கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளே, அம் மாணவர்,
உறுதியாய் ஒரு முடிவினை எடுத்தார்.
எந்த வேலைக்கும் போகக் கூடாது.
யாரிடமும் கை கட்டி நிற்கக் கூடாது.
பிறகு,
எழுத வேண்டும்
எழுத்தை நம்பியே வாழ வேண்டும்.
எழுத்தை
மட்டும் நம்பி வாழ்வது கடினம், நல்ல வேலைக்குப் போ.
எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள்
எந்த வேலைக்கும் போக மாட்டேன்
எழுத்தே வாழ்க்கை
உறுதியாய் இருந்தார்
கல்லூரிக் காலத்திலேயே காதலிலும் விழுந்தார்.
இருவரையும் இணைத்தது புத்தகங்கள்
நிறையப் பேசினார்கள்
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டார்கள்
எந்த வேலைக்கும் போக மாட்டோன்
காதலனின் உறுதியைப் பாராட்டினார் காதலி
வேலைக்குப் போக வேண்டாம்
நிறையப்
படியுங்கள்
அதனினும் நிறைய எழுதுங்கள்
நான் வேலைக்குப் போகிறேன்
உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்
யாருக்கு இப்படி ஒரு காதலி கிடைப்பார்?
இவருக்குக் கிடைத்தார்.
பொறியியல் படிப்பு முடிந்து., காதலி வேலைக்குச்
சென்றார்.
காதலனுக்குத் தேவையானப் பணத்தை சம்பாதித்துக்
கொடுத்தார்.
காதலி கொடுத்தப் பணத்தில், இந்தியாவையே, ஒரு
சுற்று சுற்றி வந்தார் காதலர்.
திருமணம் ஆனது
காதலர் இருவரும் தம்பதியினர் ஆயினர்.
காதல் மட்டும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே
இருந்தது.
வீட்டின் கஷ்டம் தெரியாமல் பிள்ளைகளை வளர்ப்போமில்லையா?
இவர் மனைவி, தன் கணவரையும அப்படித்தான் வளர்த்தார்.
இவர் ஒரு ஊர் சுற்றி
நினைத்த நேரத்தில், நினைத்த பேருந்தில் ஏறி
விடுவார்
வீட்டிற்காக காய் கறி வாங்க, மிதிவண்டியில்
கிளம்புவார்.
கடைக்குச் செல்லும் முன்னரே மனம் மாறும்.
நேராகப் பேருந்து நிலையத்திற்குச் சென்று,
பேருந்தில் ஏறி, கங்கை கொண்ட சோழ புரத்திற்கோ, திருவனந்தபுரத்திற்கோ அல்லது ஹம்பிக்கோ
சென்று விடுவார்.
வீட்டில் மனைவி காத்திருப்பாரே, தன்னைக்
காணாமல் தவித்திருப்பாரே என்ற எண்ணமே இவருக்கு இருக்காது.
திடீரென்று ஒரு நாள் இரவில், வீடு திரும்பி
கதவைத் தட்டுவார்.
இத்தனை நாள் எங்கு சென்றீர்கள் என இவரது மனைவி,
காதல் மனைவி, ஒருமுறை கூட கேட்டதே இல்லை.
ஒழுங்காகச் சாப்பிட்டீர்களா?
நன்றாகத் தூங்கினீர்களா?
கையில் இருந்த பணம் போதுமானதாக இருந்ததா?
கவலையுடன் விசாரிப்பார்.
அடுத்தமுறை,
ஊர் சுற்றக் கிளம்பும் முன் சொல்லுங்கள், போதுமான அளவிற்குப் பணம் கொடுத்து அனுப்புகிறேன்
என்பார்.
பலமுறை பணம் கொடுத்தும் அனுப்பினார்.
குழந்தை பிறந்தது.
குழந்தையைக்
கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மனைவி, வேலைக்குச் சென்று விடுவார்.
இவரோ, நாள் முழுவதும், குழந்தையைப் பார்த்துக்
கொண்டே, படித்துக் கொண்டிருப்பார்.
எழுதிக் கொண்டே இருப்பார்.
குழந்தை அழுதால் கவனித்துக் கொள்வார்.
வாழ்வில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட
நிலையில் கூட, நீ ஏன் வேலைக்குப் போய் சம்பாதிக்காமல், இப்படிப் படிப்பதும், எழுதுவதுமாய்
இருக்கிறார் என்று ஒரு முறை கூட கேட்டதே இல்லை.
வேலைக்கே போகக் கூடாது என உறுதியாய் நின்ற
ஒருவரை, நம்பித் திருமணம் செய்துகொண்டு, அரவணைத்து, அன்பு செலுத்தி, இலக்கியத்திலும்,
வாழ்விலும், நிகரற்ற துணையாக வாழும் இவர் யார் தெரியுமா?
சந்திர பிரபா
இவரது காதல் மணாளன் யார் தெரியுமா?
ஒன்பது
நாவல்கள், இருபது சிறுகதைத் தொகுப்புகள்,
நாற்பது
கட்டுரைத் தொகுப்புகள், எட்டு திரைப்பட நூல்கள்,
பதினைந்து
குழந்தைகள் நூல்கள், ஏழு உலக இலக்கியப் பேருரை நூல்கள்,
மூன்று
நாடகத் தொகுப்பு நூல்கள்,
இரண்டு
நேர் காணல் தொகுப்பு நூல்கள்,
மூன்று
மொழிபெயர்ப்பு நூல்கள், நான்கு தொகை நூல்கள்
இரண்டு
பிற மொழி நூல்கள்
படிப்பதற்கே மூச்சு வாங்குகிறதல்லவா?
இவர்தான்,
எழுத்தே வாழ்க்கையாய் வாழும்,
சாகித்திய
அகாதமி விருது பெற்ற
எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன்.