இலை, தழைகளை மட்டுமே உடையாய் உடுத்தி, கிடைத்த
காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் உணவாய் உட்கொண்டு, நாடோடிகளாய் காலம்
கழித்த, நம் முன்னோர், மெல்ல மெல்ல ஆற்றங்கரைகளில் குடியேறத் தொடங்கியபோது, முதன் முதலாய்
உழவுத் தொழிலில் இறங்கினர்.
தானியங்களும், நெற்கதிர்களும் வளர்ந்து முற்றிய
நிலையில், அறுவடை செய்து பார்த்தபோது, தங்களது தேவைக்கும் அதிகமாய், மிக மிக அதிகமாய்,
உணவுப் பொருட்கள் ஏராளமாய், மலை, மலையாய் குவிந்து கிடந்த காட்சியைக் கண்டு மலைத்துத்தான்
போனார்கள்.
வயிற்றுப் பசி சுண்டி இழுத்த பொழுதெல்லாம், உணவுக்காக
அலையாய் அலைந்த மக்களுக்கு, மலை மலையாய் குவிந்து கிடக்கும் தானியங்களைக் காப்பாற்ற
வேண்டுமே என்ற கவலை வந்தது.
எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாய் படையெடுத்து வந்து,
நெல் மணிகளையெல்லாம், பதராக்கும் எலிகளிடமிருந்தும், சிறு சிறு விலங்குகளிடமிருந்தும்,
பறவைகளிடமிருந்தும், தானியங்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற கவலை வந்தது.
குதிர்
தானியங்களைச் சேமிக்க, பாதுகாக்க, நம் முன்னோர்
கண்டுபிடித்த, கட்டுமானம்தான் குதிர்.
அறுவடைக் காலங்களில், தானியங்களை குதிர்களுள்
கொட்டுவதற்கு ஏதுவாக, மேல் பக்கம் ஒரு பெரும் துவாரத்தை அமைத்தனர்.
தேவைப்படும் காலங்களில், தானியத்தை வெளியே எடுக்க,
குதிரின் கீழ்ப் பகுதியில் ஒரு கதவினை அமைத்தனர்.
இக்கதவினைத் திறந்தால்போதும், குதிரின் உள்ளே
சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தானியங்கள், போட்டிப் போட்டுக் கொண்டு, வெளியே வரும்.
தானியங்களின் அளவினைக் கணக்கிடுவதற்கு வசதியாய்,
குதிரின் பாதி உயரத்தில், ஒரு கதவினை அமைத்தனர்.
அறுவடை முடிந்த உடனே, உடனடியாய் தானியங்களையோ,
நெற்கதிர்களையோ, இதில் சேமிக்க மாட்டார்கள்.
அறுடைக் காலங்களில் தானியங்கள் ஈரத் தன்மையுடனேயே
காணப்படும்.
ஈரத் தன்மையுடைய தானியங்களை அப்படியே, சேமித்தால்,
அவை முளைக்கத் தொடங்கி விடும்.
எனவே, தானியங்களை உலர்த்தி, ஈரப்பதத்தை நீக்கிய
பிறகே குதிரில் கொட்டுவார்கள்.
இப்படிப் பட்ட ஒரு குதிரினை, ஒரு பெரும் குதிரினை,
இன்னும் சொல்லப் போனால், ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரினை, நெற்களஞ்சியத்தைப் பார்ப்பதற்கான
வாய்ப்பு கிடைத்தது.
தஞ்சை மாவட்டத்திலேயே இந்த நெற்களஞ்சியம் இருக்கிறது.
பலநூறு முறை இவ்விடத்தைக் கடந்து சென்றிருக்கிறேன்.
ஆயினும் பார்ப்பதற்கான வாய்ப்பு இப்பொழுதுதான்
கிடைத்தது.
கடந்த மாதத்தில் ஒரு நாள், நானும், உமாமகேசுவர
மேனிலைப் பள்ளி ஓவிய ஆசிரியரும், நண்பருமான திரு
எஸ்.கோவிந்தராசன் அவர்களும், இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.
தஞ்சாவூர்,
கும்பகோணம் சாலையில், பாபநாசத்தைத்
தாண்டிய சில நிமிடங்களில், திருப்பாலத்துறை
என்னும் சிற்றூர் நம்மை வரவேற்கும்.
இச்சிற்றூரின் ஒரு சாலைத் திருப்பத்தில், இடது
புறம் ஓங்கி உயர்ந்த ஒரு கோயில்.
இக்கோயிலின் நுழை வாயிலைக் கடந்தவுடன், வலது
புறம் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது, குதிர் என்றழைக்கப்படும் இந்த நெற்களஞ்சியம்.
நெற்களஞ்சியத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு முள்
வேலி.
பாதுகாக்கப் பட்ட நினைவுச் சின்னம் என்று பறைசாற்றும்
விளம்பரப் பலகை.
தாளிட்டு பூட்டப் பட்ட இரும்புக் கதவு எங்களை வரவேற்றது.
சற்றுத் தொலைவில் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.
கோவிலின் காவலர்.
அவரை அனுகினோம்.
ஐயா, இந்த நெற்களஞ்சியத்தை அருகிலும், அதன் உள்
சென்றும் பார்க்க விரும்புகிறோம் என்றேன்.
சற்று நேரம் தீவிரமாய் யோசித்தவர், இரண்டு சாவிகளைக்
கொடுத்தார்.
ஒன்று இரும்புக் கதவின் திறவுகோல்
மற்றொன்று நெற்களஞ்சியக் கதவின் திறவுகோல்.
அழுக்கடைந்து துருபிடித்தத் திறவுகோல்.
பூட்டினைத் திறக்கப் பயன்படுத்தி நீண்ட காலம்
ஆகியிருக்க வேண்டும்.
திறக்க முடியவில்லை.
அருகில் இருந்த ஒரு அகல் விளக்கினை எடுத்து, அதில்
இருந்த எண்ணையினை, பூட்டினுள் சில சொட்டுக்கள் விட்டோம்.
பிறகு திறந்தோம்
பூட்டு திறந்தது
உள்ளே நுழைந்தோம்
வட்ட வடிவில் செங்கற்களை அழகுற அடுக்கி, கொஞ்சம்
கூட பிசிறின்றிக் கட்டப் பெற்ற நெற்களஞ்சியம்.
அக்கால மனிதர்களின், நம் முன்னோரின் கரம் பற்றிய
ஓர் உணர்வு, உடலெங்கும் பரவியது.
தரையில் இருந்து, ஐந்தரை அடி உயரத்தில், நடுப்பகுதியில்,
உச்சியில் என மூன்று கதவுகள்.
கீழ்ப் பகுதிக் கதவிற்குச் செல்ல வசதியாய் ஒரு
இரும்பு ஏணி.
ஏறினோம்.
இக்கதவிலும்
ஒரு பூட்டு
எண்ணை விட்டுத் திறந்தோம்.
நெற்களஞ்சியத்திற்குள் நுழைந்தோம்.
நெற்களஞ்சியத்தின் உட்புறம் இறங்கவும் ஒரு ஏணி
இருந்தது.
இறங்கினோம்
இதோ வட்ட வடிவிலான நெற்களஞ்சியத்திற்குள் இருவரும்
நிற்கின்றோம்.
தற்பொழுது வெறும் காற்றடைத்த களஞ்சியமாய் காட்சித்
தருகிறது.
சுவற்றில் வரிசை வரிசையாய், அளவெடுத்துக் கோடிட்டதைப்
போன்று, செங்கல் கற்களின் வரிசைகள் மனதைக் கவருகின்றன.
86 அடி அகலமும், 36 அடி உயரமும் கொண்ட நெற்களஞ்சியம்.
நிமிர்ந்து பார்க்கின்றோம்.
ஏதோ
ஒரு பெரும் வட கயிற்றினை வட்ட வடிவில் மிக மிக நேர்த்தியாய், ஒழுங்குடன், மெல்ல மெல்ல
குறுக்கிக் கொண்டே செல்லும் வகையில், சுற்றிக் கொண்டே சென்றது போன்ற தோற்றம்.
இன்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முன், கி.பி.
1600 – 1634 இல், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரால் கட்டப்பெற்ற நெற்களஞ்சியம், இன்றும்
,ஒரு சிறு பழுதும் இன்றி கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
இதன் கொள்ளளவு 3,000 கலம்.
நான் கணித ஆசிரியன்தான்.
ஆனாலும், இந்த கலம் என்றால் எத்தனை கிலோ என்ற
விவரம் தெரியவில்லை.
வட்ட வடிவிலான நெற் களஞ்சியத்திற்குள் நின்று
கொண்டே, நண்பரும், பெரு விவசாயியும், எம் பள்ளி முதுகலை ஆசிரியருமான திரு டி.பாபு அவர்களை, அலைபேசியில் அழைத்தேன்.
விவரம் கேட்டேன்.
முகத்தல்
அளவையில்,
படி என்று
ஒரு அளவிருக்கிறதல்லவா? அதில்
இரண்டு
படி என்பது ஒரு மரைக்கால்
பனிரெண்டு
மரைக்கால் என்பது ஒரு கலம்
இரண்டு
கலம் என்பது ஒரு மூட்டை
ஒரு மூட்டை
என்பது 60 கி.கி என்றார்.
அப்படியென்றால் 3,000 கலம் கொள்ளளவு என்பது,
1500 மூட்டைகள் ஆகும்.
ஒரு மூட்டை 60 கிகி என்றால், 1500 மூட்டைகள்
என்பது தொன்னூறு ஆயிரம் கிலோ கிராம்.
அதாகப்பட்டது 90 டன்.
இதனை அரிசியாக்கினால், சற்றேறக்குறைய
45 டன் கிடைக்கும்.
ஒரு கிலோ அரிசியினைச் சமைத்தால்,
பத்துபேர் ஒரு வேளை உணவு உண்ணலாம் என வைத்துக் கொள்வோம்.
அப்படியானால், நான்கரை இலட்சம் பேர் இவ்வுணவினை
ஒரு வேளை உண்ணலாம்.
ஆயிரத்து ஐநூறு பேர் அடங்கிய சிறு
கிராமம் எனில், மூன்று வேளையும் சாப்பிட்டாலும், இந்த களஞ்சியத்திலுள்ள நெல்லைக் கொண்டு,
150 நாட்களுக்கு வயிரார உணவு உண்ணலாம்.
நினைக்கவே மலைப்பாக இருக்கிறது
அல்லவா.
வியந்து போய் சிறிது நேரம் நெற்களஞ்சியத்திற்கு
உள்ளேயே நிற்கிறோம்.
சார், நேரமாயிடுச்சி வெளியே வாங்க.
காவலர் அழைக்கவே வெளியே வந்தோம்.
காவலருக்கு நன்றி தெரிவித்து விட்டு, தஞ்சை நோக்கிப்
புறப்பட்டோம்.
சாலையின் இருபுறமும், ஆங்காங்கே, வயல் வெளிகளில்
எல்லாம், நெற் கதிர்களுக்குப் பதிலாய், புத்தம் புது வீடுகள் முளைத்து மெலெழும்பும்
காட்சி நெஞ்சை கலக்கமுறச் செய்தது.