நண்பர்களே,
இவரால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதற்காக எதையேனும் எழுதுவது
என்ற சமரசமும் இவரிடம் இல்லை.
கதையே இல்லாமல் ஒரு நாவல் எழுத முடியுமா?
முடியும் என்று உரக்க முழங்கி, சாதித்துக் காட்டியிருக்கிறார் இவர்.
நாம் அனைவருமே, பலநூறு முறை பேருந்தில்
பயணம் செய்தவர்கள்தான். ஆனால் நண்பர்களே, நாம் எப்படிப் பயணித்திருக்கிறோம்.
சிலர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் தூங்கத்
தொடங்கி விடுவார்கள். சிலர் புத்தகம் படிக்கத் தொடங்கிவிடுவார்கள். சிலர்
அலைபேசியை எடுத்து, அதன் இணைப்பை காதுகளில் சொருகிக் கொண்டு, பாடல்களில் லயித்து
விடுவார்கள்.
சிலரோ அலைபேசியில், யாரையாவது அழைத்து,
பேருந்தில் பயணிக்கிறோம் என்பதனையும் மறந்து, அனைவருக்கும் கேட்கும்படி, குடும்பக்
கதைகளை, பேசத் தொடங்கிவிடுவார்கள்.
சிலரோ, அலைபேசியில் தனது மனைவியினையோ,
மகனையோ அல்லது மகளையோ அழைத்து, உரத்த குரலில் அதைச் செய், இதைச் செய் என
உத்தரவுகளைப் பிறப்பித்து, ஒருமையில் பேசி, தங்களின் வீரத்தினை, சக பயணிகளிடம்
நிலைநாட்ட முயல்வார்கள்.
நண்பர்களே, இவர், சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுபவர். வீடோ, தஞ்சையில்,
அதுவும் கரந்தையில். பத்து வருடங்களாக தினமும் கரந்தைக்கும் சிதம்பரத்திற்கும்
பேருந்தில் பயணித்தவர் இவர். தற்பொழுது தொடர் வண்டியில் பயணிக்கிறார்.
பயணமே இவரது வாழ்வாகிப் போனது என்பதுதான்
உண்மை. யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையே ஒரு பயணம்தானே.
பயணத்தில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்.
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து, வெளி உலகை பார்ப்பது மட்டுமல்ல பயணம்.
பேருந்தின் உள்ளே, சக மனித உறவை, உயிர்ப்பை,
அன்பை, பரிவை, கோபத்தை, எள்ளலை, ஏமாற்றத்தை என மனித வாழ்வின் அனைத்து
உணர்வலைகளையும் கவனித்து, உள்ளத்தில் உள் வாங்கி, எழுத்துக்களாக, சொற்களாக,
வாக்கியங்களாக வெளிப்படுத்தி, நூலாக நம் கரங்களில் தவழ விட்டிருக்கிறார் இவர்.
கல்வியாளர், கவிஞர், சிறுகதைகள்,
குறுநாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தை இலக்கியங்கள், மொழிபெயர்ப்புக்
கவிதைகள் என பல தளங்களிலும் இயங்கி வருபவர் இவர். ஏன் நமது வலைப் பூவிலும், உலகை
வலம் வருபவர்தான் இவர்.
கவிஞர் ஹரணி
எனது வலையுலக ஆசான். பார்த்ததை எல்லாம் எழுதுங்கள், படித்ததை எல்லாம்
எழுதுங்கள், கேட்டதை எல்லாம் எழுதுங்கள், வாழ்வின் மகிழ்வை எழுதுங்கள், வாழ்வின்
துயரை எழுதுங்கள் என எனக்கு வழிகாட்டி நெறிப் படுத்தி வருபவர்.
நண்பர்களே, நாம் அறிந்த பலர், ஊருக்கும்,
உலகிற்கும் அருமையாய் உபதேசம் செய்வார்கள். ஆனால் தங்களது சொந்த வாழ்வில், தாங்கள்
மற்றவர்களுக்கு அறிவுறுத்தியதில், ஒன்றினைக் கூட, தவறியும் செய்ய மாட்டார்கள்.
கவிஞர் ஹரணியின் சொல்லும், செயலும்
ஒன்றாகவே இணைந்து, ஒரே நேர் கோட்டில், நேர்மைக் கோட்டில் பயணிப்பதை, அவருடன்
நெருங்கிப் பழகியவர்கள் அறிவார்கள்.
பேருந்து
பத்தாண்டுகால பேருந்துப் பயணத்தில், இவர்
கண்ட, கேட்ட, உணர்ந்த காட்சிகளின், நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.
குண்டும் குழியும், மேடும் பள்ளங்களும்
இல்லாத, சீரான சாலையில் விரைந்து பயணிக்கும் பேருந்து போலவே, இவரது எழுத்தும்,
முதல் பக்கம் தொடங்கி, கடைசி பக்கம் வரை, விறுவிறுப்பாகவே பயணிக்கிறது.
மணி ஆறாகிவிட்டிருந்தது. இன்னும் 10
நிமிடங்களே இருக்கின்றன. பையனை எழுப்பி, தம்பி கொஞ்சம் பஸ்ஸ்டாப் வரை வந்து
விட்டு விட்டு வாயேன் என்றேன்.
இரவு வெகு நேரம் கண் விழித்துப்
படிக்கிறான். அவன் படிக்கிற தருணங்களில் உறங்குகிற நேரம் குறைவுதான். குறைவாகத்
தூங்கும் யாரும், அதிகாலையில் எழுந்திருக்கும்போது, எரிச்சலை உணரலாம். ஆனால்
எதையும் காட்டிக் கொள்ளாமல், பிரிக்க முடியாமல் தூக்கத்தைப் பிரித்து, உடன்
கிளம்பி வருவான்.
மகனாக இருந்தாலும் அவனிடமும் கற்றுக் கொள்ள
நிறைய இருக்கின்றது.
இந்த வயதிலேயே கோபப் படாமல் இருக்கிறான்.
யாருக்கும் உதவி செய்யத் தயாராக இருக்கிறான்.
எடுத்த காரியத்தை எப்பாடு பட்டேனும்
முடிக்கிறான். அவனிடத்தில் ஒப்படைத்து விட்டால், மறுபடியும் யாரும் அந்த வேலையில்
திருத்தங்கள் செய்ய முடியாத அளவுக்கு சுத்தமாக செய்து முடிக்கிறான்.
உண்மையில் ஒரு நல்ல மனிதனுக்கு அமைய
வேண்டிய செல்வங்களில் சிறப்பானது, நல்ல மகனை அடைவது என்பதுதான்.
சரிப்பா என்று உடனே எழுந்து, கிளம்பி, வண்டியை
எடுத்துத் தயாராக நின்றான்.
எத்தனை முறை கூப்பிட்டாலும, எத்தனை மணிக்கு
எழுப்பினாலும் முகம் சுளிக்காதவன்.
நண்பர்களே, பேருந்தில் பயணிக்க, இவர்
வீட்டில் இருந்து கிளம்பும் போதே, நம்மையும் நாவலுக்குள் முழுமையாய் ஈர்த்து
விடுகிறார்.
மகன்தந்தைக்கு
ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்
கொல் எனும்சொல்
என்னும்
வள்ளுவனின் வாக்கினை, எதிர் காலத்தில், இவரது மகன் மெய்ப்பித்துக் காட்டுவார்
என்பது உறுதி.
எந்த ஊருக்கு
போறயா நீ?
இந்த பஸ்சு
எந்த ஊருக்குப் போவுது?
நீ எந்த
ஊருக்கு போறேன்று சொல்லு....
நீ சொல்லு,
அப்புறம் நான் சொல்றேன்
இன்னிக்கு
நேரமே சரியில்லை.... கடவுளே...யோவ்... டிக்கெட் போடனும்
எந்த ஊருக்குப்
போறயா நீ?
என் மாமியா
வூட்டுக்குப் போறேன்.... கோயி திருவிழா....
அடக் கடவுளே,
உன் மாமியார் ஊரு எதுய்யா?
அத எதுக்கு நீ
கேக்குற?
யோவ், டிக்கெட்
போடனும்யா
என்
மாமியாலுக்கா?
உயிர
எடுக்குறானே... உன் மாமியாரு ஊருக்கு போறியே.... அது எந்த ஊரு? நான் டிக்கெட்
போடனும்.
அப்படி விவரமா
சொல்லு.. நெடாரு பக்கத்துல, கொண்டவிட்டன் தெடலு
அங்கெல்லாம்
பஸ்சு நிக்காது... பள்ளியக்கிரகாரத்துல இறங்கிக்க
முடியாது...
அந்த வழிதான போற நிறுத்து
யோவ், இது
பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ்சுய்யா
நானும்
பாய்ண்டாத்தான் பேசுறேன்.... நெடாருல நிறுத்து
காசு கொண்டா...
இறக்கித் தொலைக்கிறேன்
நண்பர்களே, பேருந்தில் கவிஞர் தினமும்
காணும், வடிவேலுவின் நகைச்சுவையை மிஞ்சும் காட்சி இது.
ஆனாலும் படிக்கப் படிக்க, இப்பேருந்தில்
பயணிக்கப் பயணிக்க, மனதில் ஓர் இனம் புரியாத உணர்வு, உடல் எங்கும் பரவி, மனம்
கனத்துக் கொண்டே செல்கிறது. வாழ்வியலின் யதார்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கிக்
கொண்டே வருகிறது.
சிதம்பரம்
பேருந்து நிலையம் மட்டும் மாறுவதேயில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த மாற்றமும்
இல்லை.
திறந்த வெளி கழிப்பறையிலிருந்து மூத்திர
வாடை, பேருந்து நிலையம் முழுக்க, முகர்ந்து முகம் சுளிக்கக் கூடியதாக இருந்தது.
இதில் கொடுமை என்னவென்றால், அதன் அருகினில்
தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, அடுத்த ட்ரிப்புக்கு நேரமிருந்தால், சீட்டில்
படுத்து உறங்கிக் கொண்டிருப்பார்கள் அல்லது சாப்பாட்டை திறந்து வைத்து
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
கடுமையான உழைப்பின் அயர்ச்சி, தாங்க முடியாத
பசியின் வேகம், எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் போலும்.
இந்த வெயிலிலும் நாலைந்து மாணவ ஜோடிகள்
பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் பெரும்பாலும் ஆண்கள் கோபமாகப் பேசுவதும், பெண்கள்
அழுதுகொண்டும், கண்ணைத் துடைத்துக் கொண்டும், அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு,
தலையை குனிந்து கொண்டுமாக இருக்கிற காட்சிகள், அவர்களின் முகந்தெரியாத பெற்றோர்களை
நினைத்துக் கவலைப்பட வைப்பதாக இருந்தது.
நண்பர்களே, கவிஞர் ஹரணியின் கவலை
நியாயமானதுதானே. பேருந்து நிலையம், திரைப்பட அரங்கு என்று எங்கு பார்த்தாலும்,
மாணவ, மாணவிகள் ஜோடி ஜோடியாய், சிரித்துக் கொண்டும், அழுது கொண்டும், தன்னிலை மறந்து
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டும்.
நன்கு படித்து எதிர்காலத்தில், நல்ல
நிலையில் வாழ்வர்கள் என்ற நம்பிக்கையில்தானே, நமது மகன் நம்மைப் போலவே இருப்பான்,
நமது மகள் நம்மைப் போலவே நடப்பாள் என்ற நம்பிக்கையினால்தானே, பெற்றோர்கள்,
இவர்களை, படிக்க அனுப்புகிறார்கள். ஆனால் இவர்களோ, வாழ்வு தொடங்குவதற்கு முன்பே,
அதனைத் தொலைத்து விடுகிறார்களே..
தினமும் வேண்டிக்கிட்டுதான் வர்றேன் சார்.
அதயும் மீறி நடந்துடுது. ஒரு சின்ன உயிருக்குக் கூட தீங்கு வரக்கூடாதுன்னுதான்,
எல்லா டிரைவரும் ரொம்ப கவனமா ஓட்டறோம்..... மோட்டார் லைன் அப்படி ... இப்படி..
அடிபடும்போது கஷ்டமாயிடுது. நாம கொடுக்கிற பணம் பத்தாது. ஆனா அத மீறி கொடுக்க
எங்களோட வருமானம் பத்தாது. கார்ப்பரேசன் இதல்லாம் கண்டுக்காது. ரோட்டுல எது
நடந்தாலும் கண்டக்டரும், டிரைவரும்தான் பாத்துக்கனும். மோட்டார்ல ஏறினவன் எல்லாருடைய
தலையெழுத்தும் இதான் சார் .....
ஆடு அடிபட்டு விட்டதுக்காக, அந்தம்மா
கதறும்போது என்னால எதுவும் செய்ய முடியல்ல. இதனாலதான் ஆடு, கோழி, கறி திங்கறத
விட்டே பத்து வருஷமாச்சு சார் ..... என்னமோ அத தின்னாலே, இப்படி ரோடு ஞாபகம்
வந்துடுது.
என்ன வேலைக்கு வேணாலும் போகலாம் சார்...
மோட்டார் வேலைக்கு மட்டும் வரவே கூடாது சார்... இதெல்லாம் சாப பொழப்பு சார்.
நண்பர்களே, பேருந்து ஓட்டுநர்களின்
மறுபக்கம் நம் மனதை கனக்கச் செய்கிறதல்லவா.
வைத்தீஸ்வரன் கோயில்ல ... சன்னதி வாசல்லயே
சார். பஸ்ஸை விட்டு இறங்கி, ரோட்டை கிராஸ் பண்ணலாம்னு இருந்தோம் சார்... சட்டுனு
நான் போறேன் முன்னாலன்னு கைய உருவிட்டு, ஓடினான் சார்... சிதம்பரத்துலேர்ந்து வர்ற
பஸ்... வெள்ளைக் கலரு.... கவனிக்கல .... அப்படியே உடம்புமேல வண்டி ஏறிடிச்சு....
எங்க கண் முன்னாலேயே புள்ள துடிச்சு செத்துப் போயிட்டான் சார் .....
நீங்க டெய்லி வருவீங்களே சார் ... அந்த
வெள்ளை வண்டிதான்.
நண்பர்களே, மனது அதிர்ந்து போகிறதல்லவா?
ஆறாவது படிக்கும் ஒரு சிறுவன், கோயிலின் வாசலில்... தெய்வம் வேடிக்கைப் பார்த்துக்
கொண்டுதானே இருக்கிறது.
அன்று வெள்ளைக் குதிரை வரவில்லை.
ஏதோ இஞ்சின் கோளாறு என்று வேறு மஞ்சள் நிற
வண்டியை எடுத்துக் கொண்டு ஜெயக்குமார் வந்திருந்தார்.
எங்க ஜெயக்குமார் போன வாரம் வரல்ல என்றேன்.
அத ஏன் சார் கேக்கறீங்க? அன்னைக்கு
வைத்தீஸ்வரன் கோயில்ல ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு சின்ன பையன் குறுக்கே வந்துட்டான்...
ஒன்னும் பண்ண முடியல... ஸ்பாட் அவுட்... என் பையன் வயசுதான் சார்.... மனசே
கலங்கிப் போச்சு.....கடைசியில அவனோட அப்பா உங்க ஆபிசுதான் சார்.... மக்கள் கூடிப்
போயிட்டாங்க.... ஓடில்லாம்னு பார்த்தோம்... என்னா ஏதுன்னு கேக்காம அடிக்க
ஆரம்பிச்சுடுவாங்க.... ஆனா எங்கமேல தப்பு இல்லங்குறதாலே திகைச்சுப் போய்
நின்னுட்டம் .... அதுக்குள்ள போலிஸ் வந்துடுச்சு.
பஸ்ஸ ஸ்டேசன்ல விட்டுட்டு .....
ஆம்புலன்சுல பாடி ஏத்தி விட்டுட்டு .... எல்லாத்தையும் முடிச்சுட்டு
வர்றதுக்குள்ள, ராத்திரி மணி ரெண்டாயிடுச்சு சார். பாண்டியன் மேல கேஸ் புக்
பண்டிட்டாங்க.
மறுநாள் வக்கீல் பார்த்துட்டு, நான் லீவு
போட்டுட்டேன். நாலு நாள் கனவுல அந்தப் பையன் வர்றான் சார்... தூங்க முடியல... இது
தெரியாம என் பொண்டாட்டி, லீவுலதான இருக்கீங்க நம்ம புள்ளக்கி, முடியெடுத்து, காது
குத்துவோமுங்குறா .......
நண்பர்களே, மனம் நெகிழ்ந்து போகிறதல்லவா. கவிஞர்
ஹரணியின் இந்தப் பேருந்தில் ஏறி, பயணித்துத்தான் பாருங்களேன். நீங்கள் இதுவரை
அறிந்திராத ஒரு புது உலகத்தை இப்பேருந்து உங்களுக்குக் காட்டும்.
எந்நேரமும்
எண்ணற்ற உயிர்
சுமந்து
காத்து
இயங்கிக் கொண்டிருக்கும்
பேருந்தின்
ஓட்டுநர்
நடத்துநர்களுக்கு
இச்சிறு நாவல்
......
கவிஞர் ஹரணி ஓட்டுநர்களுக்கும்,
நடத்துநர்களுக்கும்தான் இந்நூலை காணிக்கையாக்கி இருக்கிறார்.
ஒன்று மட்டும் உறுதி. கவிஞரின் இக்காகிதப்
பேருந்தில் ஒரு முறை, ஒரே ஒரு முறை பயணித்து விட்டீர்களேயானால், அடுத்த முறை, நிஜப்
பேருந்தில் நீங்கள் பயணிக்கும்போது, அப்பேருந்தின் ஓட்டுநரையும், நடத்துநரையும்,
ஒரு புதிய பார்வையில், புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள் என்பது மட்டும் உறுதி.
நண்பர்களே, பயணித்துத்தான் பாருங்களேன்.
வெளியீடு
கே.ஜி.
பப்ளிகேஷன்ஸ்,
31, பூக்குளம்
புது நகர்,
கரந்தை,
தஞ்சாவூர் -
613 002
தொடர்புக்கு
கவிஞர் ஹரணி,
அலை பேசி 94423 98953
மின் அஞ்சல் uthraperumal@gmail.com
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நல்ல விமர்சனம்.
பதிலளிநீக்குஒரு நூல் கிடைக்குமா?
சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குபுத்தகத்தின் விலை போடவில்லையே....
பேருந்து விமர்சனம் அருமை ...பயணிக்க முயல்கிறேன்....நன்றி...
பதிலளிநீக்குஅனைத்தும் நடைமுறை வாழ்வின் உண்மைகள் நண்பரே... இவையெல்லாம் தினம் தினம் நாம் காண்பதுதான் என்றாலும் இதைப்படிக்கும்போது மனம் கணத்து விட்டது.
பதிலளிநீக்குநூல் வாங்குவேன் நண்பரே...
தமிழ்மணம் 2
நண்பரே எனது புதிய பதிவு ''பேசு மனமே பேசு''
அன்புமிகு கரந்தையார் அவர்களே!
பதிலளிநீக்குவணக்கம்!
பேராசிரியர் /கவிஞர்
ஹரணி அவர்களின் சிறப்பினை அறிந்தேன்.
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அவரது செயல்பாடு மிகவும் அபூர்வம் அய்யா!
அதுவும் இன்றைய சூழலில்!
அவரது பேருந்தில் பயணத்தை தொடர விரும்புகிறேன்.
தமிழ் நேசர்கள் அனைவரும் பயணிக்கவும் வேண்டுகிறேன்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
இன்றைய எனது பதிவு
நீக்கு"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு,
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநீங்கள் கோடி காட்டிய பத்திகள் நாவலை உடனே படித்துவிட ஆவலை தூண்டுகிறது! அடுத்த முறை இந்தியா வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பது வெளிநாட்டில் வாழ்வதன் இன்னுமொரு இழப்பு!
பதிலளிநீக்குமிக அருமையான விமர்சனம் ஐயா!
பதிலளிநீக்குதங்கள் நண்பர் சாதனை மனிதர்கள் என்னும் பட்டியலில்
இடம்பெற வேண்டியவர்கள்!.. அவரின் எழுத்துப்பயணம் தொடரவும்
அறிமுகப் படுத்திய உங்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி ஐயா..த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்க்கை தரும் பாடங்கள் மிகப் பல. நன்றி.
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம். திருச்சியில் கிடைக்குமா? இல்லை அடுத்த வாரத்தில் ஒரு நாள் தஞ்சை வர வேண்டும். வரும் முன்னர் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஇனிமையான பயணம்...
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் விமர்சனம் ஐயா...
ஹரணி ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்....
விமர்சனம் மிக அருமை. படிக்கத்துண்டுகிறது.
பதிலளிநீக்குஓ! பேருந்து பயணத்தில் இவ்வளவு இருக்கோ?
பதிலளிநீக்குபடைப்பாளிகள் எதைப் பார்த்தாலும் அதில் உள்ள ஜீவனை வெளிக்கொணர்ந்து நமக்கு காட்டி விடுகிறார்கள்!!
நல்ல பதிவு
நூலை அனுப்பி விடுங்கள் ஐயா பணம் அனுப்புகிறேன்.
அன்புடன்,
மும்பை சரவணன்
அன்புள்ள ஜெயகுமார்
பதிலளிநீக்குவணக்கம். மிகவும் நெகிழ்ந்து போய் இம்மடலை எழுதுகிறேன். மிகச் சரியாகப் புரிந்து எழுதப்பட்ட விமர்சனம். இதைவிட ஒரு படைப்பாளனுக்கு வேறு என்ன விருது பெரிதாக அமைந்துவிட முடியும். நெஞ்சம் நிறை நன்றிகள்.
அன்பின் ஹரிணி அவர்களின் எழுத்துக்கள் எனக்கு நேரிடையாகவே பழக்கம்..
பதிலளிநீக்குநெகிழ்ச்சியினை ஏற்படுத்தும் அவர்களுடைய எழுத்துக்களுக்கு கவரி வீசுகின்றது - தங்களுடைய விமரிசனம்!..
வாழ்க நலம்!..
எத்தனை நேர்மையான எழுத்து. சுவாரஸ்யம்.துக்கம் எல்லாம் போட்டி போடுகிறது. மிக நன்றி ஜெயக்குமார்.ஹரணி அவர்களுக்கு மிக நன்றி.
பதிலளிநீக்குவள்ளுவர் குறளோடு தொடங்கிய விதம் மட்டும் பாராட்டுக்குரியது அல்ல. அவ்விதம் தன் மகனின் நல்ல பண்புகளை பாராட்டும் விதமும் வெகு சிறப்பு. எத்தனை வளர்ச்சி கண்டாலும் பேருந்து நிலையம் மட்டும் முகம் சுளிக்க வைக்கும் நிலையில் இருப்பதையும் அங்கும் உழைத்த களைப்பில் உண்டு உறங்கும் உழைப்போரின் நிலையை படம் பிடிக்கத் தவறவில்லை கவிஞர் அவர்கள். இன்றைய மாணவர்களின் நிலையை எண்ணி வருந்தும் எழுத்தில் அவரின் சழுக அக்கறை தெரிகிறது .
பதிலளிநீக்குஏதோ போனோம் வந்தோம் என்றில்லாமல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் உணர்வுகளையும் மதித்து எழுதிய விதமும். சக பயணிகளுடன் ரசித்த நகைச்சுவை உணர்வையும் அழகாக காட்டிய தங்கள் விமர்சனம் புத்தகம் படிக்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது. ஹரிணி ஐயாவிற்கு எனது வணக்கத்தையும் தங்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
good expression on Transport workers..thanks...But our experiences are different here with cellphone driving, drunkards disturbances , respect less mannerisms etc
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம். அந்த கண்டக்டர், பயணி பேசியது நல்ல வடிவேலு நகைச்சுவை போல..ஹ்ஹஹ்..
பதிலளிநீக்குஅடுத்த மனம் கனக்கும் பதிவுகள்...மிகவும் யதார்த்தமான அன்றன்று, பிரயாணத்தில் நடக்கும் நிகழ்வுகள்....வாசிக்கும் ஆர்வம்...நூல் எங்கே கிடைக்கிறது நண்பரே! பகிர்வுக்கு மிக்க நன்றி!
விமர்சனத்தில் நீங்கள் தொட்டுக் காட்டிய பகுதிகளே இவ்வளவு அருமையாக இருக்கும் போது புத்தகமும் அருமையாகத்தான் இருக்கும். புத்தகம் வாங்கும்போது நினைவில் இருத்துகிறேன்.
பதிலளிநீக்குஅருமையான நூலாக இருக்க வேண்டும் ..
பதிலளிநீக்குநன்றி அறிமுகத்திற்கு
தம+
நூலினை வாங்கச் சொல்லும் விமரிசனம் உங்களது சிறப்பு. பேராசிரியர் ஹரணியின் “பேருந்து” நூலை விரவில் வாங்கிப் படிக்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குத.ம.9
படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது
பதிலளிநீக்குபேருந்து நடத்துனர் காவலர்க இவர்களை தூற்றுவதுதான் நமது வழக்கம். அவர்களின் மறுபக்கத்தையும் சிந்திக்க வைப்பதாக உள்ளது ஹரிணி அவர்களின் படைப்பு என்பதை அறிய முடிகிறது. நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி
பதிலளிநீக்குஇவரோடு பயணிப்பதில் நமக்கும் ஆனந்தம் ஏற்படுகிறதே !
பதிலளிநீக்குத ம 12
நல்ல நூல் விவரிப்பு.
பதிலளிநீக்குவாசிக்க உயர்ப்புடன் இருந்தது.
பல கோண வாழ்வு.
இனிய பாராட்டுகள் இருவருக்கும்
ஏன் சார் அவரது வலை இணைப்பையும் போட்டிருக்கலாமே!
நன்றி
வேதா. இலங்காதிலகம்.
கரந்தையாரே நல்ல விமர்சனம். தங்கள் விமர்சனத்தினாலே நான் ஏற்கனவே ஒரு நூல் படித்தேன். அருமை. இதனையும் படிக்க தூண்டுகிறது உம் விமர்சனம். நன்றி
பதிலளிநீக்குஒரு பேருந்தில் பயணிப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது புத்தகத்தில் இருந்து எடுத்துக்காட்டப்பட்ட வரிகள்! அருமையான விமர்சனம்! புத்தகத்தின் விலையை தரவில்லையே? நன்றி!
பதிலளிநீக்குநாவலை படித்தே ஆகவேண்டும் என்று தூண்டுவதை போல இருக்கிறது விமர்சனம். இருவருக்கும் எனது வாழ்த்துகள் !!
பதிலளிநீக்குஅய்யா இது சாலைப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வூட்டும் வாரம். இச்சமயத்தில் பேருந்து பற்றிய தங்களின் அறிமுகவுரை அருமை. அவசியம் படிப்பதுடன் மற்றவர்க்கும் பகிர்வேன். நன்றி.
பதிலளிநீக்குமனிதனை செம்மை படுத்துவதில் பயணங்களுக்கு பெரும் பங்குண்டு. முக்கியமாய இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பேருந்து செல்லும் தடம் பல கதைகள் சொல்லும். அதன் பயணிகள் தொடங்கி, ஓட்டுனர், நடத்துனர் ஆகியோருக்கிடையே ஒரு ஆத்மார்த்தமான பிணைப்புண்டு.
பதிலளிநீக்குஅந்த பிணைப்பு இன்றைய அவசர யுகத்திலும் தொடர்கிறது ! சென்ற வருடம் இந்தியா சென்றிருந்த போது ஒரு நண்பரை காண தஞ்சை செல்ல நேர்ந்தது. நான் பயணித்த பேருந்தின் நடத்துனருக்காக ஒரு கிராமத்தில் காத்திருந்த மனிதர், நடத்துனர் பக்கத்து ஊரிலிருந்து வாங்கி வந்த மருந்தினை பெற்றுக்கொண்டு சென்றார் !
இன்று சினிமாவில் மட்டுமே காண கிடைக்க கூடியதாக நான் நினைத்த ஒரு சம்பவத்தை நேரில் கண்டு ஆச்சரியமுற்று நெகிழ்ந்தேன் !
அப்படிப்பட்ட பயணங்களின் அனுபவ தொகுப்பு அருமையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. படிக்க முயற்சிக்கிறேன்.
எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
நூல் விமர்சனம் அருமை!
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குநமது இனிய நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த திரு.ஹரணி என்ற அன்பழகன் அவர்களின் எழுத்தில் உயிர்ப் பெற்ற ’பேருந்து’ நாவலை இணையத்தில் தொடராக படித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை. ஆனால் இன்னும் மேன்மையாக அவருடைய உயிர்ப் படைப்பான அவரது மகன் திரு.குகன் அவர்கள் என்னுடைய மாணவர் என்பதில் பெருமையாக உணர்கிறேன். நற்பண்புகளுக்கு இலக்கணமாக திகழும் அற்புதமான மகனையும் ஆழ்ந்த வாசிப்பின் விளைவாக அழுத்தமான எழுத்தாற்றலையும் ஒருங்கே பெற்றிருக்கும் அய்யா அன்பழகன் அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். அந்த நாவலுக்கு தாங்கள் எழுதிய விமர்சனம் மிகவும் வீர்யமுடையதாக அமைந்து நாவலை படிக்க ஆவலை ஏற்படுத்தியது சிறப்பாகும்.
ஒரு மிகச் சிறந்த நூலைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா...
பதிலளிநீக்குஎழுத்தாளர் கவிஞர் ஹரிணி அவர்களைப் பாராட்டுவோம்...
ஊருக்கு வரும் போது கண்டிப்பாக வாங்கி வாசிக்கிறேன் ஐயா...
உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
பதிலளிநீக்குஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/
படிக்கும் ஆர்வத்தை தூண்டும் நூல் அறிமுகம் ஐயா.
பதிலளிநீக்குவாழ்க நலம்!..
பதிலளிநீக்குஅன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
வணக்கம்!
பதிலளிநீக்கு"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)
அவலம் ஆபத்து நிறைந்த பேருந்து பயணம் ...மணத்தால் முகம் சுழிக்க வைக்கும் திறந்த கழிப்பறை ...இவற்றை விலக்கிவிட்டு வாழ முடியாத நிலையில் நாங்கள் .....பல விடயங்களை யதார்த்தமாக எழுதியுள்ளார் .......................................உடுவை
பதிலளிநீக்குநான் என் மனதில் போற்றிடும் மிகச்சிறந்த எழுத்தாளரான நம் திரு. ஹரணி அவர்களின் நூலினை, சிக்குச்சிடுக்கு எதும் இன்றி பிரித்து அவிழ்த்து அலசி ஆராய்ந்து சொல்லியுள்ளது, எனக்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு