28.6.2018
வியாழக் கிழமை
அன்றைய பொழுது, வழக்கம்போல்தான் விடிந்தது.
எந்தை பணிக்குச் சென்றார்
நான் பள்ளிக்குச் சென்றேன்.
எந்தை
திரு சி.கிருட்டிணமூர்த்தி
வயது 79
புள்ளியியல் துறையில், மண்டல துணை இயக்குநராகப்
பணியாற்றி, 1998 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், தனது பணியினை நிறைவு செய்தவர்.
பணி ஓய்விற்குப் பிறகும் பணியாற்ற விரும்பினார்
நான் பலமுறை தடுத்திருக்கிறேன்
எனக்கு
வேலை கிடைத்துவிட்டது. நான் ஊதியம் ஈட்டுகிறேன். எதற்காக நீங்கள் பணிக்குச் செல்ல வேண்டும்.
ஓய்வெடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் எனப் பலமுறை தடுத்திருக்கிறேன்.
எந்தவொரு
வேலையும் செய்யாமல், வீட்டில் முடங்கிக் கிடப்பது என்பது என்னால் முடியாத செயல். ஊதியம்
பெரிதல்ல. உழைக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் பெஸ்ட் மருத்துவமனையில்,
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நிர்வாக அலுவலராகப் பணியாற்றினார்.
அம்மருத்துவமனையின் மருத்துவர் ரவி அவர்கள்,
உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவப் பணியில் இருந்து விலகிய பின், அம்மருத்துவமனையும்,
தன் சேவையினை நிறுத்திக் கொண்டது.
அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ்., மருத்துவமனையில்,
நிர்வாக அலுவலராகப் பணியாற்றத் தொடங்கினார்.
காலையில் நடைப் பயிற்சி
அரைநாள் மருத்துவமனைப் பணி
பிற்பகல் ஓய்வு
மாலை நேரங்களில், நடைப் பயிற்சி மற்றும் நண்பர்களுடன்
பேசி மகிழ்வது என நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.
எங்களது வீட்டிற்கு நேரெதிரில்தான் தஞ்சாவூர்
மருத்துவக் கல்லூரி இருக்கின்றது.
மாலை நேரங்களில், மருத்துவக் கல்லூரி வளாகத்திலோ,
அல்லது சுந்தரம் நகர் பேருந்து நிறுத்தத்திலோ நண்பர்கள் ஒன்று கூடுவர்.
இரவு ஒன்பது மணி வரை பேசி மகிழ்வர்.
பின் மெல்ல நடந்து வீடு திரும்புவார்.
அன்றும் இப்படித்தான் பொழுது நகர்ந்தது.
காலை, தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்குச்
சென்றார்.
மதியம் 1.45 மணி அளவில் வீடு திரும்பினார்
மதிய உணவு
பின் தொலைக் காட்சியில், பழைய படம் ஒன்றினைப்
பார்த்தார்.
சிறிது நேரம் படுத்து உறங்கினார்.
மாலை 5.30 மணியளவில், பள்ளியில் இருந்து
நான் வீடு திரும்பினேன்.
ஓம்
சக்தி இதழ் அஞ்சலில் வந்திருந்தது.
மீண்டும் பெரிய கோவிலில் இராஜராஜன் என்னும்
எனது கட்டுரை, இவ்விதழில் அச்சேறியிருந்தது.
தஞ்சைப் பெரியக் கோவிலில் இருந்து மாயமாய்
மறைந்த, இராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள், 76
ஆண்டுகள் கடந்த நிலையில் மீட்டுவரப்பெற்ற வரலாற்று நிகழ்வு பற்றியக் கட்டுரை.
வெளியில் கிளம்பியவர், சாய்வு
நாற்காலியில் அமர்ந்து, மூன்று பக்கக் கட்டுரையினை நிதானமாகப் படித்தார்.
தஞ்சைப் பெரியக் கோவில், சிலைகள், சிலைகள் கடத்தல்
தடுப்புப் பிரிவு ஐ.ஜி., திரு பொன்.மாணிக்கவேல், தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் முனைவர்
த.செந்தில் குமார் முதலியோர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி முப்பது நிமிடங்களுக்கும்
மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, ஓரிரு
நிமிடங்களுக்கும் மேல், எந்தையார் என்னுடன் பேசியதில்லை.
அளவாகத்தான் பேசுவார்.
ஆனால் அன்று தன் இயல்பினையும் மீறி, முப்பது நிமிடங்களுக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தவர்,
சரி நான் வாக்கிங் போயிட்டு வர்றேன் என்று
கூறி, எழுந்து சென்றார்.
இரவு 9.00 மணியளவில் வீடு திரும்பினார்
இரவு உணவு உண்டார்
படுத்தார்
இரவு பத்து மணியளவில், கழிவறைக்குச் சென்றார்
பத்து நிமிடங்கள் கடந்த பிறகும்,
எந்தையார் வெளியில் வரவில்லை.
தண்ணீர் கொட்டும் ஒலி மட்டும் கேட்டது
என் மனைவிதான் என்னிடம் கூறினார், மாமா
சென்று பத்து நிமிடங்களுக்கும் மேலாகிவிட்டது என்றார்.
அப்பா, அப்பா என்று குரல் கொடுத்து அழைத்தேன்
பதிலில்லை
கதவைத் தட்டினேன்
அப்பொழுதும் பதிலில்லை
என்ன செய்வது என்று புரியவில்லை
ஓங்கிக் குரல் கொடுத்தவாரே, கதவை வேகமாகத் தட்ட, தாழ்ப்பாள் உடைந்தது.
ஆயினும் கதவைத் திறக்க இயலவில்லை
மெதுவாகக் கதவைத் தள்ளினேன்
கழிவறையில், கதவின் மேல் சாய்ந்தவாரே, என் தந்தை அமர்ந்திருந்தார்.
அப்பா, அப்பா எனக் கத்துகிறேன்
மாமா, மாமா என என் மனைவி பதறுகிறார்
எங்களது சத்தம் கேட்டு, இரவு தூக்க மாத்திரையின் தயவில், தூங்கிக் கொண்டிருந்த,
என் அம்மா, பாதி உறக்கம் கலைந்த நிலையில், ஒன்றும் புரியாமல், எழுந்து வந்து நிற்கிறார்.
என் மகள் திகைத்து நிற்கிறார்
என் மகன் ஓடி வந்து, உதவ, மெல்லக் கதவினைத் திறந்து, என் தந்தையைத் தூக்கி,
மடியில் வைத்துக் கொண்டு கதறுகிறேன்.
எந்தை கண் திறக்கவில்லை
எனக்குத் தெரிந்த வரையில், மார்புப்
பகுதியை, அழுத்தி அழுத்திப் பார்க்கிறேன்.
பயனில்லை
பத்தே, பத்து நிமிடங்களில் என் தந்தை, எங்களை எல்லாம் பரிதவிக்க விட்டுவிட்டு,
மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.
என் மடியில் படுத்தவாறு, முகத்தில் துன்பத்தின் ரேகையோ, கவலையின் அறிகுறியோ
ஏதுமின்றி, சிறு குழந்தைபோல், அமைதியான உறக்கத்தில் என் தந்தை.
வாழ்வில் எத்துணையோ தடைகளைக் கடந்து
வந்தவரின் வாழ்க்கை, பத்தே நிமிடங்களில் முடிந்து விட்டது.
தன் குடலில் எழுபத்து ஐந்து சதவீத குடல் அகற்றப்பட்டு, இருபத்து ஐந்து சதவீத
குடலுடன், 23 ஆண்டுகள் வாழ்ந்தவர் என் தந்தை.
2004 ஆம் ஆண்டில், இதயத்திற்குச் செல்லும், இரத்த நாளங்களில், பல்வேறு இடங்களில்
அடைப்பு.
ஆஞ்சியோ செய்வதற்குக் கூட, தாக்குப் பிடிக்காத உடல் நிலை என மருத்துவர்கள், கை விரித்தபோதும், மருத்துவர்
தம்பையாவின், உயரிய, சித்த மருந்துகளின் உதவியால், அடைப்புகளை எல்லாம் உடைத்துத் தகர்த்து
எறிந்து, 14 ஆண்டுகள் வாழ்ந்தவர் என் தந்தை.
இரு முறை நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்குச் சென்றபோதும், இரண்டொரு நாட்களிலேயே,
புது மனிதராய் இல்லம் திரும்பியவர் என் தந்தை.
காலை, மாலை உடற் பயிற்சி, கடந்த ஒரு வருட காலமாக காலையில், அரை மணி நேரம் யோகா,
முறையான மருத்துவம், எனத் தன் உடலைப் பேணிக் காத்தவர் என் தந்தை.
உடலில் அவ்வப்போது துன்பங்கள், எட்டிப் பார்த்தாலும், உள்ளத்தால் மகிழ்வான வாழ்வு
வாழ்ந்தவர் என் தந்தை.
இரண்டே இரண்டு பிள்ளைகள்
நான்
என் தம்பி
அளவான குடும்பம்
நான் ஆசிரியர்
என் தம்பி, சுரேஷ் காந்தி பொறியாளர்
என்னோடு தாய், தந்தையர்.
இருவருமே நல் வாழ்வுதான் வாழ்கிறோம்
எனக்கு ஒரு மகன், ஒரு மகள்
என் தம்பிக்கு ஒரு மகன், ஒரு மகள்
பெயரப் பிள்ளைகளைக் கொஞ்சி நிறை வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை.
ஒரு நாள் கூட, உடல் நிலை சரியில்லை எனப் படுக்கையில் வீழ்ந்தவரல்ல என் தந்தை.
பத்து நிமிடங்கள்
பத்தே பத்து நிமிடங்களில், எழுபத்து
ஒன்பது ஆண்டுகால வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது.
இரவில் நான் வீடு திரும்ப, சிறிது நேரமாகிவிட்டாலும், உடனே அலைபேசியில் அழைத்து,
ஏன் இன்னும் வரல? எங்கிருக்கிறாய்? என்று
கேட்கும் என் தந்தை, இன்று இல்லை.
பெயரப் பிள்ளைகளுக்குத் தினம் தினம், ஏதேனும் ஒரு தின்பண்டம் வாங்கிக் கொடுத்து
மகிழும், என் தந்தை இன்று இல்லை.
என்னைச் சுற்றிப் பின்னப் பெற்றிருந்த, ஒரு பெரும் பாதுகாப்பு வளையம், தூள்
தூளாகிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு.
சிந்தனை துறந்து நிற்கின்றேன்.
இன்றுவரை எத்துணையோ நண்பர்கள் இல்லத் துயரங்கள், உறவினர்கள் இல்லத் துயரங்கள்
எனப் பலப்பல துயரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன்.
ஆனால் இப்பொழுதுதான், முதன் முதலாக, பிரிவின் துயரை, பிரிவின் வலியை, வலிமையை
முழுமையாக உணர்கிறேன்.
இதுதான் பிரிவா
இதுதான் துயரா.
எளியேனான, என்மீது, பேரன்பு கொண்டு, எந்தையின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து, பெரும் ஆறுதலை வழங்கினார், தஞ்சாவூர், காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில்குமார் அவர்கள் .(15.7.2018) |
கண்களில் நீர் திரையிடுகின்றது...
பதிலளிநீக்குதங்களிடம் பேசுதற்கும் மன வலிமை இல்லை என்னிடம்...
அன்பின் உறவுகளைப் பிரிந்து கிடக்கும் என் மனம் துக்கமான செய்திகளைக் கேட்கும் போதெல்லாம் துவண்டு விடுகின்றது...
தங்களது தந்தையார் காலமான செய்தியினை விசாரிப்பதற்கும் திறனற்றவனாகினேன்..
என்னைப் பொறுத்தருளுங்கள்...
ஆழ்ந்த அநுதாபங்கள், நண்பரே.
பதிலளிநீக்குஅவரது ஆத்மா தில்லை நடராசர் திருவடிகளில் அமைதியுறுவதாக.
எம் அஞ்சலிகள்,
நா. கணேசன் & குடும்பத்தினர்.
நினைவுகளே வலி! நினைவுகள்தான் மருந்தும். தம் பிளைகள் தங்கங்கள் என்ற நிறைவுடன் விடைபெற்றிருக்கிறார்கள். நமக்குப் பெற்றோர் போல் நாமும் பெற்றோர் என்ற சுழற்சி உள்ளது. நம் தந்தையை நம் வழியாகக் காண காத்திருக்கின்றனர் நம் வாரிசுகள். கண்ணீரைத்துடைத்து கடமையைத் தொடர்வோம்!
பதிலளிநீக்குஎன்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். ஆன்மா அமைதி பெறட்டும்.
பதிலளிநீக்குதாங்களும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரின் மனமும் ஆறுதல் அடைய இறைவனை வேண்டுகிறேன்...
பதிலளிநீக்குதங்களின் தந்தையார் 1968ஆம் ஆண்டு முதல் எனக்கு அறிமுகமானார். அன்று முதல் அவர் எனது உடன் பிறவாத மூத்த சகோதரராகத்தான் நான் பாவித்து பழகி வந்தேன். அவரும் அவ்விதமாகவே என்னிடம் நடந்து கொண்டார். என்னுடைய சுக துக்கங்களில் முதன்மையாக பங்கேற்று எனக்கு முழுமையாக ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்து வந்தவர் இன்று இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவரின் இழப்பு அன்னாரின் குடும்பத்தார்க்கும் என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குதங்களுக்கு எவ்வாற் ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை.காலம் தான் தங்களின் துயரத்திற்கு மருந்திட முடியும். தங்கள் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிகிறேன்!
பதிலளிநீக்குஉறவினர் என்பதைக்கடந்து கன்னியமிக்க பண்புமகுந்த ஒரு மாமனிதரை இழந்துவிட்டதாகவே கருதுகிறேன்.பிள்ளைகளை வளர்ப்பது என்பது வாழ்ந்து காட்டுவதே!
பதிலளிநீக்குDeep condolences
பதிலளிநீக்குShocked
Very painful
ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஆனால் எனக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று அது காலம்தான் நமக்கு ஆறுதல் தரும் என்பது அதையே உங்களுக்கும் சொல்லுகிறேன்
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குதந்தையின் இழப்பு ஈடு செய்ய இயலாதது நானும்சிறு வயதிலேயே அனுபவித்திருக்கிறேன் காலம்காயத்தை மறக்கச் செய்யும் துயர் நீங்கவும் மன வலிமை பெறவும் வேண்டுகிறேன்
பதிலளிநீக்குஎத்தனைதான் ஆறுதல் சொன்னாலும் ஆறாது மனது,மனதை தேற்றிக்கொள்ளுங்கள் நண்பரே,
பதிலளிநீக்குஇழப்பதும், அடைவதுமே நம் வாழ்க்கை..
//உடலில் அவ்வப்போது துன்பங்கள், எட்டிப் பார்த்தாலும், உள்ளத்தால் மகிழ்வான வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை.//
பதிலளிநீக்குதங்கள் தந்தையார் பற்றி படிக்கும் போது எவ்வளவு மனவலிமை படைத்தவர் என்று தெரிகிறது.
//முதன் முதலாக, பிரிவின் துயரை, பிரிவின் வலியை, வலிமையை முழுமையாக உணர்கிறேன்.//
முக நூலில் உங்கள் தந்தையார் இறந்த செய்தி கிடைத்து உங்களுக்கு ஆறுதல் சொன்னாலும் நீங்கள் மீண்டுவர நாட்கள் ஆகும் என்று நினைத்தேன். அம்மாவிற்கு ஆறுதல் சொல்லுங்கள்.
அப்பாவிற்கு தன் சகோதரர் இறந்த வருத்தமும் இருக்கும் போல.
குடும்பத்தினர் அனைவரும் மன ஆறுதல் அடைய வேண்டுகிறேன்.
நோயினால் அதிகம் வதைபடாம இறைவனடி சேர்ந்தார்ன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.
பதிலளிநீக்குஅப்பா இருந்தால் தெய்வமே நம்மோடு இருப்பதற்கு சமம்.. அத்தனை சாதிக்கலாம். அப்பாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்குறேன். அப்படியே, அப்பா இல்லாமல் தவிக்கும் அம்மாவும் விரைவில் தேறி வரனும்ன்னு வேண்டிக்குறேன்ண்ணே
ஆறுதல் எனும் நான்கெழுத்துச் சொல்லாலோ, அத்துடன் இன்னும் எத்துணை எத்துணைச் சொற்களைப் பொழிந்துமோ தேற்றக் கூடிய துயரில்லை இது! ஆனால் ஒன்று! பிரிவு மாறாது; துயர் மாறும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். மனிதர்கள் நம்முடன் இரண்டு வகைகளில் வாழ்கிறார்கள். ஒன்று பூத உடலால்; இன்னொன்று, நினைவுகளால். நினைவுகளால் வாழும் வாழ்வுக்கு எல்லை என்பது இல்லை. அதுபோல் தங்கள் தந்தையாரும் உடலால் தங்களைப் பிரிந்தாலும் நினைவால் தங்களுடன் என்றென்றும் வாழ்வார். வருந்தாதீர்கள்! அம்மா முகத்தைப் பாருங்கள்! பிள்ளைகள் முகத்தைப் பாருங்கள்!
பதிலளிநீக்குஈடு செய்ய முடியாத இழப்பு. நல்ல மனிதர். தானும் கஷ்டப்படாமல், பிறரையும் கஷ்டப்படுத்தாமல் சென்றிருக்கிறார். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.
பதிலளிநீக்குஎன்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். ஆன்மா அமைதி பெறட்டும்.
பதிலளிநீக்குநிறைவான வாழ்க்கையும்/சிரமம் இல்லா மரணமும் எல்லோருக்கும்வாய்ப்பதில்லை தங்கள் தந்தையாருக்கு இவை இரண்டும் வாய்த்திருப்பதை எண்ணி ஆறுதல் கொள்வோம்.அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
பதிலளிநீக்குமிகவும் வருத்தமாக உள்ளது. அன்னாரின் ஆன்மா அமைதி அடையட்டும். இந்தத் துயர நிலையில் கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மன அமைதியும் தைரியத்தையும் அருளட்டும்.
பதிலளிநீக்குஈடு செய்ய முடியாத இழப்பு. இறைவனும் காலமும் உங்கள் துக்கத்தைப் போக்கட்டும் . தந்தையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஆழ்ந்த அஞ்சலிகள். தங்கள் தந்தையின் ஆன்ம சாந்திக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள். நெகிழ்வான பகிர்வு.
பதிலளிநீக்குஆறுதல் சொல்ல உரிய சொற்கள் இல்லை.
பதிலளிநீக்குஇயற்கையான நல்ல மறைவு என்பதால் ஆறுதல் பெற்றிட வேண்டுகிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள். ஈடு செய்ய முடியாத இழப்பு.
பதிலளிநீக்குஉங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.
படித்ததும் நெஞ்சு என்னமோ செய்கிறது... எத்தனை வயதானால் என்ன.. அப்பா அப்பாதான்.. இழப்பு இழப்புத்தான். உங்கள் எல்லோருக்கும் ஆண்டவன் மன அமைதியைத் தர வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குதங்களின் இந்த பதிவினைப், படிக்கப் படிக்க, நெஞ்சம் கனத்தது. கூடவே எனது தந்தையாரின் நினைவுகளும் வந்தன. தங்களது தந்தையாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி. அப்பாவின் ஆன்மா அமைதி பெற எனது பிரார்த்தனை. அம்மாவை கவனித்துக் கொள்ளுங்கள். (எனது உடல்நிலை காரணமாக, அன்றைக்கு தங்கள் தந்தையாரின் மறைவுச் செய்தி அறிந்ததும், தங்களை நேரில் வந்து விசாரிக்க இயலாமல் போனதில் நான் ரொம்பவும் சங்கடப்பட்டு போனேன்)
பதிலளிநீக்கு// 2004 ஆம் ஆண்டில், இதயத்திற்குச் செல்லும், இரத்த நாளங்களில், பல்வேறு இடங்களில் அடைப்பு. ஆஞ்சியோ செய்வதற்குக் கூட, தாக்குப் பிடிக்காத உடல் நிலை என மருத்துவர்கள், கை விரித்தபோதும், மருத்துவர் தம்பையாவின், உயரிய, சித்த மருந்துகளின் உதவியால், அடைப்புகளை எல்லாம் உடைத்துத் தகர்த்து எறிந்து, 14 ஆண்டுகள் வாழ்ந்தவர் என் தந்தை. //
இந்த விஷயம் முன்பே தெரிந்து இருந்தால், நான் தங்கள் தந்தையாரிடம் நேரிலோ அல்லது போனிலோ பேசி, உடல் நலம் சம்பந்தமான எனது சில சந்தேகங்களைக் கேட்டு தெளிந்து இருப்பேன்.
நீங்கள் எழுதியதில் இருந்து, தங்கள் தந்தையார் தன்னம்பிக்கை மிகுந்தவர்; தன்னால் யாருக்கும் சிரமங்கள் இருக்கக் கூடாது; இருக்கும் வரை தன்னால் முடிந்த காரியங்களை தாமே செய்து கொள்ள வேண்டும்; யாருக்கும் பாராமாக இருந்து விடக் கூடாது என்று வாழ்ந்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
// ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
- கவிஞர் வைரமுத்து //
ஆழ்ந்த இரங்கல்கள்....
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்,
பதிலளிநீக்கு//ஆனால் இப்பொழுதுதான்,
முதன் முதலாக, பிரிவின் துயரை,
பிரிவின் வலியை, வலிமையை முழுமையாக உணர்கிறேன்.
இதுதான் பிரிவா
இதுதான் துயரா.//?
இரண்டும்தான்,இழப்புகள் தாங்கிக்
கொள்ள இயலாதவைதான்,
ஆனாலும் அதையும் கடந்தே ஆக வேண்டும்,,,?
மனம் கனத்தது .ஆழ்ந்த இரங்கல்கள் ..அப்பா அவர்களுக்கு அஞ்சலிகள் .இறைவன் உங்கள் குடும்பத்தாருக்கு இந்த இக்கட்டான வேளையில் ஆறுதல் தர பிரார்த்திக்கிறேன்
பதிலளிநீக்குஅன்புள்ள கரந்தையாருக்கு, தங்களின் தந்தை இறந்ததை அறிந்து மிகவும் வருந்துகிறேன். புள்ளியியல் துறையில், மண்டல துணை இயக்குநராகப் பணியாற்றினார் என்பதை அறிந்து வியந்தேன். அது எவ்வளவு உயரிய பணி என்பதை நான் அறிவேன். நான் 1985 ஆண்டில் புதுக்கோட்டையில் புள்ளியியல் துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி இருக்கிறேன். தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅய்யா,தங்களது மனவேதனையை நன்றாக அறிகிறேன்.தந்தையின் பிரிவு ஈடு செய்ய இயலாதது.ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லைங்க..இருப்பினும் இயற்கையின் நியதிதானே! என இயல்பாக எடுத்துக்கொள்ளுங்க.தம் குடும்பத்திற்கு நாம் உள்ளவரை வழிகாட்டவும்,உறுதுணையாக இருக்கவும் நம்மை நாமே திடப்படுத்திக்கொள்ள வேண்டும். எனக்கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அப்பாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குதந்தையின் இழப்பை இளவயதில் உணர்ந்தவன் நான் தங்களது குடும்பம் துயரத்திலிருந்து மீள எனது வேண்டுதலை இறையிடம் சமர்ப்பிக்கின்றேன்.
பதிலளிநீக்குகல்லூரிக்காலத்தில் தேர்வுக்கு சற்று சில நாள்கள் முன்னதாக என் தந்தையை நான் இழந்தேன். இழப்பு என்பதை எளிதாக விவரிக்க முடியாது. உங்களுடைய எழுத்துக்கள் உங்களின் மனதின் பாரத்தினை வெளிப்படுத்துகின்றன. அமைதியான மரணம் என்பது இக்காலத்தில் அரிதாக உள்ள நிலையில் உங்கள் தந்தையாரின் இறுதி நேரத்தில் நீங்கள் உடன் இருந்த வகையில் மிகவும் கொடுத்துவைத்துள்ளீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த இழப்பினை எதிர்கொள்ளும் சக்தியைத் தர இறைவனை இறைஞ்சுகிறேன்.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குஎத்தனை வயதில் இறந்தாலும் தந்தையின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது .காலம் தான் கொஞ்சம் மறக்க வைக்கும்
ஓரிரு நிமிடங்கள் பேசுபவர் 30 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.இறைவனின் செயல் நம்மால் உணர முடிவதில்லை.ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குநெகிழ்ந்துகிடக்கிறது மனம். தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். துயரத்திலிருந்து மீண்டு வர காலம் துணை செய்யட்டும்.
பதிலளிநீக்குMy deepest condolences to u for the loss of ur father. Nobody can replace that place in our life.take care.
பதிலளிநீக்குஎனது வருத்தங்களும்...
பதிலளிநீக்குஇருப்பினும் ஐயாவின் வலிமையும், வாழ்வு முறையும் என்னை வியக்க வைக்கிறது...
தங்கள் தந்தையின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. எந்த வார்த்தையும் தங்களுக்கு ஆறுதலாக அமையாது. தங்கள் குடும்பத்தாரைவிட்டு அவர் எங்கும் சென்றுவிடவில்லை. உங்கள் நினைவுகளில் அவர் வாழ்கிறார். வாழ்வார்.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குஆழ்ந்த வருத்தங்கள்.
பதிலளிநீக்குஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா. உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதலையும் மனவலிமையையும் தர இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு