23 ஜூன் 2018

மனம் சுடும் தோட்டாக்கள்




பள்ளியில் பதற்றத்தில்
அருவருப்பின் உச்சத்தில் செல்ல ….

பணியிடத்தில் வழியின்றி
மறைவிடங்கள் நாடி….

பயணத்திலோ
பரிதவித்து அடக்கிக் கொண்டே …

நகரங்கள் கிராமங்கள்
ஒரே நிலைதான்.


சந்ததிக்கும் மாறவில்லை
அலைச்சலில்
மாதவம் செய்தவர்கள் …..

     சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளாகிப் பயனென்ன, வழுக்கும் சாலைகள் வந்துவிட்டன, சொகுசுப் பேருந்துகள் வந்துவிட்டன, குளிரூட்டப்பட்ட, பேருந்திற்கானக் காத்திருப்பு மையங்கள் கூட வந்துவிட்டன, ஆனால், இயற்கை அழைக்கும் பொழுது, இன்றும் மரத்தடிதானே நம்மைக் காக்கிறது. வேதனையல்லவா

மனக் குகையில்
பயப் பறவைகளின் சிறகசைப்புகள்

நிர்பயாக்களையும்
வினோதாக்களையும்
நினைவுறுத்தி – முற்றுபெறாதென
ஸ்வாதியும்
தொடர்கதையாகுமென சத்தமிடுகின்றன ….

ஒளிந்து கொள்ளத் தோணுகிறது
ஒழியாத வன்முறையால் ….

எங்கோ நடக்கிறது
எவருக்கோ என
சும்மாயிருக்க முடியவில்லை

பிறத்தலை விட, இறத்தல் எளிதாயுள்ளது
கூலிகளால்

வாழ்வு அச்சங்களால்
நகர்த்தப்படுகிறது …

     இதைவிட, இன்றைய நிலையினை, பெண்களின் உண்மை நிலையினை, யாரால் சொல்ல முடியும்.

     காந்தி கண்ட கனவு முழுமையாய் பொய்த்துப் போய்விட்டதை, பொங்கி எழும் உணர்வுகளால் எடுத்துரைக்கும், இக்கவிஞர், காந்தியின் கனவு பலித்துவிட்ட வேறொரு நிகழ்வினை எடுத்து வைக்கும பாங்கினைப் பாருங்கள்.

நட்டநடு இரவு
பன்னிரெண்டு மணி

உடல் நிறைய நகைகளுடன்
ஒற்றைப் பெண் ஊர்வலமாய்
ஆண்கள் புடைசூழ ….

இந்தியாவா இது…. ?
மாரியம்மன் …..

     தெய்வத்திற்குப் பாதுகாப்பு தந்து, உயிருள்ள பெண்களைப் பாடாய் படுத்தும், இச்சமூகத்தின் அவலத்தினை இதைவிட வலிமையாய் எடுத்துச் சொல்ல யாரால் இயலும்.

அவசரமாய் பல்லு தேய்க்காம
அவதியா குளிக்காம
ஆற அமர சாப்பிட்டு

அம்மா கலைக் கட்டிக்கிட்டு
அப்பா கையப் பிடிச்சிக்கிட்டு
கடைக்குப் போகலாமினி

இடிச்சி பிடிச்சி வண்டில பிதுங்கி
இயங்க மறுக்கும் பகல் சிறையில்லை
இன்னுமொரு திங்களுக்கு …

ஆத்தா மடியில புதைஞ்சுக்கலாம்
தாத்தாவோடு விளையாடலாம்

வீட்டுப் பாடம் எழுதச் சொல்லி
அம்மா கொட்டு வைக்கலயே

அடுத்தவீட்டுப் பசங்களோடு
நாள் முழுதும் விளையாடலாம்னு
கனவுடனே எந்திரிச்சேன்

இந்தி வகுப்பு
கம்ப்யூட்டர் வகுப்பு
சம்மர் கிளாஸ்னு கொல்லுறாங்கள்

கேட்க யாரும் மாட்டீங்களா?
நாங்களா வாழ்வது எப்போது?

     படிக்கப் படிக்க, இன்றைய மாணவர்களின் நிலை, மனதை வாட்டத்தான் செய்கிறது.

     இந்நிலை என்று மாறுமோ என்னும் ஏக்கம் நெஞ்சில் எழத்தான் செய்கிறது.

     இவரது கவிதையின் வரிகள் மட்டுமல்ல, கவி வரிகளின் ஒவ்வொரு எழுத்தும் கூட, வலிமைமிகு துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட, தோட்டாக்களாய், நம் மனதைப் பதம் பார்க்கத்தான் செய்கின்றன.

     சமூக அவலங்களைக் கண்டு, எரிமலையாய் குமுறும் இவரது எழுத்துக்கள், தோட்டாக்களாய்ச் சுடத்தான் செய்கின்றன.


மனம் சுடும் தோட்டாக்கள்

     எழுதுகோலில், ஈர மையை நிரப்புவதற்குப் பதிலாக, ஈயத் தோட்டாக்களை நிரப்பி, நம் மனங்களைச் சுட்டு, இரணப் படுத்தியக் கவிஞர்


தேவதா தமிழ்
கவிஞர் மு.கீதா

வாழ்த்துகள் சகோதரியாரே



34 கருத்துகள்:

  1. படைப்பாளிக்கே உரிய சிந்தனை

    பதிலளிநீக்கு
  2. நூலின் மேற்கோல் காட்டிய விடயங்கள் அருமை நண்பரே...

    கவிஞருக்கும் எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான மதிப்புரை. மு.கீதா அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. நூல் ஆசிரியருக்குப் பாராட்டுகள்!
    வழமை போல் தங்கள் எழுத்து
    இந்நூல் அறிமுகத்துக்கு வலுச் சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு நூல் அறிமுகம்...

    அருமை.. இனிமை..

    பதிலளிநீக்கு
  7. நிகழ்கால நிகழ்வுகளை
    இக்கவிதை தோட்டாக்கள்
    மாற்றட்டும்
    சமூகம் விழிப்புறட்டும்

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு வரிகளும் சாட்டையடி...

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள். அறியாத பலரையும் அறிய வைப்பதற்கு உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு பகிர்வு, நல்லதொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  11. பகிர்ந்த சில பருக்கைகள் பசி தூண்டிப் போகிறதுபோகிறது.வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  12. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கவிஞர் கீதா அவர்களின் சில அற்புதமான கவிதைகளை பதிவிட்டு மீதமுள்ளவற்றை விரைந்து படிக்க தூண்டி விட்டது தங்களின் பதிவு.

    பதிலளிநீக்கு
  13. நூலாசிரியரை நன்கறிவோம். அவரது நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. சிறப்பானதோர் நூல் அறிமுகம். மிக்க நன்றி.

    நூலாசிரியர் சகோ கீதா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. கீதா வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் கீதாவிற்கு.
    படித்துக் கொண்டு வரும் போதே தேவதா தமிழ் கீதாவைத்தான் சொல்ல போகிறீர்கள் என்று தெரிந்து விட்டது.
    முகநூல் பழக்கம். அவருடைய கவிதை கட்டுரைகளை படித்து வருகிறேன். பள்ளியில் அவரிடம் கற்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

    உங்களுக்கும் வாழ்த்துக்கள். ஆசிரியர் பணி அறப்பணி என்பவர்கள் நீங்களும் தேவதாதமிழும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. கவிதையின் மேற்கோள்கள் அருமை. படைப்பாளி கீதாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. விஷயங்கள் தெரிந்தவைதான் ஆனாலும்சுட்டிக்காட்ட இம்மாதிரி எழுத்துகளும் அவசியம் கீதாவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. மகிழ்வும் நன்றியும் அண்ணா.... மேலும் எழுதத்தூண்டும் உங்களின் பாராட்டுக்கு நன்றி... அண்ணா

    பதிலளிநீக்கு
  19. எங்கோ நடக்கிறது
    எவருக்கோ என
    சும்மாயிருக்க முடியவில்லை----

    பதிலளிநீக்கு
  20. கீதா அவர்களின் கவிதைகளை முன்பே அறிவேன்/வோம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிதைகளும் நல்ல கவிதைகளே. அவர் மென்மேலும் சிறப்புக்களை அடைந்திட இறைவனை வேண்டுகிறேன்.

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  21. உண்மை..கீதா அவர்களின் கவிதைகள் எளிமையுடனும் வலிமையுடனும் கட்டமைத்த வரிகளுடன் பாயும் தோட்டாக்கள் தான்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் !

    எழுதியது என்னவோ
    எழுதுகோல் தான்
    மை மட்டும் அங்கே
    மனச்சாட்சியாய்ப் போனதால்
    வரிக்குவரி வாழ்வின் வலிகள் !

    அருமை சகோ கீதா !
    மென்மேலும் ஆக்கங்கள் படைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க நலம்


    பகிர்வுக்கு நன்றிகள் கரந்தை மைந்தனே !

    பதிலளிநீக்கு
  23. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் தந்தையின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  24. சிறப்பான கவிதைகள்! நூலுக்கு நல்ல அறிமுகம்!

    பதிலளிநீக்கு
  25. தங்கள் தந்தையார் மறைவு குறித்துக் கணினித் தமிழ்ச் சங்கக் குழுவில் நீங்கள் பகிர்ந்திருந்தீர்கள். செய்தி கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். சொற்களால் ஆற்ற முடியாத காயம் இது. காலத்தின் கரங்கள் கட்டாயம் அதைச் செய்யும். தளராதீர்கள்! உங்கள் தந்தையார் என்றும் உங்களுக்குத் தோன்றாத் துணையாக இருந்து நன்மை செய்வார்.

    பதிலளிநீக்கு
  26. நண்பர் கில்லர்ஜியின் பக்கத்திலிருந்து வருகிறேன். அங்கேதான் அறிய நேர்ந்தது உங்களுக்கு நிகழ்ந்துவிட்ட சோகத்தை.

    இறைவன் அருளால், உங்கள் தந்தையாரின் ஆன்மா அமைதியுறுமாக.

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. சிறந்த மதிப்புரை/
    வாழ்த்துக்கள்.../

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு