28 பிப்ரவரி 2016

செஞ்சோற்றுக் கடன்
பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க்காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை

கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்.

     பெற்ற அன்னையை, அம்மா என மனம் மகிழ அழைத்து மகிழவும், உற்றார் உறவினர்க்காக உழைத்திட, ஒரு நாளைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு நாளின் ஒரு மணி நேரத்தைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு மணியின் ஒரு நிமிடத்தைக் கூட ஒதுக்கிடாமல், தமிழ் தமிழ் தமிழ் என நெஞ்சம் துடிக்கத் துடிக்க, அயராது பாடுபட்டிருக்கிறார் ஒரு மனிதர், ஒரு மாமனிதர் என்பதை நினைக்கும் பொழுதே நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா, விழிகள் வியப்பால் விரிகின்றன அல்லவா.


      இம் மாமனிதரைத் தன் கவிதை வரிகளால் போற்றிப் புகழ்ந்தவர் யார் தெரியுமா?

புரட்சிக்கவி, பாவேந்தர் பாரதிதாசன்

    புரட்சிக் கவியின் உணர்வு மிகு வரிகளால், பாசமிகு வார்த்தைகளால், நேசமிகு சொற்களால், பாராட்டப் பெற்ற இம்மாமனிதர் யார் தெரியுமா?

தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியே
என முதன் முதலாய்த் தீர்மானம் நிறைவேற்றியவர்.

தமிழுக்குத் தேவை, தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம்
என முதன் முதலாய்த் தீர்மானம் நிறைவேற்றியவர்.

தமிழும் வடமொழியும் கலந்த, மணிப்பிரவாள நடை மறைந்து,
கரந்தை நடைத்
தோன்றக் காரணமாக இருந்தவர்

கட்டாய இந்தியை
வீறு கொண்டு எழுந்து, தீரமுடன் எதிர்த்து
முதல் குரல் கொடுத்தவர்.

வடமொழிக் கல்லூரியில்
தமிழுக்கும் சரியாசனம் அமைத்துக் கொடுத்தவர்.

மேலும், மேலும் இவர்தம் சாதனைகளை, அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த இவர்தம் சேவைகளை கூறிக் கொண்டே போகலாம்.


இவர்தான்
செந்தமிழ்ப் புரவலர்
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்

    நான்காம் தமிழ்ச் சங்கமாம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், முதற்றலைவராய் அமர்ந்து, முழுதாய் முப்பதாண்டுகள் சங்கத்தைப் போற்றிப் புரந்தவர்.

     இவர்தம் திருப்பெயர் தாங்கி நிற்கும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன் நான்.

     நான் என்பது கூட தவறான சொல்தான்.

     நாங்கள் என்பதுதான் சரியான வார்த்தை.

    இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நாங்கள்.

     உமாமகேசன் காலடித் தடம் பதிந்த மண்ணில், நாள்தோறும் வாழ்வினை நகர்த்தி வருபவர்கள் நாங்கள்.

     உமாமகேசுவரனார் சுவாசித்த காற்றை, நாள்தோறும் சுவாசித்து வருபவர்கள் நாங்கள்.

      நாங்கள் என்றால் நான், நண்பர் திரு வெ.சரவணன், கேப்டன் ராஜன் மற்றும் ருத்ரன் பா.ராஜராஜன்.

     நண்பர் திரு வெ.சரவணன் அவர்களுக்கும் எனக்கும், ஓர் அற்புத வாய்ப்புக் கிடைத்தது. கல்வி பயின்ற பள்ளியிலேயே ஆசிரியர் ஆனோம். நண்பர் திரு வெ.சரவணன் அவர்களோ, ஆசிரியர் ஆகி, தலைமையாசிரியராகவும் உயர்ந்து விட்டார்.

     கேப்டன் ராஜன் அவர்களோ நிலத்தில் ஆறுமாதம், நீரில் ஆறு மாதம் என மிதப்பவர். உண்மைதான் நண்பர்களே, சிறு வயது முதலே, கப்பல், கப்பல், கப்பல் என கப்பலே கனவாய், இலட்சியமாய் எண்ணி எண்ணி, முயன்று முயன்று, இன்று கப்பலில்  கேப்டனாகப் பணிபுரிந்து வருபவர்.

     ருத்ரன் பா.ராஜராஜன் அவர்களோ, தன் மூச்சும், பேச்சும், சொல்லும் செயலும் ஆன்மீகம், ஆன்மீகம், ஆன்மீகமே என வாழ்ந்து வருபவர். ருத்ரன் கணிப்பொறி நிறுவனம் என்னும் பெயரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றினைத் தன் சகோதரருடன் இணைந்து சிறப்புடன் நடத்தி வருபவர்.

     கேப்டன் ராஜனும், ருத்ரன் ராஜராஜனும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மட்டுமல்ல, திரு வெ.சரவணன் அவர்களின் முன்னாள் மாணவர்களும் ஆவார்கள்.

     சென்ற ஆண்டுவரை கேப்டன் ராஜனை நான் அறியேன்.

    எனது வலைப் பூவில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் பற்றியத் தொடரினைப் படித்து, என்னுடன் தொடர்பு கொண்டவர்.

சார், நானும் கரந்தைதான். நானும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன்தான்.

    அன்று தொடங்கிய நட்பு.

    முதல் சந்திப்பிலேயே, ஒரு வேண்டுகோளினையும் முன் வைத்தார்.

உமாமகேசுவரனார் பற்றிய புத்தகம் ஒன்றினை வெளியிட வேண்டும். வலைப் பூவில் நீங்கள் எழுதிவரும் செய்திகளைத் தொகுத்துத் தாருங்கள். முழுச் செலவும் என்னுடையது, என்னுடையது மட்டுமே.

     மெய்சிலிர்த்துப் போய்விட்டேன் நண்பர்களே, மெய் சிலிர்த்துப் போய்விட்டேன். இப்படியும் ஒரு மாணவரா? நம்பத்தான் இயலவில்லை.

    கப்பலில் மிதந்தோமா, காசு சேர்த்தோமா, வீடு கட்டினோமா, கார் வாங்கினோமா, நகைகளை ,பணத்தினை கட்டுக் கட்டாய் வங்கியில், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டினோமா என்று இல்லாமல், தான் பயின்ற பள்ளியின் மேல் காதல் கொண்டு, தமிழவேள் உமாமகேசன் மேல் தீராப் பாசம் கொண்டு, புத்தகம் வெளியிட வேண்டும் என்று அழைத்தவரைக் கண்டு வியந்துதான் போனேன்.

கரந்தைத் தமிழ்ச் சங்கப் பெத்தாச்சி புகழ் நிலையம்
தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகம்
சென்னை, அரசு ஆவணக் காப்பகம்
சென்னை, கன்னிமாரா நூல் நிலையம்
சென்னை, மறைமலை அடிகள் நூலகம்
சென்னை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்
சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல் நிலையம்
என நானும், நண்பர் திரு வெ.சரவணன் அவர்களும், அலையாய் அலைந்து திரட்டிய தகவல்களையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் இதழ்கள், ஆண்டு அறிக்கைகள், கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடுகள் என, ஒவ்வொறு நூலின் ஒவ்வொரு பக்கத்தின் உள்ளும் புகுந்து திரட்டியச் செய்திகள் என அனைத்தையும் தொகுத்து, எங்களது நான்காண்டு கால உழைப்பை, ஒரு சிறு குறுந்தகடாய் வழங்கினோம்.

       கேப்டன் ராஜன் பணத்தினை அள்ளி வழங்க, ருத்ரன் ராஜராஜனோ, கணினியில் நூல் வடிவமைப்பு, அச்சாக்கம் எனத் தன் உழைப்பினை வாரி வழங்க, அழகுத் தோற்றத்துடன், உரு பெற்றிருக்கிறது, உமாமகேசன் புகழ்பாடும், ஓர் புத்தம் புது நூல்.


உமாமகேசுவரம்

புண்ணிய நெடுவரைப் போகிற நெடுங்கழைக்
கண்ணிடை யொருசாண் வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலன விருபத்து நாள்விரலா
எழுகோலகலத் தெண்கோல் நீளத்து
ஒரு கோல் உயரத்து உறுப்பினதாகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக
ஏற்ற வாயிலிரண்டுடன் பொலியத்
தோன்றிய அரங்கு
என சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பாடுவார் அல்லவா, மாதவி நடனமாடிய அரங்கை, அதன் அளவுகளுடன் விவரிப்பார் அல்லவா, அதே அளவுகளுடன், கரந்தையம்பதியில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், உமாமகேசுவரனார் அவர்களால் எழுப்பப் பெற்ற அரங்குதான் தமிழ்ப் பெருமன்றம்.

சங்கத் தமிழ்ப்பெரு மன்றம்

      உலகெங்கும் வாழ்ந்த தமிழ்ப் பெரியார்கள்தம் பாதம் பட்ட இடம், இந்தத் தமிழ்ப் பெருமன்றம். தமிழையே சுவாசமாய் சுவாசித்த, நேசித்த மாமனிதர்களின் குரல் ஓங்கி ஒலித்த இடம், இந்தத் தமிழ்ப் பெருமன்றம்.

     சுருங்கச் சொல்ல வேண்டும் எனில், தமிழ்த் தலமாம், இக்கரந்தையின், கருவறையே, இந்தத் தமிழ்ப் பெருமன்றம்தான்.

     இத்தகு பெருமை வாய்ந்த தமிழ்ப் பெருமன்ற மேடையில்,

உமாமகேசுவரம்
நூலின் வெளியீட்டு விழா.

கரந்தைத் தமிழ்ச் சங்க்ததின், கரந்தைப் புலவர் கல்லூரியின் பயின்று,
1954 ஆம் ஆண்டில்,
சென்னைப் பல்கலைக் கழகத்தின்,
தங்கப் பதக்கத்தினை வென்ற,
நடமாடும் தமிழ்க் களஞ்சியம், பேச்சும் மூச்சும் சங்கத் தமிழே
என வாழ்ந்து வரும், 80 வயது நிரம்பிய,
உலகப் பெருந் தமிழர்,
முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள்,
நூலினை வெளியிட,எனது நண்பரும், எனது பள்ளிப் பருவத் தோழரும்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
துணைத் தலைவருமான
திரு இரா.சுந்தரவதனம் அவர்கள்
நூலின், முதற் படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.
 
கேப்டன் ராஜன்
ருத்ரன் ராஜராஜன்


கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்,
ஓய்வு பெற்றத் தமிழாசிரியர்
புலவர் ம.கந்தசாமி அவர்களும்,


கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் புகழினை,
கடல் கடந்து, அமெரிக்க நாடு முழுவதும் பரப்பி வரும்,
சங்க அன்பர்,
கரந்தை எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களும்,

முனைவர் கோ.சண்முகம் கேப்டன் ராஜன்அவர்களைச் சிறப்பிக்கிறார்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின்
ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கோ.சண்முகம் அவர்களும்,


வலையுலகில் எதை எழுதுவது, எப்படி எழுதுவது
என எனக்கு வழிகாட்டிய, என்னை நெறிப் படுத்திய,
எனது வலையுலக குருநாதர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்
கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்
முனைவர் ஹரணி அவர்களும்,


கரந்தைத் தமிழ்ச் சங்க நிறைவேற்றுக் கழக உறுப்பினர்
திரு ஆ.சோ.தியாகராசன் அவர்களும்,


கரந்தைத் தமிழ்ச் சங்க நிறைவேற்றுக் கழக உறுப்பினர்
திரு ஆ.பக்கிரிசாமி அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொண்டு, விழாவினைச் சிறப்பித்தார்கள்.


வலையுலக ஆன்மீகச் செம்மல்,
கும்பகோணத்து மகாமகப் பெரு நிகழ்வில் பங்கு பெற வேண்டும்,
பங்கு பெற்றே ஆக வேண்டும் என்பதற்காகவே,
குவைத்தில் இருந்து பறந்து வந்த
தஞ்சையம்பதி
திரு செல்வராசு அவர்கள்
நூல் வெளியீட்டு விழாவிற்கு முதல் நாளே,
பள்ளிக்கு வந்து வாழ்த்தி மகிழ்ந்தார்.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற ஆண்டு விழாவோடு, உமாமகேசுவரம் நூலின் வெளியீட்டு விழாவினையும் நடத்திட, மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, அனுமதி வழங்கிய
சங்கச் செயலாளர்
செம்மொழி வேளிர்
திரு ச.இராமநாதன் அவர்களையும்,
சங்கத் துணைத் தலைவர்
திரு இரா.சுந்தரவதனம் அவர்களையும்
எங்கள் உள்ளம், எந்நாளும் போற்றி மகிழும்.

உமாமகேசுவரம்
தமிழ்ப் பெருமன்ற மேடையேறிய
இப் பொன்னாள்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின்
முன்னாள் மாணவர்களாகிய
எங்கள் நால்வராலும்
சுவாசமென்று ஒன்று இருக்கும் வரை
மறக்க இயலா திருநாள்.

    உமாமகேசன் பாதம் பதிந்த, கரந்தை மண்ணில் தவழ்ந்து, நடந்து, உமாமகேசன் சுவாசித்தக் காற்றையே சுவாசித்து, உயிர் வளர்த்து, நல் வாழ்வு வாழ்ந்து வரும் எங்களின், மனங்களில் மகிழ்வும், நெகிழ்வும், நிறைவும் பொங்கி வழிகின்றன.

இப்புவியில்,
இக் கரந்தை மண்ணில்,
சிற்றுயிராய் தோன்றியதன்,
நோக்கத்தை
நிறைவேற்றிய நிம்மதி
எங்கள் நால்வரின் மனங்களிலும்.

உமாமகேசுவரம்
எங்களின்

செஞ்சோற்றுக் கடன்.

49 கருத்துகள்:

 1. அறிந்திராத உயர்ந்த மனிதர் ! அறியத் தந்தமைக்கு நன்றி. இப்படிப் பலரையும் உங்கள் மூலமே அறிகிறேன். வணக்கம்.

  பதிலளிநீக்கு
 2. பெருமிதமான மகிழ்ச்சி ஐயா...

  தஞ்சையம்பதி திரு செல்வராசு ஐயாவையும் காண முடிந்தது... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. செஞ்சோற்றுக் கடன் தீர்த்த நீங்கள் வாழ்த்துக்குரியவர்கள். இன்று உமாமகேசன் போன்ற வள்ளல்களால் நாம் வாழ்கிறோம்.!!

  பதிலளிநீக்கு
 4. தங்களின் நன்றிக்கடன் போற்றதலுக்குறியது நண்பேர...
  அன்பின் ஜி திரு. துரை செல்வராசு அவர்களை கண்டதில் மகிழ்ச்சி
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்

  தங்களின் கடமையை கண்டு மகிழ்கிறேன் ஐயா நிகழ்வு சிறப்பாக நடை பெற்றுள்ளது என்பதை அறியத்தந்தமைக்கு நன்றி த.ம4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு விவரமும் இப்பொழுத்தான் தெரியும் நன்றி .கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தான் என் சித்தப்பா படித்தார் . என் சித்தப்பா எழுதிய இலக்கணப் புத்தகம் செல்விச் செந்தமிழ் இலக்கணம் நான் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா,தங்களின் சித்தப்பா கரந்தையில் படித்தவரா
   மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரியாரே
   நன்றி

   நீக்கு
 7. உமாமகேசுவரனார் இந்த செஞ்சோற்றுக்கடனை கண்டிப்பாக ஏற்க மாட்டார். இந்த கடன் யாருக்கானது என்று தெரியும். கடன் இதோடு முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்களைப் பற்றிய தங்களின் புரிதல், சரியானது அல்ல என்பதை முதலில் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் அய்யா.

   எங்களைப் பொருத்தவரை நன்றிக் கடன் என்பது வேறு, செஞ்சோற்றுக் கடன் என்பது வேறு என்றே எண்ணுகின்றோம். உமாமகேசன் இல்லையேல் இன்று சங்கம் ஏது? பள்ளி ஏது? கல்லூரிதான் ஏது?

   சங்கத்தில் கால் பதித்த நாள் முதலாய், உமாமகேசன் பற்றிப் படித்துப் படித்து மெய்சிலிர்த்தவர்கள் நாங்கள். உமாமகேசன் பற்றி நாங்கள் அறிய, தாங்களும் ஒரு காரணம் என்பதை என்றும் மறவோம்.

   எத்துனையோ தமிழாய்ந்த பெருமக்கள் சங்கத்தில் படித்திருக்கிறார்கள், பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே தராத, ஒரு கொடுப்பினையினை, உமாமகேசன் எங்களுக்கு அருளியிருக்கிறார்.

   தன்னைப் பற்றி எழுத, எங்களை இயக்கியவரே உமாமகேசன்தான் என்று எண்ணுகின்றோம்.

   ஆலயத்துத் தெய்வங்களை வழிபடும் வழிபாட்டு நெறியில் இருந்து, நான் விலகி, ஆண்டுகள் பல ஆகிவிட்டன. ஏனெனில் நான் கண்ட காட்சிகள், நான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள். நான் சந்தித்த நம்பிக்கைத் துரோகங்கள்.

   ஆனாலும் நடமாடும் தெய்வங்களை, நடமாடிய தெய்வங்களைப் போற்றுபவன் நான்.

   என்னைப் பொறுத்தவரை உமாமகேசன் எங்களின் வழிபாட்டிற்கு உரிய தெய்வம்.

   சங்கமுதல் வாயிலிலே தளிராலின் நிழலகத்தே சார்ந்த மன்றம்
   அங்கங்காம் அவற்றகத்தே ஆற்றிடையே அகல்வெளியாம் ஆங்கே மற்றும்
   எங்கணுநீ நிற்கின்றாய் இருக்கின்றாய் இயல்கின்றாய் எளியேம்
   பொங்கினிய மொழிகின்றாய் பொற்புடைய தலைவஇவை பொய்யோ மெய்யோ

   எனப் பாடுவார் உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை. எங்களைப் பொறுத்தவரை, உரைவேந்தரின் வரிகள் மெய்தான். சங்கத்தின் ஒவ்வொரு இடத்திலும் உமாமகேசன் நிறைந்திருக்கின்றார், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு காட்சியினையும் கண்ணார கண்டு கொண்டே இருக்கின்றார்.

   எனவே எங்களின் இந்த செஞ்சோற்றுக் கடனை மகிழ்வுடன் ஏற்பார், உள்ளம் குளிர ஏற்பார், ஏற்கனவே ஏற்றுக் கொண்டும் இருப்பார் என்பது உண்மை, நிச்சயமான உண்மை.

   இவ்வுலகில் நாங்கள் பட்டக் கடனை, பணக் கடன் தவிர, ஏனைய கடன்கள் அனைத்தையும், முழுமையாக அடைத்து விட்டோம்.

   நாங்கள் யாருக்கும் கடனாளிகள் அல்ல, என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

   நீக்கு
 8. இவரைப் பற்றி முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள்... அதில் ஐயாவைப் பற்றி அறிந்து கொண்டோம்... இப்போது புத்தகம்... அருமை ஐயா... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இம்மாதிரி புத்தகங்கள் அவசியம் தேவை ,வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 10. மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. அமைதியான முறையில் அதிகமாகச் சாதித்துவரும் தங்களின் பணி போற்றத்தக்கது. நான் முன்னரே பல முறை கூறியதுபோல தமிழக வரலாற்றில், தமிழ்கூர் நல்லுலகில் தங்களின் பெயர் முக்கியமான இடத்தைப் பெற்றுவிட்டது. தங்களது பணி தொடரட்டும். அரிய பணியில் ஈடுபட்டு சாதித்துள்ளீர்கள். இம்முயற்சியில் துணைநின்ற தங்களின் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 12. தமிழவேள் உமாமகேசுவரனார் பற்றிய வரலாற்றினையும், தமிழின் பெருமையையும் நூறாண்டுகள் கடந்தாலும் பேசப் போகும் ஒரு வரலாற்றுப் பெட்டகத்தை, நூல் வடிவில் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. எதைச் செய்தாலும் சிறப்பாக உங்கள் முத்திரை விழுந்து விடுகிறது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. பலமுறை நேற்று அலைபேசியில் பதிவிட்டும் இயலவில்லை..தாமதத்திற்கு மன்னிக்கவும்..அற்புதமான பதிவும்..செய்தியும்..தமிழ் வளர்த்த சான்றோர்க்கு தாங்கள் செய்திருக்கும் பணி ..போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது...வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் எதற்கு நண்பரே
   தங்களின் வருகை மகிழ்வினைத் தருகின்றது
   நன்றி நண்பரே

   நீக்கு
 15. வாழ்க நிவீர் அனைவரும்!

  பதிலளிநீக்கு
 16. நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார்,திரு வெ.சரவணன், கேப்டன் ராஜன் மற்றும் ருத்ரன் பா.ராஜராஜன். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. ஆஹா அருமையான செயல் சகோ, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. ஒரு வார காலமாக ஓய்வில்லை... தங்களைச் சந்தித்து விடை பெற்றுக் கொண்ட பின்னும் கூட பதிவுகளுக்குள் நுழையவில்லை..

  நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட பின் - அபுதாபி விமான நிலையத்தில் - விமான இணைப்புக்காக காத்திருந்த வேளையில் தங்களது பதிவினைக் கண்டேன்..

  என்னையும் பதிவில் குறித்தமைக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்..

  தங்களுக்கும் திரு வெ.சரவணன், கேப்டன் திரு. ராஜன் ஆகியோருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஞ்சை வந்த தங்களைச் சந்தித்ததில் மிகுந்தமகிழ்ச்சி ஐயா
   நன்றி

   நீக்கு
 19. உமா மகேஸ்வரம்
  உண்மையிலே
  தஞ்சைத் தரணியின்
  இன்னொரு
  ராஜ கோபுரம்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 20. இதுவரை கேள்விப் பட்டிராத மாமனிதரை சுட்டிய உங்கள் விரலுக்கு கணையாழி ஒன்று இடவேண்டும் கரந்தையாரே! மேன்மக்கள் மேன்மக்களே!

  பதிலளிநீக்கு
 21. அருமையான பதிவு நண்பரே! தம்ழி வளர்த்த சான்றோரானவரைப் பற்றித் தாங்கள் தங்கள் பதிவு ஒன்றில் சொல்லியிருந்தது நினைவு. இப்போது அவரைப் பற்றிப் புத்தகம். அருமை. வாழ்த்துகள்! பதிவிட்டுப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. அருமை அருமை
  தமிழ் என்றும் உங்களை வாழ்த்தும்
  இவ்வாறான பணிகளைத் தொடர
  தங்களுக்கும்
  கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும்
  எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 23. நல்ல மனங்கள் நீடு வாழ்க.
  சிறப்பான செயல்
  தகவல்களிற்கு நன்றி.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 24. நல்லதோர் பதிவு. சிறப்பானவர் பற்றிய சீரிய பதிவு. புத்தகம் பற்றிய தகவலுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 25. Dear Sir / Madam
  கடன் முடிந்தவரை வேகமாக 2 நாட்களுக்குள். கடன் முடிந்தவரை வேகமாக 2 நாட்களுக்குள். ஒரு வணிக கடன் தேடுவது, தனிநபர் கடன்,,
  போன்றவை? நாம் இப்போது எந்த தனிப்பட்ட மற்றும் வணிக கடன்கள் கொடுக்கிறோம்
  1 ல் இருந்து 30 ஆண்டுகள் 3% வட்டி விகிதத்தில் ஆர்வமாக நபர்.
  பெயர்: ... பிறந்த தேதி: .. பால்: .... திருமண நிலை: .... முகவரி: .. பெருநகரம்: ..
  நாடு: ... தொலைபேசி: ... கடன் தொகை: .... வாடகை காலம்: ...
  மாத வருமானம் நிகர: ... எங்கள் மின்னஞ்சல் இந்த தகவலை மீண்டும் எங்களைத் தொடர்பு: hendersonelizabethloan@googmail.com
  http://hendersonelizabeth3.wix.com/fund
  இப்போது
  நன்றி
  கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

  பதிலளிநீக்கு
 26. வழிகாட்டியாக வாழ்ந்தவர்கள் வாழ்க்கை வரலாறு ஆவணமாக்கபடுதல் அவசியம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு