20 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 15


            

   செந்தா என் அருகில் வந்தது எனக்குத் தெரியாது.

       என்னைக் கட்டிப் பிடித்ததும்தான், நிலைமையை உணர்ந்தேன்.

      திமிறிக் கொண்டு விலகினேன்.


      செந்தா, நாம் நண்பர்கள் மட்டும்தான்
      செந்தா, நாம் நண்பர்கள் மட்டும்தான்
      திரும்பத் திரும்பக் கூறினேன்.

      சட்டென்று விலகினார்.

     இரவு வணக்கம் செந்தா, வருகிறேன்.

     நான் எனது அறைக்கு வந்து படுத்தேன்.

     அடுத்த நாள் மாலை, என்னைச் சந்தித்த செந்தா, அந்நிகழ்விற்காக வருத்தம் தெரிவித்தார்.

     பார்க்கும் பெண்களை எல்லாம், தாயாகவோ அல்லது சகோதரியாகவோ கருதும், கலாச்சாரத்தில் இருந்து வந்தவன் அல்லவா நான்.

      இந்து மதத்தில் உள்ள பல மூட நம்பிக்கைகளை, கடுமையாக விமர்சிக்கும் ஒரு சமூகவியல் வல்லுநராக, நான் இருந்த போதிலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாகவே இருந்தேன்.
---
   
       ஏப்ரல் மாதம் தொடங்கியதும், நியூயார்க் நகர பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள, சில கல்லூரிகளுக்கு, பகுதி நேர விரிவுரையாளர் பணிக்காக விண்ணப்பித்தேன்.

    கல்வி உதவித் தொகை கிடையாது. செலவினங்களை எதிர் கொண்டாக வேண்டும் அல்லவா?.

    
குயின்ஸ் கல்லூரி
ஜுலை மாத இறுதியில், குயின்ஸ் கல்லூரியினர், தொலைபேசி வழியாக நேர்காணல் நடத்தியும், மேன்ஹாட்டன் சமுதாயக் கல்லூரியினர் நேர்முகத் தேர்வு மூலமாகவும் என்னைத் தேர்ந்தெடுத்தனர்.

      இனி ஒரு கல்லூரியில் மாணவனாகப் படிக்க வேண்டும், மூன்று கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும்.

       கல்லூரி துவங்க ஒரு வாரமே இருந்த நிலையில், குயின்ஸ் கல்லூரிக்குச் சென்றேன்.

       குயின்ஸ் கல்லூரியின் சமூகவியல் துறை நுழைவு வாயிலை அடைந்த உடன், வரவேற்பு மேடையில் இருந்த பெண்மணி என்னை வரவேற்றார்.

ஐயா வணக்கம். தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா?

வணக்கம். நான் இங்குள்ள உதவியாளர் திருமதி கேரல் என்பவரைச் சந்திக்க விரும்புகிறேன்.

அப்படியா? நான்தான் கேரல்.

வணக்கம் கேரல். எனது பெயர் வெற்றிவேல் முருகன் ஆதிமூலம். நான் இங்கு பகுதி நேர பேராசிரியர் பணியில் சேர வந்துள்ளேன்.

நீங்களா அது ?

    அடுத்த முப்பது நொடிகள் வரை அவரிடமிருந்து வேறு வார்த்தைகள் வெளிவரவே இல்லை. பின்னர் பேசினார்.

சற்றுப் பொறுங்கள். நான் துறைத் தலைவர் திரு ஆண்ட்ரூவைத் தொடர்பு கொள்கிறேன்.

      சற்றேரக்குறைய நாற்பது நிமிடங்களுக்கும் மேல் காத்திருப்பு நீடித்தது.

     பின்னர் அறைக்குள் நுழைந்த கேரல், துறைத் தலைவர் தங்களுடன் பேச விரும்புகிறார் என்றார்.

        சரி சந்திக்கிறேன் என இருக்கையை விட்டு எழ முயன்றேன்.

        துறைத் தலைவர் தொலைபேசி இணைப்பில் காத்திருக்கிறார் என்று கூறி, தொலைபேசியை என்னிடம் கொடுத்தார்.

ஐயா வணக்கம். சமூகவியல் நோக்கில் பெண்களும், பெண்ணியமும் என்ற பாடத்தைக் கற்பிக்க உள்ள வெற்றி வேல் முருகன் பேசுகிறேன்.

வணக்கம் வெற்றிவேல். தாங்கள், தங்களுடைய விண்ணப்பத்தில் பார்வை அற்றவர் என்பதை முன்னதாகவே குறிப்பிடாததாலும், தங்களை தொலை பேசி வழியே நேர் காணல் செய்ததாலும், சிறிது குழப்பம் ஏற்பட்டு விட்டது, என்றவர்.

வெற்றிவேல் நான் தங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன் என்றார்.

தாராளமாகக் கேளுங்கள்.

பார்வை தெரியாத நீங்கள், வகுப்பறை மற்றும் பிற அறைகளை, எவ்வாறு கண்டுபிடித்து, உங்கள் வகுப்பிற்குச் செல்வீர்கள்.

ஐயா, முதல் நாள் மட்டும், யாராவது ஒருவரின் உதவியுடன், அறையைத் தேடிக் கண்டு பிடிப்பேன். அடுத்த நாள் முதல், முந்தைய நாள் அனுபவத்தை வைத்துக் கொண்டு, எனது வகுப்பறையை, நான் எளிதாக கண்டு பிடித்து விடுவேன்.

சரி, வகுப்பறையில் கரும் பலகையினை எப்படிப் பயன்படுத்துவீர்கள்.

அதற்கெல்லாம் இன்று கணினி வந்து விட்டதே ஐயா. Microsoft Powerpoint ஸ்லைடுகள் மூலம், ஊடகப் பிரதிபலிப்பானைக் கொண்டு (Multimedia Projector) கரும்பலகையில் எழுத வேண்டிய செய்திகளை, மற்றவர்களை விட, எளிமையான முறையில் விளக்க முடியும் ஐயா.

மாணவர்கள் எழுதும் தேர்வுத் தாட்களை எவ்வாறு திருத்துவீர்கள்?

நான் தேர்வுகளை கணினி மூலம் நடத்தி, விடைத் தாட்களைத் திருத்தி, இணைய தளம் வழியாக, திருத்திய தாட்களை மாணவர்களுக்கு அனுப்பி வைப்பேன். இதில் ஏதேனும் தங்களுக்குச் சந்தேகம் இருப்பின், நான் தற்பொழுது பணியாற்றிவரும் லகுவார்டியா கல்லூரியிலும் விசாரித்து, தாங்கள் தெரிந்து கொள்ளலாம்.

        இந்த உரையாடலுக்குப் பின், நான் பணியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்கள், என்னிடம் கொடுக்கப் பட்டன.

        விண்ணப்பப் படிவங்களை எடுத்துக் கொண்டு, மனித வள துறைக்குச் சென்றேன்.

       மனித வளத் துறையில் இருந்த, விண்ணப்பத்தினைச் சரிபார்க்கும் அலுவலர், என்னுடைய படிவங்களை, நேரமாகிவிட்டதே என முனகிக் கொண்டே நிரப்பினார்.

      பின் படிவங்களை என்னிடம் கொடுத்து, நாளை காலை, சமூகவியல் துறைத் தலைவரைச் சந்தித்து, அவரிடம் கையொப்பம் பெற்று வந்து, என்னிடம் கொடுக்கவும் என்றார்.

      அடுத்த நாள் கலை, கேரலைத் தொடர்பு கொண்டு, நிரப்பப் பட்ட விண்ணப்பப் படிவத்தில், துறைத் தலைவரின் கையொப்பம் பெற்றாக வேண்டும், எனவே வரலாமா என்றேன்.

      சற்றுப் பொறுங்கள். சில நிமிடங்களில் நானே, உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் என்றார்.

      காத்திருந்து, காத்திருந்து நொந்து போனதுதான் மிச்சம்.

      அழைப்பு வரவேயில்லை.

       மதியத்திற்கு மேல் புறப்பட்டு, தொடர் வண்டியில் பயணித்து, குயின்ஸ் கல்லூரிக்குச் சென்றேன்.

      நுழைவு வாயிலிலேயே கேரலைச் சந்தித்தேன்.

      விண்ணப்பத்தை நீட்டினேன்.

       மன்னிக்கவும். தங்களை பணியில் சேர்க்க இயலாத நிலையில் இருக்கிறோம். எனவே தங்களின் விண்ணப்பத்தை ஏற்க இயலாது.

                                            தொடர்ந்து பேசுவேன்.





21 கருத்துகள்:

  1. ஏன் ஏன் இந்த நிலை ?சீக்கிரம் சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  2. >>> மன்னிக்கவும். தங்களை பணியில் சேர்க்க இயலாத நிலையில் இருக்கிறோம். எனவே தங்களின் விண்ணப்பத்தை ஏற்க இயலாது.
    <<<

    இத்தனை ஆகியும் இப்படியொரு விடை எதிர்பாராதது..

    பதிலளிநீக்கு
  3. அடப்பாவிகளா.. ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று அறியக் காத்திருக்கிறேன்.

    அப்புறம் ஒரு சந்தேகம். தேர்வுத் தாள்கள் என்று வரும். தேர்வுத் தாட்கள் என்று வருமா?

    தம +1

    பதிலளிநீக்கு
  4. அந்தகனின் அருமையான அனுபவங்கள்.

    அந்தகக் கவிகள் , அஷ்டாவதானிகள் இருந்த நாடல்லவா ?
    மிக உருக்கமான ஆழ்மனதில் பதியும் எழுத்துக்கள்.
    விந்தை ஆண்டவனின் அளித்த திறன். வாழ்க!

    பதிலளிநீக்கு
  5. //ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாகவே இருந்தேன்//

    பிரமிப்பாக இருக்கின்றது அவரது உறுதி வாழ்க நலம்
    முடிவில் விண்ணப்பம் நிராகரித்தது வேதனையாக இருக்கின்றது தொடர்கிறேன் நண்பரே
    த.ம.3

    பதிலளிநீக்கு
  6. சிறப்பாகப் பதிலளித்தவருக்கு
    பரிசாக
    விண்ணப்பத்தை ஏற்க இயலாதாமா?
    வேதனையாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  7. வேலைக்கு செல்லும் போது சில தடைகள் வரும் என்பதை மீண்டும் நிறுபிக்கின்றது முருகனின் விடயத்தில் ! தொடர்கின்றேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  8. சிறப்பாக செல்கிறது. தொடர்கிறேன் நண்பரே!
    த ம 4

    பதிலளிநீக்கு
  9. அடடா அடுத்து என்ன ஆச்சு சகோ..

    பதிலளிநீக்கு
  10. அடடா... இரண்டு இடத்திலும் வேலை கொடுக்கும் மனநிலையில் மனிதர்கள் இல்லையா..?

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு பதிவிலும் சில அதிசயங்கள். அதிக சோதனைகள். மொத்தத்தில் இவரைப் பற்றிய பதிவுகள் எங்களுக்குப் பாடம்.

    பதிலளிநீக்கு
  12. திரு. வெற்றிவேல் முருகன் ஆதிமூலம் அவர்கள் பார்வை இழந்தவர் என்பது பதிவை படித்தப்பின்தான் தெரிந்தது. தகவலுக்கு நன்றி! தொடர்ந்து படிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  13. வழியில் காணும் சில தடைக்கற்கள் எல்லாம் முருகனுக்கு வெற்றிப் படிகளாகவே இருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. தடைக் கற்கள் எத்தனை! எத்தனை! அவற்றையெல்லாம் படிக்கற்களாக மாற்றும் வல்லமை உடையவ்ர் நம் வெற்றிவேல் முருகன்.

    பதிலளிநீக்கு
  15. மன்னிக்கவும். தங்களை பணியில் சேர்க்க இயலாத நிலையில் இருக்கிறோம். எனவே தங்களின் விண்ணப்பத்தை ஏற்க இயலாது.//
    விண்ணப்பம் ஏற்க பட்டதா?
    வெற்றி பெற்று இருப்பார் என்றே நினைக்கிறேன்.
    அறிய ஆவல்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. aduththathu enna?
    தமிழ் மணம் 6
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  17. முடிவை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அப்புறம் என்னாயிற்று என்று அறிய ஆர்வம் தொடர்கின்றோம்..நண்பரே

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு