11 ஜூலை 2013

கரந்தை - மலர் 15


----- கடந்த வாரம் ----
இத்தீர்மானமே, தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டுமென, தமிழ்கூறும் நல்லுலகில் இயற்றப்பட்ட முதல்  தீர்மானமாகும்.
---------------------

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினோராம் ஆண்டு விழா, 18.11.1922 மற்றும் 19.11.1922 ஆகிய தேதிகளில், சென்னை சட்டக் கல்லூரிப் பேராசிரியரும், காளிகட் பல்கலைக் கழகத்தின், சட்ட விரிவுரையாளரும், சங்கத்தின் உறுப்பினருமாகிய திரு சா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றபோதும், தமிழ்ப் பல்கலைக் கழகம் குறித்த தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அரசியலாருக்கு அனுப்பப் பெற்றது.

     மேலும், 22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய தேதிகளில், தமிழ் வள்ளல் சா.ராம.ழ.சித. பெத்தாச்சி செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு விழாவின்போதும், இத் தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப் பட்டது. இதே விழாவில், சென்னை மாகாணக் கல்வி அமைச்சர், சென்னைப் பல்கலைக் கழகத் திருத்தத்தை, வெகு திறமையுடன் முன் கொண்டு வந்து சட்டமாக்கியதற்காகவும், தமிழ் நாட்டிற்கென ஓர் பல்கலைக் கழகம் ஏற்படுத்துவதில், ஆதரவு காட்டி பேசியதற்காகவும், தங்கள் நன்றியை தெரிவித்து, அன்னவரை வாழ்த்துவதோடு, திருச்சிராப் பள்ளியில், ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் விரைவில் தோற்றுவித்தற்கான முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென இப்பெருங்கூட்டத்தார் வேண்டிக் கொள்கின்றனர் எனும் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

      சென்னை வளர்ச்சி நெறி அமைச்சர் மாண்புற்ற டி.என். சிவஞானம் பிள்ளை அவர்கள் தலைமையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதிமூன்றாம் ஆண்டு விழாவானது 20.9.1924 மற்றும் 21.9.1924 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவிற்குச்  சில சட்டசபை உறுப்பினர்களும், தமிழ்ப் புலவர்களும் மற்ற பெரியோர்களும் வந்திருந்தனர்.

      வளமலியும்  பொருணிலையில்  மாணாமை  மயங்கிடினும்
      உளநிறையன்  பார்மிகுவ  தொருகரந்தை  யுறுசங்கம்
      உறுசங்கம்  இதுவென்றே  உற்றனையில்  வோங்கவையம்
      வருமெங்கள்  சிவஞான  வள்ளால்  நீவாழியவே

      புலமையினர்  சிலரேனும்  பொருள்பலர்  இலரேனும்
      வளமையெனும்  உளமுடையார்  வாய்கரந்தை  வளர்சங்கம்
      வளர்சங்கம்  இதுவென்றே  வந்தனையில்  மாவையம்
      உளமகிழெம்  சிவஞான  உயர்வோய்  நீவாழியவே

      வருதேவர்  பலராக,  மலிபகழார்  தமிழ்த்தேவெம்
      ஒருதேவென்  பார்மலியும்  ஓர்கரந்தை  ஒளிர்சங்கம்
      ஒளிர்சங்கம்  இதுவென்றே  ஓர்ந்தவையம்  நேர்ந்தனையால்
      எழிலன்பிற்  சிவஞான  ஏந்தால்  நீவாழியவே

எனச் சங்கத்தின் சார்பில் மாண்புற்ற அமைச்சர் டி.என். சிவஞானம் பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துப் பா வழங்கப் பெற்றது.

     இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களில் பொரும்பாலார் சென்னைச் சட்டசயையைத் தமிழை வளர்க்காததற்குக் குறை கூறித் தங்களுக்கென ஓர் பல்கலைக் கழகம் நிறுவிக்கொள முயன்றுவரும் ஆந்திரர்களின் ஊக்கத்தை எடுத்துக் காட்டி, சட்டசபையிலுள்ள தமிழர்கள், உடனே ஓர் சட்டம் கொண்டு வந்து, ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை விரைவில் நிறுவ வேண்டுமென மிக ஆர்வத்தோடு பேசினார்கள். ராவ் பகதூர் டி.ஏ. செட்டியார் அவர்களும், திரு அலர்மேல் மங்கைத் தாயாரும், இப்பொழுதுள்ள சென்னைப் பல்கலைக் கழகத்தையே, நம்முடைய விருப்பம் போல் மாற்றிக் கொள்ள முயன்று, அவ்விருப்பம் கைகூடா விட்டால், தனியாக ஒரு பல்கலைக் கழகத்துக்காக உழைப்பது  நலமாயிருக்கும், என தங்களது எண்ணத்தினைத் தெரிவித்தனர். முடியுமானால் நாளையே ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகமொன்றை நிறுவிட வேண்டுமென்று எண்ணி வந்த பலரும், இவ்விருவரது எண்ணத்தைக் காதில் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆங்கு கூடியிருந்தவர்களின் விருப்பத்தைக் கைத் தூக்காற் கணக்கிட்ட பொழுது, திரு செட்டியார் அவர்களின் எண்ணத்தைச் சார்ந்தவர் வெகு சிலராகவே காணப்பட்டனர்.

     மேலும் இவ்விழாவின் போது, சென்ற ஆண்டுத் தீர்மானங்களை அரசியலார் இதுகாறுங் கருதாதிருத்தலுக்கு, இப்பெருங்கூட்டத்தார் வருந்தி, இம் முடிவுகளை பின்னரும் உறுதிபடுத்தி, இனி வாளாவிருத்தல் கூடாமையின், இம்முடிவுகளை அரசியலார் முதலியோருக்குத் தெரிவித்து, அவற்றை இனியும் காலந் தாழ்த்தாது நிறைவேற்றவும், தமிழ் மொழி, தமிழர்களின் மேம்பாடுகட்கு இன்னும் ஆனவற்றை எடுத்துரைத்து, நமது அருமைத் தமிழ் மொழி சிறந்து விளங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும, இப் பெருங்கூட்டத்தார், அடியிற் குறிப்பிட்டவர்களால் ஆகிய நிலைக் கழகம் ஒன்று ஏற்படுத்துகிறார்கள்.

     இப்பெருமக்கள் இந்த அருமைப் பணியினை மகிழ்ந்து ஏற்று, இனிது நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஒவ்வொரு நிலப் பகுதிக்கும் பெரும்பாலும் ஐந்து பேருக்கு மேற்படாமல், அவ்வப்போது வேண்டியிருப்பின் அறிஞர்களை சேர்த்துக் கொள்ளலாம்.


நிலைக் கழகத்தின் தலைவர் - இராமநாத புரம் அரசர்

நிலைக் கழகத்தின் அமைச்சர் - த.வே.உமாமகேசுவரனார்

சென்னை
திருவாளர்கள்
01.     நமசிவாய முதலியார்
02.    பவானந்தம் பிள்ளை
03.    திருநாவுக்கரசு முதலியார்
04.    ஏ.பாலகிருட்டின முதலியார்
05.    டாக்டர் கிருட்டினசாமி அய்யங்கார்

செங்கற்பட்டு
திருவாளர்கள்
01.     சச்சிதானந்தம் பிள்ளை
02.    சுவாமி வேதாசலனார்
03.    ஏ.இராமசாமி முதலியார்

தென் ஆற்காடு

01.     திரு உ.வே. சாமிநாத அய்யர்

வட ஆற்காடு

01.     திரு இராஜவேலு முதலியார்

சிற்றூர்
01.     திரு சி.ஆர்.இரட்டியார்

தஞ்சாவூர்
திருவாளர்கள்
01.     டி.முத்தைய முதலியார்
02.    ஐ.குமாரசாமி பிள்ளை
03.    அரங்க. வேங்கடாசலம் பிள்ளை

திருச்சிராப் பள்ளி
திருவாளர்கள்
01.     மு.வேங்கடசாமி நாட்டார்
02.    எஸ்.கே.தேவசிகாமணி
03.    அற்புதசாமி உடையார்

மதுரை
திருவாளர்கள்
01.     டி.சி.சீனிவாச அய்யங்கார்
02.    பி.டி.இராஜன்
03.    எம்.டி.சுப்பிரமணிய முதலியார்

திருநெல்வேலி
திருவாளர்கள்
01.     ஆர்.பி.சேதுப் பிள்ளை
02.    சுப்பிரமணிய பிள்ளை
03.    வி.ஆர்.சுப்பிரமணிய முதலியார்

இராமநாதபுரம்
திருவாளர்கள்
01.     மு.கதிரேசச் செட்டியார்
02.    சர் எம்.சி.டி.முத்தையச் செட்டியார்
03.    எம்.ஏ.ஆர்.என்.இராமநாதன் செட்டியார்

திருவனந்தபுரம்
01.     திரு டி.இலட்சுமனப் பிள்ளை

இலங்கை
திருவாளர்கள்
01.     எஸ்.அனவரத விநாயகம் பிள்ளை
02.    சர் பி.இராமநாதன்
03.    சுவாமி விபுலானந்தர்

சேலம்
01.     திரு டாக்டர் எஸ்.சுப்பராயன்

கோயமுத்தூர்
திருவாளர்கள்
01.     சி.கே.சுப்பிரமணிய முதலியார்
02.    இராமலிங்கம் செட்டியார்
03.    சி.எம்.இராமச்சந்திர செட்டியார்

பொது
01.     திரு. பி.வி.மாணிக்க நாயக்கர்

எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தினை கும்பகோணம் திரு ஊ.சா.வேட்கடராம அய்யர் அவர்கள் முன்மொழிய, இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் வழிமொழிந்தார்.

     மேலும் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுவது தொடர்பாக, கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழான தமிழ்ப் பொழில் இதழில் பல கட்டுரைகள் வெளியிடப் பெற்றன.

     ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தனிமையாக நமக்கு வேண்டுமாவென்ற கேள்வியைப் பல வகையாக ஆராய்ந்தால் அன்றி, நேரான விடையறுக்க இயலாது. முதன் முதல் நமக்கு எத்தகைய பல்கலைக் கழகம் தேவை என்பதை ஆராய்ந்த பிறகே, எவ்வூரில் நிறுவப்படல் வேண்டும் என்பதைப் பற்றியும், அதற்காக வேண்டியிருக்கும் பொருளை எவ்வாறு சேர்க்க வேண்டும் என்பதைப் பற்றியும் ஆராய்வது பொருத்தமாகும். நமது வருங்கால நிலையை நோக்குமிடத்து, இப்பொழுது நாம் கையாண்டு வரும் கல்வி முறைகள் அறவே மாற்றப்பட வேண்டும் என்பதை எவரும் ஒப்ப வேண்டும். நாம் எதிர்பார்த்து ஏங்கியிருப்பது தன்னரசுக்காக. தன்னரசாலேதான் எவ்வித நன்மையையும் பெற இருக்கிறோம். ஆகவே நமது மக்களை விரைவில் தன்னரசுக்குத் தகுதியுள்ளவர்களாக்க தாய் மொழிகளே தகுந்த வழிகளாகும்.

     உண்மையான தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், தமிழே கல்வி புகட்டும் கருவியாக இருத்தல் வேண்டும். பிற நாடுகளில் அவரவர் மொழிகள், எவ்வாறு போற்றப்பட்டு முற்றும் பயனுள்ளவையாக ஆக்கப்பட்டுள்ளனவோ, அவ்வாறே தமிழும், தமிழகத்தில் ஒரு மொழியாக நிலவ வேண்டும். எவ்வகை அறிவு நூல்களையும், விரைவில் தமிழ் மொழியில் பெயர்த்துக் கொள்ளலாம். எவ்வளவு வளப்பமில்லாத மொழியையுங்கூட, நாம் மனம் வைத்தால், சிறந்த மொழியாக விரைவில் வளர்த்து விடலாம். அவ்வாறு செய்யாவிட்டால் நமக்கு வாழ்வில்லை, சிறப்பில்லை.

     ஆகையால் தனித் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தவிர, வேறொன்றும் நமக்கு இப்பொழுது வேண்டுவதில்லை என்று கூறி இக்கட்டுரையை முடிப்பதற்கு முன், ஸ்பானிய, போர்த்துக்கல், சுவிட்ரசர்லாந்து போன்ற சிறு சிறு நாடுகளும், தம்தம் மொழிகளிலேயே பெருவாழ்வு வாழ்ந்து வருவதெனப் படிப்போர்க்கு நினைவுறுத்துகின்றேன் என்று 1926 ஆம் ஆண்டிலேயே சி. வேதாசலம் அவர்கள் தமிழ்ப் பொழில் இதழில் எழுதியுள்ளார்.

     இந்நிலையில், இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், சிதம்பரத்தில் நிறுவி நடத்தி வந்த மீனாட்சிக் கல்லூரியினையும், அதன் உறுப்புகளாக உள்ள, கீழ் நாட்டு மொழிப் பண்டிதர் பயிற்சிக் கல்லூரியையும், கீழ்நாட்டு மொழிக் கல்லூரியையும் ஒன்று சேர்த்து ஓர் பல்கலைக் கழகமாக மாற்றிட முயற்சி மேற்கொண்டார். மேலும் இப் பல்கலைக் கழகத்திற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்று, தனது பெயரினையே சூட்டவும் விரும்பினார். ஆனால் அன்றைய ஆங்கிலேய அரசின் விதிமுறைகள், தனி நபரின் பெயரில் பல்கலைக் கழகம் தொடங்குவதை அனுமதிக்கவில்லை.


      சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், நீதிக் கட்சியின் முக்கியமானத் தலைவர்களுள் ஒருவரும், சிறந்த வழக்கறிஞருமான உமாமகேசுவரனாரை அணுகி ஆலோசனைக் கேட்டார். உமாமகேசுவரனார் அவர்கள், இன்றைய சட்ட விதிகளின் படி, தனி நபரின் பெயரில் பல்கலைக் கழகம் நிறுவிட இயலாது. ஆனால் ஒரு ஊரின் பெயரால், நகரின் பெயரால் பல்கலைக் கழகம் தொடங்கிட, சட்ட விதிகளின் இடமிருக்கின்றது. எனவே தாங்கள், முதலில் தங்கள் பெயரில், அண்ணாமலை நகர் என்னும் ஒரு நகரை உருவாக்குங்கள். பின்னர் அண்ணாமலை நகரில் தொடங்கப்பட இருப்பதால், இப்பல்கலைக் கழகத்திற்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்று பெயரிட விரும்புவதாகக் கூறி விண்ணப்பம் செய்யுங்கள் என்று சீரிய ஆலோசனையினை வழங்கினார். உமாமகேசுவரனாரின் ஆலோசனையின் படியே, அண்ணாமலைப் பல்கலைக் கழகமானது, 1929 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது.

     சிறந்ததொரு ஆலோசனையினை வழங்கி உதவிய உமாமகேசுவரனாருக்கு, நன்றி தெரிவிக்கும் வகையிலும், உமாமகேசுவரனாரின் சீரிய தலைமையில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றிவரும் அரும் பணிகளைப் பாராட்டும் வகையிலும், சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஓர் இடத்தினை நிரந்தரமாக வழங்கினார்.

     தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் எனும் கோரிக்கையானது, அண்ணாமலைப் பல்லைக் கழகத்தின் வரவால் சிறிது தளர்ச்சியுற்றது. காரணம், அண்ணாமலைப் பல்கலைக் கழகமானது, முழுமையாக தமிழ் வளர்க்கும் பல்கலைக் கழகமாகச் செயல்படும் என்று பலரும் நம்பினர். இதனால் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட வேண்டும் என்னும் முயற்சி நெகிழ்வுற்றது.

     அறிவியல் கலைகளை எல்லாம் தமிழில் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற வேண்டுமென்று, சான்றோர் விரும்பினர். ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகமானது, இந்நோக்கத்தினை நிறைவேற்றவில்லை எனலாம்.


     பின்னாளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு சி.வேதாசலம் அவர்கள், இது குறித்துக் கண்டனம் தெரிவித்துப் பேசியபோது, பல்கலைக் கழகத்தின் சார்பில் விடை கூறியவர்,

நம் பல்கலைக் கழகம் தமிழ் பல்கலைக் கழகம் அன்று,
தமிழ் (பேசும்) மாவட்டங்களுக்கு உரிய பல்கலைக் கழகம் அவ்வளவுதான்

( Our University is not a Tamil University,
It is a University for Tamil Districts. That’s all)  

என்று தெரிவித்தாராம்.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே மீண்டும் சந்திப்போமா

49 கருத்துகள்:

 1. அரிய பல தகவல்களுடன் கூடிய மிக நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

  //அறிவியல் கலைகளை எல்லாம் தமிழில் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற வேண்டுமென்று, சான்றோர் விரும்பினர். ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகமானது, இந்நோக்கத்தினை நிறைவேற்றவில்லை எனலாம்.//

  ;(((( வருத்தமாகத்தான் உள்ளது.

  //நம் பல்கலைக் கழகம் தமிழ் பல்கலைக் கழகம் அன்று,
  தமிழ் (பேசும்) மாவட்டங்களுக்கு உரிய பல்கலைக் கழகம் அவ்வளவுதான்//

  அடடா !

  பகிர்வுக்கு ந்ன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தன்னலம் கருதா, தமிழ் நலம் மற்றும் போற்றிய அக்காலத் தமிழ்றிஞர்களின் தமிழ்க் கனவு பெரியது அய்யா. நன்றி

   நீக்கு
 2. வாழ்த்துப் பா அருமை...

  ///எவ்வளவு வளப்பமில்லாத மொழியையுங்கூட, நாம் மனம் வைத்தால், சிறந்த மொழியாக விரைவில் வளர்த்து விடலாம். அவ்வாறு செய்யாவிட்டால் நமக்கு வாழ்வில்லை, சிறப்பில்லை... ///

  மனம் தான் இல்லை...

  விளக்கமான தகவல்களுக்கு நன்றி ஐயா.... வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா தாங்கள் சொல்வது உண்மைதான். மனம்தான் இல்லை. பாதை மாறி விட்டது பயணமும் மாறிவிட்டது. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகைதர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு

 3. அண்ணாமலைப் பல்கலை கழகத்துக்கு அப்பெயர் வர உமாமகேசுவரனார் கூறிய ஆலோசனை எனக்கு “ கோலத்தில்போனால் தடுக்கில் போவது “ என்ற வழக்குச் சொல்லை நினைவு படுத்தியது. அடிமேல் அடி அடித்துத்தான் தமிழ் பல்கலக் கழகம் உருவானது தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா. நீண்ட கால முயற்சி, கனவு அய்யா தமிழ்ப் பல்கலைக் கழகம். தஞ்சையிலேயே தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவானது, உமாமகேசுவரனாரின் தமிழ் நெஞ்சுக்குக் கிடைத்த வெற்றி அய்யா. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 4. எவ்வளவு அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 5. அரிய தகவல்களுடன் அருமையான பதிவு!..தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம் உருவாக அந்நாளில் எவ்வளவு பாடுபட்டிருக்கின்றனர் என்பதை அறியும் போது - அந்தப் பெரியோர்களை போற்றி வணங்கத் தோன்றுகின்றது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வணங்கத்தான் வேண்டும் அய்யா.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 6. நான் அறியாத தகவல்கள் மிக்க நன்றி...!

  எல்லாமே தமிழ் பெயர்கள், உங்கள் பதிவுக்கு வந்தாலே தமிழ் மண மணக்குது அண்ணே வாழ்க வாழ்க...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 7. அரிய தகவல்கள்...

  தொடருங்கள்... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 8. அரிய அறியாத அவசியம் அனைவரும்
  அறிந்திருக்கவேண்டிய அருமையான
  செய்திகளை அழகுற பதிவாக்கித் தொடர்வதற்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 9. அன்று இருந்ததுபோல் இன்று அதையேப் பேணிவளர்க்க ஆளில்லையே?தங்களின் தகவல்கள் பயனுள்ளதாய் இருந்தது.மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா தாங்கள் சொல்வது உண்மைதான்.
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 10. அருமையான அரிய
  தகவல் களஞ்சியப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 11. 1926ல் இருந்த அதே நிலைமை இன்று வேறு மாதிரியாக நீடிக்கிறது: அதாவது, தமிழுக்குப் பல்கலைகழகங்கள் உண்டு. கற்பிக்க ஆசிரியர்கள் உண்டு. தமிழ் படிக்கத்தான் ஆளில்லை.

  உலகமயமாய்விட்ட பொருளாதார நிலைமையில், மொழிக்கல்வியை விட தொழிற்கல்விக்கே மாணவர்களும் பெற்றோர்களும் முன்னுரிமை வழங்குவதால் மொழிக்கல்விக்கும் சமூகம் வரலாறு உளவியல் போன்ற படிப்புக்களுக்கும் மாணவர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. இத்துறைகளில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவும் சில ஆண்டுகள் தேவைப்படுகின்றன.

  எனவே மொழி சார்ந்த பழங்காலத் தமிழ் வல்லுனர்களின் அன்றைய எதிர்பார்ப்பை கௌரவிக்கும் அதே சமயத்தில், அதைச் செயல்படுத்துவது அபாயகரமானதாகும் என்பதையும் பதிவுசெய்ய வேண்டியதாகிறது.

  (இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதே நிலைமை தான். சரித்திரத்தையும் ஆங்கில இலக்கியத்தையும் யாரும் படிப்பதில்லை என்று அடிக்கடி செய்திதாள்களில் வருகிறது). –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் கூறுவது உண்மைதான் அய்யா. ஆனால் உமாமகேசுவரனார் விரும்பியது, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவுவதன் மூலம், பிற மொழிகளிலுள்ள அறிவியல் தொழில் நுட்ப நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உமாமகேசுவரனார் தொடங்கிய பள்ளியில், தமிழோடு, தொழிற் கல்வியையும் சேர்த்தே வழங்கினார். தமிழ் படித்த அனைவருமே, அரசு வேலையினை எதிர்பார்த்து காத்திருப்பது தவறு, தாய் மொழியை அனைவரும் கற்கும் அதே வேளையில், தொழிற் கல்வி ஒன்றினையும் கற்று, தங்கள் வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே உமாமகேசுவரனாரின் கொள்கையாகும் அய்யா.
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 12. ஒவ்வொரு பெரிய நிறுவனங்களைப் பற்றியும் இவ்வளவு நுணுக்கமாகவும், தெளிவாகவும், ஆதாரங்களோடும் எழுதும் தங்களின் பணி போற்றத்தக்கது. பல பல்கலைக்கழகங்கள் உருவாக இருந்த காரணங்களைச் சுட்டிக் காட்டி எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. தாங்கள் காட்டிய பாதைதான் அய்யா.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 13. சட்டசபையில் அன்றே தமிழுக்கு தடை, அது இன்றும் தொடர தமிழ் மக்கள் விரும்புகின்றனரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி அய்யா.சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே தமிழ் மொழிக்கு ஆதரவில்லாத காலம் ஒன்று இருந்தது அய்யா. ஒரு மொழியின் அருமையினைத் தெரியாத மக்கள் என்றுமே இருப்பார்கள் அய்யா.
   தங்களின் வருகை மகிழ்வினை அளிக்கின்றது. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன் அய்யா. நன்றி

   நீக்கு
 14. கடந்த கால வரலாறு !மிகவும் அரிய பணி! வாழ்த்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்திற்கு நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 15. நிறைய தகவல்கள்! நிறைவாய் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்திற்கு நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 16. அரிய தமிழ்த் தகவலகளை பலரும் அறியும் வண்ணம் அழகாக சொல்கிறீர்கள். தகவல்களை திரட்டும் கடினமான பணியை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்
  இணைய உலகத்தில் சிறந்த தொடராக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. தாங்கள் அளிக்கும் ஊக்கம் எனக்கு பெரு மகிழ்வினையும் உற்சாகத்தினையும் கொடுக்கின்றது அய்யா. நன்றி தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 17. அரிய தகவல்கள் அடங்கிய பதிவு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்திற்கு நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 18. தமிழ்நாட்டில் தமிழுக்காக ஒருபல்லைக்கழகம் அமைக்க பாடுபட்ட உமாமகேசுவரனார் உள்ளிட்ட தமிழ் ஆர்வளர்களின் கடும் முயற்சியினை கண்முன்னே கொண்டுவந்த தாங்களின் பதிவிற்கு இனை ஒன்றுமில்லை.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பாலு.தங்களின் கருத்து எனக்குப் பெரு மகிழ்வினை அளிக்கின்றது. என்றும் வேண்டும் இந்த அன்பு.

   நீக்கு
 19. // தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் எனும் கோரிக்கையானது, அண்ணாமலைப் பல்லைக் கழகத்தின் வரவால் சிறிது தளர்ச்சியுற்றது. காரணம், அண்ணாமலைப் பல்கலைக் கழகமானது, முழுமையாக தமிழ் வளர்க்கும் பல்கலைக் கழகமாகச் செயல்படும் என்று பலரும் நம்பினர். இதனால் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட வேண்டும் என்னும் முயற்சி நெகிழ்வுற்றது. //

  உண்மைதான். நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலும், ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய தமிழ்த் தொண்டினை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனித்து நின்று செய்வதாக கூறினர். ஆனால் அவர்கள் தமிழை பாடத்திட்டத்தில் ஒரு இலக்கியப் பாடம என்ற அளவிலேயே பார்த்தனர். தங்களது பதிப்புத் துறையிலும் நூல்களை வெளியிட்டனர். ஏனெனில் அப்போது தமிழ் என்றாலே தமிழ்நாட்டில் அரசியல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடக்ககாலத்தில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார்,விபுலானந்த அடிகள் போன்ற பெரும் மேதைகள் பணியாற்றிய பெருமைக்குரிய பல்கலைக் கழகம் அய்யா அது.
   அண்ணாமலை அரசர் அவர்கள் பண்டித மணி கதிரேசஞ் செட்டியார் அவர்களின் இல்லத்திற்கே சென்று, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில பணியாற்ற அழைத்ததாகக் கூட படித்த நினைவு இருக்கின்றது அய்யா.

   நீக்கு
  2. தொடக்ககாலத்தில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார்,விபுலானந்த அடிகள் போன்ற பெரும் மேதைகள் பணியாற்றிய பெருமைக்குரிய பல்கலைக் கழகம் அய்யா அது.
   அண்ணாமலை அரசர் அவர்கள் பண்டித மணி கதிரேசஞ் செட்டியார் அவர்களின் இல்லத்திற்கே சென்று, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில பணியாற்ற அழைத்ததாகக் கூட படித்த நினைவு இருக்கின்றது அய்யா.

   நீக்கு
 20. அன்புள்ள ஜெயக்குமார்.

  தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாகக் கரந்தைப்பகுதியின் அதிலும் குறிப்பாகத் தமிழச்சங்கத்தினர் காரணமாக இருந்தமை குறித்துப் பெருமையாக உள்ளது. கரந்தையில் பிறந்திருக்கிற நாம் கொடுத்துவைத்தவர்கள்தான்.

  அன்றைய மொழிநடையில் விளையாடும் தமிழைப் பாருங்கள். மனதுக்கு எவ்வளவு நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் உள்ளது. கைதுர்க்காற் முடிவு செய்தல் என்ன அருமையான சொற்பிரயோகம். வாழ்த்துப்பா அருமை. வேதாசலம் பிள்ளைக்கு அளிக்கப்பட்ட பதில் வருத்தமாக இருந்தது. அரிய தகவல்களுடன் உங்களின் இந்தப் பதிவு நல்ல புத்தகமாக உருப்பெற்ற தமிழுலகின் மூலை முடுக்கெல்லாம் பரவட்டும்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரந்தையில் பிறந்தோம், வளர்ந்தோம் படித்தோம் என்பதே ஒரு பெருமைதான் அய்யா.நன்றி அய்யா

   நீக்கு
 21. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 22. Dear KJ.
  It is a very interesting thing to know our KARANTHAI TAMIL SANGAM was played a key role to start TAMIL UNIVERSITY. I think it is the main reason to select THANJAVUR as the place for TAMIL UNIVERSITY by Former CM Dr.M.G.R. And I beg apology for not typing this matter in TAMIL. I will practice the TAMIL TYPING very soon.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சரவணன். தங்களின் கருத்து உற்சாகத்தினைக் கொடுக்கின்றது. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 23. இக்காலப் பகுதியில் அறிந்திராத பல அரிய தகவல்கள் அறியத்தரும் பணி சிறக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு