அவங்களுக்கு
வேற பிரஷர்.
நான் பேசாட்டி, அதுவும் குடுத்துருக்க மாட்டானுங்க.
அடுத்த கேள்விக்கு இடமில்லாதபடி,
இரண்டாவது இங்கேயே, இன்னொரு பேங்க் மெர்ஜர் ப்ராஜெக்ட்
வருது. அதனால மத்த எல்லாருக்கும், இன்னமும் ஒரு வருட, எக்ஸ்டென்சன் வாங்கிரலாம்பா.
அதன்பின்
யாரும் எதுவும் பேசவில்லை.
தங்களின் வேலைக்கு உத்தரவாதமிருக்கிறது, பிரச்சனையில்லை
என்பது தெரிந்ததும், அவர்கள் ஆசவாசமாகி நிம்மதியாக உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
சம்பத்துக்கு எந்த செய்தியை முன், பின் சொல்ல
வேண்டும் என்னும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது.
இங்கே யாரும் யாருக்காகவும் கொடி பிடிக்கப்
போவதில்லை.
கதையினை எப்படித் தொடங்குவது என்பதும்,
எப்படி பக்கம் பக்கமாய் நகர்த்திச் செல்வது என்பதும், நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், கரை
சேர்க்க வேண்டும், பொருளாதாரச் சூறாவளியில் சிக்கி அல்லலுறும், தன் குடும்பத்தை மீட்டெடுக்க
வேண்டும் என்பதற்காக, குடும்பத்தையே பிரிந்து, உற்றார் உறவினர், நட்பு என அனைத்தையும்
துறந்து, வெளிநாடு சென்று, திக்குத் தெரியாத கான்கிரீட் காடுகளில் நுழைந்து, போராடும்
நாயகன்தான், வன நாயகன்.
Today is the last day, for you, here
ஒரே வரியில், ஒரே வார்த்தையில்,
நாயகனின் பணி பறிபோகிறது.
சுதாங்கன்
கதையின் நாயகன்.
பணி பறிபோன, அந்த நொடியில் இருந்து கதை வேகம்
பெறுகிறது.
கதைக்கான களம்,
ம லே சி யா
கதை நகர, நகர, மலேசியா முழுவதும், நம்மையும்
கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார்.
பத்துமலை முருகன் கோவில், இரட்டை கோபுரம்,
மிருகக் காட்சி சாலை, கெடா என்றழைக்கப்படும், இராஜேந்திர சோழன் வெற்றிக் கொடி நாட்டிய
கடாரம், என கதையின் போக்கிலேயே, மலேசிய வரலாற்றையும், பக்குவமாய் இணைத்து, விருந்து
வைக்கிறார்.
சார், இப்ப முன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டம்
கிடையாது. திறமையில்லா திண்டாட்டம்தான்.
போகிற போக்கில், இன்றைய இளைஞர்களின்
பெருங் குறையினையும், பட்டென்று போட்டு உடைக்கிறார்.
வன நாயகன்
304 பக்கங்கள்
பக்கத்துக்குப் பக்கம் கதை வேகம் பெற்று ஓடுகிறது.
இந்த நூலின் பின்புறம், மறைந்திருக்கும், நண்பரின்
உழைப்பை நினைத்துப் பார்க்கிறேன்.
நிச்சயமாக, ஓராண்டிற்கும் மேல் உழைத்திருக்க
வேண்டும்.
இதே நினைவாய் உழன்றிருக்க வேண்டும்
பல நேரங்களில், குடும்பத்தை மறந்தும், தரவுகள்
தேடி அலைந்திருக்க வேண்டும்.
மனைவியும், மகள்களும், இவரை அனுமதித்திருக்கிறார்கள்.
இதற்காகவேனும், இவர்தம் குடும்பத்தினரைப்
பாராட்டியே ஆக வேண்டும்.
துக்கம்,
வலி, மகிழ்ச்சி, கோபம், பதற்றம் என மனதில் தோன்றிய ஏதோ ஒன்றை எழுதி முடித்தபின், எனக்குள்
ஒரு பெரிய நிம்மதி.
ஆசுவாசம், ஆனந்தம்.
அதையும் தாண்டி, அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும்
போராட்டம் அடங்கிய, அமைதியான ஒரு ஆழ்ந்த ஜென் மன நிலை.
அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை
திறந்தால் வீசும், குளிர்ந்த வெளிக் காற்றின் சுகம் போல.
சிலர் சொல்வது போல, பணத்துக்காக, புகழுக்காக
எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்து போல, ருசியிருப்பதில்லை.
அதே சமயத்தில், ஒரு படைப்பாளி, தன் படைப்புகளை,
இந்த சமூகத்தின் முன் வைத்து, அதற்கான, நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே
காத்திருக்கிறான்.
நானும் அதற்கு விதிவிலக்கல்ல.
நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களின்
இந்த வார்த்தைகள், ஒவ்வொரு எழுத்தாளரின், உள்ளக்கிடக்கையினையும் பிரதிபலிக்கிறது அல்லவா.
வன நாயகன்
முழு நிலவு முகம் நாட்டும் நாளொன்றில்,
இருபுறமும், வாசமிகு மலர்கள் மலர்ந்து,
நறுமணம் வீசும்,
நீண்ட நெடிய பாதையில்,
நட்போடு, தோளில் கை போட்டு,
மெல்ல நடந்தவாரே,
இதமாய், பதமாய், நயமாய்,
கதை கேட்கும் ஒரு உணர்வினைத் தருகிறார்,
ஆரூர் பாஸ்கர்
வாழ்த்துக்கள் நண்பரே.
---------
வன நாயகன்
கிழக்குப் பதிப்பக வெளியீடு
ரூ.
275.-