28 செப்டம்பர் 2018

மீண்டும் பெரியக் கோவிலுக்கு வந்த இராஜராஜன்      ஆண்டு 1932.

      தஞ்சாவூர்

      மெல்ல, மெல்ல அந்தச் செய்தி, ஊர் முழுவதும் பரவுகிறது.

      செய்தியினைக் கேட்ட யாவரும் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.

      நம்ப முடியாமல், திகைத்துத்தான் போனார்கள்


      சிலைகளைக் காணவில்லை

      தஞ்சைப் பெரியக் கோவிலில் இருந்த, ,இரண்டு சிலைகள் மாயமாய் மறைந்து விட்டன.

     

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொய்கை நாட்டுக் கிழவன், தென்னவன் மூவேந்த வேளாளன் அவர்களால், செய்யப் பெற்றச் செப்புத் திருமேனிகள், காற்றோடு காற்றாய் கரைந்து போய்விட்டன.

      தேவாரப் பதிகங்களைத் தில்லைக் கோவிலில் இருந்து மீட்டு வந்து, ஓதுவார்களை நியமித்து, நாடெங்கும் பரப்பினார் அல்லவா? அவர் சிலை காணாமல் போய்விட்டது.

      மலைகளே இல்லாத சோழ மண்டலத்தில், ஐம்பதாயிரம் டன் சலவைக் கற்களால், ஒரு மாபெரும் கட்டமைப்பை நிறுவினார் அல்லவா, அவர் சிலை காணாமல் போய்விட்டது.

      ஆம், அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகே வியந்து போற்றும் வகையில், மாபெரும் கற்றளியை எழுப்பினார் அல்லவா, மாமன்னர் இராஜராஜ சோழன், அவர் சிலை, அவர் எழுப்பியக் கோவிலில் இருந்தே, காணாமல் போய்விட்டது.

     இராஜராஜன் சிலை மட்டுமா, பட்டத்தரசி உலகமாதேவியின் சிலையும் சேர்ந்தே காணாமல் போய்விட்டது.

      அடியார்கள், பக்தர்கள், தமிழறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

     ஆங்கிலேயர் ஆட்சியில் எதுவும் செய்ய இயலா நிலை.

      தஞ்சை மக்கள் காத்திருந்தனர்.

      1947 ஆம் ஆண்டு, நம் நாடு சுதந்திரம் பெற்றவுடன், பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தார்கள்.

       ராஜராஜனைக் கண்டுபிடித்துத் தாருங்கள் எனக் கோரிக்கை வைத்தனர்.

       கோரிக்கை வைத்ததோடு அமைதியடைந்துவிடாமல், தேடுதல் வேட்டையிலும் இறங்கினார்கள்.

       பெரியக் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில், ராஜராஜன் மற்றும் உலகமாதேவியின் செப்புச் சிலைகளைப் பற்றி, விரிவானக் குறிப்புகள் காணப்படுகின்றன.

       இச்சிலைகளின் உயரம்,

       சிலைகளின் ஆடை அணிகலன்களைப் பற்றிய விவரங்கள் கூட, இக்கல்வெட்டில், தெளிவாய் பொறிக்கப்பட்டுள்ளன.

        கல்வெட்டுக் குறிப்புகளை வைத்துக் கொண்ட தேடுதலைத் தொடர்ந்தனர்.

      தமிழறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் தொடர் தேடலில், இச்சிலைகள், குஜராத் மாநிலத்தில் உள்ள, கௌதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

      1984 ஆம் ஆண்டு, இராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவிற்கு வந்த, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடமும், அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களிடமும் கோரிக்கைகள் வைத்தனர்

      சிலைகளை மீட்டுத் தாருங்கள்

      செப்புத் திருமேனிகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரினர்.

      பலன் இல்லை.

      2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு, சதய விழாவிற்கும் முன்னதாக, சிலைகளை மீட்டு வர, முயற்சிகளை மேற்கொண்டார், அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

      அமைச்சர் தங்கம் தென்னரசு, இறையன்பு ஆகியோர் தலைமையில் குழு அமைத்து முயற்சிகளை மேற்கொண்டார்.

       ஆயினும் முயற்சி வெற்றி பெறவில்லை.

       தஞ்சை நகர மக்களின் ஏக்கமும் தீர்ந்தபாடில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு 2017, ஆகஸ்ட் மாதம், தஞ்சையின் புதிய காவல் கண்பாணிப்பாளராக, உடலில் காக்கியையும், உள்ளத்தில் செந்தமிழையும் சுமந்து மகிழும், முனைவர் த.செந்தில் குமார் அவர்கள் பொறுப்பேற்றார்.

      இவர் தமிழை நேசிக்கப் பிறந்தவர்

      தமிழை சுவாசிக்கப் பிறந்தவர்

     இவர் மேடையேறி வாய் திறந்தால், சங்க இலக்கியங்கள் அருவியாய் ஆர்ப்பரித்துக் கொட்டும்.

     இவர் தன் வீட்டில், சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை இருபத்து ஐந்தாயிரத்தையும் தாண்டும்.

      அத்துணையும் இவர் வாசித்த, நேசித்த நூல்கள்

      இவரது குழந்தைகளின் பெயரே, இவர் தமிழ் மீது கொண்ட, பற்றை, காதலை, நமக்கு உணர்த்தும்.

      செம்மொழி பாரதி, இவரது அன்பு மகள்

      திருவாசகம், இவரது பாச மகன்.

      இவர் தஞ்சைக்கு வந்த அன்றே, பெரியக் கோவிலுக்குச் சென்றார்.

      தமிழின் மீதும், சிவனின் மீதும் இவர் கொண்ட பற்றினை அறிந்த தமிழார்வளர்கள், தஞ்சை மக்களின்  நீண்ட கால ஏக்கத்தை, துயரத்தை, இவரிடம் எடுத்துக் கூறினர்,

       எங்கள் அரசரையும், பட்டத்து ராணியையும் மீட்டுத் தாருங்கள் என வேண்டினர்.

      அன்றே முடிவெடுத்தார்.

      எப்படியாவது, அரும்பாடுபட்டு, குஜராத் தேசத்தில் இருந்து, சிலைகளை மீட்டு, மீண்டும் சோழ மண்ணிற்குக் கொண்டுவர வேண்டும் என்று அன்றே முடிவெடுத்தார்.

     வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்களுடன்  கலந்து ஆலோசித்தார்.
     

இந்நிலையில், ஒரு நாள், தஞ்சைக்கு வந்திருந்த, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி திரு பொன்.மாணிக்கவேல் அவர்களைச் சந்தித்தார்.

       பெரியக் கோவில், மாமன்னன் ராஜராஜன், பொய்கை நாட்டுக் கிழவன் பற்றி, இருவரும், நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தனர்.

        அப்பொழுது சிலைகள் காணாமல் போன விவரத்தைக் கூறி, இச்சிலைகளை மீட்டாக வேண்டும், வழி கூறுங்கள் என வேண்டினார்.

        வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து விடலாம், என திரு பொன்.மாணிக்கவேல் கூறவே, அன்றே, வழக்கினைப் பதிவு செய்தார்.

       1932 ஆம் ஆண்டு, காணாமல் போனச் சிலைகளுக்கு, 2018 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

       விவரம் அறிந்து, பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர்.

       ராஜராஜனை மீட்டு வருவோம் என நம்பிக்கையோடு முழங்கினார்.

       வழக்கு, உயர் நீதி மன்றத்தைச் சென்றடைந்தது.

       நீதி மன்றத்தில் ஆணையின்படி, வழக்கானது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டது.

       ஐ.ஜி திரு பொன்.மாணிக்கவேல் அவர்கள் தலைமையிலான குழுவினர் அயராது பாடுபட்டனர்.

       உரிய சட்ட முறைகளைப் பின்பற்றினர்.
      

மாமன்னர் ராஜராஜன் மற்றும் பட்டத்தரசி உலகமாதேவி செப்புத் திருமேனிகளை மீட்டனர்.

       கடந்த 1.6.2018 வெள்ளிக் கிழமையன்று, மாலை, மேள, தாளம் ஒலிக்க, தேவாரப் பாடல்கள் முழங்க, மங்கையர்கள் நாட்டியம் ஆடி வரவேற்க.மாமன்னர் ராஜராஜ சோழனும்
பட்டத்தரசி உலகமாதேவியும்
பெரியக் கோவிலுக்குத் திரும்பினர்.

      தஞ்சை காவல் கண்காணிப்பாளர், தமிழ்த்திரு முனைவர் த.செந்தில் குமார், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., திரு பொன்.மாணிக்க வேல், ஏ.டி.எஸ்.பி திரு ராஜாராம், டி.எஸ்.பி திரு வெங்கட்ராமன், டி.ஜி.பி திரு டி.கே.ராஜேந்திரன், வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோரின் பெருமுயற்சியால், இராஜராஜனும், உலகமாதேவியும் மீண்டும் சோழ மண்ணிற்குத் திரும்பி உள்ளனர்.

        இவர்களது பெருமுயற்சி போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியது.

       போற்றுவோம், வாழ்த்துவோம்.

---------------------------

ஓம் சக்தி

ஜுலை மாத இதழில் 
வெளிவந்த எனது கட்டுரை
மாமன்னன் இராஜராஜசோழன், பட்டத்தரசி உலகமாதேவி
செப்புத்திருமேனிகள், பெரியக்கோயிலுக்குத் திரும்பும் 
அற்புத காணொளி22 கருத்துகள்:

 1. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முயற்சித்து சிலைகளை மீட்டு தந்த காவல்துறை அதிகாரிகள் திரு.பொன்.மாணிக்கவேல், திரு.த.செந்தில் குமார் அவர்களை போற்றுவோம், வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 2. சிறந்த முயற்சி... என்றும் போற்றத்தக்கவர்கள்...

  பதிலளிநீக்கு
 3. பொன் மாணிக்கவேல் போற்றுதலுக்குரியவர். ஓம் சக்தியில் உங்கள் கட்டுரை வந்திருப்பதற்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. ராஜராஜனின் வருகையை காட்டும் காணொளியை கண்டு ரசித்தேன்.

  இப்ப எந்த இடத்தில் இந்த சிலைகள் இருக்கு?! தஞ்சை வரும்போது சிலைகளை பார்க்க முடியுமா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் தஞ்சை வரும்பொழுது சிலைகளைப் பார்க்கலாம் சகோதரியாரே. மூலவருக்கு முன் அமைந்துள்ள மண்டபத்தில், காவலர்களின் பாதுகாப்புடன், இச்சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

   நீக்கு
  2. அப்படியா?! நல்லதுண்ணே

   நீக்கு
 5. இது குறித்த காணொளியும் செய்தியும் படித்தேன். மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. போற்றுவோம். வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் காணொளியும், செய்தியும் முன்பே பகிர்ந்து இருந்தீர்கள் அல்லவா?
  படித்த பார்த்த நினைவு இருக்கே!

  உங்கள் கட்டுரை ஓம் சக்தி இதழில் இடபெற்றதற்கு மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

  சிலைகளை மீட்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீட்கப்பட்ட இராஜராஜன் சிலை குறித்துத் தற்பொழுதுதான் பகிர்ந்துள்ளேன் சகோதரியாரே. ஆனால் காவல் கண்காணிப்பாளர் திருமிகு செந்தில் குமார் அவர்களைப் பற்றி ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 8. சிலைகளைக் கவர்ந்து சென்றவர் பற்றிய தகவல் ஏதுமுண்டா

  பதிலளிநீக்கு
 9. ராஜராஜன் மீண்டு(ம்) வந்த வரலாற்றை உங்கள் பாணியில் படித்து மகிழ்ந்தேன். பெருமையுற்றேன். இதழில் கட்டுரை வெளியானமைக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. சிலைகள் மீட்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி.

  சிறப்பான கட்டுரை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. நானும் இந்தச் செய்தி படித்து ஆச்சரியப்பட்டேன்.. அதிலும், இச்சிலைகளை மீண்டும் கொண்டு வந்து வைத்தபின்னரே, வறண்டிருந்த ஆறுகள் எல்லாம் நீர் நிரம்பி ஓடுகிறது எனவும் கேள்விப்பட்டேன்.. அது எந்தளவு நம்பிக்கையோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 12. சிறப்பான கட்டுரை.
  தமிழக வரலாறுகள் சிதையாமல் தொடர
  தங்கள் பதிவுகள் வலுச்சேர்க்கட்டும்!

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. போற்றுவோம், வாழ்த்துவோம்.
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 15. போற்றுவோம், வாழ்த்துவோம்.
  சிலை மீட்ட மாந்தரை வணங்குவோம்.
  பதிவுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்.

  பதிலளிநீக்கு
 16. காவல் பணிப்பாளர் முனைவர் செந்தில் குமாருக்கு பாராட்டுக்கள். ஏனைய அரச உத்தியோகத்தா்கள் அவரை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் மேற்கொண்டால் சிறப்பு

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு