23 ஏப்ரல் 2017

மீண்டும் வந்தியத்தேவன்
     ஆண்டு 1950.

     கும்பகோணம்.

      தங்கம்.

     அந்தச் சிறுவனின் பெயர் தங்கம்.

     முழுப் பெயர் தங்கமுத்து.

     ஆனால் அனைவரும் தங்கம், தங்கம் என்றே அந்தச் சிறுவனை அழைத்தனர்.

      பெயர்தான் தங்கம்.

      ஒரு குண்டுமணி தங்கம் கூட வீட்டில் இல்லை.

       தந்தையும் இல்லை.

       அன்பும், ஏழ்மையும் போட்டிப் போட்டு நிரம்பி வழியும் வீடு.


       ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டான்.

       ஆறாவது வகுப்பில் சேர்ந்தாக வேண்டும்.

        சேருவதற்குத்தான் வழியில்லை.

        மாதம் இரண்டரை ரூபாய் கட்டியாக வேண்டும்.

        பணத்திற்கு ஏது வழி?

       வேலைக்குப் போனான்.

        தையல் கடையில் வேலை

        மளிகைக் கடையில் எடுபிடி

        ஓவியரிடம் உதவியாள்.

         அந்த ஓவியர், வெங்கையா என்று பெயர், அவர்தான் முதன் முதலில் கூறினார்.

          பையன் ரொம்பச் சிறியவனாய் இருக்கிறான், ஓவியப் பள்ளியில் சேர்க்கலாமே.

சித்திரக்கலாசாலை

          ஓவியப் பள்ளி

           அன்று தமிழ் நாட்டில், மொத்தம் இரண்டே இரண்டு ஓவியப் பள்ளிகள்தான்.

           ஒன்று சென்னையில், மற்றொன்று கும்பகோணத்தில்.

           மாதம் ஒரு ரூபாய் கட்டியாக வேண்டும்.

           மாமா கோவிந்தசாமி, ஒரு ரூபாய் கட்டி சேர்த்து விட்டார்.

           தங்கத்தின் வாழ்வு திசைமாறி ஓவியத்தில் புகுந்தது.

           தங்கம்

           பெயருக்கு ஏற்றாற்போல் தங்கமாய் முயன்றான்.

          அயராப் பயிற்சி.

        

 மணியன்


           ஓவியர் மணியனின் ஓவியங்கள் உள்ள புத்தகங்களைக் கொடுத்து, அதனைப் பார்த்து வரையச் சொல்லி பயிற்சி கொடுத்தார்கள்.

          ஓவியர் மணியன், தங்கத்தின் நெஞ்சகத்தில் நிரந்தரமாய் அமர்ந்தார்.

          அச்சிறு வயதிலேயே, தங்கத்திற்கு ஒரு தணியாத ஆசை.

          ஒரு முறையேனும், வாழ்வில் ஒரே ஒரு முறையேனும், ஓவியர் மணியனை நேரில் பார்த்துவிட வேண்டும் என்னும் அளவிலா ஆசை.

           ஓவியர் மணியனின் படங்கள், பார்க்கும் ஒவ்வொரு முறையும், உற்சாகத்தைக் கொடுக்கும்.

          விரல்கள் நோக நோக பயிற்சி செய்தான்.

          சித்திரமும் கைப் பழக்கம் என்பார்கள்

          சிறுவனின் கை விரல்களுக்குள், ஓவியம் மெல்ல மெல்ல நுழைந்தது.

          சிறுவனின் ஏழ்மையும் விடாமல் தொடர்ந்து துரத்தியது.

           பல முறை, மாதக் கட்டணமான ஒரு ரூபாயைக் கூட கட்ட இயலா நிலை.

         பல நாட்கள், பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலேயே, கூனிக் குறுகி அமர்ந்திருப்பான்.

         பள்ளியில் இருந்து ஆள் வரும்.

         நாளையில் இருந்து, பள்ளிக்கு வரச் சொன்னார்கள், நம்ப குப்புசாமி சார், உனக்குப் பணம் கட்டிவிட்டார்.

         
குப்பு சாமி அய்யர்.

          இளகிய மனம்.

          தங்கத்தின் திறமையின் மீது அபார நம்பிக்கை.

          குப்புசாமி அய்யர்

           சித்ரக்கலாசாலையின் தலைமையாசிரியர்.

           பல மாதங்கள் குப்புசாமி அய்யர்தான், தங்கத்திற்குப் பணம் கட்டினார்.

           குப்புசாமி அய்யரின் அன்பால், சித்திரக்கலாசாலையில் பயிற்சியை நிறைவு செய்தான்.

         1958 இல் தினத்தந்தி நாளிதழில் பணியும் கிடைத்தது.

         தங்கம் சென்னை சென்றார்.

         தினத்தந்தியில் சேர்ந்தார்.

         பெரிய அய்யா, உங்களைப் பார்க்கனும் என்கிறார்கள், வாருங்கள், துணை ஆசிரியர் அழைத்தார்.

        தங்கத்தின் மனமெல்லாம் பூரிப்பு.

       ஆயினும் படபடப்பு.

       பெரிய அய்யா

        தினத்தந்தி நாளிதழின் நிறுவுனர்

        இலண்டனில் பார் அட் லா பயின்றவர்.

        காலையில் எழுந்ததும், செய்தித் தாள் படிக்க வேண்டும் என்ற பழக்கத்தை, தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியவர்.

        அற்புதமான மனிதர்

       


சி.பா.ஆதித்தனார்


        வாங்க, வணக்கம். நீங்கதான் ஓவியர் தங்கமா?

        வணக்கம், ஆமாங்க அய்யா.

        உதடு தொண்டைக் குழிக்குள் ஒட்டிக் கொண்டது.

       தங்கம்…………… ரொம்ப நல்ல பெயர். எப்போதும் தங்கமாக இருக்கனும்.

      மேசையின் மீது இருந்த, கண்ணாடியால் ஆன, பேப்பர் வெயிட், ஒன்றினை எடுத்துக் கொடுத்தார்.

        இதை வாங்கிக் கொள்ளுங்கள்.

         தங்கம் பணிவோடு பெற்றுக் கொண்டார்.

         ஆனால் காரணம்தான் புரியவில்லை.

      பெரிய அய்யா அவர்களின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.

      இப்போது, உங்களிடம் நான் கொடுத்ததில் ஒரு தப்பு …… அது என்ன தப்பு?

        திடுக்கிட்டார் தங்கம்.

         முகத்தில் குழப்பம் பரவியது.

         நீங்கள் ஒரு ஓவியர். தமிழர் பண்பாட்டின்படி, ஒரு தமிழர், மற்ற ஒருவரிடம், ஒரு பொருளைத் தரும் பொழுது, இடது கையால் தரக் கூடாது.

        நான் உங்களிடம், இந்தப் பொருளை, என் இடது கையால் கொடுத்தேன். அது தப்பு.

       தினத்தந்தியில் நீங்கள் ஓவியம் வரையும் பொழுது, இடது கையால் எந்தப் பொருளையும் தருவதாக ஓவியம் வரையக் கூடாது.

       இதை உங்களுக்கு ஆழமாகப் பதிய வைக்கவே, நான் இடது கையால் கொடுத்தேன்.

       தினத்தந்தியில் ஓவியராகப் பணியாற்றப் போகின்ற உங்களுக்கு, இனி இது மறக்காது அல்லவா?

       இவர்தான் பெரியவர்.

        சில மாதங்கள் கடந்த நிலையில், பெரிய அய்யாவிடமிருந்து, மீண்டும் அழைப்பு.

       அறைக்குள் மெல்ல நுழைந்தார்.

      இன்று நீங்கள் வரைந்திருந்த, சிரித்துக் கொண்டிருக்கும் மனிதனின் படம் அருமை.

        தங்கத்திற்கு வியர்க்கத் தொடங்கியது.

        அழுது கொண்டிருப்பது போல் அல்லவா படம் வரைந்தோம்.

         பேச்சின்றி நின்றார்.

        இலண்டனில் இருந்து வெளிவரும், டெய்லி மிரர் பத்திரிக்கையின், ஒரு கார்ட்டூனைக் காட்டினார்.

        ஒரு மனிதன் அழுது கொண்டிருக்கும் படம்.

         இப்படத்தினைப் போலவே, ஒரு பத்துப் படங்கள் வரைந்து எடுத்து வாருங்கள்.

        தங்கம் சிறந்த ஓவியர்தான்.

        ஆனாலும், தங்கத்தை மேலும் மேலும் மெருகேற்ற வேண்டுமல்லவா.

        தங்கத்தைப் பட்டைத் தீட்டவேண்டுமல்லவா

       பெரிய அய்யா. ஆதித்தனாரின் பயிற்சியில், வழி காட்டலில், மேற்பார்வையில், தங்கத்தின் ஓவியங்கள் புதுப் பொலிவு பெற்றன.

      ஒரு நாள் உதவி ஆசிரியர் அழைத்தார்.

       தங்கம், ஒரு அழகான கலங்கரை விளக்குச் சின்னம் வரைய வேண்டும்.

        நம்ம தினத்தந்தி நாளிதழின், அடையாளச் சின்னம் மாறப் போகிறது. இது பெரிய அய்யா அவர்களின் விருப்பம்.

      நீங்கள் ஐந்து லைட் ஹவுஸ் படங்கள் வரைந்து தாருங்கள். அதனைப் பெரிய அய்யாவிடம் கொடுப்போம்.

       அய்யா அவர்கள் பரிசீலனை செய்து, ஒரு படத்தைத் தேர்வு செய்வார்கள்.

        யாருக்குக் கிடைக்கும், இதுபோன்ற ஒரு பொன்னான வாய்ப்பு.

        தங்கம் ஐந்து படங்களை வரைந்தார்.

        பெரிய அய்யா, மகிழ்வுடன் ஒரு படத்தைத் தேர்வு செய்தார்.தினத்தந்தி நாளிதழின் அடையாளச் சின்னம் மாறியது.
              
        இன்றும் தினத்தந்தியின் அடையாளச் சின்னம், தங்கம் வரைந்த, கலங்கரை விளக்கம்தான்.

----
    
     ஒரு நாள், உணவகம் ஒன்றில், நண்பர் ஒருவருடன், தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, நண்பர் திடீரென பரபரத்தார்.

      தங்கம், தங்கம். அதோ, அங்கு இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் யார் தெரிகிறதா?

      தங்கம் திரும்பிப் பார்த்தார்.

      அடுத்த நொடி, உடலெங்கும் ஒரு இன்ப அதிர்ச்சி.

       இவரைக் கண்ணால் காண வேண்டும், வாழ்வில் ஒருமுறையேனும், கண்ணாரக் கண்டுவிட வேண்டும் என்று எவ்வளவு காலம் ஏங்கியிருப்போம்.

       தங்கத்தின் கண்கள், இமைப்பதை மறந்தன.

        நெஞ்சம் சில நொடி, துடிக்கவும் மறந்தது.

        ஓவியர் மணியன்.

         இதோ, சில அடிகள் தொலைவில், ஓவியர் மணியன்.

        உணவகத்தில் இருந்து, ஓவியர் மணியன் எழுந்து செல்லும் வரையில், கண் இமைக்காமல் கண்டு, கண்டு ரசித்தார்.

         இதோ என் நாயகர்.

          என் மானசீக குரு

          ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

          கண்ணாரக் கண்டுவிட்டோமே, அதுபோதும்.

         அன்றிலிருந்து, தங்கத்தின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி.

         1952 ஆம் ஆண்டுகளில், கல்கியில் வெளிவந்த, பொன்னியின் செல்வன், வரலாற்றுப் புதினத்திற்கு, ஓவியர் மணியன் வரைந்த, எழில் மிகு ஓவியங்கள், தங்கத்தின் மனதைச் சுற்றிச் சுற்றி வந்தன.

         பொன்னியின் செல்வன் முழுவதையும், சித்திரத்தில் வரைந்தால் என்ன?

         நண்பர்களிடம் வாய் விட்டும் சொன்னார்.

         நடக்கிற காரியமா? என்று அவநம்பிக்கையினைத்தான் விதைத்தார்கள்.

         தங்கத்தின் பாதை மாறியது.

          தினத்தந்தியில் இருந்து விலகி, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நிரந்தரப் பணியேற்றார்.

         ஓவியர், மற்றும் புகைப்படம் எடுக்கும் பணி.

          ஆண்டுகள் விரைவாய் நகர நகர, பணி ஓய்வும் பெற்றார்.

          பரபரப்பான பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வாய் வீட்டில் அமர்ந்த போது, மீண்டும் அந்த ஆசை தலையெடுத்தது.

         பொன்னியின் செல்வனை முழுதாய் வரைந்துவிட வேண்டும்.

         முடியுமா? தன்னைத்தானே கேட்டுக் கொண்டார்.

         ஏன் முடியாது?

         எடு தூரிகையை? மனம் கட்டளையிட்டது.

         உடலும், உள்ளமும் தயாரானது.

         பொன்னியின் செல்வன் சித்திரக் கதை பெரு முயற்சி.

         பல்லாண்டு கால உழைப்பை, முழுதாய் முழுங்கக் கூடிய பெரிதினும் பெரிதான அரும் முயற்சி.

         தொடர் முயற்சி.

          எனவே, சிறியதாய், சிறிய கதை  ஒன்றினைச் சித்திரமாய் வரைந்து பார்த்துவிட்டு, பொன்னியின் செல்வனில் குதித்தால் என்ன?

           யோசித்துப் பார்த்தார்.

            ஓராண்டிற்கும் மேல் உழைத்தார்.

          

இராஜ கம்பீரன்


           வரலாற்றுக் சிறுகதை.

           சித்திரக் கதையாய் உரு மாற்றம் பெற்றது.

           நூலாய் வெளிவந்தது.

           தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்தன.

          100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெற்றி.

          இனி மாரத்தானில் ஓடுவோம்.

           துணிந்து முடிவெடுத்துக் களத்தில் இறங்கினார்.

           பொன்னியின் செல்வன்

           சித்திரக் கதை

          


இரண்டு பகுதிகள் வெளி வந்து விட்டன.

           பொன்னியின் செல்வன் வரலாற்று நிகழ்வுகளைத், திரைப்படம் போல், கண் முன்னே ஓட விடும் சித்திரக் கதை.

           பக்கத்துக்குப் பக்கம் வியப்பு.

           பக்கத்துக்குப் பக்கம் பிரமிப்பு.

----

          ஓவியர் தங்கம்

          அண்டார்டிகாவில், ஒன்றரை வருடங்கள், இந்திய ஆய்வுக் குழுவின் தலைவராய் சென்று, தங்கி, சாதனைகள் பல புரிந்த, கர்னல் கணேசன் அவர்களின் நண்பர்.

         சில முறை இவரோடு, அலைபேசி வழி பேசியிருக்கிறேன்.

         ஆயினும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு, தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

         14.4.2017

         வெள்ளிக் கிழமை

         சித்திரைத் திங்களின் முதல் நாள்.

        மாலை 4.30 மணி அளவில், வலையுலகு நன்கு அறிந்த, ஆய்வாளர், எண்ணற்ற புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து, உலகின் கவனத்திற்கு மீட்டுத் தந்த, முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களுடன், இணைந்து, இருசக்கர வாகனத்தில் பயணித்தேன்.

         தஞ்சாவூர், மாரியம்மன் கோயில் செல்லும் சாலை.

         பெஸ்ட் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளியினைக் கடந்ததும், வலது புறத்தில் ஞானம் நகர்.

         ஞானம் நகர் 6 வது குறுக்குச் சாலை.

          இதோ, ஓவியர் தங்கம் அவர்களின் இல்லம்.

          அன்பொழுக வரவேற்கிறார்.

           வீட்டினுள் சென்று அமர்கிறோம்.

          

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின், நெடு நாளைய, நீண்ட ஆண்டுகால நட்பினர்.

           இன்னும் சொல்லப்போனால், முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் தந்தையின், நெருங்கிய நண்பர்.

         தாராசுரம் புகை வண்டி நிலையத்தில் அமர்ந்து, ஜம்புலிங்கம் அவர்களின் தந்தையுடன், மணிக் கணக்கில், உரையாடி மகிழ்ந்த, பழங்கால நினைவலைகளில் மூழ்கித் திளைத்தார்.

         ஓவியர் தங்கம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி சந்திரோதயம் அவர்களும் ஒரு ஓவியர்.

         ஓவியத் தம்பதியினர்.

         வியப்பாக இருந்தது.

         ஓவியக் கலை என்னும் மாபெரும் கலையினை, உயரிய கலையினை, உன்னதக் கலையினை, தங்கள் விரல் நுனியில், பத்திரமாய் பாதுகாக்கும் தம்பதியினர்.

         தினத் தந்தி நாளிதழில், முதன் முதலாய் வெளிவந்த, இவரது கார்ட்டூன் பற்றி, நேற்று நடந்த நிகழ்வினை விவரிப்பது போல், நெகிழ்ந்து போய் விவரித்தார்.

         22.12.1958 இல் முதல் கார்ட்டூன்.

         திரையரங்கினுள் புகை பிடித்தல் குற்றம் என்பதை வலியுறுத்தும் படம்.

         திரையரங்கில், புகை பிடித்தவர்களை எல்லாம், பெரிய பெரிய, காவலர்களின் கரங்கள், கைது செய்து இழுத்துச் செல்வதைப் போன்ற படம்.

         இப்படம் தினத்தந்தியில் வெளிவந்த, ஐந்தாவது நாள் ஒரு கடிதம்.

       அன்புத் தாயிடமிருந்து ஒரு கடிதம்.

       தங்கம், தினத்தந்தி பேப்பரில், நீ வரைந்த படத்தை, குருசாமி மாமா காட்டினார்கள். அக்கா, உங்க மகன் தங்கம் வரைந்த படம், தினத்தந்தியில் வந்திருக்கு என்று என்னிடம் தந்தார்கள்.

       அந்தப் படத்தையும், கீழே தங்கம் என்று உன் பெயரைப் பார்த்ததும், நான் அழுதுவிட்டேன்.

       என் மகன் வரைந்த படம். நாடு முழுவதும் பார்க்கிறார்கள் என்ற சந்தோசத்தில் அழுகை வந்துவிட்டது.

        நிகழ்வினை விவரிக்கும் பொழுதே, ஓவியரின் குரல், தன்னையும் அறியாமல் தழுதழுக்கிறது. கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

        ஓவியர் தங்கம் அவர்களின் வயது 80.

        ஆயினும், தன் தாயைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம், சிறு குழந்தையைப்போல், தேம்புகிறார்.

         ஒரு மணிநேரம், முழுதாய் ஒரு மணி நேரம், விடாமல், அயராமல் பேசினார்.

         பொன்னியின் செல்வன் மூன்றாம் பகுதிக்காக, தான் வரைந்து வரும் படங்களை எல்லாம் காட்டினார்.

       மெல்லத் தடவிப் பார்த்தேன்.

படத்தில் வந்தியத் தேவனின் கரம் பற்றிப் பார்த்தேன்.

       வந்தியத் தேவரை நேரில் கண்டது போன்ற உணர்வு.

       ஒரு பக்கம் படம் வரைவதற்கு எவ்வளவு நேரமாகும்? மெல்லக் கேட்டேன்.

        ஒரு நாள், சிலசமயம் ஒன்றரை நாள் கூட ஆகும் என்றார்.

        வியந்து போய்விட்டேன்.

        இருபத்து நான்கு மணி நேரமும், பொன்னியின் செல்வன், இவருக்குள், திரைப்படம் போல் ஓடிக் கொண்டே இருக்கிறது.

       வந்தியத் தேவனும், குந்தவையும், வானதியும், அருள் மொழி வர்மனும், இவர்தம் இரத்தத்தோடு, இரத்தமாய் கலந்து விட்டார்கள்.

       ஒவ்வொரு அத்தியாயமாய் படம் வரைகிறார்.

       காட்சிகளைக் கண்முன் கொண்டு வருகிறார்.

       நம்மையும், அக்காலத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

       பொன்னியின் செல்வன், இரு பகுதிகளை, சித்திரக் கதையாய் மாற்ற, இரண்டு வருடங்களுக்கும் மேல் முழுதாய் செலவிட்டிருக்கிறார்.

       ஒவ்வொரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் இதற்காகவே உழைத்திருக்கிறார்.

        பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின், 41 அத்தியாயங்களை மட்டுமே, இதுவரை இரண்டு பகுதிகளாய் வெளியிட்டிருக்கிறார்.

       இன்னும் மிக நீண்ட பயணம் காத்திருக்கிறது.

      பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை மட்டும், முழுமையாய் சித்திரத்தால் வரைந்திட உறுதி கொண்டுள்ளேன்.

        மற்ற பாகங்களை, யாரேனும் தொடர்வார்கள் என்று திண்ணமாய் நம்புகிறேன் என்றார்.

       வந்தியத்தேவனை வரைந்த கை, ஒரு நாளும் ஓய்வெடுக்காது, அருள் மொழி வர்மனை நினைத்த நெஞ்சம், எடுத்த செயலை ஒரு நாளும் பாதியில் விடாது, குந்தவையை எண்ணி எண்ணி குளிர்ந்த நெஞ்சம், முழுவதையும் வரையாமல் கண் துஞ்ச விடாது.

        பொன்னியின் செல்வன் முழுவதையும், சித்திரக் கதையாக்கி உலகு முழுவதும், உலாவ விடும் பொறுப்பினை, இயற்கை தங்களுக்குப் பணித்திருக்கிறது.

         இயற்கையே என்றும் வெல்லும்.

        பொன்னியின் செல்வனின் ஐந்து பாகமும்., முழுதாய் தங்களால் சித்திரக் கதையாய் மாறும் என்றோம்.

         ஓவியர் தங்கம் மகிழ்ந்தார், நெகிழ்ந்தார்.

மீண்டும் வந்தியத்தேவனையும், அருள் மொழி வர்மனையும், குந்தவையையும், சுந்தரச் சோழரையும், பூங்குழலியையும், மணிமேகலையையும், வானதியையும், கந்தமாறனையும், சேந்தன் அமுதனையும், ஆழ்வார்கடியானையும், பழுவேட்டையர்களையும், நந்தினியையும் காண வேண்டுமா,
கண்ணாரக் கண்டு மகிழ வேண்டுமா
இதோ
பொன்னியின் செல்வன்
சித்திரக் கதை
பக்கத்துக்குப் பக்கம்
உயிர் பெற்று எழும் வரலாற்று நிகழ்வுகள்.


ஓவியர் தங்கம்
அவர்களின்
பொன்னியின் செல்வன்
சித்திரக் கதை
கால இயந்திரத்தில்,
நம்மை ஏற்றி,
பத்து நூறாண்டுகள்
பின்னோக்கிப் பயணிக்கக்
காத்திருக்கிறது

வாருங்கள்,  வாருங்கள்
கால இயந்திரத்தில்
ஏறி அமருங்கள்.
பயணித்துப் பார்ப்போம்.

வந்தியத்தேவனை
நேரில் சந்தித்து
கைகுலுக்கி மகிழ்வோம்.
________________________________________________________________________
நூல் கிடைக்குமிடம்
தங்கப் பதுமைப் பதிப்பகம்,
ஞானம் நகர், ஆறாவது மெயின் ரோடு,
மாரியம்மன் கோயில் அஞ்சல்.
தஞ்சாவூர் -613 501
அலைபேசி 91 59 58 24 67