01 செப்டம்பர் 2018

மண் வாசனை



     சொந்த ஊருக்குப் போவது என்பதே ஒரு அலாதியான விசயம்தான். முடிவெடுத்துவிட்ட நேரத்திலிருந்தே, எதிர்வரும் எந்த விசயமும் பெரிதாகத் தெரியாது.

     போட்டி உலகத்தில் இருந்து, விடுப்பு எடுத்துக் கொண்டு, அங்கிருந்து விலகும், ஒரு தற்காலிகப் பயணம் என்பது, விடுதலை சாசனம் எழுதிக் கொள்வது போலத்தான்.

     அது ஒரு பரோல்


     திரும்பி வரும் நாள் தெரிந்து, அவன் தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளும் விடுதலை.

     நண்பர்களே, சொந்த மண்ணை விட்டு விலகி, பொருள் தேடப் புறப்பட்ட அத்துணை உள்ளங்களிலும், ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்குமல்லவா, அந்த ஏக்கத்தை, சொந்த மண்ணின் தாக்கத்தை, உணர்வு ததும்பும் எழுத்துக்களால், இவர் காட்சிப்படுத்தும் விதமே அழகு.


     மகன்கள், மகள், பேரன்கள், பேத்தி என எல்லோருமே உண்டு. அவர்களுடைய, அவ்வப்போதைய வருகைதான், ஆச்சிக்கு, அவள் ஒரு அனாதையில்லை என்ற எண்ணத்தைக் கொடுத்தது.

     மற்றபடி அவர், இப்போது அனாதைதான்.

     கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பு முற்றிலுமாய் சிதைவுற்றதன் பயனாய், மூத்தோர் பலர், தனித்தவர்களாகிவிட்டக் கொடுமையை வேதனையோடு விவரிக்கையில் மனம் கனத்துத்தான் போகிறது.

     அவன் அங்கு காத்திருந்த சமயம், அந்தப் பஞ்சுத் தூசுகளின் உள்ளே இருந்து, லொட லொட காக்கி டவுசர் போட்டுக் கொண்டு, உடம்பெல்லாம் பஞ்சு அப்பிக் கொண்டு, இரண்டு கண்கள் மட்டும் தெரிய, வெங்கியை நோக்கி ஒருவர் வந்தார்.

     என்னப்பா …. அப்பா மேல திடீர் பாசம்., இன்னிக்கு மில் உள்ளே வரைக்கும் வந்திருக்க என்றார்.

     அப்பா . . . .

     வெங்கி உறைந்துபோனான்.

     தன் அப்பா, என்ன வேலை பார்க்கிறார் என்ற அக்கறைகூட இல்லாமல், இத்தனை வருடம் இருந்ததை எண்ணி மனதிற்குள்ளேயே பொருமினான்.

     என்ன வேணும்? பீசு எதாச்சும் கட்டணுமா? என்றார்.

     வீட்டுக்குப் போ. அங்க பேசிக்குவோம். இப்போ நீ கிளம்பு. நான் வர நாழியாகும்.

     படிக்கப் படிக்க மனதை ஒரு சோகம் கவ்வுகிறது. இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் இப்படித்தானே என்னும் உண்மை மனதைச் சுடுகிறது.

     அன்றுதான் அவள் முதன் முதலாக, தன் அப்பாவின் அத்தையைப் பார்க்கிறாள். கண்களில் கண்ணீருடன், தன் அறைக்கு உள்ளே வந்தவள், ஜன்னல் வழியாக, கொஞ்ச தூரத்தில், அந்தக் காட்சியைக் கண்டாள்.

     தன் கண் முன்னே, தன் அப்பா, மீண்டும் ஒரு சிறுவனாய்க் காட்சியளிப்பதை உணர்ந்தாள்.

     படித்து முடிக்கும் முன்னே, மனம் நெகிழ்ந்துதான் போகிறது. நமது குடும்பத்துப் பிணக்குகள், மனத் தாங்கல்கள் மனதில் வலம் வரத்தான் செய்கின்றன.

     என்னம்மா ….. அம்மாவ கூப்பிட்டேன் வரலியே. சின்னம்மா நீங்க வந்திருக்கீங்க.

     சாப்பாடு தர்றேன்னாங்க என்று கொஞ்சம் வெட்கத்துடன் கேட்டான்.

     வேலைக்குப் புதிது என்பதால் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

     சிறுவயதுப் பெண்ணிடம் இப்படிக் கேட்கிறோமே என்று தயங்கினான்.

     இருந்தாலும் கேட்டுவிட்டான்

     வயித்துப் பொழப்பாச்சே

     உள்ளே சென்றவள், பூஜையறையில் குடும்பமே மூழ்கியிருந்ததைப் பார்த்தாள்,

     நெய்வேத்தியப் பண்டம் நினைவுக்கு வரவே, அதை எடுத்து வந்து கொடுத்தாள்.

     அவன் வீட்டு வாசலில், ஒரு ஓரமாக உட்கார்ந்து, அதனைச் சாப்பிட ஆரம்பித்தான்.

     உள்ளே பூஜை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

     படிக்கப் படிக்க மனம் வியந்துதான் போகிறது.

     தாம்பாளத்தை எடுத்துட்டு வா

     தாம்பாளம் கொஞ்சம் சூடாகவே கைகளுக்கு வந்து சேர்ந்தது.

     சாக்குப் பையின் முடிச்சுகளை அவிழ்த்துவிட்டு, உள்ளேயிருந்த சேலையையும், பழங்களையும், மஞ்சள் குங்குமத்தையும் எடுத்து அடுக்கி, பக்கத்தில் இருந்த ஊஞ்சல் மீது வைத்து, வேட்டியை மடித்துக் கட்டி,, பச்சை பெல்ட்டினுள் இருந்து நூத்தியோரு ரூவா பணத்தையும் எடுத்து மேலே வைத்தான்.

     பசங்க சத்தம் உள்ளே கேக்குது. தூங்கலையா அதுங்க? செத்த கூப்புடேன், மாமாங்காரன் வந்திருக்கான்னு சொல்லு போ.

     ஏய் சனியனுங்களா, சத்தம் இல்லாம இருங்கடி.

     சரி தூங்கட்டும் விடு. எதுக்கு என்மேல உள்ளத அதுங்ககிட்ட காட்ற. காலேஜ் போற பசங்க, படிச்சிட்டு அசதியா வந்திருக்கும்.

     தங்கையின் பெண் பிள்ளையானவள், அறையினுள் இருந்து கதவைத் திறந்தபோது, தாம்பாளம் சரவணன் கையிலிருந்து, லதா கைக்குச் செல்லும் முன்பே, அதை அவள் வாங்கி, நடு வீட்டில் நின்றமேனிக்கு, வாசலருகே விட்டெறிந்தாள்.

     இம்மியளவுகூட மாறாமல், அதே நிதானம், அதே பொறுமையுடன், அதே நேரத்தில் முகத்தில் எந்த ஒரு வெறுமையையும் காட்டாமல், தான் எடுத்து வந்த சாக்குப் பையை எடுத்து, அதற்குள் தன் கைக் குட்டையைப் போட்டுவிட்டு நடையைக் கட்டினான் சரணவன்.

     இன்னொரு பொறப்பு நம்மகூட பொறக்கவா போறா என்ற எண்ணம்தான் ஒவ்வொரு வருடமும், இங்கு கொண்டுவந்து நிறுத்திக் கொண்டிருக்கிறது.

     வரும்பொழுது கைகளில் இருந்த பாரம், இப்போது மனதில் தொற்றிக் கொண்டது.

     இருந்தாலும் அதை அனுபவித்துக் கொண்டே நடந்தான்.

     இதுவும் ஒருவித சந்தோசம்தான்.

     நண்பர்களே, மொத்தம் இருபது சிறுகதைகள்.

     தேர்ந்த, பழுத்த அனுபவமிக்க எழுத்தாளரின் எழுதுகோலில் இருந்து, வழிந்தோடிய அனுபவப் பொழிவாகத் தோன்றுகிறதல்லவா?

     ஆனால், உண்மையில், ஒரு இளைஞனின் எழுத்தோவியங்கள் இவை.

     பக்கத்துக்குப் பக்கம் மண் வாசனை

     வரிக்கு வரி குடும்ப வாசனை

     கொள்ளு, எள்ளுப் பெயரன், பெயர்த்திகளைத் தன் தோளிலும், மார்பிலும் சுமந்து மகிழ்ந்த வயது முதிர்ந்தப் பெரியவர் ஒருவர், தன் அனுபவங்களை ஏட்டில் இறக்கி வைத்தது போன்ற உணர்வினை, இவ்விளைஞனின் வரிகளில் உணர முடிகிறது.

     மூன்று மாதங்களாய், சொந்த ஊர்ப் பக்கம் செல்லாமல், வேலை, வேலை என உழன்ற இவ்விளைஞர், ஊருக்குச் செல்ல விரும்பி, விடுப்பு எடுத்துக்கொண்டு, ஊருக்குக் கிளம்பும் நேரத்தில், முக்கிய அலுவல் இருக்கிறது, வா, வா என அலுவலகம் இவரை அழைத்திருக்கிறது.

     அரைமனதோடு அலுவலகம் புகுந்தவர், அன்றே, தன் உள்ளக் கிடக்கையினை, எழுதுகோல் எடுத்துத் தாளில் உழவு செய்ய, கிளர்ந்து எழுந்திருக்கிறது மண் வாசனை, இவர்தம் ஊர் வாசனை.

     இவரால் ஏட்டில் எழுந்த மண் வாசனையை, இவரே நுகர்ந்தபோது, கிறங்கித்தான் போய்விட்டார்.

      தொடர்ந்து எழுது, எழுது என இவரது மனம் ஆணையிட, தனது  சில ஏக்கங்களையும், நிராசைகளையும், நினைவுகளையும் கருவாக்கி, ஏட்டில் கதையாக்கி பிரசவித்திருக்கிறார் இவர்.

     இதுமட்டுமல்ல,

     கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்னும் சொல்லாடலையும் மெய்ப்பித்திருக்கிறார் இவர்.

     ஆம், இவர் எழுத்துக் குடும்பத்தில் பிறந்த எழுதுகோல்.

     தந்தை எழுத்தாளர்

     தாய் எழுத்தாளர்

     தம்பி எழுத்தாளர்

     பிறகு இவர்மட்டும் எப்படி எழுதாமல் இருப்பார்.

     இவர்தம் குடும்ப உதிரத்தில் எழுத்தல்லவா  நிற்காமல் ஓடுகிறது.


மண் வானை

இவரது நூலின் பெயரே மண் வாசனைதான்

இவர்,


எழுத்தாளர், பௌத்த ஆய்வியல் அறிஞர்
முனைவர் பா.ஜம்புலிங்கம்
பாக்கியவதி ஜம்புலிங்கம்
தம்பதியினரின் தலைப் பிள்ளை.






ஜ.பாரத்

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன

வாழ்த்துகள் பாரத்.



23 கருத்துகள்:

  1. எங்கள் மூத்த மகனின் மண் வாசனையைப் பற்றிய உங்களின் பதிவு கண்டு நெகிழ்ந்தேன். உங்களைப் போன்றோரின் வாழ்த்துகள் எங்கள் மகனுக்கு மிகவும் தூண்டுகோலாக இருக்கும். தங்களின் அன்பிற்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்....

    ஜம்புலிங்கம் ஸாருக்கு வாழ்த்துகள்.

    நல்லதொரு அறிமுகம். பாரத் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அறிமுகம் நன்று. இளைய தலைமுறை எழுத்தாளர் பாரத் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. திரு.பாரத் அவர்கள் மேலும் பல காவியங்கள் படைக்க எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. பதிவு வழக்கம்போல சிறப்பு! இளைய தலைமுறை எழுத்தாளர் திரு.பரத் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. தந்தை வரலாற்று அறிஞர். தனயன் சமூக கதை படைப்பாளி. வார்த்தைகள் கோர்வையாய் வந்து விழுகின்றன. பல படைப்புகள் படைக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. திரு.பாரத் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  8. அதானே!...
    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன!...

    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. எழுத வேண்டும் என்னும் உந்துதல் இருந்து எழுதுவது உண்மைகளைச் சிதைக்காமல் இருந்தால் எழுத்து பரிமளிக்கும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் மகன் மேன் மேலும் எழுத வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. நல்ல அறிமுகம். தேர்ந்த எழுத்தை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி. ஏற்கெனவே இவரைப் பற்றிப் படித்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு அறிமுகம் ஐயா. முனைவர் அவர்களின் மகனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு அறிமுகம். சகோ.பரத்திற்கு வாழ்த்துகள். அவரை பெற்று பெருமிதத்திலிருக்கும் ஜம்புலிங்கம் ஐயாவிற்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. பார்த்து அவர்களுக்கு என் பாராடடுகள்.

    தங்களுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் சொல்வது போல் தேர்ந்த எழுத்தாளர் கதை போல்தான் இருக்கிறது.

    நீங்கள் குறிப்பிட்ட கதைகள் எல்லாம் அருமையாக மண்வாசனையுடன் இருக்கிறது.

    எழுத்தாளர் பாரத் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான அறிமுகம்.

    ஆசிரியர் பாரத் அவர்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  16. புது எழுத்தாளருக்கு பல்லாயிரம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் புதல்வர் ஜ.பாரத் அவர்களின் மண்வாசனை நூல் பற்றி, தங்கள் பாணியில் எழுதப்பட்ட, சிறப்பான விமர்சனம். நூல் பற்றிய bibliography யையும் இணைத்திருந்தால் இன்னும் சற்று சிறப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. சிலர் நூலைப் படித்துவிட்டு, திறனாய்வு செய்கிறேன் பேர்வழி என்று கிழித்துத் தொங்க விடுவார்கள் புதுப் பொத்தகம் என்று கூடப் பாராமல். ஆனால் வலைப்பதிவுலகம், நூல்களைப் படித்தால் அதன் நயத்தை மட்டுமே - சிறப்புக்களை மட்டுமே எடுத்துக்காட்டி மற்றவர்களும் அந்நூலைப் படிக்கத் தூண்டும் விதமான நூலுரைகளை வழங்கத் தொடங்கியது நூலுரை இலக்கியத்தில் புதுத் திருப்பம். அந்த வகையில் உங்களுடைய இப்பதிவும் என்னைப் போல் வளரும் எழுத்தாளர்களுக்கு இன்னொரு வழிகாட்டி. மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  19. ஆஹா அருமை அருமை. ஜெயக்குமார் சகோ அருமையான முன்னோட்டம் கொடுத்து அது யார் என்று சர் என்று ஸ்க்ரோல் செய்து தேட வைத்துவிட்டீர்கள். உண்மைதான் புலிக்குப் பிறந்தது பூனையாகாது. மேலும் தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். மனிதநேயமிக்க சிறுகதையா இருக்கு நீங்க பகிர்ந்தது. மண்வாசனை தொகுப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் பாரத் :)

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள் ,புத்தகவிமர்சனம் நன்று/

    பதிலளிநீக்கு
  21. நூல் முன்னோட்டம் தங்களுக்கு கை வந்த கலை.. அருமை...

    பதிலளிநீக்கு
  22. Super style and realistic description of village ...vaazthukal Bharath. Thanks for ur introduction.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு