினை, சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு அனுப்பி, அறக்கட்டளையின் சொத்துக்களையே, ஐம்பதாயிரம் ரூபாய் பொறுமானமுள்ள முதற்பொருளாக ஏற்றுக் கொண்டு, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று உமாமகேசுவரனார் கடிதம் எழுதி வேண்டினார். மேலும் இரண்டாண்டுகளாக முதல்வர் என்று ஒருவர் இல்லாமலேயே செயல்பட்ட, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களை முதல்வராகவும் அறிவித்தார்.

     நாவலர் அவர்களைக் கல்லூரி முதல்வராகவும், அறக்கட்டளைச் சொத்துக்களை முதற்பொருளாகவும், ஏற்றுக் கொண்ட, சென்னைப் பல்கலைக் கழகம், 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்தது. கல்லூரிக்குப் புத்துயிர் வந்தது.

     நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல் முதல்வராக, உமாமகேசுவரனார் மேல் கொண்டிருந்த அன்பால், பாசத்தால், ஊதியம் எதுவுமே பெறாத மதிப்பியல் முதல்வராக 1941 முதல் நான்காண்டுகள் தொண்டாற்றினார்.

     ஆனால்,  இப்புலவர் கல்லூரியில் பயின்று வெளிவரும் முதல் மாணவனைக் கண்ணாரக் காணும் நாளே என் வாழ்வில் பொன்னாள், அதுவே கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் திருநாள். புலவர் பட்டத்துடன் வெளிவரும் முதல் மாணவனைக் கண்ட அடுத்த நொடியே என் உயிர் பிரியுமானால், அதை விட பேரானந்தம் வேறொன்றுமில்லை என்று பலவாறு கனவு கண்டிருந்த உமாமகேசுவரனாரின் வாழ்க்கையில் விதி விளையாடியது.

     ஆம். வடபுலப் பயணம் மேற்கொண்டிருந்த உமாமகேசுவரனார், தமிழகம் திரும்பாமலேயே, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்த அடுத்த மாதமே,  அயோத்திக்கு அருகில் உள்ள பைசாபாத் என்னும் சிற்றூரில் 9.5.1941 இல் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். என்னே விதியின் விளையாட்டு.

     பல்கலைக் கழகத்தோடு இப்புலவர் கல்லூரி இணைந்த பிறகு 1942இல் முதல் வித்துவான் புகு முக தேர்விலும், 1943 இல் முதல் முதனிலைத் தேர்விலும், 1945 முதல் இறுதி நிலைத் தேர்விலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாயினர். இறுதி நிலைத் தேர்வில் முதன்முதலாகக் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரும் வெற்றி பெற்றனர். இவர்களுள் அ.மா.பரிமணம் என்பாரும், இரா.கலியபெருமாள் என்பாரும், வித்துவான் இறுதி நிலைத் தேர்வில் முதல் வகுப்பில் முதல் தரத்தில் வெற்றி பெற்று, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தங்கப் பதக்கப் பரிசினை வென்றார்கள்.

தமிழர் கடமை

      கல்லூரித் தொடங்கப் பெற்றாலும் தனியொரு கட்டிடம் இன்றியே, இக் கல்லூரிச் செயலாற்றி வந்தது. பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே, தஞ்சை நகரப் பெரு வணிகர்களின் முயற்சியால், கல்லூரிக்கெனத் தனியொரு கட்டிடம் கட்டப்பெற்றது.

      கரந்தைப் புலவர் கல்லூரி என்பது வெறும் செங்கற்களாலும், மணலாலும் கட்டப்பெற்றக் கல்லூரியன்று. தமிழவேள் உமாமகேசுவரனாரின் அயரா உழைப்பாலும், உதிரத்தாலும், உருப் பெற்றக் கல்லூரியாகும்.

    தி.ச.பழனிசாமி பிள்ளை, தி.ச.முத்துசாமி பிள்ளை, தி.ச.பொன்னுசாமி பிள்ளை என்னும் வள்ளல்களின், வள்ளல் தன்மையால் உயிர் பெற்ற கல்லூரியாகும்.

     நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், சிவ.குப்புசாமி பிள்ளை, வெள்ளைவாரணனார், பெரியசாமி புலவர் மற்றும் எண்ணற்ற பெயர் தெரியாத தமிழன்பர்களின் உழைப்பால், நன்முயற்சியால் உயர்ந்த கல்லூரியாகும்.

      கரந்தைப் புலவர் கல்லூரியும், மாணவர் இல்லங்களும் வளர, செழிக்க, தஞ்சை நகர வணிகர்கள் ஆற்றியுள்ள சேவை அளவிடக்கரியதாகும். நாள்தோறும் சங்க அலுவலர்கள், கடைவீதிக்கு ஒரு சாக்குப் பையுடன் செல்வார்கள். தஞ்சை நகர வணிகர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் வருவாயின் சிறு பகுதியை சங்கத்திற்கு அன்பளிப்பாய் வழங்குவார்கள். பணமாக மட்டுமல்ல, அரிசியாக, காய் கனிகளாக, மளிகைப் பொருட்களாக, தங்களால் இயன்றதை, ஒரு நாள், இரு நாள் அல்ல தினமும் வழங்கி, வளர்த்த கல்லுரி இப் புலவர் கல்லூரியாகும்.


           கரந்தை, கூடலூர், குளமங்கலம், அரசூர், அம்மன்பேட்டை, பள்ளியக்கிரகாரம், சுங்கான்திடல், ஆலங்குடி, ஆத்தூர் போன்ற ஊர்களில் சிறு,சிறு அரிசி அரவை ஆலைகள் அதிகமாய் இருந்த காலகட்டம் அது. அன்றைய நாளில் அறுவடை மூலம் கிடைக்கும் நெல்மணிகளை, பத்தாயம் என்றழைக்கப்படும் சேமிப்பு கலன்களில் சேமித்து வைத்து, அவ்வப்போது உணவிற்குத் தேவைப்படும் அளவிற்கு, நெல்மணிகளை அரைத்து அரிசியாக்கிக் கொள்வார்கள். தஞ்சைப் பகுதியை சுற்றியுள்ள அனைத்து அரிசி அரவை ஆலைகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒரு சாக்குப் பை வைக்கப் பெற்றிருக்கும். தங்களின் இல்லங்களுக்குத் தேவையான அரிசியை அரைத்துச் செல்லும் அன்பர்கள், அந்த அரிசியிலிருந்து, ஒரு கைப் பிடியோ அல்லது ஒரு படி அரிசியையோ, தங்களின் வசதிக்கு எற்றவாறு, சங்கத்தின் சார்பில் வைக்கப்பெற்றிருக்கும் சாக்குகளில் அன்பளிப்பாய் அளித்துச் செல்வார்கள். சங்க அலுவலர்கள் வாரந்தோறும் அரிசி அரவை ஆலைகளுக்குச் சென்று, சங்கத்தின் சாக்குப் பையில் சேர்ந்திருக்கும் அரிசியை, மாணவர் இல்லதில் கொண்டு சேர்ப்பார்கள். இவ்வாறாக தஞ்சையினைப் சுற்றியுள்ள மக்கள் அனைவரும், இது நமது சங்கம், இது நமது மாணவர்களுக்கான இல்லம், இது நமது மக்களுக்கானக் கல்லூரி, இச் சங்கம் பாடுபடுவது நமது மக்களுக்காக என்றுணர்ந்து, தங்களது குடும்ப வளர்ச்சியும் சங்க வளர்ச்சியும் வேறுவேறல்ல, ஒன்றே எனக் கருதி உணவிட்டு வளர்த்த கல்லூரி இப்புலவர் கல்லூரியாகும்.

        தமிழ்ப் பெரியோர்கள், தமிழன்பர்கள், செல்வந்தர்கள், பெரு, சிறு வணிகர்கள் என அனைவரின் தன்னலமற்ற தியாகத்தாலும், உழைப்பாலும், உதிரத்தாலும் வளர்ந்த கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரியாகும்.

        இன்று தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி என உமாமகேசுவரனாரின் பெயரினையும், உயிரினையும் பெற்று வளர்ந்து நிற்கும் இக்கல்லூரியினைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும், தமிழராய் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.    

3 கருத்துகள்:

 1. தமிழவேள் உமாமகேசுவரனார் கண்ட கனவு நனவாக எடுக்கப்பட்ட முயற்சிகளைப் படிக்கும்போது மெய்சிலிர்த்தது. பல தடைகளைத் தகர்த்தெறிந்து, சோதனைகளை எதிர்கொண்டு வளர்ந்த இக்கல்லூரியினைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும், தமிழராய் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். அருமையான புகைப்படங்கள். சிறப்பான கட்டுரை. தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி. அன்புடன், ஜம்புலிங்கம்

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள ஜெயக்குமார்...


  தொடர் வேலைகள்.எனவே தாமதம் நேர்ந்துவிட்டது உங்கள் பதிவிற்கு வர. மன்னிக்கவும்.

  வயிற்றுக்குச் சோறிடுவது அன்னையைப் போல. நாம் பணிபுரியும் நிறுவனமும் அன்னைதான். உண்மையில் அதற்கு நீங்கள் மிகப் பொருத்தமானவர். தமிழ்ச்சங்கத்தின் ஒவ்வொரு நிலையையும் அங்கத்தையும் அழகாகப் பதிவிட்டு வருகிறீர்கள். உண்மையில் இது கொடுப்பினையான ஒன்று.

  மனம் நிறைவாக இருக்கிறது இக்கட்டுரையை வாசிக்க. இந்த தேசத்திற்காகவும் தமிழ் மொழிக்காகவும் தமிழ் மீது கொண்டிருக்கிற தணியாத பற்றும் இந்த மொழியை அழியாது காத்து நிற்கிறது. உமாமகேசுவரனாரின் பணிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உண்மையில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். உமாமகேசுவரனார் வாழ்ந்த கரந்தையில் பிறந்ததற்காகவும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் படித்தமைக்காகவும். இதனை காலம் முழுக்க எண்ணி பெருமைப்படுவேன். முடிந்தவரை உலகிற்கு அறிவித்துக்கொண்டேயிருப்பேன் வாய்ப்பமையும்போது.

  தொடர்ந்து நீங்கள் தமிழ்ச்சங்கத்தின் பல்வகைப் பரிமாணங்களை எழுதுங்கள். அது உலகிற்கு அறிவிக்கப்படவேண்டிய நேரமும் தேவையும் அவசியமாகிவிட்ட்து.

  ஒரு மொழியை நேசிப்பது... தாயைப்போல பரிவு காட்டுவது.. இதற்காக என்ன செய்யலாம் என்று எண்ணுவது... அதற்கான நிதியைத் தேடுவது...அதன் வழி ஒரு அமைப்பை நிறுவி எண்ணிய நோக்கத்தை நிறைவு செய்வது. அதனையும் தரமாக செய்வது. அதாவது தரமான தமிழை உண்மையில் நேசிப்பவர்களின் உதவிகளைக் கொண்டு தரமாக செய்வது என்பது. இன்றைக்கு கரந்தைத் தமிழ்ச்சங்கம் மாண்புற்று உயர்ந்தோங்கி நிற்கிறது. அதன் புகழொளியில் சிறுபங்கேனும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். நான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுதான் அவரின் ஆன்மாவிற்கு செய்யும் உதவி. நீங்கள் தொடங்கிவிட்டீர்கள்.

  மிகமிகப் பொறுப்பான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரன்புடைய திரு ஹரணி அவர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன். உமாமகேசுவரனார் வாழ்ந்த கரந்தையில் பிறந்ததற்காகவும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் படித்தமைக்காகவும், தொடர்ந்து கரந்தையிலேயே பணியாற்றிட வாய்ப்பு கிடைத்தமைக்காகவும் காலம் முழுக்க எண்ணி எண்ணி பெருமைப்படுவேன்.

   நீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு