22 ஜனவரி 2017

புதுகையின் மின்னூலாக்க முயற்சிகள்     களிமண், சுட்ட பானை, ஓடு, கல்வெட்டு, பனை ஓலை, துணிச்சீலை, காகிதம் என மாறி மாறி, புதிய பரிணாமம் பெற்று பயணித்த எழுத்துக்கள், இன்று வானூர்தி ஏறாமலேயே பறக்கக் கற்றுக் கொண்டுவிட்டன.

     கப்பலில் ஏறாமலேயே, பலப் பெருங் கடல்களை, ஒரே நொடியில் சுலபமாய்த் தாவ எளிதாய் கற்றுக் கொண்டுவிட்டன

   

ஒவ்வொரு எழுத்தாய்ப் பார்த்துப் பார்த்து, பொறுக்கி எடுத்து, கண்கள் நோக நோக, வரிசையாய் அடுக்கிக் கோர்த்து, கால்கள் நோக நோக அழுத்தி மிதித்து மிதித்து, ஒவ்வொரு பக்கமாய் அச்சிட்டு, பல நாள் உழைத்து, சில நூறு படிகளில், ஒரே ஒரு நூலுக்கு உரு கொடுக்கும், பிரசவ வேதனை மலையேறிப் போய்விட்டது.

      கணினி முன் அமர்ந்து, விரல் நோகாமல், விசை தேயாமல் ஒரே நாளில், கருத்தரித்து, அதே நாளில் பிரசவிக்கும், அதிசயம் அரங்கேறத் தொடங்கி, ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

       விரல் நகத்தினும் சிறிதாய் தோன்றும், நினைவு அட்டைக்குள், பல்லாயிரக் கணக்கில் பெரு நூல்கள், பெட்டிப் பாம்பாய், அடங்கி ஒடுங்கி, ஒளிந்திருக்கும் பேரதிசயம், இன்று சிறு குழந்தையும் அறிந்த ஒன்றாய் மாறித்தான் போய்விட்டது.

      மணிக் கணக்கில் கடை கடையாய் ஏறி ஏறி, பார்த்துப் பார்த்து, விலை கேட்டுக் கேட்டு, எடை போட்டுப் போட்டுப் பொருள்களை வாங்கிய காலமெல்லாம் மறந்தே போய்விட்டது.

     கணினி முன் அமர்ந்து, இணையத்துள் நுழைந்து, விசையைத் தட்டத் தட்ட, கேட்டப் பொருள்கள் எல்லாம், வரிசை வரிசையாய் அஞ்சலில் விரைந்து வந்து, வீட்டுக் கதவைத் தட்டும் காலம் வந்துவிட்டது.

      திரைப்படமும், பாட்டும், நாட்டு நடப்பும் கையடக்க அலைபேசியில் வரிசை கட்டி வரும்போது, புத்தகத்தை எடுத்து, பக்கம் பக்கமாய் புரட்டிப் புரட்டிப் படிக்க, இன்றைய இளைஞர்களுக்குத்தான் நேரமேது.

மின்னூல்
காலத்தின் கட்டாயம்
இந்நூற்றாண்டின் புதிய அவதாரம்.

----
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்களின்
உள்ளத்தில் முகிழ்த்தெழுந்து,

கவிஞர் முத்து நிலவனார் அவர்களின்
அயரா உழைப்பால்,
நேசமிகு வார்த்தைகளால், பாசமிகு அரவணைப்பால்
உரு பெற்றிருக்கும்
புதுகை கணினித் தமிழ்ச் சங்கத்தின்
இலட்சியக் கனவு
இன்று நிறைவேறியிருக்கிறது.

மின்னூல் முகாம்.பெங்களூர் புஸ்தகா மின்னூல் நிறுவனத்தோடு கரம் கோர்த்து, மின்னூலாக்க முயற்சிகளில், களம் இறங்கியிருக்கிறது கணினித் தமிழ்ச் சங்கம்.

     கடந்த 18.1.2017 புதன் கிழமை மாலை, புதுகையின் மாரீஸ் விடுதியில், மின்னூல் முகாம் எழிலோடு அரங்கேறியது.

     குளிரூட்டப் பட்ட சிறு அரங்கு.

    கவிஞர் தங்கம் மூர்த்தி, தயானந்த சந்திரசேகரன், மரு.ஜெயராமன், செம்பை மணவாளன், ஆர்.நீலா, பாவலர் பொன்.கருப்பையா, வி.பே.கஸ்தூரிநாதன், எஸ்.இளங்கோ, சுவாதி, சு,மதியழகன், மூ.கீதா, சச்சின் சிவா, முருகபாரதி, சோலச்சி, மீரா.செல்வக்குமார், முருகதாஸ், பேரா மு.பழனியப்பன், அ.செல்வராசு, நெடுஞ்செழியன், செகந்நாதன், மதுரை செந்தில் குமார், அய்யாறு புகழேந்தி என எழுத்துச் சிற்பிகளாலும், கவி அருவிகளாலும் ததும்பி வழிந்தது.

     

அரங்கினுள் நுழைந்ததுமே, பேராசிரியர் மு.பழனியப்பன் அவர்கள், முகம் மலர, கரம் பற்றி, மீசைக்குள் முகத்தினை ஒளித்து வைத்திருக்கும், பாசக்கார நண்பர், தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள், தங்களுக்குத் தரச் சொன்னார் என்று கூறி, தேவகோட்டை தேவதை தேவகி நூலினை வழங்கி மகிழ்ந்தார்.

      மின்னூல் முகாமில் நுழைந்ததுமே ஒரு பொன்னூல்.

     மகிழ்வோடு, கவிஞர் அய்யாறு புகழேந்தி அவர்களுக்கு அருகில் அமர்ந்தேன்.

      கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள் வரவேற்புரை ஆற்றி, பெங்களூர் புஸ்தகா நிறுவனத்தாரை அறிமுகம் செய்து வைத்தார்.

    புஸ்த்தகா மின்னூல் நிறுவனத்தின் நிறுவுனர்கள்

புஸ்தகா நிறுவனத்தின் நிறுவனர் திரு ஆர்.பத்மநாபன் அவர்களும், முனைவர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களும், மின்னூலாக்கச் செயற்பாடுகளை பாங்குற எடுத்துரைத்தனர்.

    
நூறு நூல்களை மின்னூலாய் மாற்றி, இணையத்தில் ஏற்றி, உலகை வலம் வரச் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெற்றன.இந்நூல்கள் எல்லாம் வெகுவிரையில் புஸ்தகா, அமேசான், ஸ்கிரிப்டி மற்றும் கோபோ நிறுவனங்களின் இணையப் பக்கங்களில் எழிலுடன் தங்களின், முகம் காட்ட இருக்கின்றன.

     உலகெங்கும் வாழும், தமிழர்களின், இல்லங்களில் நுழைந்து, கணினியில் இறங்கி, அவர்தம் உள்ளங்களில் குடியேற இருக்கின்றன.

இணைய உறவுகளே, நண்பர்களே, சகோதரிகளே, தங்களது எழுத்துக்களை, கவிதைகளை, சிறு கதைகளை, குறுந் தொடர்களை, பயண அணுபவங்களை மின்னூலாக்க
புதுகை கணினித் தமிழ்ச் சங்கம்
அன்போடு காத்திருக்கிறது.

வருக வருக,
தங்களது படைப்புக்களைத்
தருக தருக

என மகிழ்வோடு அழைக்கின்றது.