27 ஜனவரி 2017

தேவகோட்டை தேவதை



நடிகர்களுக்கு ரசிகனாய் இருப்பதில் பலன் உண்டா?
நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதைவிட,
அரசியல்வாதிக்குத் தொண்டனாய் இருப்பதைவிட
ஒரு எழுத்தாளருக்கு வாசகனாய் இரு

நீங்கள் தண்டிக்க நினைக்கும் மனிதர்கள் ?
அனாதைக் குழந்தைகள் உருவாகக் காரணமானவர்களை
குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்களை
குழந்தைகளை பாலியல் வன்முறை செய்பவர்களை
அப்பாவிப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவர்களை
மனநலம் குன்றியோரைத் துன்புறுத்தும் பைத்தியக்கார மனிதர்களை

தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களைப் பற்றி?
பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்களைவிட
தேர்தலைப் புறக்கணிப்பவன் உயர்ந்தவனே

     நண்பர்களே, கேள்விகளும், பொட்டில் அறைந்தாற்போல், தெறித்து வெளிவரும் பதில்களும் நம்மைச் சிந்திக்கச் செய்கின்றன அல்லவா.

மாட்டு வண்டி பூட்டி வந்தார்  மாமன் மகன் ஐலசா
மாட்டு வண்டி பூட்டி வந்தார்  மாமன் மகன் ஐலசா
மணப்பாறை சந்தைக்கு நானும் போறேன் ஐலசா
மணப்பாறை சந்தைக்கு நானும் போறேன் ஐலசா

பஞ்சு மூட்டை எல்லாத்தையும் கூவி விற்போம் ஐலசா
பஞ்சு மூட்டை எல்லாத்தையும் கூவி விற்போம் ஐலசா
பொழுது சாயும் நேரத்துக்குள் முடிச்சிடுவோம் ஐலசா
பொழுது சாயும் நேரத்துக்குள் முடிச்சிடுவோம் ஐலசா

ஏலோ …. ஏலே….. ஏலே …… ஏலோ ….. ஏலே …. ஏலோ ….. ஐலசா
ஏலோ …. ஏலே….. ஏலே …… ஏலோ ….. ஏலே …. ஏலோ ….. ஐலசா
ஏலோ …. ஏலே….. ஏலே …… ஏலோ ….. ஏலே …. ஏலோ ….. ஐலசா
ஏலோ …. ஏலே….. ஏலே …… ஏலோ ….. ஏலே …. ஏலோ ….. ஐலசா

    நாம் சிறுவயதில், வயல் வெளிகளில், மக்கள் கூட்டம் கூட்டமாய் வேலை பார்க்கும் இடங்களில், கேட்டுக் கேட்டு மகிழ்ந்த இதுபோன்ற காட்சிகளை, பாடல்களை, நமது நாளைய சந்ததிகளால், காணத்தான் இயலுமா? கேட்டு ரசிக்கத்தான் முடியுமா?

     நாட்டுப்புறப் பாடல்களை இவரது எழுத்துக்கள் வெளிச்சமிட்டுக் காட்டும் அழகே அழகு.

இன்ஸ்பெக்டர்   யோய் ஏட்டு, யாருங்யா இவங்க? என்ன பிரச்சினை?
ஏட்டு            சார், அழகாபுரி நடுததெருவுல ரெண்டு பேர் கலாட்டா  
                 செய்யுறதா தகவல் வந்துச்சி. போய் பார்த்தா இவங்க சண்டை
                 போட்டுக்கிட்டு இருந்தாங்க. அள்ளிக்கிட்டு வந்துட்டோம்.
இன்ஸ்          இங்கே வாடா, உன் பெயரென்ன?
முதலாமவர்     துரை பாண்டி சார்
இன்ஸ்            உன் அப்பா பெயரென்ன?
முதலாமவர்      பாண்டி துரை சார்
இன்ஸ்           நீ வாடா, உன் பெயரென்ன?
இரண்டாமவர்   துரைசாமி சார்
இன்ஸ்          உன் அப்பா பெயர் என்ன?
இரண்டாமவர்   சாமி துரை சார்

      படிக்கப் படிக்க நம்மையும் அறியாமல் சிரிப்பு பீறிட்டுக் கிளம்புகிறது அல்லவா.

      சிரிப்பு

     உலகத்து உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் ஒரு அற்புத உணர்வின் வெளிப்பாடு.

     மனிதனின் வேதனைகளை, மன அழுத்தங்களை, ஒரே நொடியில் மாற்றும் போக்கும் வல்லமை வாய்ந்தது சிரிப்பு.

      வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பர் நம் முன்னோர்.

      நம்மை வாய்விட்டு, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நடிகர், நடிகையர் பலரை திரையில் நாம் சந்தித்திருக்கிறோம்.

      ஆனால் எழுத்தில் நகைச் சுவையாய் எழுதி நம்மைச் சிரிக்க வைப்பவர்கள், சிந்திக்க வைப்பவர்கள் மிகவும் குறைவு.

      அதிலும், இணையத்தில் எழுதுபவர்களுள் நகைச்சுவையாய் எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு.

      பகவான்ஜி, தளிர் சுரேஷ் போன்ற ஒரு சிலரே, இணையத்தில் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

       இவர்களின் வரிசையில் பாசக்கார, மீசைக்கார நண்பரும் இணைந்து, தன் எழுத்துக்களால், நம்மைச் சிரிக்க வைக்கிறார். மேலும் மேலும் சிந்திக்கவும் வைக்கிறார்.

       நான் பலமுறை எண்ணிப் பார்ப்பதுண்டு.

      ஒருவரது தோற்றத்திற்கும், அவரது எழுத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று பலமுறை யோசித்தது உண்டு.

      உருவமும் எழுத்தும் முரண்பட்டே நிற்கின்றன.

      உருவமும் எழுத்தும் மட்டுமல்ல, இவரது பெயரும் எழுத்தும்கூட ஒரு அழகிய முரண்தான்.

கி ல் ல ர் ஜி

       கேட்கும்போதே நம்மை பயமுறுத்தும் பெயர்.

       பெயர் மட்டுமா, உருவமும்தான்.

       மிகப்பெரும் மீசைக்குள் ஒளிந்திருக்கும் முகம்.

       நின்று நிதானித்து, இரத்தினச் சுருக்கமாய் வெளிவரும் வார்த்தைகள்.

       ஆனால் நகைச் சுவையோ, அலைகடலென ஆர்ப்பரித்து எழுகிறது இவரது எழுத்தில்.


தேவகோட்டை தேவதை தேவகி

      நண்பர் கில்லர்ஜி அவர்களின் முதல் புத்தகக் குழந்தை.

      ஆரோக்கியமாய் பிறந்திருக்கிறது.

      கையில் தூக்கி, பக்கம் பக்கமாய்ப் புரட்டி, கண்களால் அரவணைத்துப் பாருஙகள்.

      உள்ளம் மகிழும், உதடு சிரிக்கும், மன அழுத்தம் விலகும்.

---

நேசமிகு நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு
பாசத்தோடு ஒரே ஒரு வேண்டுகோள்

தங்கள் நூலில், தங்கள் உரையில்
நான் சிரிக்கத் தெரியாதவன் அல்ல
சிரிப்பை இழந்தவன்
என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

படித்தவுடன் நெஞ்சத்தில் ஒரு பாரம்
சுயமாய் வந்து அமர்கிறது நண்பரே.

தங்களின் சோகம் பெரிதினும் பெரிது என்பதை நாங்கள் அறிவோம். ஆனாலும் இவ்வுலகில் யாருக்குத்தான் வேதனை இல்லை, வருத்தம் இல்லை, சோதனை இல்லை.

எங்களை எல்லாம் சிரிக்க வைக்கும்
தாங்கள்
இனிமேலாவது சிரிக்க வேண்டும்
அதனை
நாங்கள்
பார்க்க வேண்டும்
வாருங்கள்
வேதனை மறந்து சேர்ந்து சிரிப்போம்.