ஆண்டு
2016.
மே மாதம்.
மத்தியப் பிரதேசம்.
கோரதாங்கரி மாவட்டம்.
கோசமு கிராமம்.
கோசமு கிராமம் மட்டுமல்ல, கோரதாங்கரி மாவட்டமே
பரபரப்பின் பிடியில் இருந்தது.
கடந்த சில நாட்களாகவே, எங்கு பார்த்தாலும்,
சுவரொட்டிகள், ஒலிப் பெருக்கிகளின் முழக்கங்கள், சிறு சிறு கூட்டங்கள், பெருங் கூட்டங்கள்
என மாவட்டமே அமைதியைத் துறந்து. அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது.
காரணம், சட்டமன்றத் தேர்தல்.
இதுவரை வாக்களித்து, வாக்களித்து, சனநாயகக்
கடமையை ஆற்றினோமே, என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, வாழ்க்கைத் தரம் எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது,
கல்வியின் தரம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது, சுகாதாரம் எந்த அளவிற்கு மேம்பட்டிருக்கிறது
என்பதை எல்லாம் மறந்து, அடுத்த தேர்தலுக்கு மக்களும் தயாராகிவிட்டார்கள்,
தேர்தல் நாள் நெருங்க, நெருங்க, காவல் துறையினரின்
பணியும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
அமைதியாகத் தேர்தலை நடத்தியாக வேண்டும்.
கலவரத்திற்கு வித்திடுவார்கள் என்று சந்தேகப்படும்படியான
நபர்களை, நான்கு சுவர்களுக்குள் அடைத்து, கலவரங்கள் ஏற்படாமல் தடுத்தாக வேண்டும்.
குறிப்பாக, வெளியூர் மனிதர்களை வெளியேற்றியாக
வேண்டும்.
காவல் துறையினருக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு
மணி நேரமும் போதவில்லை.
விடுமுறை கிடையாது.
ஓய்வும் கிடையாது.
கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்
கொண்டு, அலைந்து கொண்டிருந்த, காவலர்களின் கண்களில், அம் மனிதர் தென்பட்டார்.
அம்மனிதருக்கு 65 வயதிருக்கும்.
ஒல்லியான உடல்.
முகத்தினை மறைக்கும் வெண் தாடி.
நடு வாகிட்டு, இரு புறமும் பிரிந்து, காதுகளை
மறைக்கும் வண்ணம், நீண்டு வளர்ந்த தலை முடி.
இடுப்பில் ஒரு அழுக்கேறிய வேட்டி.
மேல் சட்டை காணாத உடம்பு.
ஒரு துருப்பிடித்த, பழைய மிதி வண்டியில்,
அமைதியாய், மெதுவாய் சென்று கொண்டிருந்தார்.
மிதிவண்டியில், கைப் பிடிக்கு அருகே ஒரு துணிப்பை
தொங்கிக் கொண்டிருந்தது.
காவலர்களுக்கு
சந்தேகம்.
யார்
இவர்?
எந்த
ஊர்?
மெதுவாக, இரகசியமாக விசாரனையைத் துவக்கினார்கள்.
ஒருவருக்குக் கூடத் தெரியவில்லை.
இவரின்
வீடு எங்கே என்று விசாரித்தார்கள்.
கோசாமு
என்னும் சிற்றூரைக் கைக் காட்டினார்கள்.
பழங்குடியினர் வசிக்கும் பகுதி
அங்குதான்
இருக்கிறார் என்றார்கள்.
காவலர்கள் கோசாமுவிற்குச் சென்றார்கள்.
பெரியவரின் வீட்டினைப் பார்த்தார்கள்.
ஒரு குடிசை.
கதவு கூட கிடையாது.
யார் இவர்?
இவர் பெயர் என்ன?
எவருக்குமே தெரியவில்லை.
எவ்வளவு
காலமாய் இங்கே வசிக்கிறார்?
முப்பது
வருடங்களுக்கும் மேல், இவர் இங்கேதான் இருக்கிறார்
காவலர்கள் வியந்து போனார்கள்
முப்பது வருடங்களாய் வசிக்கும் மனிதரை, யார்
என்றே, யாருக்கும் தெரியவில்லை.
என்ன
வேலை செய்கிறார்?
கிராமம்
கிராமமாய் சென்று, விதைகளைக் கொடுப்பார், எதற்கும் உபயோகமற்ற நிலங்களில், விதைகளை விதைத்து,
செடியாக்கி, மரமாக்கி, அப்பகுதியினையே, பெரும் காடாக மாற்றுவார்.
காவலர்களுக்கு கிட்டத் தட்ட மயக்கமே வந்துவிட்டது.
உண்மையாகவா? அதிர்ந்து
போய் கேட்டனர்.
ஆம், இதுவரை சுமார் 50,000 மரங்களுக்கும்
மேல் வளர்த்திருக்கிறார்.
வறண்டு கிடந்த பூமியை, காடாக்கி, மேகம் தேக்கி,
மழை பொழிய வைத்திருக்கிறார்.
எம் குழந்தைகளுக்கு ஆசிரியராகி, எழுத்தறிவித்திருக்கிறார்
என்று
கூறி மெய் சிலிர்த்தனர்.
வியப்பின் உச்சிக்கே சென்றனர்.
அவருக்கு, எங்கள் மொழி மட்டுமல்ல, நிறைய
மொழிகள் தெரியும்.
ஆனாலும், அவர் யார் என்று தெரியாது. எங்கிருந்து
வந்தார் என்று தெரியாது.
ஆயினும் அவர் எங்கள் தெய்வம்.
எங்கள் மண்ணைச் செழுமையாக்கி, வளமையாக்கி,
எங்களை வாழ்விக்க வந்த தெய்வம்.
கையெடுத்துக் கூம்பிட்டார்கள்.
அதற்கு மேலும், காவலர்களால் அங்கு
நிற்க முடியவில்லை.
விரைந்து சென்று, காவல்துறை ஆய்வாளரிடம்
விளக்கமாய் எடுத்துரைத்தனர்.
சற்றும் தாமதியாமல், ஆய்வாளர் கோசாமுவுக்குப்
புறப்பட்டார்.
ஒரு பழைய மிதிவண்டியில் எதிரில் வந்து
கொண்டிருந்த, அம்மனிதரைத் தடுத்து நிறுத்தினார்.
யார் நீங்கள்?
உங்கள் பெயர் என்ன?
நீங்கள் எந்த ஊர்?
எதற்காக இந்த ஊரில் தங்கியிருக்கிறீர்கள்?
ஆய்வாளர் கேள்விக் கணைகளை வரிசையாய்
தொடுக்க, தொடுக்க, மிதிவண்டியில் இருந்து இறங்கிய, அம் மனிதரின் கண்கள் ஆய்வாளரைத்
தயக்கமின்றி சந்தித்தன.
கருணை பொழியும் கண்கள்.
அறிவுக்கலைத் ததும்பும் முகம்.
சூழ்நிலையினை, ஒரு நொடியில் புரிந்து கொண்ட,
அம்மனிதர், மெதுவாய் பதில் உரைத்தார்.
அருகிலிருக்கும்
சிற்றூருக்கு, விதைகளை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். நாளை காலை 10.00
மணிக்கு, நானே, காவல் நிலையத்திற்கு வருகிறேனே.
அடுத்த நாள் காலை, மிகச் சரியாக
10.00 மணிக்கு, காவல் நிலையத்திற்கு வந்தார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு மேல் சட்டை அணிந்து,
தோளில் ஒரு பையுடன் வந்தார்.
காவல்துறை ஆய்வாளருக்கு, அவரையும் அறியாமல்,
இம்மனிதரிடத்தில் ஒரு மரியாதை, உள்ளத்தில் பூத்திருந்தது.
அமருங்கள் என்றார்.
நன்றி கூறி, அம்மனிதர் அமர்ந்தார்.
இவர்
படித்திருக்கிறாரா?
காவல் துறை ஆய்வாளர், இவரது படிப்புச் சான்றிதழ்களை
முதலில் ஆராய்ந்தார்.
இளங்கலை படிப்பும், முதுகலைப் படிப்பையும்
இவர் படித்தது, புது தில்லியின் ஐ.ஐ.டி
இல் ( Indian Institute of
Technology ).
காவலருக்கு மெல்லத் தலை சுற்றத் தொடங்கியது.
புதுதில்லியில், படிப்பை முடித்தவுடன், இவர்
பறந்து சென்று முனைவர் பட்டம் (Doctorate)
பெற்றது, அமெரிக்காவின், டெக்ஸாஸ் மாநிலத்தில்
அமைந்திருக்கும் ஹுஸ்டன் பல்கலைக் கழகத்தில்.
காவலருக்கு, காவல் நிலையமே சுற்றுவது போன்ற
உணர்வு.
மனதில் இனம் புரியாத ஒரு படபடப்பு.
அமெரிக்காவில் டாக்டர் பட்டம்
பெற்றவுடன், தான் படித்த புது தில்லி ஐ.ஐ.டி யிலேயே, பலகாலம் பேராசிரியராகவும் பணியாற்றி
இருக்கிறார்.
காவலருக்கு மெல்ல வியர்க்கத் தொடங்கியது.
இதோ,
இதென்ன கடிதம்.
புது தில்லி, ஐ.ஐ.டி இல், 1982 இல், தன் பணியினை
இராஜினாமா செய்திருக்கிறார். இவர்தம் ராஜினாமாவை ஐ.ஐ.டி நிறுவனம் விருப்பமின்றி, வேறு வழியின்றி, ஏற்றுக் கொண்டமைக்கான
ஒப்புதல் கடிதம்.
காவலருக்கு உலகமே சுற்றத் தொடங்கியது.
அதற்கு மேல் அவரால், இருக்கையில் அமர முடியவில்லை.
மெல்ல எழுந்தார்.
ஐயா, தாங்கள் எப்படி இங்கே? வார்த்தைகளை
முடிக்க முடியவில்லை, காவலரால்.
அலோக் சாகர்
புது தில்லி, ஐ.ஐ.டி பேராசிரியர்
இந்திய
ரிசர்வ் வங்கியின்,
முன்னாள்
ஆளுநர், ரகுராம் ராஜன் அவர்களின் ஆசிரியர்
அலோக்
சாகர்
அமைதியாய்,
பதிலுரைத்தார்.
இந்தியாவில் மக்கள், எண்ணிலடங்கா பிரச்சினைகளை
சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படித்தவர்களோ, மக்களுக்குத் தொண்டாற்றுவதை
விட்டுவிட்டு, தங்களின் புத்திசாலித் தனத்தை, தங்களின் மேன்மையை, தங்களின் கல்விச்
சான்றிதழ்களின் வழி, நிரூபிப்பதிலேயே, தங்களின் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு இயற்கையின் மேல் ஒரு ஈர்ப்பு.
மக்களிடம் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான
விழிப்புணர்வினை ஏற்படுத்த விரும்பினேன்.
வளர்ச்சி என்னும் பெயரில், காடுகள் எல்லாம்
சுருங்கிக் கொண்டே வரும், இக்காலகட்டத்தில், மரம் வளர்க்கவும், புதிது புதிதாய் காடுகளை
உருவாக்கவும் எண்ணம் கொண்டேன்.
1982 இல் தீர்க்கமாய் சிந்தித்து, உறுதியாய்
ஒரு முடிவினை எடுத்தேன்.
என் வகுப்பறை, ஐ.ஐ.டி யில், நான்கு சுவர்களுக்குள்
இல்லை என்பது தெரிந்தது.
என் வகுப்பறை, கிராமங்களில், காடுகளில், வயல்
வெளிகளில், ஆற்றங்கரைகளில் இருப்பது புரிந்தது.
என் மாணவர்கள் ஐ.ஐ.டி யில் இல்லை என்பதை அறிந்தேன்.
கிராமத்தில் எழுத்தறிவற்ற வெள்ளந்தி மனிதர்களும்,
பழங்குடியினருமே, என் மாணவர்கள் என்பதை உணர்ந்தேன்.
பேராசிரியர் பணியினைத் துறந்தேன்.
புதிய வகுப்பறை, புதிய மாணவர்கள், புத்தம்
புது சூழல்.
முப்பத்து இரண்டு ஆண்டுகளாய், இம்மனிதர்களோடு
இணைந்து என் வாழ்வு நகருகிறது.
மென்மையாய் பேசி முடித்தார்.
காவலர் தன் இருக்கையில் இருந்து எழுந்து, தன்
இருகரம் கூப்பி வணங்கினார்.
அலோக் சாகர்
தன் குடும்பம்
துறந்து,
உற்றார்
உறவினர் துறந்து, நண்பர்களைத் துறந்து,
குவிந்து
கிடக்கும், தன் செல்வம் துறந்து,
இன்றும்
அதே பழைய மிதிவண்டியில்,
விதைகளுடன்
பயணித்துக் கொண்டே இருக்கிறார்.
இவர் பயணிக்கும் திசையெங்கும்
மரங்கள் தழைத்து எழுந்து,
நிழல் தந்து, காய் தந்து, கனி தந்து
மழை தந்து
பூமியைக் குளிர வைத்துக் கொண்டிருக்கின்றன.
அலோக் சாகர்
இப்படியும்
ஒரு மனிதர்,
மாமனிதர்
நம்மிடையே,
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்பதை
மனது
நம்பவே மறுக்கிறது.
சுய நலம்
மிகுந்தோர் வாழும் உலகில்,
இப்படியும்
ஒரு தன்னலமற்ற மனிதர்
நாமும்
இரு கரம்
குவித்து,
இவர்
வாழும் திசை நோக்கி
வ ண ங்
கு வோ ம்.