கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக
வீற்றிருக்கும் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்களுக்குக் கடந்த பல
நாட்களாக உடல் நலக்குறைவு.
சென்னை அமைந்தகரையில் அமைந்திருக்கும் ஒரு தனியார்
மருத்துவ மனையில்
கடந்த 2.6.2012 சனிக் கிழமை முதல், தங்கி சிகிச்சைப் பெற்று
வருகிறார்.
ஓரிரு நாட்களில் மருத்துவ மனையிலிருந்து
தஞ்சாவூர் திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனாலும் உடலில் சர்க்கரையின்
அளவு நிலையில்லாமல் கூடுவதும் குறைவதுமாக இருந்ததால், பல நாட்கள் தொடர்ந்து
மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய நிலை.
![]() |
சங்கச் செயலாளர் |
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமாய்த்
திகழும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக உடன் பணியாற்றும் நண்பர்கள் மு.பத்மநாபன்,
அ.சதாசிவம், வெ.சரவணன் அகியோருக்கும் எனக்கும், சென்னை சென்று செயலாளரைப்
பார்த்துவர வேண்டும் என்ற விருப்பம். ஆயினும் பள்ளிக்கூடம் திறந்து சில நாட்களே
கடந்துள்ள நிலையில் விடுமறை எடுக்க முடியாத நிலை. மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும்
இத்தருணத்தில் விடுமுறை எடுக்கவும் மனமில்லாத சூழல். எனவே விடுமுறை நாளான
சனிக்கிழமை (9.6.2012) சென்னை சென்று செயலாளரைப் பார்ப்பது என்று முடிவு செய்தோம்.
சனிக் கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தஞ்சை
தொடர் வண்டி நிலையத்தில் நால்வரும் சந்தித்தோம்.காலை 4.20 மணிக்கு வரவேண்டிய
திருச்செந்தூர் விரைவு வண்டி, ஒரு மணி நேரம் தாமதமாக 5.25க்கு வந்தது. வண்டி
தாமதமான ஒவ்வொரு நிமிடமும் கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. திருச்செந்தூர் விரைவு
வண்டி வந்தபொழுது, பெட்டியினுள்ளே நிற்பதற்குக் கூட இடமில்லை. முன்பதிவு செய்யாமல்
வந்ததை எண்ணி வருந்தினோம். ஆனாலும், கும்பகோணம் சென்றடைந்ததும், நாலவருக்கும்
உட்கார இடம் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.
திருச்செந்தூர் விரைவு வண்டியானது நன்பகல்
12.00 மணியளவில் சென்னை எழும்பூர் சந்திப்பைச் சென்றடைந்தது.
செயலாளருக்குத் துணையாக சென்னையிலேயே
தங்கியிருக்கும் நண்பர் மோகன் அவர்களும், நண்பரும் ஓட்டுநருமாகிய ரமேஷ் அவர்களும்,
இன்னோவா காருடன் எங்களுக்காகக் காத்திருந்தனர். காரில் பயணித்து மருத்துவ
மனைக்குச் சென்று செயலாளரைச் சந்தித்தோம்.
செயலாளரும் அவரது துணைவியாரும் எங்களை
வரவேற்றனர். செயலாளரின் உடல் நிலை குறித்து அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
மருத்துவ மனையில் இருப்பவரை அதிக நேரம் பேசி தொடந்தரவு செய்ய விரும்பாமல், மாலை
வந்து பார்ப்பதாகக் கூறி விடைபெற்றோம்.
![]() |
நண்பர் சுதாகர் |
அன்று இரவே சென்னையிலிருந்து தஞ்சைக்குத்
திரும்ப முடிவு செய்திருந்தோம். இரவுப் பயணமாகையால் தொடர் வண்டியில் படுக்கை
வசதியுடன் கூடிய இருக்கை கிடைக்குமானால் நன்றாக இருக்குமே என எண்ணினோம். நண்பர்
சரவணன் அவர்கள், சென்னையிலேயே வசிக்கும் நண்பர் சுதாகர் அவர்களைத் தொடர்பு
கொண்டார். இவ்விடத்தில் நண்பர் சுதாகர் அவர்களைப் பற்றியச் சில செய்திகளைச்
சொல்லியே ஆகவேண்டும்.
சுதாகர் கரந்தையினைச் சேர்ந்தவர். ஒன்றாம்
வகுப்பு முதல் எம்.சி.ஏ., வரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே பயின்றவர்.
எம்.சி.ஏ., படித்து முடித்த பிறகு வேலை வாய்ப்பு தேடிச் சென்னையில் கால்
பதித்தவர். பழகுவதற்கு இனிமையானவர். கடுமையான உழைப்பாளி. ஒரு பணியினைத்
தொடங்கிவிட்டால், அதே சிந்தனையாய் இருந்து, அச்செயலினைச் செய்து முடித்த பிறகே,
சற்றேனும் இளைப்பாறும் குணமுடையவர்.
ஒரு கணினி பயிற்சி மையத்தில் பணியில்
சேர்ந்து, தனது கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, இன்று சொந்தமாக Saraswathi Institute of Animation என்னும் நிறுவனத்தை வெற்றிகரமாக நிருவகித்து வருபவர்.
இரண்டு வருடங்களுக்கு முன், எனது மகளின் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னை
வந்திருந்த பொழுது, தனது பல்வேறு பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு நாள்
முழுதும் மருத்துவ மனையில், என்னுடன் கூடவே இருந்து உதவிய உன்னத நண்பர்.
மதிய உணவிற்குப் பிறகு, நண்பர் சுதாகர் அவர்களைப் பார்ப்பதற்காக தியாகராய
நகர் சென்றோம். ராஜா பாதர் தெரு முனையிலேயே, எங்களுக்காகக் காத்திருந்து, தனது
சரஸ்வதி கணினி பயிற்சி மையத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.
சென்னை, தியாகராய நகரில் ராஜா பாதர் தெருவில் அமைந்திருக்கும், குப்புசாமி
வளாகத்தின் இரண்டாம் தளத்திலும், மூன்றாம் தளத்திலும் இவரது கணினி பயிற்சி மையம்
செயல்பட்டு வருகிறது. முழுமையாக குளிர்சாதன வசதியுடன், எப்பக்கம் திரும்பினாலும்,
கணினி, LCD Projector உடன்கூடிய சிறிய,
பெரிய பயிற்சி அறைகள். பஞ்சாப் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வெப்
டிசைனிங், பி.எஸ்ஸி.,(மல்டி மீடியா), எம்.எஸ்ஸி., (மல்டி மீடியா) திரைப்படத்
தயாரிப்பு, எடிடிங், அனிமேசன் என பத்திற்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகளை திறம்பட
நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பயின்ற 6,000 ற்கும் மேற்பட்டவர்களுக்கு,
நல்ல வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எங்களுக்காக, தனது கணினி
பயிற்சி மாணவர்கள் தயாரித்த குறும்படம்
ஒன்றினைத் திரையிட்டுக் காட்டினார்.
சில நிமிடங்களே ஓடும் இப்படத்தினைப் பெற்றோர்கள் பார்ப்பார்களேயானால்,
பல்லாயிரம் இளம் தலை முறையினரின் எதிர்காலம் காப்பாற்றப்படும். இத்தகு வீரியம்
மிக்கக் குறும்படங்கள், ஒரு கட்டிடத்தின் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே முடங்கி
விடுவது மிகவும் வேதனையான ஒன்றாகும்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆயிரமாயிரம் கோடிகளை வாரி இறைக்கும் அரசு,
இதுபோன்ற சிறந்த குறும் படங்களைத் தேர்வு செய்து, குறைந்த பட்சம், மே மற்றும் ஜுன்
மாதங்களில், உயர் கல்விக்கான சேர்க்கை நேரத்தில், திரையரங்குகளில், தொலைக் காட்சிகளில்
ஒளிபரப்ப ஏற்பாடு செய்யுமேயானால், அதுவே மிகப் பெரிய சமூக சீர்திருத்தமாக அமையும்
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
குறும்படம் நிறைவுற்றபிறகு, சதாகர் தனது
நண்பரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயணச் சீட்டிற்கு ஏற்பாடு செய்தார். இரவு
10.30 மணிக்குப் புறப்படும் மலைக் கோட்டை விரைவு வண்டியில் நால்வருக்கும் படுக்கை
வசதியுடன் கூடிய இருக்கைகள் கிடைத்தன. இரவுதான் புறப்பட வேண்டும், இன்னும் பல மணி
நேரமிருக்கிறது, எங்கு செல்லலாம் என்ற பேச்சு வந்தபொழுது, சுதாகர் உடனே கூறினார், எம்.ஜி.ஆர்,
அவர்களின் நினைவு இல்லம் இதே தி.நகரில்தான் இருக்கிறது அங்கு செல்வோம்.
தியாகராய நகர், ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு
இல்லம். எம்.ஜி.ஆர் அலுவலகம் இருந்த வீடு இது. இக்குறுகிய தெருவிலா எம்.ஜி.ஆர்,
அவர்களின் அலுவலகம் இருந்தது? நம்புவதற்குச் சிறிது கடினமாகத்தான் இருக்கிறது.
வீட்டின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட
வடிவிலான பெயர்ப் பலகை எங்களை வரவேற்றது. வீட்டின் வலது புறம், வீட்டின் சுற்றுச்
சுவரை ஒட்டி, ஒரு அழகிய சிறிய மண்டபத்தில்
எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை, எங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறது.
வீட்டினுள் நுழைகிறோம். TMX 4777 என்ற எண்ணுள்ள எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பச்சை
நிற அம்பாசிடர் கார், கூடத்தின் நடுவே கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.
எத்துனையோ வெளிநாட்டுக் கார்கள், இந்திய மண்ணில் தடம் பதித்த பிறகும், கடைசி வரை
எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது இந்த அம்பாசிடர் காரைத்தான்.
அறை முழுக்க எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள்,
கேடயங்கள் நிரம்பி வழிந்தன. மெதுவாக மாடிப் படியேறினோம். மாடியில் விசாலமான
அறையின் நடுவே எம்.ஜி.ஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி சாதனங்கள். மரத்தினால் ஆன
கரலாக்கட்டை என்னும் உடற்பயிற்சிக் கருவிகள் ஐந்து இருந்தன.அவற்றின்
உயரத்தினையும், பருமனையும் பார்த்தால் இரண்டு கைகளால் தூக்குவதற்கே கடினமாக
இருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஒரே கையால் தூக்கி தலையைச் சுற்றி சுற்றி பயிற்சி
செய்ய வேண்டிய உடற்பயிற்சி சாதனமாகும் அது. எம்.ஜி.ஆர் அவர்களின் கரம் எவ்வளவு வலுவானதாக
இருந்திருக்கும் என்பது கரலாக் கட்டையை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
எம்.ஜி.ஆர் அணிந்த உடைகள், தொப்பி, கண்ணாடி, கடிகாரம் முதலிய பொருட்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டிருந்தன. அறையின் ஒரு ஓரத்தில் ஆறடி உயர கண்ணாடிப் பெட்டியில் கம்பீரமாய் ஒரு சிங்கம். என்ன சிங்கமா?, ஆம்
சிங்கம்தான். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கும், இந்த சிங்கத்திற்கும் என்ன
தொடர்பு என்ற கேள்வி எழுகிறதல்லவா? கேள்வி எழுவது இயற்கைதான். இது எம்.ஜி.ஆர்
வளர்த்த சிங்கம்.
வீட்டில் நாய் வளர்ப்பார்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பார்கள். ஆனால்
எம்.ஜி.ஆர் வளர்த்ததோ சிங்கங்கள். ஒன்றல்ல இரண்டு சிங்கக் குட்டிகளை எம்.ஜி.ஆர்
வளர்த்தார். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ்
ரோடில் வசித்தபோதும், பின்னர் ராமாவரத் தோட்டத்தில் வசித்தபோதும்
வளர்த்தார். ராஜா, ராணி என்று இரண்டு சிங்கங்கள். வீட்டிலேயே கூண்டு இருக்கும். அதை கவனிக்க ஆட்கள் இருப்பார்கள். இவ்விரு
சிங்கங்களையும் எம்.ஜி.ஆர் மிகவும் பாசமாக வளர்த்தார். சில சமயம் இச்சிங்கங்கள்
எம்.ஜி.ஆரின் கையை நக்கிக் கொடுக்கும்.
அடிமைப் பெண் திரைப்படத்தில் நடித்தது இந்த ராஜா என்கிற சிங்கம்தான். ராணி
அதற்கு முன்னரே இறந்து விட்டது. அடிமைப் பெண்ணில் சிங்கம் தொடர்பான காட்சிகளை
படமாக்கி முடித்ததும், சென்னை மிருகக் காட்சி சாலைக்கு இந்த சிங்கத்தை நன்கொடையாக
வழங்கினார் எம்.ஜி.ஆர். அங்கு பல ஆண்டுகள் காலத்தை கழித்த ராஜா,வயது முதிர்வின்
காரணமாக இறந்தபின், தகுந்த அனுமதியோடு, ராஜாவின் உடலைப் பெற்று, அச்சிங்கம்
உயிரோடு இருப்பது போலவே பாடம் செய்து, ராமாவரம் தோட்ட வீட்டில் வைத்திருந்தார்
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நினைவு இல்லத்திற்கு இச்சிங்கம் மாற்றப்பட்டது.
அருகில் இருந்த மற்றோர் அறைக்குச் சென்றோம். புத்தகங்கள் நிரம்பியிருந்தன.
ஒரு நாற்காலியில் மாவுக்கட்டு. 1967 ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள்
எம்.ஜி.ஆர் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதை நாடறியும். அப்போது கழுத்தில்
பாய்ந்த குண்டு அறுவைசி கிச்சையின் மூலம் அகற்ற பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு
கழுத்தில் மாவுக் கட்ட போட்டார்கள் அல்லவா, அந்த மாவுக்கட்டு இன்றளவும் பத்திரமாய்
பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த மாவுக்கட்டு. வியப்புடன் அந்த
மாவுக்கட்டையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அடுத்த அறை எம்.ஜி.ஆர் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறை. மூலையில் ஒரு
தொலைக் காட்சிப் பெட்டி. அதற்கு அடுத்த அறை எம்.ஜி.ஆர் அவர்களின் அலுவலக
அறையாகும்.

அடுத்த அறையில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெயர் பட்டியலும், ஒவ்வொரு
படத்தில் இருந்து, ஒரு புகைப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முதல் படம்
சதிலீலாவதி, நடித்த ஆண்டு 1935. எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படம் மதுரையை மீட்ட
சுந்தர பாண்டியன். ஆண்டு 1978. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரையிடப்பட்ட 1978
ஆம் ஆண்டு முதல் 1987 இல் அமரத்துவம் எய்தும் வரை எம்.ஜி.ஆர் அவர்களே தமிழக முதல்வர்.
எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு இல்லத்தில் நுழைந்த நிமிடத்தில் இருந்தே,
கரந்தையும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் என் மனக் கண்ணில் மாறி மாறி சுழன்று
கொண்டேயிருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் முப்பதாண்டுகள்
ஒப்பிலாப் பணியாற்றிய உமாமகேசுவரனாரின் உணர்வுக்கு உயிர் கொடுத்தவரல்லவா
எம்.ஜி.ஆர்.
உமாமகேசுவரனார் அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும்
என்ன தொடர்பு என்ற குழப்பம் வரலாம். உண்மையில் உமாமகேசுவரனாரின் மிகப் பெரிய
கனவுகளில் ஒன்றினை நிறைவேற்றிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.
தமிழ் மொழிக்கு எனத் தனியே ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1921
ஆம் ஆண்டிலேயே, முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியவர் உமாமகேசுவரனார்
அவர்களாவார். சரியாக 60 அண்டுகள் கழித்து, 1981 இல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை
நிறுவி, உமாமகேசுவரனாரின் கனவினை நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.
உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட
வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த
தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் எம்.ஜி.ஆர். அதுமட்டுமா, தமிழ்ப்
பல்கலைக் கழகப் பேரவைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களில் இருந்து
ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பும் உரிமையினையும் வழங்கிய வள்ளல் அல்லவா.
எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே
அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக்
கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர்
எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய
தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி,ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின்
கூட்டம் ஒன்றினை கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம்
தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் தயங்கியவாறே 50 ஏக்கர்
ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் 100 ஏக்கர் ஒதுக்கினால்
மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் புன்னகைத்தார். தமிழுக்கு
என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம்
சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர்
இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தைனை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய
பெருந்தகை எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எண்ணியவுடன் வேறொரு நினையும், நெஞ்சில் முள்ளாய்
தைக்கத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் நுட்ப வசதியில்லாத
காலத்தில், தஞ்சைப் பெரிய கோவில் என்னும் அதிஅற்புத சாதனையினை நிகழ்த்திக் காட்டிய
மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு, எப்படி பெரிய கோவிலின் உள்ளே இடம்
கிடைக்கவில்லையோ, அதைப் போலவே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர்
அவர்களின் புகைப்படத்திற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், ஓர் சிறிய இடம்
கூட கிடைக்காமற் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.
தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்த
நிலையில், 2004 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்ப்
பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த புலவர் மீனா.இராமதாசு அவர்கள்,
எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்தினை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்ட வேண்டும்
என்ற தீர்மானத்தினையே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. ஆனால் புகைப்படம்
மாட்டப்பெற்றதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் படம்
மாட்டப்பெற்றிருக்குமானால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம்.
நூறு முறையாவது சென்னைக்குச் சென்றிருப்போம். ஆனால் இதுவரை எந்தவொரு
சென்னைப் பயணத்திலும் கிடைக்காத ஓர் நிறைவினை, மகிழ்வினை இப்பயணத்தில் உணர
முடிந்தது.
அன்புள்ள ஜெயக்குமார்..
பதிலளிநீக்குஅவசரப் பணியில் இருக்கிறேன். விரைவில் வந்து எழுதுவேன்.
அன்புள்ள ஜெயக்குமார்..
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு. எம்ஜிஆர் அவர்கள்தான் தமிழ்ப் பல்கலைக்கழகம் பற்றிய பெரிய சிந்தனையை வடித்தெடுத்தார்கள். இந்த உலகம் என்றைக்கும் மறவாது. இந்திய அளவில் ஒரு மொழிக்கென ஒரு பல்கலைக்கழகம் கண்ட பெருமை என்றைக்கும் அவரையேச் சாரும். இன்றைக்கு அது சவலைப் பிள்ளைபோலப் பராமரிக்கப்படுவதும் வருத்தத்திற்குரியதுதான். எம்ஜிஆர் நினைவு இல்லத்தை பலமுறை கண்டிருக்கிறேன். உங்களின் பார்வையும் புகைப்படங்களும் மறுமுறை நினைவூட்டுகின்றன. எம்ஜிஆர் பயன்படுத்திய கார் அருகில் என்னுடைய மகன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வைத்திருக்கிறேன். அவர் ஒரு சகாப்தம். திரையுலகிலும் சரி அரசியல் வாழ்விலும் சரி. அவரிடம் கற்றுக்கொள்ள இன்றைய அரசியல்வாதிகளுக்கு நிறைய இருக்கின்றன.
உங்கள் நண்பரின் மாணவர்கள் எடுத்த பலியாடு குறும்படம் பார்த்தேன். நல்ல அனுபவமிககவர்கள் எடுத்த படம்போல பொலிவுடன் இருந்தது. நன்றாக அமைந்த இயக்கம். சுருக்கெனத் தைக்கும் காட்சிகள். கதைப்பொருண்மை அருமை. நடித்தவர்களும் வெகு எதார்த்தமாக இயற்கையோடு ஒன்றிய நடிப்பாய் இருந்தது. எடிட்டிங்க மற்றும் ஒளிப்பதிவும் தரமாக இருந்தது. அந்த மாணவர்கள் இன்னும் பயிற்சி எடுத்தால் அவர்களுக்கு வளமான எதிர்காலம் திரையுலகில் உறுதி. உங்கள் பதிவுவழியாக அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எழுதுங்கள். உங்கள் பதிவு நன்றாக மெருகேறுகிறது.
இன்னொரு செய்தி சங்கு இதழின் செயல் ஆசிரியர் திரு சேலம் கி.இளங்கோ அவர்கள் (உங்கள் புத்தகம் குறித்து தொலைபேசியில் பேசியவர்) சங்கு இதழை ஒருபடி உங்களுக்குத் தந்திருக்கிறார். கூடவே ரூ.100 சந்தாவும் கேட்டிருக்கிறார். இயலுமாயின் தரலாம். பணம் மட்டுமல்ல உங்களின் படைப்புக்களும்.
ஹரணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நீக்குThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
பதிலளிநீக்குSpoken English franchise in Bangalore
Franchise for spoken English classes
Spoken English franchise in Punjab
English franchise centre in Chennai
Spoken English franchise in Andhra Pradesh
Best spoken English franchisor
Best franchisor in spoken English
Spoken English franchise in Ahmedabad
Spoken English franchise in Maharashtra
எம்ஜிஆர் அவர்களின் பராக்கிரமத்தைக் காட்டும் கரலாக்கட்டைகள் இருந்தாகவும் அவற்றின் அளவுகளே எம்ஜிஆர் கரத்தின் வலுவைப் பறை சாற்ற போதுமானது என்று கூறி விட்டு அந்த கரலாக்கட்டைகளின் படங்களை பகிராமல் போனது வருத்தம் அளிக்கிறது.
பதிலளிநீக்கு