27 ஏப்ரல் 2017

மேதையின் வகுப்பறையில்



     ஆண்டு 1904.

     காவிரி ஆற்றின் வட கரையில் அமைந்திருக்கும் எழில் மிகு கல்லூரி.

     கரை புரண்டு ஓடும் காவிரி

     கல்லூரிக்குச் செல்வதற்கு ஒரே வழி தோணி.

     தோணியில் மிதந்து பயணித்தால்தான், கல்லூரி மண்ணில் கால் பதிக்கலாம்.

      காவிரியில் தண்ணீர் இல்லாத காலம் எனில், சுட்டுப் பொசுக்கும் மணலில், கால்கள் நோக நோக நடந்தாக வேண்டும்.

      மொத்தத்தில் தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கல்லூரியை அணுகவே, பெரு முயற்சி செய்தாக வேண்டும்.


      அப்படித்தான் படித்தார்கள், அக்காலத்தில்.

      ஆயினும் பெருமைமிகு கல்லூரி.

      தென்னகத்தின் கேம்ப்பிரிட்ஜ்.

       1854 ஆம் ஆண்டு, தஞ்சை ராணியார் வழங்கிய நிலத்தைக் கொண்டு, அதிலிருந்த கட்டடத்தில் தொடங்கப் பெற்றக் கல்லூரி.

       1871 இல் கட்டடங்கள் சீர் செய்யப் பெற்று, விரிவும் படுத்தப்பெற்றக் கல்லூரி.

       மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் ஒரு மணிக் கூண்டு.



       மணிக் கூண்டின், உச்சிக்குச் செல்ல, ஒரு சிறு வாயில்.

       குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும்.

       ஒரு மிகச் சிறிய வட்ட வடிவிலான, சுழன்று சுழன்று மேல செல்லும் படிகள்.

       தரைத் தளம் வரை நீண்டு தொங்கும் ஒரு பெரிய முறுக்குக் கயிறு.

      மணிக் கூண்டின் இருபுறமும் வகுப்பறைகள்.

      காவிரி ஆற்றைக் கடந்து, குளிர்ந்து வீசும், தென்றல் காற்றுத் தழுவும் வகுப்பறைகள்.

       வரிசை வரிசையாய் சிறிய அளவிலான, உத்திரங்களை அடுக்கி, அதன்மேல் பலகைகளைப் படுக்க வைத்து, அதற்கும் மேல், சிறிய சிறிய செங்கற்களை அடுக்கி, சுண்ணாம்புக் காரை கொண்டு பூசி, அமைக்கப்பட்ட, அந்தக் கால மேல் தளம்.

       எவ்வளவு வெயில் அடித்தாலும், குளிர்ச்சியை மட்டுமே, வகுப்பறைக்குள், வாரி வாரி வழங்கும் ஒட்டுக் கட்டடம்.

       வகுப்பறைகளை ஒட்டி, தென் புறமும், வட புறமும் நீண்டு செல்லும் வராண்டா,

       நடைப் பாதை

        வரிசை வரிசையாய் மரத் தூண்கள்.

     


மரத் தூண்களின் நடுவில் நாற்புறமும், கண்களைக் கவரும் சிற்பங்கள்.

      தூண்களில் மட்டுமல்ல, அண்ணாந்து பார்த்தால், பெரு உத்திரங்களிலும் சிற்பங்கள்.

       ரசித்து ரசித்து, செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய கட்டடம்.

       இக் கட்டடத்தினை, ஆற்றில் இருந்து நெருங்குவோமானால், மணிக் கூண்டிற்கு வலது புறம் உள்ள, முதல் அறைதான், அந்த மாணவரின் வகுப்பறை.

      F.A படிப்பிற்கான வகுப்பறை

      அக்காலத்தில் பி.ஏ., பி.எஸ்ஸி., எல்லாம் கிடையாது.

       F.A

       First Arts

      தமிழ், ஆங்கிலம், கணிதம், கிரேக்க ரோமானிய வரலாறு, அறிவியல் என அனைத்துப் பாடங்களையும் படித்தாக வேண்டும்.

     இம்மாணவனோ, வகுப்பறையின் கடைசி வரிசையில் அமைதியாய் அமர்ந்திருப்பான்.

     எந்த ஆசிரியர் வருகிறார், என்ன பாடம் நடத்துகிறார் என்பதை எல்லாம், ஒரு போதும், இம்மாணவன் கவனித்ததே இல்லை.

     மடியில் ஒரு கணிதப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதிலுள்ள கணக்குகளின் நினைவலைகளிலேயே மிதந்து கொண்டிருப்பான்.

     மனதிற்குப் பிடித்த ஒரே பாடம், கணிதம், கணிதம், கணிதம்.

     கணிதத்தைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களிலும், தோல்வி ஒன்றினையேத் தழுவிய, மாணவன் அமர்ந்திருந்த வகுப்பறை இது.

     நம் நாட்டுக் கல்வி அமைப்பால், படிக்காத மாணவன் என முத்திரைக் குத்தப்பெற்று, உதவித் தொகை நிறுத்தப்பெற்று, வகுப்பறையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட, மேதை அமர்ந்திருந்த வகுப்பறை இது.

     தமிழ் நாட்டின் அறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, ஒதுக்கிப் புறந் தள்ளிய மாமேதை அமர்ந்திருந்த வகுப்பறை இது.

     

படிக்க வழியின்றி, கல்லூரிக் கட்டணம் செலுத்தவும் வழியின்றி, கால் போன போக்கில் நடந்து, பசித்த வயிற்றுடன், கல்லூரியை விட்டு மட்டுமல்ல, வீட்டை விட்டே ஓடினாரல்லவா, ஒரு மேதை,  அம் மாமேதை அமர்ந்திருந்த வகுப்பறை இது.

     

       கல்லூரியின் பெயர்

      அரசுக் கலைக் கல்லூரி, கும்பகோணம்

      அம் மாணவரின் பெயர்

      

         இராமானுஜன்

       சீனிவாச இராமானுஜன்

       கணித மேதை சீனிவாச இராமானுஜன்

---

       கடந்த 21.4.2017 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணியளவில், நானும் நண்பர் திரு கே.பால்ராஜ் அவர்களும்,

       அ ந் த   வ கு ப் ப றை யி னு ள்   நி ற் கி றோ ம்.

        உடலும் உள்ளமும் ஒரு சேர சிலிர்க்கின்றது.

        கணித மேதை சீனிவாச இராமானுஜன அமர்ந்திருந்த பெருமை மிகு வகுப்பறை.

         இன்று யாருக்கும் பயன்படாமல் பூட்டியே கிடக்கிறது.

------



சில நாட்களுக்கு முன்னர், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களைச் சந்தித்தபோது, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று, இராமானுஜன் படித்த வகுப்பறையினைப் பார்த்து வந்தேன். மிகவும் பழுதுபட்ட நிலையில் இருக்கிறது.

       வகுப்பறையினுள் சென்று பார்க்க இயலவில்லை.

       கூடிய விரைவில் சென்று பார்த்துவிடுங்கள். இல்லையேல் பார்க்க இயலாமலே போய்விடலாம் என்றார்.

       அன்று முதல், மனதில் ஒரு உந்துதல்.

       விரைவில் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

       கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கலைக் கல்லூரியில் பணியாற்றும், நண்பர் திரு கே.பால்ராஜ் அவர்களிடம், கும்பகோணம் செல்ல வேண்டுமே என்றேன்.

       நாளையே போகலாமே என்றார்.

       நண்பர் திரு கே.பால்ராஜ், கரந்தைக் கலைக் கல்லூரியில், ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வருபவர்.

       தமிழ் நாடு தனியார் கல்லூரிகள் அலுவலர் சங்கத்தின் மண்டலப் பொருளாளர்.

         கல்லூரிக் கல்வித் துறையில், தஞ்சாவூர் மாவட்ட, இணை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும், கண்காணிப்பாளர் திரு செந்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.

        திரு செந்தில் அவர்கள், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் பர்சார்  திரு ஜெயகாந்தி அவர்களிடம் பேசி ஆவண செய்தார்.

       நானும், நண்பர் திரு கே.பால்ராஜ் அவர்களும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று திரு ஜெயகாந்தி அவர்களைச் சந்தித்தோம்.

        மகிழ்வோடு வரவேற்றார்.

      திரு ஜெயகாந்தி அவர்கள், அன்றுதான் பதவி உயர்வு பெற்று, பர்சார்  ஆக பொறுப்பேற்றுள்ளார் என்பதை அறிந்தோம். வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.

        திரு ஜெயகாந்தி அவர்கள், எங்களுக்கு இனிப்பு வழங்கியதோடு, கணிதத் துறைத் தலைவர் அவர்களை, அலைபேசியில் அழைத்து, அறிமுகப் படுத்தினார்.

       கணிதத் துறைத் தலைவர், கணிதத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வரும், ஆய்வு மாணவர் திரு குணசீலன் என்பவரிடம், கணித மேதை பாடம் பயின்ற, வகுப்பறையின் திறவுகோலைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
      

இதோ, கணித மேதை சற்றேறக்குறைய ஒரு வருடம் மாணவராய் அமர்ந்திருந்த வகுப்பறையில், நெஞ்சில் ஒருவித படபடப்போடு நிற்கின்றோம்.

      ஒரு நூற்றாண்டிற்கும் முன், பயன்பாட்டில் இருந்த மர இருக்கைகள்.

       ஒவ்வொரு இருக்கையாய் தொட்டுப் பார்க்கிறேன்.

       இதோ இந்த கடைசி வரிசையில்தான், இராமானுஜன் அமர்ந்திருக்க வேண்டும்.
      


இருவரும் மெல்ல அமர்ந்தோம்.

       இராமானுஜன் சுவாசித்தக் காற்று, இன்னும் இவ்வறையில் தேங்கி இருக்குமல்லவா?

       இராமானுஜன் சுவாசித்து வெளியிட்டக் காற்று, மெல்ல மெல்லத் தழுவுவதைப் போன்ற ஒரு உணர்வு.

       எத்தனை நாள் பசித்த வயிற்றுடன், ஒரு வேளை உணவிற்கும் வழியின்றி, தவித்துப் போய், இந்த இருக்கையில் அமர்ந்திருப்பார்.

       முப்பத்து இரண்டு ரூபாய் கட்டணம் கட்ட வழியின்றி, எத்துனை வேதனையோடு, இவ்வகுப்பறையினை விட்டு வெளியேறி இருப்பார்.

        நினைக்கவே நெஞ்சம் கலங்குகிறது.


மாணவராய், இந்தியக் கல்வி முறையுடன் போரிட்டுப் போரிட்டு, இராமானுஜன் தோற்றுப் போன போர்க் களம், இந்த வகுப்பறை.

       எனது மகன் கணிதத்தில் பெற்றுள்ள மதிப்பெண்களைப் பாருங்கள், மிக மிக அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளான், அதற்காகவாவது, அவனுக்குக் கல்வி உதவித் தொகை தாருங்கள், என இராமானுஜனின் தாய் கோமளத்தம்மாள், கண்கள் கலங்க, அழுது மன்றாடித் தோற்றுப் போன இடம் இந்த வகுப்பறை.

        கோமளத்தம்மாளின் அழுகுரல், வகுப்பறை முழுவதும் முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டே இருப்பதைப்  போன்ற ஒரு அதிர்வினைச் செவிகள் உணருகின்றன.




இராமானுஜனை ஓட ஓட, ஊரை விட்டே துரத்தி விட்ட வகுப்பறை, இன்று, இராமானுஜன் பயின்ற வகுப்பறை என்ற விளம்பரப் பலகையுடன், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது.

        விசித்திரமான உலகம்.

         மெல்ல இருக்கையில் இருந்து எழுந்தோம்.

         வகுப்பறையின் முன் இருக்கையில், தடித்த அட்டையுடன் கூடிய நான்கு நோட்டுப் புத்தகங்கள்.






The Lost Note Books

இராமானுஜனின் தொலைந்து போன நோட்டுப் புத்தகங்கள்.

இராமானுஜனின் மறைவிற்குப் பின் கண்டு பிடிக்கப்பட்ட நோட்டுகள்.

     பள்ளிப் பருவத்தில் இருந்தே, தான் கண்டுபிடித்த கணக்குகளை, தேற்றங்களை, சூத்திரங்களை, இராமானுஜன் தன் கைப்பட எழுதி வைத்த நோட்டுகள்.

     நான்கு தொகுதிகள்.

     சென்னைப் பல்கலைக் கழகமோ, இந்திய அரசோ கூட, வெளியிட முன் வராத நிலையில், டாடா ஆராய்ச்சி நிறுவனம், தன் செலவில் வெளியிட்ட, இராமானுஜனின் தொலைந்து போன நோட்டு புத்தகங்கள்.

      பக்கத்துக்குப் பக்கம் இராமானுஜனின் அழகிய கையெழுத்து, எங்களைப் பார்த்துச் சிரித்தது.

       பக்கம் பக்கமாய்ப் புரட்டித் தடவிப் பார்த்தேன்.

        இராமானுஜன் உயிரோடு இருந்தவரை, இந்த வகுப்பறை மட்டமல்ல, தமிழ்நாடே, இராமானுஜனின்  அருமையினை, பெருமையினை, திறமையினை, அறியவோ உணரவோ முன் வரவேயில்லை.

        ஆங்கிலேயர்கள்தான் இராமானுஜனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர்.

        ஆனால்.

        இராமானுஜன் இறந்த பிறகும், கடல் கடந்து சென்று விட்டார், குல வழக்கத்தை மீறி விட்டார், என்று குற்றம் சுமத்தி, அவரின் சொந்த சமுகமே, அவரது இறுதிச் சடங்கினைக் கூட புறக்கணித்ததுதான் வேதனையிலும் வேதனை,

        

         கணிதத்தை மட்டுமே நேசித்து

         கணிதத்தை மட்டுமே சுவாசித்த
         மாமேதை
         காச நோயின் பிடியில் சிக்கி, எப்படி மெல்ல மெல்ல உருக்குலைந்தாரோ, அப்படியே, அவர் பயின்ற வகுப்றையும், மெல்ல மெல்ல சீர் குலைந்து வருகிறது.

          அவர் பயின்ற வகுப்பறை மட்டுமல்ல, அக் கட்டடம் முழுவதுமே, சிதிலமடைந்து வருகிறது.

          இராமானுஜனைத்தான் நம்மால் காப்பாற்ற இயலவில்லை.

          இராமானுஜன் பயின்ற வகுப்பறையினைக் கூடவா நம்மால் காப்பாற்ற முடியாது.

          வேதனையோடு வெளியே வந்தோம்.