11 ஆகஸ்ட் 2018

மோகனூர்       
      5.8.2018

     ஞாயிற்றுக் கிழமை

     நண்பர், கேப்டன் ராஜன் அவர்களுடன், மகிழ்வுந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

     கேப்டன் ராஜன்

     உண்மையான கப்பல் கேப்டன்


     படிக்கும் காலத்தில் இருந்தே, கப்பல் மீது தீராதக் காதல் கொண்டு, கப்பல் பணியினையே இலட்சியமாய் கொண்டு, சாதித்துக் காட்டியவர்.

    


   
     கடல் ஆறு மாதம்

     வீடு ஆறு மாதம்

     தண்ணீரிலும், தரையிலுமாய் நகர்கிறது இவர் வாழ்க்கை

     இவர் கரந்தையின் மைந்தர்

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் படித்தவர்.

     எனக்கு வயதில் மிகவும் இளையவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மீது கொண்ட, மாறா அன்பின் காரணமாய், நானும், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும் இணைந்து எழுதிய, உமாமகேசுவரம் நூலினைத் தன் சொந்த செலவில் அச்சிட்டு, அனைவருக்கும் இலவசமாய் வழங்கிய நல் உள்ளத்திற்குச் சொந்தக்காரர்.

      இதோ நண்பர் ராஜனோடு ஒரு பயணம்

      எங்களோடு, நண்பர் ராஜனின் உறவினர் திரு ராஜேந்திரன் அவர்களும், இணைந்து பயணிக்கிறார்.
    

இவர் தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும், கந்தர்வக் கோட்டையைச் சார்ந்தவர்.

      எங்களுக்கு வழி காட்டுவதற்காக, கந்தர்வக் கோட்டையில் இருந்து எங்களோடு பயணிக்கிறார்.

       கந்தர்வக்கோட்டையில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் பயணித்திருப்போம்.

       ஓர் அமைதியான கிராமம்

        மோகனூர்

       வளர்ச்சி என்பதை அதிகம் கண்டிராத சிற்றூர்

இதோ இந்தத் தெருதான்

அதோ அந்த வீடுதான்

      மகிழ்வுந்தில் இருந்து மெல்ல வெளியில் வந்து, அக்கிராமத்து மண்ணில் பாதம் பதிக்கின்றோம்.

     உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு

     எப்பேர்ப்பட்டக் கவிஞரை உருவாக்கிய மண்

      மெல்ல நடக்கிறோம்
     

இந்த மண்ணில் மழலையாய் ஓடி, ஆடி விளையாடி இருப்பார் அல்லவா

இதோ இந்த வீடுதான்

      அன்று கீற்று வேயப்பட்ட வீடு,

     இன்றோ, முழுமை பெறாத ஒட்டுக் கட்டிடமாய் காட்சியளிக்கிறது

     கால ஓட்டத்தில், பலர் கைமாறி, இன்று வேறொருவரின் இருப்பிடமாய், உருமாறி இருக்கிறது.

     


கவிஞர் வாழ்ந்த காலத்தின் எச்சமாய், வீட்டின் பின்புறம், ஒரு கிணறு மட்டுமே மிச்சமிருந்தது.

      அக்கிணறும், நீரின்றி வற்றிப் போய், மரச் சுள்ளிகளை அடுக்கிடும் மேடையாய் பயன்பாட்டில் இருக்கிறது

       மீண்டும் தெருவிற்கு வந்து, அவ்வூர் குளத்தினை நோக்கி நடந்தோம்.

       இதோ குளம்

     
இதோ, இதோ நான் தேடிய மரம்

      அரச மரம்

      பார்த்தாலே தெரிகிறது

      நூறாண்டுகளைக் கடந்த மரம்.

      அகன்று  விரிந்திருந்த, மரத்தின் பல கிளைகள், ஒடிந்து, நிலத்தில் விழுந்து கிடக்கின்றன.

       நிமிர்ந்து நிற்கும் மரம்கூட, வலு இழந்து, அரித்துப்போய்தான் நிற்கிறது.

      ஆனாலும் கம்பீரமாய் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது

       இந்த மரம்

       இந்த அரச மரம்

     
கவிஞரைத் தன் மடியில் தாங்கிய மரம்

      தன் வீட்டைப் பற்றி ஏட்டில் எழுதாதக் கவிஞர், இந்த அரச மரத்தைப் பற்றித்தான் பெருமையாய் பகிர்ந்திருக்கிறார்

       தனது பள்ளி நாட்களில், மாலை வேலையில், தினந்தோறும், இந்த மரத்தின் நிழலில் அமர்ந்துதான், பள்ளியில் நடத்தப் பெற்றப் பாடங்களை, பாடல்களை, மனதிற்குள் சொல்லிச் சொல்லிப் பார்த்து, மனனம் செய்திருக்கிறார்.

     அரசமரக் காற்றைச் சுவாசித்தபடி, தமிழ்ப் பாடல்களை, தன் மனதில் பதிவேற்றிய இடம் இதுதான்.

      கவிந்திருந்த அரச மரத்தில் நிழலில் அமர்ந்து படித்ததாலேயே, தனக்கு, கவியரசு என்றும் பட்டம் வழங்கப்பட்டதாய், தனது நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

        இக்கவிஞர் எப்படி இருப்பார் தெரியுமா?

கருமைஉரு, வெண்மைப்பல், நரைத்ததலை குறைமீசை
கறையற்ற செம்மைமனம், புன்சிரிப்பு எளிமை நிலை
பிறைகறுத்த பெருநெற்றி அதில் மணக்கும் நறுஞ்சாந்தம்
மறைவல்ல ஒளிமுகத்திற் கொப்புமையும் இலையன்றோ

                                        (சி.அரசப்பன்)


இவர்தான்,
கவியரசு
கரந்தைக் கவியரசு
கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை

வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே
     மன்னியமூ வேந்தர்தம் மடிவளர்ந்த மகளே
தேனார்ந்த தீஞ்சுனைசால் திருமாலின் குன்றம்
     தென்குமரி யாயிடைநற் செங்கோல் கொள் செல்வி
கானார்ந்த தேனே, கற்கண்டே, நற்கனியே
      கண்ணே, கண்மணியே, அக்கட்புலம்சேர் தேவி
ஆயாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
      அம்மே நின் சீர்முழுதும் அறைதல்யார்க் கெளிதே?

     தமிழைத் தேனாகவும், கற்கண்டாகவும், கனியாகவும், கண்ணாகவும், கண்ணின் மணியாகவும், அமிழ்தமாகவும் உருவகப்படுத்தியிருக்கும், இந்தப் பாடலைப் படிக்கப் படிக்க, நா இனிக்கிறது அல்லவா? மனம் மகிழ்கிறது அல்லவா?

      கவியரசரின் பாடல் இது

      1970 ஆம் ஆண்டு. முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்கள்., நீராருங் கடலுடுத்த என்னும் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்கும் முன், அவர்  பரிசீலனைக்கு எடுத்துக கொண்ட பாடல்கள் இரண்டே இரண்டுதான்.

       நீராருங் கடலுடுத்த என்னும் பாடலும், வானார்ந்த பொதியின் மிசை என்னும், கவியரசுவின் பாடலும்தான், கலைஞரின் உள்ளத்தில் போட்டி போட்டன.

       ஆயினும், தெக்கணமும் அதிற்சிறந்த, திராவிட நற்றிருநாடும் என்னும் வரியிலுள்ள, திராவிட என்னும் வார்த்தை, கலைஞரைச் சுண்டி இழுக்கவே, நீராருங் கடலுடுத்த பாடல், தமிழக அரசின், தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்கப்பட்டது.

       நீராருங் கடலுடுத்த என்னும் பாடல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால், 1913 ஆம் ஆண்டிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப்பெற்ற, 1913 ஆம் ஆண்டுமுதல், சங்க மேடைகளில் கோலேச்சியப் பாடல்.

        வானார்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே என்னும் பாடலோ, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடல்.

        ஆம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடல்தான்


கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை
இவர்தான்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல், முப்பதாண்டுகாலச் செயலாளர்.
(1911 - 1931)

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர்
தமிழவேள் த.வே. உமாமகேசுவரனாரின் ஆருயிர் தோழர்.

      ஆசானாற்றுப்படை., மொழியரசி, ஏழ்மைப் பத்து, இன்பப் பத்து போன்ற கவிதை நூல்களை யாத்தவர்.

       கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்களுக்கு வருகை தந்த, தமிழ்ச் சான்றோர்களை வாழ்த்தி, வரவேற்றவை, இவரது வாழ்த்துப் பாக்களே ஆகும்.

      உடல்  நலிவுற்ற நிலையிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை விட்டுப் பிரியாது, தன் உயிர் பிரிவதற்காகக் காத்திருந்தவர்.

      உடல் நிலை, துன்பத்தை வாரி வழங்கியபோதுகூட, துன்பப் பத்து என்னும் கவி எழுதி, தன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொண்டவர்.

கரந்தைக் கவியரசு
அரங்க,வேங்கடாசலம் பிள்ளை

---

     இத்தகு பெருமை வாய்ந்த, கரந்தைக் கவியரசுவைத் தன் மடியில் தாங்கி. தாலாட்டி மகிழ்ந்த, அரசமரத்தின் கீழ் நிற்கிறோம்.

     மனமெங்கும் ஒரு பெருமிதம்.

     அரச மரக் காற்றைச் சுவாசிக்கும்போதே, மெய்சிலிர்க்கிறது

      இந்தக் காற்றைத்தானே, கவியரசர் சுவாசித்தார்

      கவியரசு சுவாசித்தக் காற்றைத்தானே, சுவாசிக்கிறோம்

      மரத்தின் மடியில், இவ்விடம் அமர்ந்திருப்பார் அல்லவா

      அமர்கிறேன்

      கரந்தைக் கவியரசர் அருகில் அமர்ந்து, தோள் மீது கைபோட்டு, அன்போடு அரவணைப்பதைப் போன்ற ஓர் உணர்வு.

       உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க அமர்ந்திருக்கிறேன்

      இதற்குத்தானே, இத்தனை ஆண்டுகளாய் ஆசைப் பட்டேன்.

      பல்லாண்டு காலக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது.

       அரசமரத்தின் உருவில் கவியரசரைக் கண்ட ஓர் உணர்வு.

வாழ்க கவியரசர்.

தமிழ்மொழியும் தமிழ்நாடும் தக்காரும் இருக்கும்வரை
தமிழ்த்தேனின் சுவைமாந்தும் மொழித் தொண்டர் இருக்கும்வரை
தமிழர்தம் அகவுணர்ச்சி தலைநிமிர்ந்து இருக்கும்வரை
தமிழ்ப்புலவர் தனித்தலைவர் கரந்தைக் கவியரசர் புகழ் வாழும்.
                                               --- ச.சுந்தரேசன்
      .