25 ஆகஸ்ட் 2018

தஞ்சையில் சமணம்



       சமணம்

     அகிம்சையே மேலான அறம், தீதும் நன்றும் பிறர் தர வாரா என முழங்கியது சமணம்.

     கிறித்துவ ஆண்டு தொடங்குவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இம்மண்ணில், சமண சமயம் ஆழ வேரூன்றியது.

     கி.மு.4 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மௌரியப் பேரரசன் சந்திரகுப்தன் முடி துறந்தார்.


     காரணம், கடும் பஞ்சம்.

     முடி துறந்த சந்திரகுப்தன், பத்திரபாகு முனிவருடன் இணைந்து, சுமார் 12,000 சமணத் துறவிகளுடன், தென்னகம் நோக்கிப் பயணித்தார்.

     இன்றைய கர்நாடக மாநிலம், சரவணபெலகொலாவை, இவர் தனது புது இருப்பிடமாய்த் தேர்ந்தெடுத்துத் தங்கினார்.

     சமண மதம், சரவணபெலகுலாவில் மெல்ல மெல்லத் தழைக்கத் தொடங்கியது.

     சந்திரகுப்தன் மற்றும் பத்திரபாகுவின் மறைவிற்குப் பிறகு, இவர்களது சீடராகிய, விசாகாச்சாரியார் தலைமையில், எண்ணற்றத் துறவிகள், மீண்டும் ஒரு பயணத்தைத் தொடங்கி, தமிழகம் வந்தடைந்தனர்.

     சமணம் தமிழகத்தில் ஆழக் கால் பதித்தது.

     சமணத் துறவிகள், மலைக் குகைகளில் தங்கி, தங்களின் சமயப் பணியினை மேற்கொண்டனர்.

     தொடக்க காலத்தில், குகைகளில் வாழ்ந்த துறவியர்க்கும், ஊர்புறத்தே வாழ்ந்த மக்களுக்கும், நெருங்கியத் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், கால ஓட்டத்தில், தொடர்பு வலுப்பட்டது.

     சாதிபேதம் பாராட்டாமை, எளிய வாழ்க்கை, சமயக் கல்வி, மருத்துவ உதவி, வறியோர்க்கு உணவளித்தல் போன்ற நற்பணிகளால், சமணம், வலிமைமிகு அமைப்பாக மாறியது.

     தமிழ் நாட்டில் புதுக்கோட்டை, சித்தன்னவாசல், திருச்சி, தஞ்சை, கொங்கு நாடு, தொண்டை நாடு வரை, சமணம் பெரு வளர்ச்சி பெற்றுப் பரவியது.

     சமண மடங்கள், சமணப் பள்ளிகள் பல்கிப் பெருகின.

     வெடால் என்னும் இடத்தில், பெண்களுக்கென்றே ஒரு சமயப் பள்ளி உதயம் பெற்றது.

     திருச்சிராப் பள்ளி

     திருச்சிராப்பள்ளி என்னும் பெயரினையும் ஊரினையும் நாம் நன்கறிவோம்.

    

திருச்சி என்றாலே, நம் நினைவிற்கு வருவது, மலைக் கோட்டையும், அம்மலையின் உச்சியில் வீற்றிருக்கும், உச்சிப் பிள்ளையாரும்தான்.

     பிள்ளையார் மட்டுமா, அம்மலையில் இருக்கிறார்.

     திருச்சிராப்பள்ளி குன்றின் மீது, மூன்று கோயில்கள் இருக்கின்றன.

     உச்சியில் இருக்கும் பிள்ளையார் கோயில், காலத்தால் மிகவும் பிந்தையது.

     உச்சிப் பிள்ளையாருக்கும் கீழே, மகேந்திரப் பல்லவன், சமணம் விடுத்துச் சைவத்திற்கு மாறியவுடன் உருவாக்கிய, லலிதாங்குர பல்லவ ஈசுவர கிரஹம் என்னும் குடைவரைக் கோயில் இருக்கிறது.

     இதற்கும் கீழே, தாயுமான சுவாமி கோயில் உள்ளது.

     உச்சிப் பிள்ளையார் கோயில், மலையின் உச்சியில் அமைந்த, பெரிய பாறையின் மீது, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

     இப்பாறையின் வடபுறமாகப் பார்த்தால், மிகவும் குறுகலான பாதை ஒன்று மேற்கு நோக்கிச் செல்வதைக் காணலாம்.

     இப்பாதையின் நிறைவில், இயற்கையாய் அமைந்த ஒரு குகை உள்ளது.

     இக்குகையில், சமண முனிவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாய், வரிசையாய், கற்படுக்கைகள் அமைந்திருப்பதை இன்றும் காணலாம்.

     இதுமட்டுமல்ல, அந்த கற்படுக்கைகளில், படுத்து உறங்கிய, துறவிகளின் பெயரும் கூட, அப்படுக்கைகளிலேயே பொறிக்கப் பட்டிருப்பதையும் காணலாம்.

     இக்குகையில் தங்கி, சமயப் பணியாற்றிய ஒரு துறவியின் பெயர் சிரா.

     சிரா

     இவரது பெயரால்தான், இவ்வூர் சிராப் பள்ளியாக அழைக்கப் பெற்று வருகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

     பின்னர் திரு என்ற அடைமொழியும் சேரவே, சிராப்பள்ளி, திருச்சிராப் பள்ளி ஆயிற்று.

     சிரா துறவி வாழ்ந்த குகைத் தளத்திற்குச் செல்லும் வழியில், பாறையின் மீது பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

      அவற்றுள் ஒன்று தஞ்சஹரக எனத் தஞ்சையைக் குறிப்பிடுகிறது.

      தஞ்சஹரக

      தஞ்சையை வென்றவன்

      கி.பி 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டுகளில், சிம்ம விஷ்ணுவோ அல்லது மகேந்திரப் பல்லவனோ, தஞ்சையைக் கைப்பற்றி இருக்க வேண்டும் என்பது  புரிகிறது.

     தஞ்சை

     தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, தீபங்குடி முதலான ஊர்களில், இன்றும் சமண ஆலயங்கள், வழிபாட்டில் இருந்து வருகின்றன.

     இவையல்லாது, சமணர் சிற்பங்கள், தஞ்சை மாவட்டத்தில், எண்ணற்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

     அகர ஓகை, அடஞ்சூர், அல்லூர் அழிசிகுடி, ஆதனூர், ஆவிக்கரை, எடுத்த நாண் துருத்தி, ஒரத்தூர், குரும்பூண்டி, குருவாடி, சித்திரக்குடி, சிராங்குடிப் புலியூர், சுரக்குடிப்பட்டி, செங்கங்காடு, செம்பியன் களரி, செருமாக்க நல்லூர், தஞ்சாவூர் எனப் பலப்பல இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

      இவற்றுள் பல சிலைகள், இந்து கோயில்களில், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது, வியப்பிற்குரிய செய்தியாகும்.

      மதம் கடந்த நேசம் என்பது இதுதானோ.

      மதம் கடந்த நேசம்.

      நண்பர்களே, மதம் கடந்த நேரத்திற்கு உரியவர்களாய் சிறந்து விளங்கும், மூவரைத் தங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

      அறிமுகப்படுத்துதல் என்ற வார்த்தையே தவறுதான்.

      ஒப்புக் கொள்கிறேன்.

      உண்மையில் இவர்களை அறிமுகப்படுத்தவே தேவையில்லை.

      தங்களாலும், தமிழுலகாலும், நன்கு அறியப்பட்டவர்கள் இவர்கள்.



முனைவர் பா.ஜம்புலிங்கம்
ஏடகம் மணி.மாறன்
திரு கோ.தில்லை கோவிந்தராசன்


இம்மூவரும் இணைந்து,
ஏடகம்
அமைப்பின் சார்பில்,
ஒரு நூலை,
முதல் நூலை
வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள்.

இவர்களின் மதம் கடந்த பாசம் மற்றும் நேசம்
இந்நூலை சாத்தியமாக்கியிருக்கிறது.

     சமணம் சார்ந்த எண்ணற்ற தகவல்கள், இந்நூலில், பக்கத்துக்குப் பக்கம் இறைந்து கிடக்கின்றன.

     நாம் தொடக்கத்தில் பார்த்த செய்திகள் அனைத்தும், இந்நூற்கடலின் சிறு துளிகள்தான்.

     முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் தமிழ் வளர்த்ததை நாம் அறிவோம்.

     ஆனால் சங்கம் வைத்துச் சமணம் வளர்த்ததை அறிவீர்களா?

     மூன்றல்ல, நான்கு சங்கங்கள் இருந்திருக்கின்றன.

     நந்திகணம்

     சேனகணம்

     சிம்மகணம்

     தேவகணம்

     சங்கம் வைத்துத் சமணத்தை வளர்த்ததோடு, தமிழையும் வளர்த்திருக்கிறார்கள் இவர்கள்.

     ஏலாதி, சிறுபஞ்சமூலம், நாலடியார் எனச் சமணர் யாத்த சில நூல்களை மட்டுமே நாம் அறிவோம்.

     ஆனால் சமணர் இயற்றி, தமிழுக்கு அருட்கொடையாய் வழங்கிய, 119 நூல்களை, தமிழ் நூல்களைப் பட்டியலிட்டு, நம்மைப் பரவசப்படுத்துகிறார்கள் இவர்கள்.

     இராமாயணமும், மகாபாரதமும் இந்து மதத்திற்கு மட்டுமே உரிய இதிகாசங்கள் என்றுதான் இதுநாள்வரை நான் நம்பியிருந்தேன்.

     சிற்சில வேறுபாடுகளுடன், இராமாயணமும், மகாபாரதமும், சமண சமயத்திலும் இருக்கின்றது என்பதை இந்நூல் வழி அறிந்தபோது, வியந்துதான் போனேன்.

      சமணர்களின் வழிபாட்டு முறைகள், விழாக்கள், சடங்குகள், சமணம் தழைக்க அரும்பாடு பட்ட 24 தீர்த்தங்கரர்களைப் பற்றியத் தகவல்கள் எனச் சமணக் கருவூலமாக விளங்குகிறது இந்நூல்.


தஞ்சாவூர், கரந்தை, சமண ஆலய அறங்காவலர், 
திருமிகு ச.அப்பாண்டைராஜ் அவர்கள், 
இந்நூல் பதிப்பிற்கு வேண்டிய நிதியினைத் திரட்டிக் 
கொடுத்துப் பெரும் பங்காற்றியிருக்கிறார்.



தஞ்சையில் சமணம்
சமண சமய வரலாறு பேசும் தகைமை சான்ற நூல்

முனைவர் பா.ஜம்புலிங்கம்
ஏடகம் மணி.மாறன்
திரு கோ.தில்லை கோவிந்தராசன்

இம்மூவரின் தன்னலமற்ற, பல்லாண்டுகால, அயரா, தளரா களப் பணியின் விளைவு இந்நூல்.


மூவரும்
போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம், வாழ்த்துவோம்.
-------

வெளியீடு
ஏடகம்,
கல்வி, சமூக மேம்பாடு மற்றும் ஆய்வு மையம்,
தஞ்சாவூர்
அலைபேசி 94434 76597

விலை ரூ 130/ -



    
    

                           

24 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சமணம் அகிம்சையை வலியுறுத்தியது. ஆனால், தமிழகத்தில் நிலைக்கவில்லை. கரந்தையில் உள்ள ஜைன கோவிலை பார்க்க ஆசை. புகைப்படங்கள் எடுத்து அனுப்ப இயலுமா.

    பதிலளிநீக்கு
  3. சைவ அரசர்களால் கழுவேற்றப்பட்ட நிகழ்வுகள் ந்சினைவில் வருகிறது சமணமும் சைவமும் ஒன்றிணைந்த வரலாறுமிருக்கிறதா

    பதிலளிநீக்கு
  4. பௌத்த கள ஆய்வின் பலனாகவே நண்பர்களுடனும், அறிஞர்களுடனும் இணைந்து 13 புதிய சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டெடுக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நண்பர்கள் திரு மணி.மாறன் மற்றும் திரு தில்லை. கோவிந்தராஜனின் ஒத்துழைப்பும், உதவியும் நூல் உருவாக்கம் பெற பெரிதும் உதவியது. நூல் பற்றிய மதிப்புரை, உங்கள் பாணியில், அருமை. உங்களைப் போன்றோரின் ஊக்கம் எங்களை மென்மேலும் எழுத வைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இம்மூவரின் தன்னலமற்ற, பல்லாண்டுகால, அயரா, தளரா களப் பணி பாராட்டுக்குரியது.


    ஆயினும் சமண கோயில்கள் இடித்தே இந்துக் கோயில்கள் நிறுவப்பட்டன. அல்லது மாற்றப்பட்டன. அப்படி மாற்றப்பட்ட எச்ச சொச்சங்களே நமக்கு இவ்வரலாற்றை உணர்த்துகிறது.

    தேடுதலே நமக்கு வரலாற்றை சொல்கிறது. அதில் சார்பின்றி சொல்வது

    பதிலளிநீக்கு
  6. அரிய பல தகவல்கள். புத்தகம் படிக்க ஆவல்! எழுதிய மூவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. முனைவர் சகோதரர் ஜம்புலிங்கம், திரு ஏடகம் மணிமாறன், திரு.தில்லை.கோவிந்தராஜன் மூவருமே பல ஆய்வுகள் சமண சமயத்தைப்பற்றி செய்து 'தஞ்சையில் சமணம் ' என்ற சிறந்த நூலை எழுதியமைக்காக நிச்சயம் போற்றுதலுக்குரியவர்கள் தாம், நீங்கள் எழுதியிருப்பது போல!! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! அருமையான மதிப்புரை எழுதிய உங்களுக்கு இனிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  8. சமணம் குறித்து நான் அறியாத பல தகவல்களச் சுவையான நடையில் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.

    நன்றி...நன்றி ஜெயக்குமார்.

    டாக்டர் ஜம்புலிங்கம், ஏடகம் மணிமாறன், தில்லை கோவிந்தராஜன் ஆகிய ஆய்வறிஞர்களுக்கு என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. சமணம் என்பதும் ஒருவித இந்துமதம் தானே.. புத்தரின் சிலைபோலவே இருக்கே முதல் படம்.

    பதிலளிநீக்கு
  10. //சமணர்களின் வழிபாட்டு முறைகள், விழாக்கள், சடங்குகள், சமணம் தழைக்க அரும்பாடு பட்ட 24 தீர்த்தங்கரர்களைப் பற்றியத் தகவல்கள் எனச் சமணக் கருவூலமாக விளங்குகிறது இந்நூல்.//நூல் வெற்றி பெற வாழ்த்துக்கள்/சமூகம் உயர சிந்தித்தவர்கள்/

    பதிலளிநீக்கு
  11. //அந்த கற்படுக்கைகளில், படுத்து உறங்கிய, துறவிகளின் பெயரும் கூட, அப்படுக்கைகளிலேயே பொறிக்கப் பட்டிருப்பதையும் காணலாம்.//

    இப்போது சில இடங்களில் கற்படுகையில் தங்கள் பெயரை எழுதி வைத்து இருக்கிறார்கள்.

    மூவருக்கும் வாழ்த்துக்கள்.
    சமணர்கள் நிறைய தொண்டு செய்து இருக்கிறார்கள்.
    அவர்களை அறிந்து கொள்ள இவர்கள் எழுதிய நூல்கள் பயன்படும்.
    மீண்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு நூலின் அறிமுகம். நன்றி. மூவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. தஞ்சையில் சமணம் நூலுக்கும், நூலை ஆக்கியோருக்கும் தக்க அறிமுகமும், நல்ல விமர்சனமும், பாராட்டும் கலந்த பதிவு இது. வழக்கம்போல மிகுந்த செய்திகளுடன் பதிவிடப்பட்டுள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. இந்த புத்தகத்தை படிக்க ஆசை nanbare

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான அறிமுகம்...

    பதிலளிநீக்கு
  16. அறிமுகத்துக்கு நன்றி! நன்றி!.. பிரம்ம குமாரிகள் என்பவர்கள் சமணத்தை சேர்ந்தவர்களா? அறிஞர்கள் விபரம் தெரிவித்தால் உதவியாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  17. சிறப்பான செய்திகளை அறிமுகப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே

    பதிலளிநீக்கு
  18. அருமை சகோ. மூவர் பெருமக்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. பெறுதியான தகவல்களின் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  20. நல்லதோர் தகவல்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு