காளாஸ்திரி.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதி.
புதிதாய் ஒரு குடும்பம், ஒரு பணக்காரக்
குடும்பம், அக்கால வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஒரு ஜமீன் குடும்பம், காளாஸ்திரியில்,
ஒரு பெரும் மாளிகையினையே விலைக்கு வாங்கிக், குடியேறியது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின், பானகல்லு
என்னும் கிராமத்தில் இருந்த, இந்த ஜமீன் குடும்பம், காளாஸ்திரியைத், தன் புது இருப்பிடமாக்கிக்
கொண்டது.
ஜமீன் குடும்பங்களில் பிறந்தவர்கள்,
பொதுவாகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால் இந்தக் குடும்பம் அப்படியல்ல.
கல்வியில் கரை கண்ட குடும்பம்.
தங்களின் குழந்தைகளுக்குப் பொருட் செல்வத்தோடு,
கல்விச் செல்வத்தையும் வாரி வாரி வழங்கி வரும் குடும்பம்.
1866 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் நாள், இக்குடும்பத்தில்,
புத்தம் புது வரவாய், ஒரு மழலை.
ஆண் குழந்தை.
குழந்தை வளர, வளர அனைவரும் இக்குழந்தையினை அரசர்,
அரசர் என்றே அழைத்தனர்.
அரசர், அரசர் என்று அழைத்து, அழைத்து, இவரது
இயற்பெயர், பலருக்கும் மறந்தே போனது.
அழகோடு பிறந்த குழந்தை, அறிவோடு
வளர்ந்தது.
சிறு வயதிலேயே, தெலுங்கும், சமசுகிருதமும்,
இவர் நாவில் நடனமாடத் தொடங்கியது.
பதினெட்டாம் வயதில், ஆங்கிலத்தையும் கற்றுத்
தேற வேண்டும் என்ற அளவிலா ஆசை, இந்த அரசருக்கு.
ஆங்கிலம் கற்க சென்னை வந்தார்.
பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி,
இளங்கலை, முதுகலை என ஆங்கிலத்தோடு, சமசுகிருதத்தையும் சென்னையில், பாடமாய் எடுத்து
பெரு வெற்றி பெற்றார்.
சமசுகிருதம் படித்த போதும், தமிழ், தாய் மொழி
போல், இவர் நெஞ்சில் இடம் பிடித்தது.
சென்னை வந்த நாளில் இருந்தே, இவர் உள்ளத்தில்
ஒரு உறுத்தல்.
காரணம், இவர் கண்ட காட்சிகள், இவர் உள்ளத்தில்,
ஒரு பெரும் புயலாய் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருந்தன.
கல்வி வாசனையே இல்லாத, உண்ண உணவின்றி, உடுக்க
உடையின்றி, இருக்கவும் இடமின்றி, குப்பைகளோடு குப்பைகளாய், தெருவோரங்களில் வசித்து
வரும் மக்கள்.
இதனாலேயே, சுத்தம் என்றால் என்ன, சுகாதாரம்
என்றால் என்ன என்பதை அறியாமல், உணராமல், தொற்று நோய்களின் பிடியில் சிக்கி அல்லலுற்ற
மக்கள்.
ஏதாகினும்
செய்தாக வேண்டும்.
இவர்களை எப்படியாவது, கரை சேர்த்தாக வேண்டும்
என்று
எண்ணினார்.
சுகாதாரத்தை உணர்த்த, இவர்களுக்கு முதலில்
கல்வி புகட்டியாக வேண்டும்.
கல்வியைக் கொடுத்து விட்டோமானால்,
கல்வியைக் கொடுப்பதன் மூலம், இவர்களுக்குச் சிந்திக்கக் கற்றுக் கொடுத்து விட்டோமானால்,
காட்சி மாறும், சென்னை செழிக்கும், சிங்காரச் சென்னை பிறக்கும், சுகாதாரச் சென்னை பிறக்கும்
என உறுதியாய் நம்பினார்.
அரசியலில் நுழைந்தார்.
புத்தம் புதிதாய் ஒரு கட்சி தோன்ற, இவரும்
ஒரு வித்தானார்.
சிறந்த கல்வி. சீரிய பேச்சாற்றல்.
உயரிய, உன்னத தலைமைப் பண்பு.
கட்சி வளர்ந்தது, ஆட்சியைப் பிடித்தது.
ஆட்சியில் இரண்டாவது அமைச்சரானார்.
ஒரு சில மாதங்களில், உடல் நலக்
குறைவால், முதல் அமைச்சர், இயற்கையோடு இணைய, இவர் முதல் அமைச்சராகவும் உயர்ந்தார்.
ஆட்சியில், அதிகாரத்தில், ஒரு நல்ல உள்ளம்,
ஒரு உயர்ந்த உள்ளம், ஒரு உன்னத உள்ளம், ஒரு கல்வி உள்ளம்.
பிறகென்ன சீர்திருத்தங்கள் தொடங்கின.
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால், நடத்தப்பெறும்
கல்வி நிலையங்களில், கட்டாயமாகத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டே ஆக வேண்டும்.
வறுமையில் வாடும் மாணவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட
மாணவர்களுக்கும், தேர்வுக் கட்டணங்களில் இருந்து முழு விலக்கு.
பள்ளிக் கட்டணமும் அரைக் கட்டணம்.
மீனவர் குடும்பங்களுக்கு என்றே, சென்னை, நடுக்
குப்பத்தில், புத்தம் புதிதாய், ஒரு பள்ளி.
தொடர்ந்து, சென்னை ராஜதானி முழுவதும், ஆங்காங்கே,
மீனவர்களுக்கானப் பள்ளிகள்.
கல்லூரிகளில் அனைத்துப் பிரிவு மாணவர்களும் சேர்க்கப்
பட வேண்டும்.
கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தனிக் தனிக் குழுக்கள்.
1923 இல் சென்னைப் பல்கலைக் கழகச் சட்டம்.
தமிழகம்
மெல்ல மெல்லப் படிக்கத் தொடங்கியது.
கை நாட்டுகள் குறைந்தன.
கையெழுத்துக்கள் பெருகின.
தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை, அனைவரையும்
வாருங்கள் வாருங்கள் என அழைத்து, அழைத்துப் படிக்க வைத்தார் இந்த அரசர்.
இந்திய மருத்துவப் பள்ளித் துவங்க இடம் தேவை,
என்ற பொழுது, சற்றும் தயங்காமல், ஹைட் கார்டன்
என்னும், தனது சொந்த, பெரு நிலப் பரப்பை, அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்.
இன்றைய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, இவர் கொடுத்த இடத்தில்தான், செம்மாந்து
இயங்கி வருகிறது.
ஆனாலும், தமிழ் மாணவர்களுக்கு,
பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு, தாழ்த்தப்
பட்ட மாணவர்களுக்கு, மருத்துவக் கல்விக்கு
வழியில்லை என்பதை அறிந்த போது, பொங்கி எழுந்தார்.
மருத்துவக் கல்வி என்று ஒன்று,
தொடங்கிய காலத்தில் இருந்து, இவர் காலம் வரை, நம் மாணவர்கள், தமிழ் மாணவர்கள் மருத்துவக்
கல்லூரிக்குள் நுழைய, ஒரு பெரும் தடை இருந்தது.
மருத்துவக் கல்வி கற்க அடிப்படையிலும் அடிப்படையாய்,
ஒரு தகுதி வரையறுக்கப் பட்டிருந்தது.
அதாவது,
ஒரு மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்
அம் மொழியினைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்
அம்மொழி, ஆங்கிலம் என்று நினைக்கிறீர்களா?
தவறு, தவறு, தவறு
ஆங்கிலம் அல்ல
சமசுகிருதம்
சமசுகிருதம் தெரிந்திருக்க வேண்டும்
சமசுகிருதம் படித்திருக்க வேண்டும்.
சமசுகிருதம் படித்திருந்தால்தான், மருத்துவக்
கல்விக்கு விண்ணப்பிக்கவே முடியும்.
சமசுகிருதம் மருத்துவக் கல்வியின் அடிப்படைத்
தகுதியாய் இருந்தது.
இதுதான், நம்மவர்களை நந்தியாய் தடுத்தது.
தம் இனத்தாரை மட்டும், மருத்துவம்
படிக்க வைக்க வேண்டும் என்பது, அன்றிருந்தோர் திட்டம்.
அதுவே அவர்கள் இயற்றிய சட்டம்.
சமசுகிருதம்
சமசுகிருதத்திற்கும், மருத்துவக் கல்விக்கும்
என்ன தொடர்பு?, என்ன உறவு?.
ஆயினும், இந்த ஒரே மொழி, ஒரே தடை,
நம் மாணவர்கள் அனைவருக்கும், முள் வேலியாய், பெருந் தடுப்புச் சுவராய் குறுக்கே நின்றது.
பொங்கி எழுந்த அரசர், தன் எழுதுகோலை எடுத்து,
ஒரே ஒரு கையெழுத்துப் போட்டார்.
அரசு ஆணை வெளி வந்தது.
அனைவருக்கும்
மருத்துவக் கல்வி
தடுப்புச் சுவர், அடியோடு வெடி
வைத்துத் தகர்க்கப் பட்டது.
மருத்துவக் கல்லூரியின் வாயில், நம் மாணவர்களுக்காகவும்
திறக்கப் பட்டது.
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
நம் முதல்வர்தான்
இவர்தான்
இந்த மனிதர்தான்
இந்த மாமனிதர்தான்
இந்த மன்னர்தான்
இந்த அரசர்தான்
நீதிக்
கட்சியின்
பனகல்
அரசர்.
11.7.1921
முதல் 3.12.1926 வரை
நம் முதல்வர்
இராமராய நிங்கர்
என்னும்
இயற்பெயருடைய
பனகல்
அரசர்.
மருத்துவக் கல்லூரியின்
வாயிலை
நமக்கும்
திறந்து விட்ட
பனகல்
அரசரைப்
போற்றுவோம் வாழ்த்துவோம்
(இன்று
சென்னையில் இருக்கும் பனகல் பார்க், மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பனகல்
கட்டிடங்கள், அனைத்தும் இவர் பெயரைத்தான் தாங்கி நிற்கின்றன)