07 செப்டம்பர் 2018

மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை     ஆண்டு 1989

     தஞ்சாவூர்

     சீனிவாசபுரம்

     இராஜராஜன் நகர்

     தஞ்சாவூர் பெரிய கோயிலை ஒட்டியுள்ளப் பகுதி சீனிவாசபுரம் ஆகும்.

     இந்த சீனிவாசபுரத்திற்கு அருகில், புத்தம் புதிதாய் தோன்றிய நகர் இராஜராஜன் நகர்.

     வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்துக் கொண்டிருந்த காலம்.

     இந்நகரில், புதிதாய் ஒரு வீடு கட்ட, அஸ்திவாரம் தோண்டுவதற்கானப் பணிகள் தொடங்கியிருந்தன.

     அஸ்திவாரத்தின் ஆழம் பத்து அடியை நெருங்கியபோது, பெரும் கருங்கல் ஒன்று இடைமறித்துத் தடுத்தது.

     நீண்ட கல்லாகத் தெரியவே, கல்லின் திசையில் மண்ணை அகற்றியபோது, பணியாளர்கள் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.


     காரணம், அது வெறும் கருங்கல் அல்ல.

     அது ஒரு கற்தூண்

     எழுத்துக்களைத் தன் உடல் முழுவதும் சுமந்த கற்றூண்.

     இருபது அடி நீளம்

     தூணின் ஒவ்வொரு பக்கமும் நான்கு அடி அகலம் இருக்கும்.

     இடத்தின் உரிமையாளர் முதலில் திகைத்துத்தான் போனார்

     சில நொடிகளில் திகைப்பு அச்சமாய் மாறியது

     நமது இடத்தில் கல்வெட்டு கிடைத்திருக்கிறது என்ற செய்தி வெளியில் பரவினால், அரசு இடத்தைப் கைப்பற்றிவிடுமோ, தன்னால் வீடு கட்ட இயலாமல் போய்விடுமோ என்னும் அச்சம் எழுந்தது.

     எனவே கல் உடைப்பவர்களை அழைத்து, நீண்ட கற்றூணை, எழுபது துண்டுகளாக உடைத்துவிட்டார்.

      அஸ்திவாரம் எழுப்ப இந்தக் கற்களையேப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற எண்ணம் அவருக்கு.

      ஆயினும் பணியாளர்கள் மூலம் செய்தி வெகு வேகமாய் பரவி, இந்து நாளிதழின் நிருபர் திரு வி,கணபதி அவர்களையும், வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களையும் சென்றடைந்தது.

     இருவரும் இணைந்து, மாவட்ட ஆட்சியரின் துணையோடு, உடைந்த கல்துண்டுகளைக் கைப்பற்றினர்.

     தமிழக அரசின் தொல்லியல் துறையினரும், இந்தியத் தொல்லியல் துறையினரும், உடைந்த துண்டுகளை இணைந்து, கல்வெட்டுச் செய்தியினை நகலெடுத்தனர்.

     மொத்தம் 12 பாடல்கள்

     கிரந்தத் தமிழ் எழுத்துக்களில் 12 வடமொழிப் பாடல்கள்

     இராஜராஜனின் பெரும் புகழ் பாடும் பாடல்கள்

     இதுநாள் வரை இதுபோன்றப் பாடல்கள் கிடைத்ததேயில்லை

     இலக்கண அமைதியோடு, அலங்காரங்கள் அமையப் பெற்றப் பாடல்கள்.

     இதுவரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளின் செய்திகள் அனைத்தும், திருக்கோயில்கள் மற்றும் அரசு நடவடிக்கைகளைப் பறைசாற்றுவதாகும்.

     ஆனால் இக்கல்வெட்டு, முழுக்க முழுக்க இராஜராஜ சோழனின் புகழை மட்டுமே பாடும் கல்வெட்டாகும்.

     இராஜராஜ காவியம்

     இப்பாடல்களுள், ஒரு பாடலின் தமிழாக்கத்தைப் பாருங்கள்.

சிறந்த அறிவாளியான மும்முடிச் சோழனே, உன்னுடன் கடும் போரில் விருப்பம் கொண்ட, நல்ல மரபில் வந்த எதிரிகள், தற்போது அச்சம் தெளிந்து, தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.

---

     நண்பர்களே, கடந்த மாதம், ஏடகம் நிகழ்த்திய ஞாயிறு முற்றம் சொற்பொழிவில்,வரலாற்று ஆய்வாளர்
அய்யம்பேட்டை ந.செல்வராஜ் அவர்கள்,
சோழரும் அரண்மனையும்
என்னும் தலைப்பில் ஆற்றிய பொழிவில்தான், இந்தக் கூடுதல் தகவலை, இலவச இணைப்பாக வழங்கினார்.

     இதுமட்டுமல்ல, இந்தக் கல்வெட்டு, இராஜராஜன் புகழை மட்டுமே பாடுவதையும், கடும் போரில் விருப்பம் கொண்ட எதிரிகள், தற்பொழுது அச்சம் தெளிந்து தலை நிமிர்ந்து நிற்கின்றனர் என்று உரைப்பதையும், தன் ஆய்வுப் பார்வையால் விழுங்கி, இது நாள் வரை யாரும் கண்டறியாத, யாரும் சொல்லாத கருத்தை முன் மொழிந்தார்.

     இராஜராஜன் புகழை மட்டுமே பாடுவதால், இக்கல்வெட்டு, இராஜராஜன் காலத்திற்குப் பிந்தையது.

     இராஜராஜ சோழன் உயிரோடு இருக்கும் வரை, அவன் எதிரிகள் அச்சம் தெளிய வாய்ப்பே இல்லை என்பதால், எதிரிகள் அச்சம் தெளிந்து நிற்கின்றனர் என்ற வரிகள், இக்கல்வெட்டு, இராஜராஜன் காலத்திற்குப் பிந்தையது என்ற கருத்தை, மேலும் உறுதிபடுத்துகின்றன என்றார்.

     இராஜராஜன் காலத்திற்குப் பிந்தைய கல்வெட்டு எனில், நிச்சயமாக, இந்தக் கல்வெட்டு இருந்த இடத்தில்தான், இராஜராஜனின் பள்ளிப்படை இருந்திருக்க வேண்டும் என முழங்கினார்.

     பள்ளிப் படை
             
     இராஜராஜனின் சமாதி.

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க இயலாத வகையில், வானுயர்ந்த கற்றளியை எழுப்பிய,
அபயகுல சேகரன்,        அரிதுர்க் கலங்கன்,        அருண்மொழி, 
அழகிய சோழன்,          இரணமுக பீமன்,          இரவிகுல மாணிக்கன்,
இரவிவம்ச சிகாமணி,    இராஜ கண்டியன்,         இராஜ சர்வஞ்ஞன்,
இராஜாச்ரயன்,            இராஜகேவரி வர்மன்,      இராஜ மார்த்தாண்டன்,
இராஜேந்திர சிம்மன்,     இராஜ விநோதன்,         உத்தம சோழன்,
உலகளந்தான்,            உய்ய கொண்டான்,        கேராந்தகன்,
சண்ட பராக்ரமன்,        சத்ரு புஜங்கன்,            சிங்களாந்தகன்,
சிவபாத சேகரன்,         சோழ குலசுந்தரன்,       சோழ மார்த்தாண்டன்
சோழேந்திர சிம்மன்,    திருமுறைகண்ட சோழன், தெலிங்க குலகாலன்
நிகரிலி சோழன்,         நித்ய விநோதகன்,        பண்டித சோழன்,
பாண்டிய குலாசனன்,   மும்முடிச் சோழன்,        மூர்த்த விக்கரமாபரணன்
ஜனநாதன்,               ஜெயங்கொண்ட சோழன்,  சத்திரிய சிகாமணி

எனப் பலப் பலவாறு போற்றப்பட்ட,
மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு,
தன் தந்தைக்கு,
முதலாம் ராஜேந்திரச் சோழன்,
நிச்சயமாய், வெகு நிச்சயமாய்,
தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகிலேதான்
பள்ளிப் படையை எழுப்பி இருப்பான்

எனவே, கற்றூண் கண்டுபிடிக்கப் பட்ட இடத்தில்தான்
இராஜராஜன் பள்ளிப்படை இருந்திருக்க வேண்டும்
என உறுதிபட உரைத்தார்.கற்றூண் கண்டு பிடிக்கப் பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தால், உண்மை வெளிப்பட்டிருக்கும்.

     நண்பர்களே, இந்தக்  கல் தூண், தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபத்தின், அடித்தளத்தில் அமைந்திருக்கும், இராஜராஜசோழன் அகழ் வைப்பகத்தில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக அறிந்து, கடந்த 2.9.2018 ஞாயிற்றுக் கிழமையன்று, சென்று பார்த்தேன்.

     வியந்துதான் போனேன்.

    கற்கள் துண்டுபோடப்பட்ட நிலையில், அவற்றை, மீண்டும் அதன் வரிசையில், அருகருகே, அழகுற அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

     எழுபது துண்டுகளில், எழுத்துக்களைச் சுமந்த சுமார் 28 துண்டுகள் மட்டுமே இவ்விடத்தில் இருக்கின்றன.

      எழுபது துண்டுகளையும், அடுக்கிவைத்தால் எத்துணை பெரியதாக, எத்துணை உயரமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

      அப்படியானால், இத்துணை அகல, இத்துணைப் பெரிய கற்றூணால் தாங்கப்பெற்றிருந்த, இராஜராஜனின் பள்ளிப்படை எத்துணை பெரியதாக இருக்க வேண்டும்.

      எத்துணை உயரமாக, எத்துணை கம்பீரமாக காட்சியளித்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்த்தேன்.

      பெருமூச்சுதான் வெளி வந்தது.

      இந்தக் கற்றூண் கண்டுபிடிக்கப்பட்டு இருபத்து ஒன்பது வருடங்கள் கடந்து ஓடி விட்டன.

      ஆனால், கற்றூண் கிடைத்தப் பகுதியில் ஆய்வு எதுவும் இதுநாள் வரை தொடங்கப்படவே இல்லை என்பதுதான் வேதனை.

      அகழாய்வு செய்வார்களா?

      உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் உண்மையைத் தட்டியெழுப்பி வெளிக்கொணர்வார்களா?

       தஞ்சை மட்டுமல்ல, தமிழகம் மட்டுமல்ல, தமிழ்கூறும் நல்லுலகே, காத்துக் கொண்டிருக்கிறது.

       வாழ்க மாமன்னன் இராஜராஜன்.

31 கருத்துகள்:

 1. நல்லதொரு விடயம் நண்பரே...

  ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் வரலாற்று சின்னங்களை பெருமை படுத்தும் எண்ணம் துளியளவும் இல்லாதவர்களே...

  தனது லாபம் என்ன என்பது மட்டும்தான் குறிக்கோள்.

  பதிலளிநீக்கு
 2. தஞ்சாவூர் முழுக்க சுற்ற வேண்டும் என்ற எண்ணமுண்டு.

  பதிலளிநீக்கு
 3. நல்ல விஷயம். தஞ்சையில் இன்னும் எத்தனை எத்தனை விஷயங்கள் மண்ணுக்குள் புதைந்திருக்கின்றனவோ... அகழ்வாராய்ச்சி நடத்த அரசு எந்த முயற்சியும் செய்வதில்லை என்பதில் வருத்தம் தான்.

  பதிலளிநீக்கு
 4. வியக்க வைக்கும் தகவல்கள்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 5. ரொம்பவும் நன்றி.... வாதங்களை தெளிவாக முன் வைத்திருக்கிறீர்கள்....திறந்த மனதோடு ஆய்வு செய்தால் உண்மையை உணரமுடியும்... நான் சொன்னவற்றை அப்படித்தான் அனுகி இருக்கிறீர்கள்... திட்டமதிட்டமிட்டே ஒரு மாமன்னரின் பள்ளிப்படையை மறைத்தார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.... எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.....இந்த வழக்கை மக்கள் மன்றத்தில்தான் வைக்க வேண்டும்... தகுதி வாய்ந்த அறிஞர்கள் இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.... மாமன்னர் ராஜ ராஜ சோழரின் பள்ளிபடை தஞ்சையில்தான் இருந்தது.... கிடைத்த சான்றுகளையும் வாய்ப்புகளையும் கோட்டை விட்டார்கள்.... இந்த தகவல் வரலாற்று ஆர்வலர்களைச் சென்றடைய வேண்டும்.. உறுதி செய்யப்பட வேண்டும்..... இறுதி செய்யப்படவும் வேண்டும்... தங்கள் பணிகள் தொடர...மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. மண்ணில் புதைந்தவற்றை வெளிக்கொணரும்போது பல சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. ஒரு முக்கியமான வரலாற்றுச் செய்தியை அரிதின்முயன்று சான்றுகளைத் திரட்டி தந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. விரைவில் நல்ல வழி கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான பதிவு. தமிழர் வரலாறு காப்பாற்றப்பட வேண்டியது கட்டாயம். அதை இன்றைய தலைமுறை உணர்ந்து செயல்பட வேண்டும்.

  உங்கள் பதிவு எங்கள் தளத்தில்....
  https://sigaram6.blogspot.com/2018/09/blog-post_72.html

  பதிலளிநீக்கு
 8. புதிய வரலாறு படைக்க விழையும் இளைய தலைமுறைக்குப் பழைய வரலாற்றறிவு அவசியத் தேவை என்பதை ஆட்சியாளர்கள் உணர்வதே இல்லை.

  மிக அரிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. புதியதொரு ஆராய்ச்சி பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி. ஏற்கனவே உடையாளூரில் ராஜராஜ சோழன் பள்ளிப்படை இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது தஞ்சை பெரிய கோயில் அருகே, இன்னொரு பள்ளிப்படை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடையாளூரில் மாமன்னர் ராஜராஜ சோழரின் பள்ளிப்படை இருப்பதாக உறுதிப்படுத்த இதுவரை எந்த உறுதியான சான்றுகளும் தரப்படவில்லை... ஒரு யூகமாக சொல்லப்போக அதையே சுற்றி சுற்றி வருகிறார்கள்... இப்படி சொல்பவர்கள் யாரும் ஆய்வாளர்கள் கிடையாது... ஆர்வலர்கள்தான் இதற்கு இன்னும் நீரூற்றி மேலும் மேலும் வளரக்கிறார்கள்...தஞ்சையில்தான் இருந்தது என்பது என் ஆய்வு முடிவு... எதிர்கால கண்டுபிடிப்புகளால் இவை மாறிப் போகலாம்.... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....உடையாளூரில் கிடையாது....

   நீக்கு
  2. அன்புடையீர்...
   தங்களது இந்தக் கருத்து ஏற்புடையது..

   உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்...

   நீக்கு
 10. எனக்கும் பெருமூச்சாகத்தான் இருக்கிறது.........

  பதிலளிநீக்கு
 11. ஒவ்வொரு நாளும் புதுப்புது பயனுள்ள தகவல்களை வழங்குவதற்கு மிகவும் நன்றி அய்யா தொடரடும் உங்கள் தமிழ் பணி

  பதிலளிநீக்கு
 12. அருமையான ஆய்வு முயற்சி
  ஆய்வுகள் தொடர வேண்டும்
  தமிழின் தொன்மை அறிய பல இருக்கலாம்

  பதிலளிநீக்கு
 13. சுவாரஸ்யமான தகவல். தனி மனிதர்களின் சுயநலத்தால் மறைந்து போக இருந்த அரிய பொக்கிஷத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். இது கூட 29 வருடங்கள் பழையதா? இனியாவது யாராவது முயற்சி எடுத்தால் நலம்.

  பதிலளிநீக்கு
 14. மிகவும் அரிதான தகவல் நண்பரே.அரசு வெகு விரைவில் உண்மையை வெளிக்கொணர வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்வோம்

  பதிலளிநீக்கு
 15. மிகவும் அரிதாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.. நன்றி வாழ்க

  பதிலளிநீக்கு
 16. மாற்று சிந்தனை.
  நான் உணர்ந்த வகையில் ராஜேந்திர சோழன் போர் வெறியனல்ல.
  போருக்கு அஞ்சியவனுமல்ல.
  வீரத்தாலும் விவேகத்தாலும் அவன் வென்ற போர்கள் பலப்பல.
  அவற்றின் வெற்றிக்குப் பின் எதிரியுடன் பகைமை பாராட்டியதாகவோ எதிரி நாட்டு மக்களை துன்புறுத்தியதாகவோ அந்நாட்டின், நாட்டு மக்களின் உடமைகளைக் கவர்ந்ததாகவோ அறிகிலன்.
  ஆகவே எதிரிகள் அஞ்சவில்லை என்பதன் பொருளாக அவனின் பகை நேசித்தலால் என்றே நான் உணர்கிறேன்.
  ஆகவே போருக்குப்பின் பரணியை ஒத்த வகையில் அவனின் நற்குணங்களை வெளிப்படுத்துங்காண் அப் புலவர் இப்பாமாலையை ராசராசனுக்கு அணிவித்திருக்கலாம் என்பது என் கணிப்பு.
  கருத்தின் அடிநாதத்தை ஆய்வர்கள் ஆய்வுக்கு விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. அருமையான தகவல்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 18. அருமையான தகவல் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 19. இப்படி ஒரு கல் தூண் இருந்திருப்பதே இப்போத் தான் தெரியும். தகவல்கள் மிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.உண்மை விரைவில் வெளிவரப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 20. இங்கு தோண்டினால் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்று சொன்ன ஜோசியரின்பேச்சைக்கேட்டாலும் கேட்பார்கள் ஆனால்சரித்திர ஆராஉய்ச்சிகு உதவும்தகவல்கள் நிராகரிக்கப்படும் நாம் இந்தியாவில் இருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 21. தஞ்சை பெரிய கோயிலும் அதை எழப்பியவர்களூம்
  இன்னும் ஆச்சர்யம் சுமந்தவரகளாகவே காட்சி தருகின்றனர்/பதிவின் தகவல்கள் புது திசை சொல்கிறது.வாழ்த்துக்கள் சார்/

  பதிலளிநீக்கு
 22. இராஜராஜனின் பள்ளிப்படை உடையாளூரில் இருந்தது என்ற கூற்றை வரலாறு.காம் குழு மறுத்துள்ளார்கள். இராஜராஜன் நகர் கல்தூண் கல்வெட்டு பற்றிய செய்தி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இது பற்றிய பதிவினை வெளியிட்டு தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வியக்க வைக்கும் தகவல்கள்.
  அருமையான தகவல்கள். நன்றி.
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 24. மூடி மறைக்கப்பட்ட வரலாற்று படிமங்களில் இதுவும் ஒன்றாகும்

  பதிலளிநீக்கு
 25. புதிய தகவல். நம்பிக்கைக்குரிய ஆதாரங்களுடன் . மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 26. தஞ்சை முழுவதுமே ஆராயப் படவேண்டிய பூமி.
  எப்படி மனம் வந்து உடைத்தார்கள். இப்பொழுதாவது வெளி வந்தது
  ஆறுதல். மிக நன்றி ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 27. மிகவும் அரிய தகவல்களை சுவாரஸ்யமாக அளித்ததற்கு இனிய நன்றி!!

  பதிலளிநீக்கு
 28. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, ஆய்வு செய்தவர்களுக்கும் ஆய்வினை அழகாக பதிவிட்டமைக்கும் நன்றி. உண்மையான மனிதர்களை தகுதியானவர்களை இந்த உலகம் மதிக்காது.தனிப்பட்ட இலாபம் தந்தால் மட்டுமே ஒரு செயலை செய்யும் உலகம் இது.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு