ஆண்டு
2008.
      அஸ்ஸாம்.
      ஜோஹார்ட் மாவட்டம்.
      கோஹிலா
முக்.
      பிரம்மபுத்ரா
நதிக்கரையோரம்.
      கடும்
கோடைக் காலத்தின் ஒரு நாள் இரவு.
      சிறு குடிசையினுள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த,
அம்மனிதர், திடீரென்று கண் விழித்தார்.
     ஏதோ ஒரு சலசலப்பு, ஒரு ஒலி அவரது உறக்கத்தைக்
கலைத்திருந்தது.
     அசையாமல் படுத்து, காதுகளைக் கூர் தீட்டிக் கேட்டார்.
     வெகு தொலைவில் இருந்து, அந்த ஒலி, விட்டு விட்டுக்
கேட்டது.
     நேரம் ஆக ஆக, ஒலியின் வேகம் அதிகரித்துக் கொண்டே
வந்தது.
     அந்த ஒலி, யானையின் பிளிறல் சத்தம்.
     யானை என்பது கூட தவறு
     யானைகளின் பிளிறல்களின் ஓசை.
     யானைக் கூட்டம் ஒன்று நொடிக்கு நொடி நெருங்கி
வரும் சத்தம்.
     மெல்ல எழுந்த அம்மனிதர், தன் மனைவியையும், மூன்று
பிள்ளைகளையும் எழுப்பினார்.
     குடிசையினை விட்டு வெளியே வந்தார்.
     குடும்பத்தோடு, பாதுகாப்பான இடத்தில் மறைந்து
கொண்டார்.
     பெருங் கூட்டமாய் யானைகள், எதிர்படும், மரம்,
மட்டைகளை எல்லாம் முறித்து, தின்றபடி வரும் காட்சி, நிலவொளியில் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.
     நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள்.
     மேற்கூரை ஆகாயத்தில் பறந்தது.
     ஆனால் அம்மனிதரோ சிரித்துக் கொண்டிருக்கிறார்.
     மகிழ்ச்சியில், பெருமிதத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
     யானைகள் வந்துவிட்டன,
     முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி.
     யானைகள் வந்துவிட்டன
    மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அம் மனிதர், தன்
மனைவி மக்களை, இறுக அணைத்துக் கொள்கிறார்.
     யானைகள் வந்துவிட்டன.
     உலகின் உயரிய பரிசான, நோபல் பரிசினையேப் பெற்ற
ஓர் உணர்வு.
     யானைகள் வந்துவிட்டன
     மகிழ்கிறார், மகிழ்ச்சியில் மிதக்கிறார்.
     யானைகள் வந்துவிட்டன.
     யானைக் கூட்டம், மெல்ல, மெல்ல அருகில் இருந்த,
அடர்ந்த கானகத்தில் நுழைந்து மறைகிறது.
     மெல்ல மெல்லப் பொழுதும் விடிகிறது.
     கிராம மக்கள் கொதித்து எழுந்தனர்.
     நம் கிராமத்தை ஒட்டி, அடர்த்தியான காடு இருப்பதால்தானே,
நமக்கு இந்த இழப்பு
     காட்டை அழித்து விட்டால்
     காட்டை கொளுத்தி விட்டால்.
     கிராமமே ஒன்று கூடி, காட்டை நெருங்குகிறது
     காட்டின் விளிம்பில், ஒற்றை ஆளாய், அம் மனிதர்.
     இரு கைகளிலும், மிகப் பெரிய அரிவாள்களைச் சுமந்தபடி
நிற்கிறார்.
     வாருங்கள்
     என்னைக் கொன்று, கூறு போட்டால்தான், காட்டினை
நெருங்க முடியும், வாருங்கள்.
      நானும் தயார்
      உடலில் இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வரை,
இந்தக் காட்டைத் தொட நினைப்பவர்களை அனைவரையும் வெட்டுவேன்.
     வாருங்கள்
     இன்று வரை மரங்களுக்குத் தண்ணீர்தான் ஊற்றினேன்.
     இன்று உங்கள் இரத்தத்தை ஊற்றுகிறேன்
     வாருங்கள்.
     கிராம மக்கள் திகைத்து
நின்றனர்.
     ஓங்கி உயர்ந்து, அடர்ந்து வளர்ந்திருந்த அந்தக்
கானகத்தின் பெயர்.
     முலாய் காடு.
---
     ஆண்டு 1979.
     /தாமிர பரணி/ பிரம்மபுத்ரா எங்கும் பெரு வெள்ளம்.,
     பாம்புகள்.
    பாம்புகள், பல்வேறு வகை இனங்களைச் சேர்ந்த பாம்புகள்,
கரை ஒதுங்கி, சுடு மணலில், கொத்துக் கொத்தாய் செத்துக் கிடக்கின்றன.
    கரையோரம் நடந்து வந்த, அந்த 16 வயது சிறுவனுக்கு
ஒன்றும் புரியவில்லை.
    கரையெங்கும் பாம்புகள், இறந்து கிடக்கும் காட்சி,
அச்சிறுவனைக் கலங்க அடித்து விட்டது.
     பாம்பினைப் பார்த்தாலே, பயந்து ஓடிக்கொண்டிருந்த
சிறுவன்தான் இவன்.
     ஆனாலும், இத்தனைப் பாம்புகள், இறந்து கிடக்கும்
காட்சியை, அவனால் தாங்க இயலவில்லை, சகித்துக் கொள்ள முடியவில்லை.
     தன்னையும் அறியாமல், ஓரிடத்தில் அமர்ந்து அழுதான்.
    குலுங்கிக் குலுங்கி அழுதான்.
    ஏன்?
    அழுது அழுது வீங்கிய முகத்தோடு, ஊருக்குள் சென்று,
வயதானவர்களைக் கேட்டான்.
    ஏன் பாம்புகள் இறந்து கிடக்கின்றன?
    வெயில்.
    வெயில், ஒற்றை வார்த்தை பதிலாய் வந்தது.
    என்னது வெயிலா?
     ஆம், வெயில்தான் காரணம். கரை முழுவதும், எங்காவது
மரமிருக்கிறதா, பார்த்தாயா? பூமி வறண்டல்லவா கிடக்கிறது.
     நிழல் என்பதே இல்லையே
     வெப்பத்தைத் தாங்க இயலாமல்தான், சூட்டினைப் பொறுக்க
முடியாமல்தான், அத்தனைப் பாம்புகளும் இறந்து கிடக்கின்றன.
     அந்த நிமிடத்தில், அந்த நொடியில், அச்சிறுவன்
முடிவு செய்தான்.
     மரம் வளர்க்கப் போகிறேன்.
     இனி எனது பணி, எனது வாழ்நாள் முழுவதும் எனது
பணி மரம் வளர்ப்பதுதான், என்பதை, அச்சிறுவன், அந்த நொடியில் முடிவு செய்தான்,
     மரம்
வளர்க்கப் போகிறேன்.
     என்ன மரம் வளர்க்கலாம், ஆலோசனை
கேட்டான்.
     இம் மணலில் எந்த மரத்தையும் வளர்க்க முடியாது.
     துவண்டு விடவில்லை அச்சிறுவன்
     ஒவ்வொருவராய் அணுகி, ஆலோசனை கேட்டான்.
     ஒருவர் மட்டும் சொன்னார்
     மூங்கில் வளர்க்கலாம். ஆனால் அது கடினமானப் பணி
     அன்றே இருபது மூங்கில் விதைகள் மணலில் விதைத்தான்.
      அசராமல் வளர்ந்தான்.
      நீர் ஊற்றிக் கொண்டே இருந்தான்.
      ஆற்று மணலே, இவனது வசிப்பிடமாய் மாறிப் போனது.
      கிராமத்தில் இருந்து, சிவப்பு எறும்புகளைப்
பிடித்து, பைக்குள் சேமித்து, எடுத்துச் சென்று, மணலில் விடுவான்.
      சிவப்பு எறும்புகள் கடித்துக் கடித்து, கைகள்
மரத்தே போய்விட்டன.
     எறும்புகளை எதற்காக மணலில் விட வேண்டும்,?.
     எறும்புகள் மணலின் தன்மையை மாற்றும் வல்லமை வாய்ந்தவை.
     எனவே வலியைப் பொறுத்துக் கொண்டு, எறும்புகளை
முடிந்தவரை, மணலுக்குக் கொண்டு போய் சேர்த்தான். 
     எறும்புகள் பெருகின.
     மணலின் தன்மை மாறியது
     மூங்கில்களும் மெல்ல, மெல்ல வளர்ந்தன.
     சிறுவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை
    அசராமல் நடந்து, மேலும் மேலும் அதிகமாய் நீர்
ஊற்றினான்.
     மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஒலி கேட்டு
மகிழ்ந்தான்.
     மூங்கில்கள் தங்கள் வாய் திறந்து பேசுகிறது,
வா
நண்பா, இன்னும் கொஞ்சம், தண்ணீர் கொடுப்பாயா? என்று கேட்கிறது என்று தன்னுள்
எண்ணி, எண்ணி மகிழ்ந்து, இன்னும் அதிகமாய் நீரூற்றி மகிழ்ந்தான்.
     சில வருடங்களில் எங்கு நோக்கினும் மூங்கில்கள்.
    வெறும் இருபதே விதைகளில் தொடங்கிய முயற்சி, மெல்ல
மெல்லப் பரவி, வளர்ந்து, பல்கிப் பெருகி, சிறு மூங்கில் வனமாகவே மாறியது.
     மூங்கிலின் வளர்ச்சியால், மணல் பகுதி இறுகியது.
     பின் சிறிது சிறிதாய், மற்ற தாவரங்களை, நிழல்
தரும் மரங்களை, காய் தந்து, பின் கனி வழங்கும் மரங்களை, நட்டுக் கொண்டே சென்றான்.
      மணற் பரப்பு, மெல்ல மெல்ல, அடர் கானகமாய் உருமாறிக்
கொண்ட வந்தது.
     வளர்ந்து, வாலிபப் பருவத்தை எட்டியச் சிறுவன்,
நடந்து கொண்டே இருந்தார். தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தார்.
      வாலிபருக்குத் திருமணமானது.
      மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார்.
      இரண்டு மகன்கள், ஒரு மகள்.
      சொந்தமாய் ஒரு மாட்டுப் பண்ணை
     காலையும், மாலையும் பால் வியாபாரம்.
     மரங்களின் அடர்த்தியும், பரப்பளவும் சீராய்,
வெகு சீராய் வளர்ந்து பரவிக் கொண்டே சென்றன.
     பன்னிரெண்டே ஆண்டுகளில் புத்தம் புதிதாய் ஒரு
காடு, ஒரு அடர் காடு, ஒரு கானகம்.
     தனியொரு மனிதரின் அயரா உழைப்பில் ஒரு அடர்ந்த
காடு
     கழுகுகள், நாடு விட்டு நாடு பறக்கும பறவைகளின்
சரணாலயமாய் காடு மாறியது.
     சிறு சிறு விலங்குகள், மான், நாய், நரி என புதிது
புதிதாய் விலங்குகள் அடைக்கலம் நாடி வந்தன.
      சிறு சிறு விலங்குகளை வேட்டையாட, மெல்ல மெல்லப்
பெரு விலங்குகள், தான தேடி வந்தன.
      பெங்கால்
புலிகள், காண்டா மிருகங்கள், காட்டெருமைகள், நூற்றுக்கும் மேற்பட்ட மான், முயல் வகைகள்
என விலங்குகளின் உறைவிடமாக காடு மாறிப் போனது.
       காசிரங்காவில் ஏற்படட வெள்ளத்தின் போது, தப்பித்த,
நீர் யானைகளுக்குப் புகுந்த வீடாகவும், (Karbi
Anglong) கர்பி அன்கலாங் மாவட்ட வேட்டைக்காரர்களின் துப்பாக்கிகளுக்குத் தப்பித்த
புலிகளின் புகழிடமாகவும், இக் கானகம் மாறிப் போனது.
      ஒரு தனி மனிதரின், ஒரே ஒரு தனி மனிதரின், அயரா
முயற்சியால். தளரா உழைப்பால், இருபதே இருபது மூங்கில் விதைகளுடன் தொடங்கிய முயற்சி,
இன்று 1,360 ஏக்கர் காடாக, கானகமாய உயிர்
பெற்று எழுந்துள்ளது.
     இன்று இக் காட்டின் பெயர்
     முலாய் காடு
---
     அடர்த்தியாய் ஒரு மாபெரும் கானகம்.
     அவர்கள் கண்  முன்னே, தலை நிமிர்ந்து நிற்கும் காட்சியைக் கண்டு
திகைத்துத்தான் போய்விட்டார்கள்.
      தங்கள் வசம் இருந்த வரைபடங்களை எல்லாம், புரட்டிப்
புரட்டிப் பார்த்தார்கள், கண்களைக் கசக்கிக் கொண்டு தேடித் தேடிப் பார்த்தார்கள்.
      வரை படத்தில், இப்படி ஒரு காடு, கானகம் இருப்பதாய்,
எந்த ஒரு தகவலும் இல்லை.
      எப்படி இப்படி ஒரு புத்தம் புது கானகம், திடீரென்று
முளைத்திருக்கிறது.
    கிராமத்தினர், தனியொரு மனிதரைச் சுட்டிக் காட்டினார்கள்.
    முலாய்
     அம் மனிதரின் செல்லப் பெயர்.
     முலாய்
     முலாய் காடு
     காட்டினையே, இம்மனிதரின் பெயர் சொல்லித்தான்,
கிராமத்தினர் அழைத்தனர்.
     முலாய்
     தன்னந்தனியாய், ஒரு மாபெரும் காட்டினையே உருவாக்கிய
மாமனிதர்.
     இயற்பெயர்
     ஜாதவ் பயேங்க்.
     செய்தியறிந்து அரசே மிரண்டு போனது.
     இப்படியும் ஒரு மனிதரா?
     ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம்
கானக மனிதன் (Forest Man)  என்னும விருது வழங்கிப் பாராட்டியது.
     பள்ளிக் கல்வியின் பாடத் திட்டத்தில்,
மரம் வளர்ப்பு என்பது, ஒரு பகுதியாய் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியரும்,
இரண்டே இரண்டு மரக் கன்றுகளையாவது நட்டு, பள்ளிப் படிப்பு முடிந்து செல்லும் வரையில்,
பொறுப்பேற்று, மரக் கன்றுகளை வளர்ந்து மரங்களாக்க வேண்டும்.














 
