21 செப்டம்பர் 2018

உய்யகொண்டான்
    
       ஓராண்டு, ஈராண்டு அல்ல

       ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்

       மக்கள்

      கைகளில் ஆயுதங்களை ஏந்தி, மக்கள் பெருங்கூட்டமாய் புறப்படுகிறார்கள்,


       ஒவ்வொரு சிற்றூரில் இருந்தும் ஒரு கூட்டம் புறப்படுகிறது.

       ஏதேனும் போருக்குப் புறப்படுகிறார்களா?

       பெண்கள் கூட, கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து செல்கிறார்கள்

       சின்னஞ் சிறுவர்கள் கூட ஆரவாரத்துடன் நடந்து செல்கிறார்கள்

       எனவே, சண்டைக்கு அல்ல என்பது தெரிகிறது

       பிறகு ஏன் ஆயுதம் ஏந்திச் செல்கிறார்கள்

       ஆயுதங்களா அவை?

        கடப்பாறை, மண் வெட்டி, மூங்கில் கூடைகள் முதலானவற்றை அல்லவா, சுமந்து செல்கிறார்கள்.

       கடப்பாறைகளையும், மண்வெட்டிகளையும் எடுத்துக் கொண்டு, எதற்காக, ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு செல்ல வேண்டும்

       வாருங்கள், மக்களோடு, மக்களாய் சென்று பார்ப்போம்

       இதோ மன்னர்

       மாமன்னர்

       எத்துணை கம்பீரமாய், எத்துணை எளிமையாய், அமைச்சர் பெருமக்கள் சூழ நிற்கிறார்.

       மன்னரைப் பார்த்ததும் மக்கள் மகிழ்கிறார்கள்.

       வாழ்த்து முழக்கங்கள் விண்னைத் தொடுகின்றன.

       மக்களை அமைதிப் படுத்திய மன்னர், பணியினைத் துவக்கி வைக்கிறார்,

        மக்கள் தொடர்கிறார்கள்.

       இது நம் நாட்டுக்கான வேலை மட்டுமல்ல

       நம் வீட்டுக்கான வேலை

       நம் சந்ததியினருக்கான வேலை

       நம் எதிர்கால வளர்ச்சிக்கான வேலை என்னும் உணர்வு பொங்க, உழைக்கிறார்கள்

       நீண்ட கோடு போட்டது போல், பூமியைப் பிளக்கிறார்கள்

       உலகின் எந்த மூலையிலும், அதுநாள் வரை யாரும் செய்திடாத செயல், முதன் முறையாய், தமிழ் மண்ணில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

       பூமியைப் பிளந்து கொண்டே செல்கிறார்கள்

       மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் பணி தொய்வின்றித் தொடர்கிறது

       புத்தம் புதிதாய், ஓர் ஆறு, மெல்ல மெல்ல உருப் பெருகிறது.

       ஆற்றின் நீளம் வளர, வளர, ஆற்றின் இருபுறமும், கைகள் முளைத்ததுபோல், ஆங்காங்கே, கிளையாறுகள் பரந்து விரிந்து, ஏரிகளைத் தஞ்சமைடைகின்றன.

       புத்தம் புதிதாய் ஓர் ஆறு

       ஆறு வெட்டியாகிவிட்டது

        ஆற்றிற்கு நீர்

        புதிதாய் வெட்டப்பெற்ற ஆற்றின் தலைப் பகுதி, அருகில், இரு கரைத் தொட்டு, பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும், காவிரியுடனும், கோரையாற்றுடனும் இணைக்கப் படுகிறது.

        காவிரி நீரும், கோரையாற்று உபரி நீரும், இது என்ன?  திடீரென்று ஓர் ஆறு, நம்மை வா, வா என்று அழைக்கிறதே என்று வியந்தபடி. இந்த ஆற்றினுள் மூக்கை நுழைக்கின்றன,


மாமன்னனின் எண்ணத்தால், உயர் உள்ளத்தால், மக்களின் அயரா உழைப்பால், மக்களின் வியர்வையில் நனைந்திருந்த ஆற்றில், காவிரி, மற்றும் கோரையாற்று நீர் விரைந்து ஓடுகிறது.

        ஆறு மட்டுமல்ல, மக்களின் உள்ளமும் குளிர்ந்துதான் போனது

       ஆற்றின் வழி நெடுகிலும், மக்கள் வரிசையாய் நின்று, மலர் தூவி, புதுப் புனலை வரவேற்கின்றனர்.

        வாழ்நாள் எல்லாம், ஏக்கத்தோடு, வானம் பார்த்திருந்த, ஏரிகள், குளங்கள் அனைத்தும், நீராலும், மகிழ்ச்சியாலும் ததும்பி வழிகின்றன.

          வயல் வெளிகள் செழித்து எழுகின்றன.                                                                                                   
           ஏரி, குளங்களை வெட்டியவர் உண்டு

         ஆனால் ஆறு.

          கற்பனையில் கூடத் தோன்றாத அதிசயம், தமிழ் மண்ணில் உண்மையாகி இருக்கிறது.

        இதில் மேலும் வியப்பிற்குரிய செய்தி என்ன தெரியுமா?

        காவிரி நீரை, கோரையாற்று உபரி நீரை, காவிரியை விட, கோரையாற்றைவிட, உயரமான மேட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றதுதான் சாதனை.

         இச்சாதனையை நிகழ்த்திய மன்னன் பெயரையே, ஆற்றிற்கும் சூட்டி மகிழ்ந்தனர் மக்கள்.

உய்ய கொண்டான்

       ஆம், இம் மாமன்னனின் பட்டப் பெயர்களுள் ஒன்றுதான் உய்யகொண்டான்.

          இன்றைய திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த் தலையில் தொடங்கி. திருச்யினுள் புகுந்து புறப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள சேராண்டி ஏரியில், தன் பயணத்தை நிறைவு செய்கிறது, இந்த ஆறு.

         உய்யகொண்டான் ஆற்றின் முழு நீளம் 71 கி.மீ

        உய்ய கொண்டானில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்களின் எண்ணிக்கை 120.

        வியப்பாக இருக்கிறதல்லவா

         இம் மன்னன் ஒரு சோழ மன்னன்.


மாமன்னன் இராஜராஜ சோழன்

        உய்யகொண்டான் ஆறு அல்லது உய்யகொண்டான் வாய்க்காலை உருவாக்கியதோடு, அமைதியடைந்துவிடவில்லை இராஜராஜன்.  

        இந்த ஆற்றை நிருவகிப்பதற்காக, ஆற்று நீரைப் பகிர்ந்து வழங்குவதற்காக, அன்றே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு வாரியத்தையும் உருவாக்கினான்.

உய்யகொண்டான் வாரியம்

       இதுபோன்ற ஒரு வாரியத்திற்காகத்தானே, பல்லாண்டுகளாய் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உய்யகொண்டான் வாரியம்

        நீர் மேலாண்மையை, முதன் முதலில் உலகிற்கு அறிமுகப் படுத்திய மன்னன், மாமன்னன் இராஜராஜ சோழன்

        இதுமட்டுமல்ல, இராஜராஜன் காலத்து, சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்த ஒன்றாகும்.

         காவிரி உற்பத்தியாகும், குடகுமலையில் தொடங்கி, காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை, சோழனின் ஆட்சிதான்.

          இராஜராஜன் தன் காலத்தில், பரந்து விரிந்த, தன் ஆட்சி எல்லையை, நிருவகிப்பதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு பொறுப்பாளரை நியமித்து, அரசாண்டு வந்தான்.

          தண்ணீரின் தேவையை, தண்ணீரின் அருமையை, தண்ணீரின் அவசியத்தை நன்குணர்ந்து, நீர் மேலாண்மையை உலகிற்கே அறிமுகப்படுத்திய, இராஜராஜன், காவிரி தோன்றும், குடகுமலைப் பகுதிக்குப் பொறுப்பாளராக, யாரை நியமித்தான் தெரியுமா?

தன் மகனை
இராஜேந்திர சோழனை.

       இராஜேந்திர சோழன், இளவரசனாக முடிசூட்டப் பட்டபிறகு, 1012 ஆம் ஆண்டில், இன்றைய கர்நாடகாவின், பாலமுடி என்னும் ஊரில் உள்ள, காவிரி ஆற்றில், நீராடியதை முழங்குகிறது, அங்கிருக்கும் கல்வெட்டு,

---

காவிரியுடன் ஒரு பயணம்


வரலாற்று ஆய்வாளர்
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்
ஒளிப் படங்களைக் கண்களுக்கு விருந்தாக்கி, தன் தேர்ந்த, ஆய்ந்த பொழிவால், செவிகளும், நல்லிதயங்களும் மகிழும் வண்ணம், சொற்பெருக்காற்றிய நிகழ்வில், உலகையே மறந்துதான் அமர்ந்திருந்தேன்.


காவிரியுடன் ஒரு பயணம்

        ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மாமன்னர்களும், பெருமக்களும், தங்கள் உள்ளத்தே கொண்டிருந்த, ஆறுகளை மதிக்கும் பண்பை, நாம் பல்லாண்டுகளுக்கு முன்பே இழந்துவிட்டோம்.

       காவிரிக்காகப் போராடுகிறோம்

      முல்லைப் பெரியாருக்காகப் போராடுகிறோம்

       ஆனால், தமிழக ஆறுகளில் இருந்து, தினமும் பத்தாயிரம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு, கேரளா, கர்நாடகா எனத் தங்குதடையின்றிப் பயணித்துக் கொண்டிருப்பதை, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.   

        இந்நிலை தொடருமானால், சோழ நாடு வறண்ட பாலைவனமாகிவிடும் என வேதனையை வெளிப்படுத்தினார்.

ஏடகம்
ஞாயிறு முற்றம்

காவிரியுடன் ஒரு பயணம்

ஏடகம் அமைப்பின் முதல் பொழிவு


தஞ்சாவூர், சரசுவதி மகால்,
தமிழ்ப் பண்டிதர்,
திரு மணி.மாறன் அவர்கள்
உள்ளத்தில் முகிழ்த்தெழுந்த
ஏடகம் அமைப்பின் பொழிவுகளைப் பதிவுகளாக்கி, தங்களுடன் பகிர்ந்து கொள்வதில், பெருவிருப்பம் உடையவன் நான்,

        ஆனாலும், ஏடகத்தின் முதல் பொழிவினைப் பகிர்ந்து கொள்ளத் தவறித்தான் போனேன்.

         ஏடகத்தின் ஆதிப் பொழிவினையே, முதல் பொழிவினையே, பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்னும் ஏக்கம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது.

        இன்றுதான் என் ஏக்கம் தீர்ந்தது.

        காவிரி போற்றுவோம்.                                                                                                                                

     

21 கருத்துகள்:

 1. ஏடகம் அமைப்பின் நிகழ்வுகளை இன்னும் அறிய வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அன்றைய மன்னர்கள் மட்டுமல்ல, மக்களும் பொதுநலமாகவே வாழ்ந்தார்கள் ஆகவே மகிழ்ச்சி நிலைத்து இருந்தது.

  இன்று மக்களின் எண்ணங்கள் குறுகி விட்டது அதன் பலனையும் நாம் அனுபவித்தே தீரணும்.

  அரிய தகவலை பகிர்ந்தளித்தமைக்கு நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 3. உய்யக் கொண்டான் ஆற்றின் கரையிலும் சில நாட்கள் குடியிருந்தோம். அங்கு வெள்ளம் பார்த்ததுண்டு. இன்றுதான் தெரியும் .ஆக்கியவர் இராஜ ராஜ சோழன் என்று.


  மிக நன்றி திரு .ஜெயக்குமார்.
  தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்க முயற்சிக்கிறேன்.
  மக்கள் மனம் வரண்டு போனது போலவே ஆற்றுப் படுகையும்
  வரண்டுவிட்டதோ.

  பதிலளிநீக்கு
 4. நிறைவான பதிவு...

  ஆட்சியில் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான பகிர்வு. அன்றைக்கு இருந்த அரசரும், மக்களும் எத்தனை திடமான காரியம் செய்திருக்கிறார்கள். அவர்களது நற்சிந்தனை இப்போது இல்லை என்பதை நினைக்கையில் வேதனை....

  உய்யகொண்டான் - நானும் அங்கே சென்று ஓரிரு படங்கள் எடுத்ததுண்டு.

  சிறப்பான பகிர்வு ஐயா. ஏடகம் நிகழ்வுகள் வெகு சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. நீர் வழி மேலாண்மை அப்பொழுதே ஏற்படுத்தபட்டுள்ளது,
  அதன் தேவையும் அவசியமும் இன்று அறியப்பட்டும் கூட
  இந்த விஞ்ஞான யுகத்தில்,,,,,,,,?

  பதிலளிநீக்கு
 7. பதிவு தெளிவான நீரோட்டம் போல் விழி பிடித்துக் கூட்டிச்செல்கிறது/

  பதிலளிநீக்கு
 8. உய்யக்கொண்டானுக்கு உங்களுடன் பயணித்தேன், இப்பதிவு மூலமாக. வழக்கமான உங்கள் பாணியில் எங்களை அழைத்துச்சென்றுவிட்டீர்கள். நம் மண்ணின் மரபையும், பெருமையையும் பகிரும் உங்களின் பணி போற்றுதற்குரியது.

  பதிலளிநீக்கு
 9. நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட மன்னர்.
  மன்னர் எப்ப்டியோ மக்களும் அப்படி.
  ஆறு உருவாக்கப்பட்ட வரலாறு அருமை.
  ஏடகத்திற்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்.
  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. ஏடகம் அமைப்பு உங்களுக்கு எழுதுபொருளைத் தந்து விடுகிறது பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 11. உய்யக்கொண்டான் ஆற்றின் கரை ஓரம் திருச்சி கன்டோன்மென்டில் ஸ்டேட் வங்கி காலனியில் தம்பி இருந்தார். அப்போ அங்கே தினம் கொல்லைப்பக்கம் ஓடும் அந்த ஆறைப் பார்த்து மகிழ்வது ஓர் உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போப் பார்த்தால்! :( இருபது வருடங்களில் ஆறே இல்லை! :( உய்யக்கொண்டான் மலையும் இருக்கு. அதுக்கு என்னமோ போகவே முடியலை! சிறுவர்கள் விஷமம் தாங்கலைனாலோ அல்லது சரியாகப் பேச்சு, விளையாட்டு வரலைனாலோ இங்கே பிரார்த்திப்பார்களாம்.

  பதிலளிநீக்கு
 12. ஆச்சர்யமான தகவல்கள். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. மன்னன் மட்டுமல்ல, மக்களும் அன்று நல்லபடியாய் சிந்தித்து நல்லபடியாய் இருந்தனர்.

  பதிலளிநீக்கு
 13. சிறந்த வரலாற்றுப் பதிவுகள்
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 14. உய்யக்கொண்டான் ஆறு இன்று மாசடைந்து விட்டதற்கு முழுக்காரணம் நாம்தாம். நதிகளைப் போற்றுவோம். உழைத்த பெருமக்களை வணங்குவோம்
  நட்பின் வழியில்
  சோலச்சி

  பதிலளிநீக்கு
 15. ஒரு காலத்தில் அப்படி இருந்தவர்கள்....நிகழ் காலத்தில் இப்படி ஆகிவிட்டார்களே ! என்று வேதனைப்பட வேண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. நல்ல தகவல்.

  //தமிழக ஆறுகளில் இருந்து, தினமும் பத்தாயிரம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு, கேரளா, கர்நாடகா எனத் தங்குதடையின்றிப் பயணித்துக் கொண்டிருப்பதை, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். // - உண்மைதான். கேரளாவின் ஆறுகளில் மணல் எடுப்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தடை செய்துவிட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 17. பகிர்விற்கு நன்றி அண்ணா. பிரமிப்பாக இருக்கிறது, அன்றே இவ்வளவு தூரம் யோசித்து மக்களும் ஒன்றாகச் செய்த சீரிய பணி. இன்றோ இருப்பதெல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பது வருந்தவைக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. குளம் கட்டி வளம பெருக்கி மக்களுக்கு வாழ்வழித்த மன்னன்..தகவல்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு