பைபிளுக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையிலான
உலக மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பெற்ற பெருமைமிகு நூலும் திருக்குறளே.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக.
கற்க வேண்டிய நூல்களை, கசடின்றி, முழுமையாய்
கற்று, அதன் வழி நட என நமக்கு நல் வழிகாட்டும் திருக்குறளை, பள்ளி மாணவ, மாணவியர் உள்ளத்தில்
பசுமரத்ததாணி போல் பதிய வைக்க வேண்டுமல்லவா?
நாளைய
உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள், மாணவர்கள்தானே.
ஒரு காலத்தில் பத்தாம் வகுப்புப் பாடத் திட்டத்தில்
நூறு குறள்கள் இருந்தன, அதுவும் தனியொரு நூலாய் இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?
நம்பித்தான் ஆக வேண்டும்.
பத்தாம் வகுப்பில் நூறு குறள்கள், ஒன்பதாம் வகுப்பில்
90 குறள்கள், எட்டாம் வகுப்பில் 80 குறள்கள், ஏழாம் வகுப்பில் 70 குறள்கள், ஆறாம் வகுப்பில்
60 குறள்கள்.
ஒவ்வொரு வகுப்பிலும் தனிப்பாடமாய், தனிப் புத்தகமாய்
திருக்குறள்.
நம்புவீர்களா?
ஆனால் இன்று பத்தாம் வகுப்பில்
40 குறள்கள், ஒன்பதாம் வகுப்பில் பருவத்திற்கு பத்து குறள்கள், ஆறு, ஏழு, மற்றும் எட்டாம்
வகுப்புகளில், வகுப்பிற்கு இருபதே இருபது குறள்கள்.
அதன் வழி நடப்பதற்கு.
திருக்குறளுக்குக்
கோயில் எழுப்பி, அறம்., பொருள், இன்பம் என்னும் முப்பாலுக்கும், மூன்று சிறு குன்றுகளை,
தெய்வமாக, கருவறையில் அமரவைத்து, மூன்று குன்றுகளுக்கு முன், இரண்டு காலடித் தடங்களை
அமைத்து, குறள் என்பது படிப்பதற்கு மட்டுமல்ல, படித்தபின் அதன் வழி நடப்பதற்கு என அறிவுறுத்துவார்
திருவள்ளுவர் தவச்சாலையின் நிறுவுனர் தமிழ்க்
கடல் புலவர் இரா. இளங்குமரனார் ஐயா அவர்கள்.
வாழ வழிகாட்டும் திருக்குறளை, வாழ்வியல் பாதையில்,
நம் கரம் பற்றி, அழைத்துச் செல்லும திருக்குறளை மேலும், மேலும படிக்க, படித்தபின் அதன்
வழி தவழ, எழுந்து நடக்க, நம் மாணவர்களுக்கு நல் வாய்ப்பினை வழங்கிட வேண்டுமல்லவா.
ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது.
அது அந்தக் காலம்.
திருக்குறளை தனியொரு நூலாய் புகுத்தியவர்
ஒரு முதல்வர்.
நம் முதல்வர்.
இவரது ஆட்சிக்கு முன்பும் சரி, இவரது ஆட்சிக்குப்
பின்பும் சரி, இதுநாள் வரை, திருக்குறள் தனிப்பாடமாக இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
இவர்தான் முதன் முதலில், திருச்சியில்,
மாவட்ட அளவில், தமிழை ஆட்சி மொழியாகப் புகுத்தியவர்.
மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடமை ஆக்கியவர்.
முதன் முதலாய், கம்பனுக்கும், பாரதிக்கும்
அரசு விழா எடுத்தவர்.
தமிழ்க் கவிதையினையும், தமிழ்க் கவிஞர்களையும்,
பெருமை படுத்திட, ஆஸ்தான கவிஞர் என்ற பதவியை முதன் முதலில் ஏற்படுத்தியவர்.
இனி எல்லாத் தமிழ் நாட்டுக் கோயில்களிலும்,
இறைவன் இறைவியின் திருப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும்
என்று முதன் முதலாய் ஆணையிட்டவர்.
மறக்கடிக்கப் பட்டிருந்த அந்த தெய்வங்களின்,
தமிழ்ப் பெயர்களை, தகுதி மிக்க தமிழறிஞர்களைக் கொண்டு மீட்டெடுத்து, கோயில்களின், முன்
வாசலில் பெரும் எழுத்துக்களில் எழுத வைத்தவர்.
திருவிழா விளம்பரங்கள், துண்டறிக்கைகள் போன்ற
கோவில் தொடர்பான அனைத்துப் பயன்பாட்டிலும தமிழே இடம் பெற வேண்டும் என அரசாணைப் பிறப்பித்தவர்.
ஆனால் இன்று, தமிழ்ப் பெயர்களை எல்லாம், வட
மொழிக்கு மாற்றிக் கொண்டே இருக்கிறோம். வேதனை.
இந்திய மொழிகளுள் முதன் முதலாய், தமிழில்
பத்துத் தொகுதிகளாக, கலைக் களஞ்சியம் வெளி வந்ததும் இவரால்தான், இவரது ஆட்சியில்தான்.
இவர்தான்
நம் பெருமைமிகு தமிழ் நாட்டின்
முன்னாள் முதலமைச்சர்
ஓமந்தூரார்
ஓ.பி.ராமசாமி
ரெட்டியார்
ஓமந்தூரார்,
பெரிய வளைவு, ராமசாமி ரெட்டியார்.
ஓமந்தூராரின் நினைவினைப் போற்றுவோம்.