25 ஏப்ரல் 2014

பாவேந்தம் போற்றுவோம்


தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மணமென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால், இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள், இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

     நண்பர்களே, தமிழ் மொழியின் அருமையை, இனிமையை இவ்வளவு எளிமையாக, அதே சமயம் வலிமையாக பாவேந்தரைத் தவிர, வேறு யாரால் சொல்ல முடியும்.


     பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இனம் மறந்துவிட முடியாத, என்றென்றும் மறக்கக் கூடாதவர். தமிழ் இனத்தின் தன்மானத்தைத் தட்டி எழுப்பியவர். மூட நம்பிக்கைகளை அடியோடு வேரறுக்கப் போராடியவர். சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடியவர். பெண் கல்விக்கு, பெண் விடுதலைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர்.

வல்லமை பேசி வீட்டில் – பெண்
வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்
நல்ல விலை பேசுவர் – உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்
கல்லென உன்னை மதிப்பர் – கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்
வல்லி உனக்கொரு நீதி – இந்த
வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்.

    

ஒரு முறை சென்னை, பாரி புத்தக நிலையத்திற்குச் சென்று, அதன் உரிமையாளர் திரு செல்லப்பன் அவர்களைப், பாவேந்தர் சந்தித்தார். கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் அவர்களும் பாவேந்தருடன் சென்றிருந்தார்.

உங்களுக்கு ஒரு இலட்ச ரூபா கிடைக்கப் போகிறது தெரியுமா? என செல்லப்பன் கேட்டார்.

ஒரு இலட்சம் ரூபாயா? எங்கே இருந்து கிடைக்குதாம்? இது பாவேந்தர்.

வடக்கே ஞான பீடம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அது தென்னாட்டில் இருந்து ஒரு சிறந்தக் கவிஞரைத் தேர்ந்து, பரிசு தர முடிவு செய்திருக்கிறது. அப்பரிசுக்குத் தாங்கள் தேர்வு செய்யப்ப பட்டிருக்கிறீர்கள்.

சங்க விழா ஒன்றில் ஈரோடு தமிழன்பனுடன் நான்.
நடுவில் இருப்பவர் பாடலாசிரியர் கவிஞர் கபிலன்
பாரி நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஈரோடு தமிழன்பன் அவர்களுடன், வாடகை வண்டியில், பயணித்த போது, பாவேந்தர் கேட்டார்.

அந்தச் செல்லப்பன் என்ன சொன்னான்?

உங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசாக வருவதாகச் சொன்னார்.

வரட்டும், வரட்டும். வீட்டுக்கு அரைப்படி பருப்பு வாங்கிப் போடுவேன்னு நினைக்கிறாயா? அதெல்லாம் ஒன்றும் நடக்காது. ஒரு பெரிய அச்சு இயந்திரம் வாங்கிப் போட்டு, உன் கவிதை, உன்னைப் போல் எழுதுகிற அவன் கவிதை, இவன் கவிதை எல்லாம் புத்தகங்களாகச் சுடச்சுட அச்சிட்டுப் போட்டால், தமிழ்ப் பகை தன்னாலே ஒழிஞ்சு போகும். ஆமா, அதைத்தான் செய்யப் போகிறேன்.

      பாவேந்தர் பிறகு அந்தப் பரிசு பற்றி மறந்தே போனார். நண்பர்களே, இதில் கொடுமை என்ன தெரியுமா? ஞான பீட அறிவிப்பு வருவதற்குள், பாவேந்தர் 1964 இல் இறந்து விடவே, உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் ஞான பீட பரிசு என்ற விதி இருக்கிறது, என்று கூறி, மலையாளக் கவிஞர் சங்கர குரூப்பிற்குத் தான் அந்தப் பரிசை வழங்கினார்கள்.

சலுகை போனால் போகட்டும் என்
அலுவல் போனால்  போகட்டும்
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்,

பிள்ளை பிறந்தேன் யாருக்காக?
பெற்ற தமிழ் மொழிப் பேருக்காக
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர் நிகர் தமிழ்ச் சீருக்காக ...

போனால் என்னுயிர் போகட்டும் என்
புகழ் உடல் நிலை ஆகட்டும்
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டுமே

     நண்பர்களே, யானை மேல் அரசர்கள் வலம் வந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் கவிக்கு அரசராம், பா வேந்தர், யானை மீது அமர்ந்து, ஓர் நாள், நகரை வலம் வந்தாரே தெரியுமா?

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியில்
புலவர் உள்ளம் நாடகக் குழுவினருடன் பாவேந்தர்
தஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலே, ஆம் நண்பர்களே, நான் பணியாற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்தான், முன்னர் ஓர் நாள், தமிழகப் புலவர் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

     தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக, புலவர் பெருமக்களின் ஊர்வலம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது.

     தஞ்சையின் அரசர் கால, அகலத் தெருக்களான, மேல வீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி நான்கும் அழகு படுத்தப் பட்டிருந்தன. வழியெங்கும் வரவேற்பு வளைவுகள், தென்னங் குருத்தோலைத் தோரணங்கள், வண்ணக் கொடிகள், வாழையும் கமுழும் கட்டப் பெற்ற அழகுப் பந்தல்கள்.

     முரசு முழங்க, சங்கு ஊத, துந்துபி இன்னிசை எழுப்ப, எக்காளம் பேரோசை எழுப்ப, புலவர் பெருமக்களின் ஊர்வலம் புறப்பட்டது. நாற்பத்தெட்டுப் புலவர்கள், ஊர்திகளில் ஏறி பின்னால் வர, முன்னால், யானையின் மீது அமர்ந்து, கம்பீரமாய் புரட்சிக் கவி பாவேந்தர் பாரதிதாசன்.

     தமிழன்னை கரவொலி எழுப்பி, உளமார மகிழ்ந்து, திளைத்த நான்னாள் அது.

அறிவை விரிவுசெய், அகண்ட மாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்துகொள், உன்னைச் சங்கம மாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு

     அறிவை விரிவு செய்யச் சொன்ன பாவேந்தர், கொடுமை கண்டு பொங்கி எழுந்ததும் உண்டு.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனதுதாய் மிக
உயிர்வதை யடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா
..................................
.................................

கொலை வாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா

    

1946 ஆம் ஆண்டு சூலைத் திங்கள், 28 ஆம் நாள், சென்னையில், அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், பாவேந்தருக்கு நிதியளிப்பு விழா.

     நண்பர்களே, நிதியினைப் பெற்றுக் கொண்ட பாவேந்தர் பேசுவதைக் கேளுங்கள்.

     இளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான். தமிழைப் படி. தமிழை எழுது. கொடுமை கண்ட இடத்து எதிர்த்துப் போராடு. எவரேனும் தமிழைப் பழித்தால், அவரை எளிதில் விடாதே. அடிமைத் தனம் கொள்ளாதே. அநீதிகளுக்குத் தலை வணங்காதே. அச்சமின்மையை வளர். அறிவைப் பெருக்கு. ஆற்றலைப் பெறு. உண்மையை பேசு. ஊருக்காகவே உழை.

29.04.2014
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின்
124 வது பிறந்த நாள்.

பாவேந்தரைப் போற்றுவோம்
பாவேந்தர் வழி நடப்போம்.

.......................................
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
.........................................


     

70 கருத்துகள்:

 1. பெயரில்லா25 ஏப்ரல், 2014

  வணக்கம்
  ஐயா.

  புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தாலும் அவரின புரட்சி மிக்க தழிழ் கவிதைகளில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ஐயா.. நினைவு படுத்தி பதிவை மிக அழகாக கவிப்பாக்களுடன் சுவை ததும்ப எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  இறுதியில் சொல்லிய கருத்து.. எம் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழனின் உணர்வுகளைத்தட்டி எழுப்பியவர் அல்லவா பாரதிதாசன்
   உதவாதினி ஒரு தாமதம்
   உடனே விழி தமிழா
   என்றவர் அல்லவா
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா.

  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. தகவல் களஞ்சியமாய் பதிவு!! பாவேந்தரை பற்றி பல புதிய தகவல்கள் அருமை அண்ணா!

  பதிலளிநீக்கு
 4. பாவேந்தரின் பிறந்த தினத்தை நியாபக மூட்டிய, மேலும் அவரைப் பற்றி அரிய செய்திகளை சொன்னதற்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.

  பதிலளிநீக்கு
 5. கிடைத்தற்கரிய விஷயங்களை எப்படியோ கலெக்ட் செய்து பலரும் பயன் தரும் வகையில் பதிவிடுவது கிரேட்

  பதிலளிநீக்கு
 6. பாவேந்தர் யானையில் வலம் வந்தது, பாவேந்தர் விர்ஹ்டுக்குண்டான பணம் செலவழிப்பது பற்றிய ஆசை உட்பட பாவேந்தர் பற்றி நிறைய தகவல்கள் அறிந்துக்கொண்டதோடு பிள்ளைகள் படிக்க நகலெடுத்தும் பாதுகாத்து வைத்து விட்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 7. புரட்சி கவியின் தமிழ்
  புறப்பட்ட தோட்டாவன்றோ

  மடமையை சாய்த்து
  மானுடம் காத்ததன்றோ

  அத்தகைமையை
  நினைவு கூர்ந்தீர்

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மடமை சாய்த்து
   மானுவடம் காத்த பாவேந்தரைப்
   பற்றி எழுது ஓர் வாய்ப்பு
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 8. பாவேந்தரின் தமிழார்வம் மெய்சலிர்க்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 9. தமிழுக்கும் அமுதென்று பேர்! என்ன ஒரு இனிமை! அந்தத் தமிழில் கவி புனைந்து புரட்சியே செய்த பாவேந்தர் பாரதிதாசனைக் குறித்த பல தகவல்கள் தந்து இப்படி ஒரு அருமையான பதிவு தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்! மிக்க நன்றி! அருமையான ஒரு பதிவு! நண்பரே!

  த.ம.

  பதிலளிநீக்கு
 10. when it was decided to offer a cash award, annaa told" no i will have cash in my hand, such a great poet should not lower down his arms, let himself take it " such regards annaa had on our poet. dr t padmanaban.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரறிஞர் அண்ணா ,பேரறிஞர்தான்
   கவிஞர் கரம் தாழ்த்ததக் கூடாது என்று எண்ணினாரே
   வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 11. பாவேந்தர் பேச்சு என்றும் கடைப்பிடிக்க வேண்டியவை... யானை ஊர்வலம் உட்பட பல தகவல்கள் சிறப்பு... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 12. ஞானபீட பரிசுதான் தன்னை தாழ்த்திக் கொண்டது ,பாருள்ளவரை பாவேந்தன் பேர் இருக்கும் !
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே தங்கள் கூறுவதுதான் சரி
   ஞானபீட பரிசுதான் தன்னைத் தாழ்த்திக் கொண்டது
   நன்றி நண்பரே

   நீக்கு
 13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களை பற்றிய தங்களின் பதிவு மிகவும் மென்மையான தென்றல் எனது உடலை தீண்டி சென்ற உணர்வினை எனக்கு தந்தது. என்னுடைய அலைபேசிக்கு ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற பாடலை அலைபேசியின் அழைப்பு மணியாக வைத்து உதவியதற்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முனைவர் பத்மநாபன் அவர்களின் கருத்தினைப் படித்தப்பொழுது அறிஞர் அண்ணா அவர்களின் உயர்வான பண்பாட்டினை அறிந்து கொண்டேன். நாம் பணியாற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இந்த பார் புகழ் பாவேந்தரின் கால் பட்டதை நினைத்துப் பார்க்கும் பொழுது எனது உடல் சிலிர்க்கிறது. ஒரு பதிவர் இந்தப் பதிவினை குழந்தைகளுக்கு படிப்பதற்காக நகல் எடுத்து வைத்துள்ளேன் என்பதைப் படித்தவுடன் நல்ல செய்திகளை தொடர்ச்சியாக எழுதி இந்த சமூகத்திற்கு மிகச் சிறந்த சேவையை நீங்கள் செய்து வருவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே.
   ஒன்று தெரியுமா, ஒரு நாள் தாங்கள் யதார்த்தமாக,
   தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் வேண்டும் என்று
   கேட்டபிறகுதான், அந்தப் பாடலைத் தேட ஆரம்பித்தேன், அப்பொழுதுதான் தெரிந்தது, பாவேந்தர் அவர்களின் பிறந்த நாள் செய்தி.
   இப்பதிவு வருவதற்கே காரணம் தாங்கள் தான் நண்பரே
   நன்றி நண்பரே

   நீக்கு
  2. தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலை எனது கைப்பேசியின் அழைப்பு மணியாக அமைக்க வேண்டும் என்று நான் விரும்பி தங்களிடம் கூறிய உடன் மறுநாளே எனக்கு கொடுத்து உதவியதற்கு நானும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நண்பரே. மிக்க நன்றி.

   நீக்கு
 14. http://blogintamil.blogspot.fr/2014/04/blog-post_26.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச் சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 15. இன்றைக்கும் பலர் தமிழ், தமிழ் என்று தமிழ் மீது பற்று வைத்து இருப்பதற்கு முக்கிய காரணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களும் ஒரு காரணம் என்றால் மிகையாகது. பாரதிதாசன் பாடல்களை வாய்விட்டு சத்தமாக படிக்க வேண்டும். அல்லது ராகத்தோடு பாட வேண்டும்.

  அவருடைய வாழ்வின் சில நிகழ்ச்சிகளோடு அவருடைய பாடல்களை “பாவேந்தம்” என்று பாராட்டிய தங்களுக்கு நன்றி! உங்களின் தமிழ்க் காதல் வாழ்க!

  த.ம - 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
   பாவேந்தர் பாடல்களை படித்தாலே கவலைகள் நீங்கி
   புத்துணர்வு பிறக்கும் ஐயா

   நீக்கு
 16. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... http://tthamizhelango.blogspot.com/2014/04/blog-post_24.html

  // வாக்குச் சாவடி முதன்மை அலுவலராகப்பணியாற்றிவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினேன் ஐயா.
  அமைதியான தேர்தல்தான் ஐயா //

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
  அமைதியான தேர்தல்தான்
  நாங்களெல்லாம் ஓட்டு போட்டோம் வந்து விட்டோம். ஆனாலும் உங்கள் பணி மகத்தானது. தேர்தல் பணி என்றாலே, நிறையபேர் ஒதுங்கி விடும் இந்நாளில், வீடு வாசல் மறந்து பணியாற்றிய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டும், இரவு படுத்துறங்க போதிய வசதிகள் இருக்காது, அவ்வளவுதானே தவிர, இப் பணி ஒரு புதிய அனுபவம் ஐயா,
   இது வரை அறியாத பல புதிய முகங்களை நமக்கு அறிமுகம் கிட்டும்.
   நான் பணியாற்றிய வாக்குச் சாவடி அருமையான ஆட்கள் நிரம்பியதாய் இருந்தது ஐயா,
   கிராம நிர்வாக அலுவலர் புதிதாய் தேர்வெழுதிப் பணிக்கு வந்தவர். இளைஞர். அருமையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 17. பாவேந்தர் பற்றிய பெருமைமிகு நிகழ்வுகளை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. லட்ச ரூபாயானாலும் அதை லட்சியத்துக்குப் பயன்படுத்த நினைத்த அந்த உயர்ந்த எண்ணம் இனி இங்கு யாருக்கு வரும்? அற்புதமான பதிவுக்கு அகமார்ந்த நன்றி தங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 18. அருமையான பதிவு. பாவேந்தரை நினைவு படுத்தும் அழகான பதிவு. சகுதலா பாரதி என்று நினைவு - அவர் தன்னுடைய பாரதியார் பற்றிய புத்தகத்தில் தெரிவித்திருந்த ஒரு சிறு விஷயம் சரியல்ல என்று மறுத்துக் கூறியதாகப் படித்த நினைவு. சரியாக நினைவில் இல்லை. பாவேந்தரின் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலை அடியொற்றி கவிஞர் கண்ணதாசன் 'அவளுக்கும் தமிழென்று பேர்' என்றொரு பாடலை வானம்பாடி படத்தில் எழுதி இருக்கிறார். கேட்டிருப்பீர்கள்.

  //
  வலியோர்சிலர் எளியோர்தமை
  வதையே புரிகுவதா?
  மகராசர்கள் உலகாளுதல்
  நிலையாம் எனும் நினைவா? //

  இந்த வரிகளையும் ஒரு கவிஞர் - கண்ணதாசன்தானா வேறு யாராவதா தெரியவில்லை - 'எளியோரை வாட்டி வலியோர்கள் வாழும் உலகே உன் செயல்தான் மாறாதா' என்று எழுதி உள்ளார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 19. உங்கள் பதிவுகளை மின்னஞ்சலில் பெற ஏற்கெனவே பதிவு செய்திருந்தேன். எனினும் உங்கள் பதிவுகள் எனக்கு மின்னஞ்சலில் கிடைப்பதில்லை. ஏனோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏனென்று தெரியவில்லை நண்பரே.
   எனது மின்னஞ்சல் முகவரி
   karanthaikj@gmail.com
   தங்கள் மின்னஞ்சல் மூலம் ,
   எனது மின்னஞ்சல் முகவரிக்கு
   ஒரே ஒரு முறை மின்னஞ்சல் அனுப்புங்கள் நண்பரே,
   தங்களுக்கு, ஒவ்வொரு பதிவின் போதும் நான், மின்னஞ்சல் அனுப்பி தெரிவிக்கின்றேன்.
   நன்றி நண்பரே

   நீக்கு
 20. பாவேந்தரின் பாடல்கள் தமிழுணர்வை தட்டி எழுப்பக் கூடியவை. அவரை போற்றிய பதிவு அருமை

  பதிலளிநீக்கு
 21. அன்புடையீர்.. வேலை முடிந்து இப்போது தான் வந்தேன்..
  அன்றைய நாளிலே - பாவேந்தர் அவர்கள் யானை மீது வலம் வந்த - தஞ்சை மாநகர் என்பதிலும், அவ்வண்ணம் பெருமைப் படுத்தியது நமது கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்பதிலும் மிகப் பெருமிதம் அடைகின்றேன்..

  அரிய தகவலை பதிவின் மூலமாக வழங்கியமைக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக நாம் பெருமிதம் அடையலாம் ஐயா
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 22. பாவேந்தரின் எழுத்துக்களில் இருந்த தமிழ் உணர்வு இப்பொழுது கணிணியின் தமிழ் பயன்பாட்டால் மிகவும் பிழைத்துக்கிடக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலக அளவில் கணினி பயன்பாட்டு மொழிகளில், தமிழ் இரண்டாவது இடத்தில் இருக்கிறது நண்பரே
   அதற்காக நாம் பெருமைப் படலாம்

   நீக்கு

 23. சலுகை போனால் போகட்டும் என்
  அலுவல் போனால் போகட்டும்
  தலைமுறை ஒரு கோடி கண்ட என்
  தமிழ் விடுதலை ஆகட்டும்,

  இப்படிச்சொல்கிற மனம் லேசில் யாருக்கும் வாய்த்துவிடாது.அது அவருக்கு கைவரப்பெற்றவரமாய்/அவரின் மனது இன்னும் சிலரிடம் அரிதாய் இருக்கிறதாய் கேள்வி,அது பாரதிதாசன் போன்றோர் விதைத்த விதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பர் பாரதிதாசன் விதைத்த விதை பல இடங்களில் முளைத்து தழைத்து இருப்பதால்தான் தமிழ் இன்றும் இருக்கிறது
   நன்றி நண்பரே

   நீக்கு
 24. அருமையான பதிவு. தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத்
  தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இதற்க்கு ஈடாக வேறு என்ன இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. பாவேந்தம் ! தலைப்பே அருமை அய்யா.
  அரிய பகிர்வு அதுவும் உரிய நாளில். நன்றி

  பதிலளிநீக்கு
 26. அய்யா, கல்லூரி காலங்களில் பாரதியார் என்னை ஆக்ரமித்து இருந்தார்.
  தற்போதோ....பாரதிதாசனார் என்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டார்!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரதியும் பாரதிதாசனும் தமிழகம் செய்த தவப் பயன் ஐயா

   நீக்கு
 27. புரட்சிக் கவி பாரதிதாசனின் இப்பதிவு நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்பதிவு.தமிழ் வளர்ப்போம் உயிர்வளர்ப்போம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.நன்றி.

  பதிலளிநீக்கு
 28. பாவேந்தர் பற்றி பல புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. தமிழ் பத்தி யாராவது பேசினாலே நமக்கு பெருமையா இருக்கும்... தமிழுக்காகவே வாழ்ந்தவங்கள் பத்தி கேட்கும் போது.. மெய் சிலிர்கிறது..
  பகிர்விற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 30. பெயரில்லா26 ஏப்ரல், 2014

  ''..இளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான். தமிழைப் படி. தமிழை எழுது. கொடுமை கண்ட இடத்து எதிர்த்துப் போராடு. எவரேனும் தமிழைப் பழித்தால், அவரை எளிதில் விடாதே. அடிமைத் தனம் கொள்ளாதே. அநீதிகளுக்குத் தலை வணங்காதே. அச்சமின்மையை வளர். அறிவைப் பெருக்கு. ஆற்றலைப் பெறு. உண்மையை பேசு. ஊருக்காகவே உழை...''
  அருமை . இது எனக்குப் பிடித்தது.
  இனிய பதிவிற்கு இனிக்கும் நன்றி.
  புதிய தகவல்கள் புதுத் தெம்பு தரும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 31. பாவேந்தரைப் போற்றுவோம்
  பாவேந்தர் வழி நடப்போம்.

  பதிலளிநீக்கு
 32. உலகாள உனதுதாய் மிக
  உயிர்வதை யடைகிறாள்
  உதவாதினி ஒரு தாமதம்
  உடனே விழி தமிழா இவை என்னை மிகவும் கவர்ந்தன. இவை நான் அறியாதவை அவர் கவிதைகளோடு பாவேந்தரை போற்றும் படியாய் விபரங்கள் அனைத்தும் தேடி எடுத்து எமக்கு நல்குவதோடு அவரரைநினைவு கூர்ந்து புகழையும் பாப்பும் தங்கள் எண்ணம் சிறந்தது வாழ்க வளமாய் என்றும் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 33. பாவேந்தர் பற்றிய பல அரிய தகவல்களுடன்சுவையான பதிவு. நன்றி.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. அருமையான பதிவு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 35. புரட்சி என்ற சொல்லுக்கான பொருள் தற்போது மாறிவிட்டது என்றே கூறலாம். ஆனால் புரட்சி என்ற சொல்லுக்கு அந்த சொல்லுக்கான உரிய பொருளை உணர்த்தும்வகையில் சாதித்தவர் இப்பெருமகனார். தோற்றத்தில் கம்பீரம், எழுத்தில் கம்பீரம். அம்மாமனிதரை நினைவுகூர்ந்து பாராட்டிய தங்களின் முயற்சிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. //தமிழைப் படி. தமிழை எழுது. கொடுமை கண்ட இடத்து எதிர்த்துப் போராடு. எவரேனும் தமிழைப் பழித்தால், அவரை எளிதில் விடாதே. அடிமைத் தனம் கொள்ளாதே. அநீதிகளுக்குத் தலை வணங்காதே. அச்சமின்மையை வளர். அறிவைப் பெருக்கு. ஆற்றலைப் பெறு. உண்மையை பேசு. ஊருக்காகவே உழை.//

  அருமையான பதிவு. இறுதியில் சொன்ன அறிவுரை இளைய நண்பர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் எக்காலத்தும் பொருந்தும்.

  பின் குறிப்பு:

  ஸ்ரீராம் குறிப்பிட்ட பாடல் 'பஞ்சவர்ணக்கிளி' என்னும் படத்தில் கவிஞர் கண்னதாசன் எழுதி பாடியவர் டி.எம்.செளந்திரராஜன். பாடல் பாரதிதாசனின் ' தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலை ஒட்டியே இருக்கும். பாடல் இதோ!

  அவளுக்கும் தமிழென்று பேர்! என்றும்
  அவள் எந்தன் உள்ள‌த்தில் அசைகின்ற தேர்!

  அவளுக்கு நிலவென்று பேர்! வண்ன‌
  மலர் கொஞ்சும் குழல் அந்த முகிலுக்கு நேர்!
  அவளுக்கு குயில் என்று பேர்! அந்த‌
  குயில் கொண்ட குரல் கண்டு கொண்டாடும் ஊர்!
  அவளுக்கு அன்பென்று பேர்! அந்த‌
  அன்பென்ற பொருள் நல்ல பெண்மைக்கு வேர்!

  அவள் எந்தன் அறிவுக்கு நூல்!
  அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல்!
  அவளுக்கு அழகென்ற பேர்! அந்த‌
  அழகெந்தன் உள்ள‌த்தை உழுகின்ற ஏர்!

  அவளுக்கு உயிரென்று பேர்! என்றும்
  அவளெந்தன் வாழ்வென்னும் வயலுக்கு நீர்!
  அவளெந்தன் நினைவுக்கு தேன்! இந்த‌
  மனமென்னும் கடலுக்கு கரை கண்ட வான்!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி சகோதரியாரே
   பஞ்ச வர்ணக்கிளி படத்தில்தான் தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலும்இடம் பெற்றுள்ளது சகோதரியாரே.
   1954 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அது.
   கண்ணதாசன் பாடல் முழுவதையும் எழுத்தில் வடித்துத் தந்தமைக்கு நன்றி சகோதரியாரே

   நீக்கு
 37. பெயரில்லா03 மே, 2014


  பாவேந்தர் குறித்த பதிவு அருமை ஐயா. தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பாவேந்தர் புகழ், தமிழும், தமிழரும் உள்ளவரை தரணியெங்கும் பரவிக்கொண்டே இருக்கும்.

  பதிலளிநீக்கு
 38. புரட்சிக் கவிஞர் பாவேந்தரைப் போற்றித் தொழுது நிற்கும்
  அருமையான ஆக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  சகோதரா மனத்தைக் கவரும் தங்களின் எழுத்து நடை எப்போதும்
  விரும்பத் தக்கதும் வியப்பிற்குரியதும் எனக்கு .மிக்க நன்றி
  பகிவிற்கு .

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு