பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்.
வழிப்பறியும், கூட்டுக் கொள்ளையும், பல சிற்றூர்
வணிகர்களைப் பாடாப் படுத்திய காலம்.
அது ஒரு கடை வீதி
இருபுறமும் கடைகள் நிரம்பி வழிகின்றன.
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது
திடீரெனக் கூட்டத்தினரிடையே ஒரு பரபரப்பு
கொள்ளைக் கூட்டத் தலைவன் ஒருவன், கையில் அரிவாளைத்
தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.
பின்னால் ஒரு காவல்துறை அலுவலர், சரியாகச் சொல்வதானால்,
காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், கையில் எவ்வித ஆயுதமும் இன்றி, கொள்ளையர் தலைவனைத் துரத்துகிறார்.
இருவருக்குமான இடைவெளி வெகுவேகமாய் குறைகிறது
இன்னும் சில நொடிகளில் பிடிபட்டுவிடுவோம் என்பதனை
உணர்ந்த, கள்வன், திடீரென ஓட்டத்தை நிறுத்தித் திரும்பி, காவலரை ஓங்கி ஒரு வெட்டு வெட்டிவிட்டு,
மீண்டும் ஓடத் தொடங்குகிறான்.
தோள் பட்டையில் வெட்டுப் பட்ட நிலையிலும், உதவி
ஆய்வாளர், விடாமல் துரத்துகிறார்.
துரத்தத் துரத்த மீண்டும் மீண்டும் வெட்டுகிறான்
உதவி ஆய்வாளரோ எத்தனை முறை வெட்டினாலும, பிடித்தே
தீருவது என்ற முடிவில் உறுதியாய் இருக்கிறார்.
உடலில் இருந்து, இரத்தம் வெள்ளமாய்ப் பெருக்கடுத்தபோதும்,
வீதியையே நனைத்தபோதும், விடாமல் துரத்திக் கள்வனைப் பிடிக்கிறார்.
கள்வனைப் பிடித்தவுடன், இரத்தப் போக்கால்,
காவலர் மெல்ல மெல்ல நினைவு இழந்து விழுகிறார்
முழுவதுமாய் நினைவு இழந்த பிறகும் கூட, கள்வனால்,
காவலரின் கையை விடுவிக்க இயலவில்லை.
அப்படி ஒரு பிடி
உடும்புப் பிடி.
அதுவரைக் கள்வனைக் கண்டு மிரண்டு, சிதறிய மக்கள்,
காவலரின் நிலையினையும், காவலரின் துணிவினையும், மன உறுதியினையும் கண்டு, வியந்து, அச்சம்
நீங்கி, கள்வனைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள்.
வேறுசிலர், காவலரைத் தூக்கிக்கொண்டு, மருத்துவமனை
நோக்கி ஓடுகிறார்கள்.
மறுநாள் உதவி ஆய்வாளருக்கு மெல்ல நினைவு திரும்புகிறது
உணர்வு திரும்பிய மறுநொடி, உதவி ஆய்வாளர், தன்
கைகளால், தன் உடையைத் தடவுகிறார். எதையோ தேடுகிறார்.
அருகில் நின்றிருந்த, இவரது மேல் அதிகாரிக்கு,
காவல் ஆய்வாளருக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன தேடுகிறீர்கள்?
பையில் தொல்காப்பியம் வைத்திருந்தேன்,
காணவில்லையே
காவல் ஆய்வாளர் திடுக்கிட்டுத்தான் போனார்
உங்கள் உடலில் எத்தனை வெட்டு விழுந்திருக்கிறது
தெரியுமா? எவ்வளவு இரத்தம் வெளியேறி இருக்கிறது
தெரியுமா?
உங்கள் உடலில் உயிர் தங்குமா?
பறக்குமா? என்பது தெரியாமல், தவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நீங்களோ, எதைப் பற்றியும்
கவலைப்படாமல், தொல்காப்பியத்தைத் தேடுகிறீர்களே
உதவி ஆய்வாளர், அந்நிலையிலும், அத்துணை வேதனையிலும்
மெல்லச் சிரித்தார்.
என் கடமையை நான் அறிவேன்
என் தமிழையும் நான் அறிவேன்
இப்பொழுது கடமையாற்ற வழியின்றிப்
படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறேன்.
உணர்வு மீண்டு விட்டதே
உயிர் உடலில் தங்கி இருக்கிறதே
தமிழை விட்டு, எவ்வாறு பிரிந்திருப்பது?
காவலர் மட்டுமல்ல, அருகில் நின்றிருந்த மருத்துவரும்,
செவிலியரும் கூட பேச்சிழந்துதான் போனார்கள்.
இப்படியும் ஒரு மனிதரா
தொல்காப்யிச் சுவடிகளைக் கொண்டு வந்து தருகிறார்கள்.
மாபெரும் புதையலைக் கண்டதுபோல் கண்கள் மின்னுகின்றன.
முகத்தில் ஒரு நிம்மதி பிறக்கிறது
ஓலைச் சுவடிகளை வாங்கித், தன் தலையனைக்கு அருகிலேயே
வைத்துக் கொள்கிறார்.
வியப்பாக இருக்கிறதல்லவா?
தன் உயிரினும் மேலாய் தமிழை நேசித்தவர் இவர்.
இவரது தந்தை, திரு நாராயணசாமி பிள்ளை அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்
புலவர்களுள் ஒருவர்.
அக்காலத்தில் மன்னார்குடியில் இருந்த, ஒரு கிறித்துவக்
கல்லூரியில் தமிழ்ப் புலவராய் பணியாற்றியவர்.
கல்லூரி வகுப்போடு தன் பணி முடிந்துவிட்டதாகக்
கருதாமல். மன்னார்குடியின் சுற்றுப் புறத்தில் உள்ள சிற்றூர்களுக்கெல்லாம் சென்று,
தமிழைப் பரப்பியவர்.
இவரிடம் பயின்று புலவராய் புலமையில் உயர்ந்தவர்களின்
எண்ணிக்கைச் சொல்லி மாளாது.
பின்னத்தூர்
நாராயணசாமி என்னும் பெரும் புலவர், இவரால், இவரது தமிழால் உதித்து எழுந்தவராவார்.
இத்தகு மாமனிதரைத் தமிழறிஞரைத் தன் தந்தையாய்ப்
பெற்றவர், இந்த உதவிக் காவல் ஆய்வாளர்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன?
பத்தொன்பதாம் வயதிலேயே காவல் துறையில் இணைந்தவர்.
அச்சம் என்றால் என்னவென்றே அறியாதவர்
எங்கெல்லாம் கொள்ளைக் கூட்டம் தலையெடுக்கிறதோ,
அங்கெல்லாம் சென்று, அவர்கள் கொட்டத்தை அடக்கியவர்.
காவல் துறை உதவி ஆய்வாளர்
காவலுக்குக் கெட்டிக்காரர்
காவல் பணியை மட்டுமல்ல, தமிழையும், தன் உயிராய்ப்
போற்றியவர்.
இலக்கியங்களை ஆழக் கற்றவர்
இலக்கணத்தையோ தன் சுவாசமாய் சுவாசித்தவர்.
தன் இறுதிக் காலத்தில், பக்கவாத நோயால் தாக்கப்பெற்று,
வாய் திறந்து பேசக்கூட முடியாமல், படுக்கையே கதியாய் படுத்துக் கிடந்தபோது கூட, தலையனைபோல்,
தன் படுக்கையிலேயே, நூல்களைப் பரப்பி வைத்துப் படித்துப் படித்துத் தன் உடல் துன்பத்தை
மறந்தவர்.
இத்தகைய பெரும் இலக்கணப் புலவர்,
ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில், ஒருவர்தான் தோன்றக்கூடும். இவரது இலக்கணப் பயிற்சியையும்,
தெளிவையும் கண்டு நாம் வியப்பதா? அல்லது, இவர்
புலமையைத் தெரிந்து கொள்ளாத, தமிழகத்தை வியப்பதா? என்று
வேதனையை வெளிப்படுத்துவார் பண்டித ந.மு.வேங்கடசாமி
நாட்டார்.
கரந்தைத் தமிழச் சங்கத்தின் திங்களிதழான,
தமிழ்ப் பொழில் இதழில், தொல்காப்பியச் சொல்லதிகார ஆராயச்சிக் குறிப்பிற்கு, இவர் எழுதி
வந்த, மறுப்புக் கட்டுரைகளை வாசித்தேன். இவ்வரிய இலக்கண நுட்பங்களை எல்லாம், மறுப்புரையில்
எழுதுவதைவிட, தனியொரு அரிய உரையாக எழுதுவது நலம் பயக்கும் என வியந்து
கூறியவர், மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத அய்யர்
அவர்களாவார்.
ஆனால், ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக, இச்சொற்களை
எல்லாம் அழகுத் தமிழில் வெளிக் கொணர்ந்த பெருமைக்கு உரியவர் தமிழறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்களாவார்.
இத்தகு பெருந் தமிழறிஞர், நம் காவல் துறை உதவி
ஆய்வாளர் அவர்களைப் பற்றிக் கூறும் வார்த்தைகளைக் கேளுங்கள்.
பொதிய மலையில் அகத்தியரைக் காணச்
சென்றேன். அங்கு அவர் அடிச்சுவடும் கண்டிலேன்.
ஆனால் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத
உருவத்தில் தொல்காப்பியரைக் கண்டேன்.
பட்டுக்கோட்டையில், அறக் காவற்றுணைக்
கண்காணி (காவல் துறை உதவி ஆய்வாளர்) உருவில் தொல்காப்பியரைக் கண்டேன்.
பார்த்தீர்களா,
காவல்
துறை உதவி ஆய்வாளர்
உருவில்
தொல்காப்பியரைக் கண்டேன்.
இவர் பெருமையக் கூற, இதைவிடச் சிறந்த சொல்தான்
தமிழில் ஏது?
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
இவர்,
இன்று, தன் ஒவ்வொரு எழுத்திலும், முத்துக்களைச் சிதறவிடும்,
வலைப் பூ எழுத்தாளர்
தஞ்சையிலும்,
தூரப் பறந்து ஷார்ஜாவிலும்
தன் வாழ்வை நகர்த்திவரும்
எழுத்துலகச் சகோதரி
திருமதி மனோ சாமிநாதன்
முத்துச்
சிதறல்
அவர்களின்
தாத்தா ஆவார்.
இப்பெருமகனாரின், இரண்டாவது மகன்தான் இவரது தந்தை
இதுமட்டுமல்ல
இதே தமிழ்ப் பெருமகனாரது, மூத்த மகள் வழிப் பெயர்த்திதான்
இவரது தாயார்.
நண்பர்களே, இப்பெருமகனார்தான்
மன்னார்குடி
இலக்கணம்
நா.சோமசுந்தரம் பிள்ளை.
---------------------------------------------
---------------------------------------------
இன்று 31.12.2018 திங்கட்கிழமை, தஞ்சையில் நடைபெற்ற,
சகோதரி
திருமதி மனோ சாமிநாதன் அவர்களின்
தாயாரின்,
அதாவது
இலக்கணம்
நா.சோமசுந்தரம் அவர்களது
பெயர்த்தியின்
100 வது
பிறந்த நாள் விழாவில்,
என் மனைவியோடு கலந்து
கொள்ளும் நல் வாய்ப்பினை பெற்றேன்.