05 அக்டோபர் 2018

பீரங்கி மேடு
     தஞ்சாவூர்

     நானூறு ஆண்டுகளுக்கும் முன்

     கி.பி 1618 அல்லது 1619

     தஞ்சையின் ஒரு பகுதி மக்கள், தங்கள் வீடுகளைத் துறந்து, கால்நடைகளையும் அழைத்துக் கொண்டு, வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.


     மக்களின் முகங்களில் கவலையோ, கலவரமோ தென்படவில்லை.

     ஆர்வம் தெரிகிறது

     என்ன நடக்கப் போகிறது?

     எப்படி நடக்கப் போகிறது? என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம், அந்நிகழ்வைக் கண்ணாரக் காணும் வேட்கை மட்டுமே தெரிகிறது.

     வீடுகளை விட்டு வெளியேறியவர்கள், நகரின் மேற்குப் பகுதியில் ஒன்று கூடுகின்றனர்.

     மன்னர் வருகிறார்

     வாழ்த்து முழக்கங்கள் எழுகின்றன

     மன்னரின் முகத்திலும் ஆர்வம் வழிந்தோடுகிறது

    

     இவர் நாயக்க மன்னர்

     இரகுநாத நாயக்கர்

     அச்சுதப்ப நாயக்கரின் அருந்தவப் புதல்வர்

     தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு, இவர் அரியணையில் அமர்ந்ததே கி.பி.1617 இல்தான்.

     இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான்

     ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்தே, இவர் உள்ளத்தில், இந்த ஆர்வம், வலம் வந்து கொண்டே இருந்தது.

     பல மாத உழைப்பின் பயனாய், இதோ மன்னர் இரகுநாத நாயக்கரின் ஆவல், எண்ணம் நிறைவேறப் போகிறது.

     மன்னர் கையசைத்து அனுமதி தருகிறார்

     வீரன் ஒருவன், கொழுந்து விட்டெரியும், தீபந்தத்தை எடுத்து, மெல்லத் திரியைப் பற்ற வைக்கிறான்.

     ஆம், திரியைத்தான் பற்ற வைக்கிறான்

     சிறு விளக்கின் திரியல்ல

      இரு கை விரல்களையும் ஒன்று சேர்த்தாலும், விரல்களுக்குள் அடங்காதப், பெருந் திரி.

     திரியின் முனையைத் தீ தொட்டவுடன், பர பரவென, திரியினைத் தழுவி, தீ வெகுவேகமாய், திரியினைத் தன் தணலால் கரைத்தவாரே முன்னேறுகிறது.

     திரி இருப்பின், அருகில் வெடி இருக்க வேண்டுமல்லவா?

     வெடியைக் காணவில்லை

      திரி மட்டும், நீண்டு கொண்டே செல்கிறது

      திரியின் நீளம் எவ்வளவு தெரியுமா?

      இன்றைய அளவு முறையில், இரண்டு கிலோ மீட்டர்

      என்ன?, திரியின் நீளமே இரண்டு கிலோ மீட்டரா?

      நீங்கள் வியப்பது புரிகிறது

     ஆம், திரியின் நீளம் இரண்டு கிலோ மீட்டர்தான்

     அப்படியானால் வெடி

     திரியின் முனையைத் தொட்ட தீ, வெகுவேகமாய் பயணித்து, திரியின் முடிவைத் தொடவே, நாற்பது நிமிடங்கள் ஆனது.

     மன்னரும், மக்களும், காதுகளைப் பொத்திக் கொண்டு, கண்காணாத் தொலைவை உற்று நோக்குகிறார்கள்.

     அடுத்த நொடி, பூமியை இரண்டாகப் பிளந்தது போன்று, ஒரு பயங்கர ஒலி, பொத்தியிருந்த காதுகளுக்குள் புகுந்து, ரீங்காரமிடுகிறது

     பூமியே அதிர்கிறது

     ஒரு பெரும் தீப் பிழம்பு, மேலெழுந்து விண்ணில் பாய்ந்து, நெடுந்தூரம் பயணித்து, பின் மெல்லக் கீழிறங்கி பூமியை முத்தமிடுகிறது

     மீண்டும் ஒரு முறை பூமி அதிர்கிறது

     சிறிது நேரம் மக்கள், சொல்லிழந்து,. நினைவிழந்துதான் நிற்கிறார்கள்

     சில நிமிட அமைதிக்குப் பின், கரவொலியும், வாழ்த்தொலியும், விண்ணை அதிரச் செய்கின்றன

     மன்னர் முகமும், மக்கள் முகங்களும் எல்லையில்லா, மகிழ்வால் ததும்பி வழிகின்றன.

     வெற்றி, வெற்றி

     சோதனை வெற்றி

     மக்கள் எரிந்து, அடங்கிக் கிடக்கும், திரியைத் தொடந்து ஓடுகிறார்கள்

     இரண்டு கிலோ மீட்டர் தொலைவு பயணித்ததும், தலை நிமிர்ந்து பார்க்கிறார்கள்

      இதோ, ஒரு சிறு குன்றில், புகையைக் கக்கியவாறு, தலை நிமிர்ந்து, நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது ஒரு பெரும் இரும்புக் குழாய்.

     பீரங்கி.

     இந்தியாவின், பெரும் பீரங்கி.

---

     வாளும், வில்லும் ஏந்தி எதிரிகளைக் களத்தில் நேருக்கு நேர் சந்தித்து, உடல் வலிமையையும், புத்திக் கூர்மையையும் பயன்படுத்தி, நடைபெற்று வந்த போர்க் களங்களில், அப்பொழுதுதான், வெடி மருந்தைப் பயன்படுத்தும் பீரங்கி என்னும் புத்தம் புது ஆயுதம், புதிதாய் நுழைந்திருந்தது.

     தஞ்சையில் இரகுநாத நாயக்கர் ஆட்சியில் அமர்வதற்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், மாமன்னர் பாபர், தன் படையில் பீரங்கியை இணைத்திருந்தார்.

     இரகுநாத நாயக்கருக்கும், தன் படையில் பீரங்கியைச் சேர்த்தாக வேண்டும் என்னும் ஆவல் எழுந்தது.

     பீரங்கி என்றால், சிறு பீரங்கி அல்ல

     பெரும் பீரங்கியைச் செய்தாக வேண்டும் என்னும் கட்டுக்கடங்காத காதல்.

     தஞ்சைக் கொல்லர்களை அழைத்தார்

     பீரங்கி வேண்டுமே

     தயார் செய்யுங்கள் என உத்தரவிட்டார்.

     இன்றைய தஞ்சையின், மருத்துவக் கல்லூரிக்கு அருகில் இருக்கும், மானோஜிப் பட்டி பகுதிதான், அன்றைய கொல்லர்களின் இருப்பிடம் மற்றும் பணியிடம்.

     தஞ்சைக் கொல்லர்களின் தொழிற் திறமையால், இதுநாள் வரை உலகு அறியாத, புது பீரங்கி, பெரும் பீரங்கி உருவானது.

      அன்று முதல், ஏன் இன்று வரை கூட, பீரங்கி என்றால், குழாய்களை அச்சில் வார்த்தெடுப்பதுதான் பழக்கம்.

     ஆனால், தஞ்சையில் உருவான பீரங்கி இந்த ரகமல்ல.

     அதிக கணமுடைய, 26 அடி நீளமுள்ள, மூன்று அல்லது நான்கு விரல்கள் அகலமுள்ள, 39 இரும்புப் பட்டைகளை, தேனிரும்புப் பட்டைகளை, பழுக்கக் காய்ச்சி, ஒன்றோடு ஒன்று ஒட்ட வைத்து, உருளை வடிவில் உருவாக்கி இருக்கிறார்கள்.

     பின்னர் 291 தேனிரும்பு வளையங்களைச் செய்து, மகளிர்  கரங்களுக்கு வளையல் அணிவிப்பதைப் போல, 26 அடி நீள குழாய் முழுவதும், சிறிதும் இடைவெளியின்றித், தொடராக, வளையங்களைப் பொறுத்திப், பழுக்கக் காய்ச்சி இணைத்திருக்கிறார்கள்.

     26 அடி நீளத்தைக் கடந்தும் நீளும் இரும்புப் பட்டைகளை, பீரங்கி வாயின் வெளிப் புறமாக மடக்கி விட்டிருக்கிறார்கள்.

     பீரங்கிக் குழாயின் மேல் ஐந்து இடங்களில் இணைப்பு வளையங்களையும் பொருத்தியிருக்கிறார்கள்.

     பீரங்கிக் குழாயின் பின்புறம், அழகுற, முழுவதுமாய் மூடி, திரி பொறுத்துவதற்காக ஒரு துளையினையும் அமைத்திருக்கிறார்கள்.

      தேனிரும்பால் செய்யப் பெற்ற, இந்த பீரங்கியின் எடை எவ்வளவு தெரியுமா?

     27 டன்.

     இருபத்து ஏழாயிரம் கிலோ கிராம் எடையுள்ள இந்த பீரங்கியை, மானோஜிப் பட்டியில் தயாரித்து, சுமார், ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேல், எடுத்து வந்து, ஒரு சிறு குன்றில் மேல் எற்றி, மூன்று சிறு மேடைகளின் மேல் அமர வைத்திருக்கிறார்கள்.

      எப்படி நகர்த்தி வந்திருப்பார்கள்

     எப்படி குன்றின் மேல் ஏற்றியிருப்பார்கள்

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     இதுமட்டுமல்ல, இந்த பீரங்கியின் வயது நானூறைக் கடந்தும், வெயிலில், மழையில், பணியில் நனைந்தும், காய்ந்தும், இன்று வரை, இந்த பீரங்கியின், ஒரு சிறு துரும்பில் கூட, துரு பிடிக்கவே இல்லை.

   

நண்பர் திரு டி கோபால்

நண்பர் திரு எஸ் கோவிந்தராஜ்

நண்பர்கள் திரு எஸ் கோவிந்தராஜ், திரு ஆர் லெனின் மற்றும் திரு டி கோபால்Add caption
  இராஜகோபால பீரங்கி

     மன்னர் இரகுநாத நாயக்கர், இந்தப் பெரும் பீரங்கிக்கு வைத்த பெயர்

     இராஜகோபால பீரங்கி

      தனது விருப்பத்திற்குரிய, தான் வணங்கும் தெய்வமான, மன்னார்குடி, இராஜகோபால சுவாமியின் பெயரையே, தன் நாட்டைக் காக்க, உருவாக்கப் பெற்ற, இந்த பீரங்கிக்கு வைத்தார்

      இராஜகோபால பீரங்கி

      நண்பர்களே, இன்று உலகில் உள்ள, பழைய பீரங்கிகளிலேயே, இந்த இராஜகோபால பீரங்கி, ஐந்தாம் இடத்தில் இருப்பதாக, அறிவித்திருக்கிறார்கள்.

     முதலிடத்தில் சீனா

     இரண்டாமிடத்தில் இந்தியாவின் ஜெய்ப்பூர்

     மூன்றாமிடத்தில் ரஷ்யா

     நான்காமிடத்தில் இலண்டன்

     ஐந்தாமிடத்தில், இந்த தஞ்சை பீரங்கி.

     ஆனால், பழமையினாலும், செய்யப்பெற்ற விதத்தினாலும், முதலிடத்தில் இருக்க வேண்டிய பீரங்கி, தஞ்சை பீரங்கிதான் என்கிறார், வரலாற்று ஆய்வாளர் அய்யம்பேட்டை திரு ந,செல்வராஜ் அவர்கள்.

     இருப்பினும், இந்த வேண்டுகோளினை முன்வைக்கக் கூட, யாரும் முன்வராத காரணத்தினால், இந்த பீரங்கி, ஐந்தாம் இடத்திலேயே தொடர்கிறது.

     இராஜகோபால பீரங்கி

     இந்த பீரங்கியின் பெயர், இராஜகோபால பீரங்கி என்பதுகூட, தஞ்சைவாசிகள் பலருக்கும் தெரியாது என்பதுதான் வேதனை.

     பீரங்கி மேடு

     பீரங்கி மேடு என்னும் பெயரினைத்தான் இன்று பலரும அறிவர்.

     பீரங்கி மேடு

     இன்றும் தலை நிமிர்ந்துதான் நிற்கிறது.