01 ஏப்ரல் 2017

வேண்டாம் விருது



      ஆண்டு 1954.

      இயற்பியல் துறைப் பேராசிரியர் அவர்.

      பேராசிரியர் என்றால், சாதாரணப் பேராசிரியரல்ல.

      நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.

      1930 லேயே நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.

      தனது இருக்கையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்தக் கடிதங்களை எல்லாம், ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.

      நடுவண் அரசிடமிருந்து ஒரு கடிதம்.

      அரசிடமிருந்து தனக்குக் கடிதமா?

      யோசித்தவாரே, கடிதத்தை மெல்லப் பிரிக்கிறார்.


    ஒரே ஒரு பக்கக் கடிதம்.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதிற்குத் தாங்கள் தேர்வு செய்யப் பெற்றுள்ளீர்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

       பேராசிரியரின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை படர்கிறது.

       தொடர்ந்து கடிதத்தினைப் படித்தபோது, புன்னகை மறைந்தது.

        மனதில் ஒரு ஆழ்ந்த சிந்தனை குடியேறியிருப்பதைக் கண்கள் காட்டுகின்றன.

       கடிதத்தினை மேசையின் மீது வைத்தவர், கண்களை மூடி, சிறிது நேரம், அமைதியாய் அமர்ந்திருந்தவர், பின்னர் ஒரு முடிவிற்கு வந்தவராகக், கண்களைத் திறந்து, ஒரு வெள்ளைத் தாளினை எடுத்து, அரசிற்கு, பதில் கடிதம் எழுதத் தொடங்குகிறார்.

பாரத ரத்னா விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆயினும் இவ்விருதினைப் பெற இயலாத நிலையில் இருக்கிறேன். மன்னிக்கவும்.

       கடிதம் கண்டு அரசு அதிர்ந்து போனது.

        ஆனாலும், அதற்கானக் காரணத்தை அறிந்தபோது, பாரத அரசே வியந்துதான் போனது.

        இப்படியும் ஒரு மனிதரா?

        இப்படியும் ஒரு பேராசிரியரா?

         தாங்கள் பாரத ரத்னா விருதினை எனக்கு வழங்க, தேர்ந்தெடுத்திருக்கும் தேதியில், எனக்கு ஒரு மிக முக்கிய அலுவல் இருக்கிறது.

        அன்றுதான் எனது மாணவருக்கு, எனது ஆய்வு மாணவருக்கு, முனைவர் பட்டப் படிப்பிற்கான ( டாக்டரேட் ) வாய் மொழித் தேர்வு நடைபெற இருக்கிறது.

        அவர், அன்று கற்றறிந்தோர் குழுமியிருக்கும் சபையில், தேர்வாளர்கள் முன்னிலையில், தனது ஆய்வு பற்றியும், ஆய்விற்காகத் தான் மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சி பற்றியும், அதன் முடிவு பற்றியும் எடுத்தியம்பியாக வேண்டும்.

        இம்மாணவர், இந்த ஆய்விற்காக, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். பல்லாண்டு கால உழைப்பின் விளைவினை, ஒரு சில மணித் துளிகளில், கேட்போர் குழப்பமின்றி, உணரும் வண்ணம், தெளிவாய் எடுத்துக் கூறியாக வேண்டும்.

        தேர்வர்களின் சந்தேகங்களுக்கு, தடுமாற்றமின்றி, படபடப்பின்றி, பதில் அளித்தாக வேண்டும்.

        இம்முக்கிய நிமிடங்களில், நான் என் ஆய்வு மாணவரின் அருகில், எதிரில் இருந்தாக வேண்டும். எனது அருகாமை, என் மாணவருக்கு, உற்சாகத்தையும், உள்ளத்தில் உறுதியையும் வழங்கும்.

        என் மாணவரை, இந்நிலையில் நான் கைவிட விரும்பவில்லை.

        விருதினை விட, என் மாணவரே, எனக்கு முக்கியம்.

        என்னை மன்னிக்கவும்.

        இந்திய அரசு, இவ்வாண்டில்தான், பாரத ரத்னா என்னும் பெயரில், விருதினை வழங்கவே முடிவு செய்திருந்தது.

         முதல் விருது வழங்கும் விழா.

         அமைச்சர்கள் ஒன்று கூடி விவாதித்தார்கள்.

         விருது வழங்கும் விழா, வேறொரு தேதிக்கு மாற்றப் பட்டது.

         பேராசிரியர் மகிழ்வோடு விருதினைப் பெற்றார்.

         நண்பர்களே, இப்பேராசிரியர் யார் தெரியுமா?


இந்திய அறிவியல் மேதை
சர் சி.வி.இராமன்


     



34 கருத்துகள்:

  1. வியப்புக்குறிய செய்தி விந்தை மனிதர்தான்.

    பதிலளிநீக்கு
  2. விருதைத் தேடி அலையும் விந்தை மனிதர்களைத்தான் இன்று பார்க்கிறோம்!

    பதிலளிநீக்கு
  3. மிக அற்புதம்.நாணும் ஒரு ஆசிரியன் என்பதை என்னி பெருமையடைகிறேன்.கட்டுரையை அற்புதமாக பதிவு செய்த தாங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு புதிய தகவல். பதிவாகத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள ஜெயக்குமார்...

    வணக்கம். காலத்தின் தேவையான பதிவு இது. இன்றைக்கு குறிப்பிட்ட விழுக்காடு வழிகாட்டிக்கும் தெரியாது தலைப்புக் குறித்து. அவரின் கீழ் முனைவர் பட்டம் செய்யும் ஆய்வாளருக்கும் தலைப்பு குறித்தும் ஆய்வேடு குறித்து தெரியாது. இதுபோன்ற வழிகாட்டிகள் அவசியம் இதைப் படிக்கவேண்டும். எம்ஃபில் முனைவர் பட்ட ஆய்வுச்சூழல் இப்படியாகிவிட்டது. வருத்தமே. என்றாலும் இந்தப் பதிவு தரமான ஆய்வு வழிகாட்டிக்கும் மாணவருக்கும் ஆறுதலானது வழிகாட்டலானது.

    பதிலளிநீக்கு
  6. விருது பெருமை பெற்றது மேதையால் :)

    பதிலளிநீக்கு
  7. எனக்குத் தெரிந்திராத தகவல். நன்றி. கல்வித்துறையில் எவ்வளவு கொள்கைப் பிடிப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்கவே வியப்பாக இருக்கிறது. ஒரு அம்மா போய் இன்னொரு அம்மா வந்தபோது ஏழு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் கைகட்டி வாய்பொத்தி வரவேற்பு சொன்னதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது....

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  8. நான் அறிந்திராத செய்தியைப்படித்த போது மனம் நெகிழ்ச்சியுற்ற‌து. எத்தனை பெரிய, தியாக மனதுடையவர்கள், நியாயங்களைப்பேணியவர்கள், லட்சியவாதிகள் நம் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்!

    அற்புதமான தகவலொன்றை அளித்ததற்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
  9. படிக்கையிலேயே சர்.சி.வி.ராமன் அவர்களைச் சொல்கிறீர்கள் எனப் புரிந்தாலும் அவருக்கு பாரத ரத்னா கொடுக்கவிருந்ததும் அவர் மறுத்ததும் அறியாத செய்தி! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. yes ; I too heard about and read about it many times, even though your post make me to remembering about it again, some happenings sweet as for ever. with honest : kavignar Thanigai.

    பதிலளிநீக்கு
  11. அறிந்திராத செய்தி. பகிர்வுக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  12. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு ,என்னால் அறியப்படாத செய்தியை இன்று அறிந்து கொண்டேன். இன்றைய காலச் சூழலுடன் இச்செய்தியை ஒப்பிட நினைத்த பொழுதே மனம் கூசுகிறது.

    பதிலளிநீக்கு
  13. அருமையான தகவல்
    பணத்துக்கு அலையும் ஆசிரியர் அதிகம்
    மாணவர் கல்விச் சிறப்புக்காக
    தன் பட்டத்தினையே வேண்டாத
    இந்திய அறிவியல் மேதை
    சர் சி.வி.இராமன் அவர்களை
    பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  14. வியப்பான செய்தி ஐயா...
    இன்று விருதுகளை பணம் கொடுத்து வாங்குவோர் மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்....
    அவரின் செயல் பாராட்டுக்குறியது....

    பதிலளிநீக்கு
  15. இதுவரை அறிந்திராத செய்தி. தேடலுக்கும் வழங்கியமைக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் !

    பிறந்தோர் எல்லாம் சிறந்தோரும் இல்லை
    துறந்தோர் எல்லாம் மறந்தோரும் இல்லை !
    ஆனால் இங்கே
    பிறந்தும் சிறந்தும் துறந்தும் பெருமைக்குரியவரைப்
    எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்
    தோன்றிற் புகழோடு தோன்றுக... என்னும்
    பொய்யாமொழிப் புலவன் குறளுக்குப் பொருளாய்
    இருந்தவரை எண்ணி வியக்கின்றேன்

    பகிர்வுக்கு நன்றி கரந்தை மைந்தரே
    தம +1

    பதிலளிநீக்கு
  17. தனது மாணவனுக்காக சிறப்புறும் விருதினை வேண்டாம் என்ற மாமேதை..

    என்றைக்கும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்!..

    பதிலளிநீக்கு
  18. மாமேதை. தம் மாணவருக்காக உயரிய விருதைக் கூடப் புறக்கணித்தவரைப் பற்றி என்னவென்று கூறுவது?!! இது அறிந்தது என்றாலும் தங்களின் நடையில் அழகு தமிழில் மீண்டும் வாசிக்கும் வாய்ப்பு...அருமை

    பதிலளிநீக்கு
  19. அறியாத தகவல் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. பதிவு செய்திருந்த விதம் நன்றாக இருந்தது . தெரிந்த நபர்கள் இருந்தும் தெரியாத விஷயங்களைச் சொல்கிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  21. இப்படியும் நல்ல மனிதர்கள் நம் நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. வியப்புத்தரும் செய்தி
    அசத்துறீங்க

    பதிலளிநீக்கு
  23. தற்போது ஆய்வு மாணவர்களை அடிமையாக நினைக்கிறார்கள் என்றூ கேள்விப் பட்டிருக்கிறேன்.
    பேராசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவரிடம் இருந்து க்ற்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  24. விந்தையான மனிதர் பற்றி அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  25. தனிமரம். Org. தற்போது தனிமரம்.com என்று டைமன் மாற்றிவிட்டேன் ஐயா! புதிதாக!

    பதிலளிநீக்கு
  26. அன்றைய நிலை என்ன வென்று தெரியவில்லை ஆனால் இன்று முனைவர் பட்டப் படிப்பிற்கான ( டாக்டரேட் ) வாய் மொழித் தேர்வு தேதியை மாற்றுவது மிக எளிது. இருப்பினும் அவர் எடுத்த முடிவும் அதை ஆதரித்து அரசு விழாவை தள்ளி வைத்த நிகழ்வும் மிகவும் மகிழ்வை தருகிறது. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  27. அருமையான ஆசான் , நல்ல மனிதர்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு