17 ஏப்ரல் 2014

இமயத்தை அளந்தவர்ஆண்டு 1865. திபெத் நாட்டின் எல்லை. வியாபாரிகள் பலர் வணிகம் செய்யும் பொருட்டு, திபெத்தின் எல்லையைக் கடக்கிறார்கள். வியாபாரிகளுக்கு நடுவில் ஒரு யாத்ரிகரும் செல்கிறார். யாத்ரிகர் என்றால் அவர் ஒரு லாமா (Lama). திபெத்தியத் துறவி.

       அன்று இரவு, வியாபாரிகளுடனேயே தங்குகிறார். விடிந்து கண் விழித்துப் பார்த்தபொழுது, வியாபாரிகளையும் காணவில்லை. வழிச் செலவிற்காகக் கொண்டு வந்த பணத்தையும் காணவில்லை. சுமந்து வந்த பெட்டி மட்டும் மூலையில் பத்திரமாய் இருந்தது.


      பணம் போனால் என்ன? கால்கள்தான் இருக்கின்றனவே. நடக்கத் தொடங்கினார். பசித்த பொழுது, யாசகம் கேட்டார். பிறர் கொடுப்பதை உண்டு பயணத்தைத் தொடர்ந்தார். அவர் வேகமாகவும் நடக்கவில்லை, மெதுவாகவும் நடக்க வில்லை. ஒரே சீரான நடை. கையில் ஜெப மாலை. விரல்களால் ஜெபமாலையை அவ்வப்பொழுது உருட்டிக் கொண்டே நடக்கிறார்.

     நண்பர்களே, வாருங்கள் இம் மனிதரை சற்று உற்றுப் பார்ப்போமா?. ஏதோ சில வித்தியாசங்கள் தெரிகிறதல்லவா? ஆம் பார்ப்பதற்கு திபெத்தியத் துறவி லாமா போலத்தான் தெரிகிறார். ஆனால் கையில் வைத்திருக்கிறாரே, ஜெபமாலை, அதில் 108 மணிகள் அல்லவா இருக்க வேண்டும். 100 மணிகள்தானே இருக்கின்றன.  இந்த யாத்ரீகர் வைத்திருக்கும் தேநீர் கிண்ணத்தைப் பாருங்கள் தேநீர் கிண்ணத்தின் கீழே, ஒரு பொய்யான அடிமட்டம் இருக்கிறதல்லவா. கிண்ணத்திற்குள் ஒரு கிண்ணம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறதே. உள் கிண்ணத்தில் ஏதே ததும்பிக் கொண்டிருக்கிறதே, அது என்ன தெரிகிறதா? பாதரசம். வியப்பாக இருக்கிறதல்லவா? இவரின் ஊன்று கோலைப் பாருங்கள். கைத் தடியில் வெப்ப மாணியை (Thermo Meter) அல்லவா மறைத்து வைத்திருக்கிறார். உண்மையில் இந்தத் துறவி யார்?

    
ஆங்கிலேயர்கள், இந்தியாவில் தமது ஆட்சியை நிறுவிய பின்னர், 1767 இல் தோற்றுவித்த அமைப்புதான் சர்வே ஆஃப் இந்தியா (Survey of India). இவ்வமைப்பின் மூலம் இந்திய வரைபடத்தினை துல்லியமாக வரைய ஆங்கிலேயர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

      ஆனால் இமய மலைப் பகுதிகளில் ஆங்கிலேயர்களின் முயற்சி பலிக்க வில்லை. காரணம் சீனப் பேரரசர். வெளிநாட்டவருக்கு திபெத்தின் எல்லையை மூட உத்தரவிட்டிருந்தார். மீறி நுழைபர்களுக்கு மரண தண்டனை காத்திருந்தது.

     தாமஸ் ஜி.மாண்கோமெரி என்பவர்தான், ஒரு புது வழியை, அற்புதமான வழியை ஆங்கிலேயர்களுக்குக் கூறினார். திபெத்திய முக அமைப்புடன் கூடிய, படித்த, மலைகளைப் பற்றிய அறிவு வாய்ந்த, அதே சமயத்தில், மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற சம்மதிக்கும் இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பது. அவர்களுக்குப் போதிய பயிற்சி அளித்து, இமயத்தைக் கணக்கிடுவது. இதுதான் அவருடைய திட்டம்.

நயின் சிங்
இமயத்தை அளவிடும் இமாலயப் பணிக்காக, மாண்கோமெரி இரு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார். இதில் ஒருவர்தான் தொடக்கத்தில் நாம் சந்தித்தவர். பெயர் நயின் சிங் ராவத். மற்றொருவர் மணி சிங்.

     நயின் சிங் ராவத், மேல் இமயத்தில் உள்ள மிலம் என்ற கிராமத்தின் பள்ளி ஆசிரியர். மணி சிங் இவரது ஒன்று விட்ட சகோதரர்.

     மாண்கோமெரி இந்த இரு சகோதரர்களுக்கும் 1863 இல் கடுமையான பயிற்சி அளித்தார். பின் நாளில் இதுவே சர்வேயர்களுக்கானப் பயிற்சி முறையாக மாறியது.

     இருவருக்கும் அளவிடப்பட்ட, ஒரே சீரான வேகத்தில் நடக்கப் பயிற்சி அளிக்கப் பட்டது. சமதரையாக இருந்தாலும், மலைப் பகுதியாக இருந்தாலும், ஒரே வேகத்தில் நடப்பார்கள். இரு காலடிகளுக்கு இடைப்பட்ட தூரம் எப்பொழுதுமே 33 அங்குலம்தான். இந்த அளவு மாறவே மாறாது. அப்படி ஒரு பயிற்சி.

     நடக்கும் பொழுது தூரத்தைக் கணக்கிட கையில் ஜெபமாலை. வழக்கமான 108 மணிகளுக்கு பதில், இதில் 100 மணிகள். நூறு முறை காலடி எடுத்து வைத்தபின், ஜெபமாலையின் ஒரு மணியை நகர்த்துவார். ஜெபமாலையில் ஒரு முழு சுற்று, சுழற்றி முடிந்தால், 100 x 100  = 10,000 பாத அடிகளைக் கடந்ததாகப் பொருள். அதாவது ஐந்து மைல்.

     தேநீர் கிண்ணத்தில் இருக்கும் பாதரசம், தொடுவானைக் கண்டுபிடிக்க உதவும். ஊன்று கோலில் வெப்பமாணி இருக்கிறதல்லவா? நண்பர்களே, அது எதற்குத் தெரியுமா?

      கொதிக்கும் தேநீரில் வெப்ப மாணியை விட்டு, அந்த இடத்தின் உயரத்தைக் கணக்கிடுவார். ஆமாம் நண்பர்களே, கடல் மட்டத்தில் இருந்து, உயரே செல்லச் செல்ல, தண்ணீரின் கொதிநிலைப் புள்ளியானது மாறிக் கொண்டே இருக்கும். இந்த கொதி நிலைப்  புள்ளியைக் கொண்டே, உயரத்தைக் கணக்கிடலாம். எளிமையான வழிமுறைதான், ஆனாலும் நம்பகமானது.

      திபெத்திய லாமாக்கள், பிரார்த்தனைச் சக்கரம் ஒன்றினை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள். அது ஒரு புனிதப் பொருள். அதனைச் சுற்றிலும், ஓம் மனே பாத்மே ஹம் என்னும் மந்திரச் சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த மந்திரச் சக்கரத்திற்குள்தான், நயின் சிங்கின் பயண வரைபடம், கடந்து வந்த பாதை, உயரம், நில அடையாளங்கள் முதலான நுட்பமான குறிப்புகள் ஒளித்து வைக்கப் பட்டன.

     1865 இல் திபெத்திய எல்லையைக் கடந்து, நேபாளத்தை அடைந்த பிறகு, இருவரும் பிரிந்தனர் நயின் சிங், லாசாவை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

      நண்பர்களே, நயின் சிங் ஒரு நாள், இரு நாள் அல்ல, ஒரு வருடம் நடந்து, கணக்கிட்டுக் கொண்டே நடந்து, குறிப்பெடுத்துக் கொண்டே நடந்து, உயரத்தை அளந்து கொண்டே நடந்து, 1866 இல் தடைவிதிக்கப் பட்ட நகரமான லாசாவைச் சென்றடைந்தார்.

     ஏப்ரலில் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியா திரும்பினார். டேராடூனில் உள்ள சர்வே தலைமையகத்தை 1866 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் அடைந்தார்.
     

1867 இல் மீண்டும் ஒரு முறை பயணம். திபெத்திய பகுதிகளை ஆராய்ந்தார். 1873 இல் காஷ்மீரில் தொடங்கி, இரண்டாண்டு பயணம் செய்து 1875 இல் லாசாவை அடைந்தார். இவருடைய வரைபடங்கள்தான், இமய மலைப் பகுதிகளுக்கான துல்லியமான வரைபடங்களாக, அடுத்த அரை நூற்றாண்டு வரை நீடித்தது.

     டேராடூனில், நயின் சிங்கின் பாதைக் கணக்கெடுப்புகள் ஒன்றிணைக்கப் பட்டு, மெல்ல மெல்ல துல்லியமான வரைபடங்களாக உருவம் பெற்றது.

     1876 ஆம் ஆண்டு நயின் சிங்கின் பெயரும் புகழும் உச்சத்தை அடைந்தது. புவியியல் இதழானது அவரது சாதனைகளை உலகிற்கு அறிவித்தது.

     நயின் சிங்கின் ஓய்விற்குப் பிறகு, இந்திய அரசாங்கம், ஒரு கிராமத்தையும், ஆயிரம் ரூபாய்க்கான வருவாயினையும் ஏற்படுத்திக் கொடுத்தது. நண்பர்களே, அது நாள் வரை, நயின் சிங் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு வெறும் 20 ரூபாய்.

    1868 இல் ராயல் புவியியல் அமைப்பானது நயின் சிங்கிற்கு, தங்க முலாம் பூசப்பட்ட கால மாணியை பரிசாக வழங்கிப் பாராட்டியது.2004 ஆம் ஆண்டில் ஜுன் 27 இல் இந்திய அரசானது, நயின் சிங் நினைவாக, தபால் தலை ஒன்றினையும் வெளியிட்டது.

     நண்பர்களே, ஆங்கிலேயர்களால் முடியாத செயலை, தன் உயிரையும் துச்சமாக மதித்து, சாதித்துக் காட்டிய, நயின் சிங்கை இன்று யாரும் அறிய மாட்டார்கள். கால ஓட்டத்தில் கரைந்து விட்டார்.

      ஆனால் நண்பர்களே, கல்கத்தாவில் அலுவலகத்தில் அமர்ந்து, சட்டையின் மடிப்பு கூட, கலையாமல், நயின் சிங்கின் சர்வே பணிகளை நிர்வகித்தாரல்லவா, ஓர் ஆங்கிலேய அதிகாரி, அவரின் பெயர், சரித்திரத்தில் நிலையான இடத்தினைப் பிடித்து விட்டது.

       ஆம், அந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயரைத்தான், இமயத்தின் உயர்ந்த மலை முகட்டிற்குப் பெயராகச் சூட்டினார்கள்.

நண்பர்களே, அந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயர் என்ன தெரியுமா?
ஜார்ஜ் எவரெஸ்ட்.

ஜார்ஜ் எவரெஸ்ட்