06 ஜனவரி 2019

வலையுலக உறவுகளுக்கு …..




வலையுலக உறவுகளுக்கு அன்பு வணக்கம்.

     நலம்தானே.

     வலையுலகின் இன்றைய நிலை பற்றிச் சற்று நேரம், உங்களோடு உரையாட விரும்புகின்றேன்.


     வலைப் பூவில் எழுதுபவர்களின் எண்ணிக்கையும், வலைப் பூவின் வாசத்தை சுவாசிக்க, நேசிக்க வருபவர்களின் எண்ணிக்கையும், குறைந்து கொண்டே வருவதை நாம் அனைவருமே அறிவோம்.

     ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, காலை நேரத்தில், கணினியைத் திறந்தால், பதிவுகள் மலை, மலையாய் கொட்டும்.

     அன்று வலையில் பிறந்தப் பதிவுகளைப் படிக்கவே நேரம் போதாது.

     மாலையில் வந்து பார்த்தாலோ, பகல் பொழுதெல்லாம் அருவியாய்  கொட்டியப் பதிவுகள், பெரும் ஏரியாய் ததும்பிக் கொண்டிருக்கும்.

     ஆனால் இன்று???

---

     தமிழ் மணம்

     வலைப் பூவின் மகோன்னதத் திரட்டி

     யாருக்கு எத்தனை வாக்கு?

      இம்மாதம் யார் முதலிடம்?

      இவ்வாரம் யார் முதலிடம்?

      பெரும் போட்டியே நடந்தது.

      ஆனால் இன்றும் தமிழ் மணம் இருக்கிறது.

      வாக்குரிமையற்ற வாக்காளர்களைக் குடிமக்களாகக் கொண்ட தமிழ்மணம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

       இருப்பினும் வாக்குரிமைப் பறிப்பால், தன் பழைய பொலிவை இழந்து, தன் பழைய வலுவினையும் இழந்து, இன்றும் ஏதோ இருக்கத்தான் செய்கிறது.

       வலைச்சரம்

       ஒவ்வொரு நாளும், புதுப்புதுப் பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கும் உன்னதப் பணியினைப் பெருமையாய் மேற்கொண்ட வலைச்சரம்.

      வலைச்சரத்தில் எழுத வாய்ப்புக் கிடைப்பதே, குதிரைக் கொம்பாய் இருந்த காலம், ஒரு காலம்.

      வலைச்சர அறிமுகத்தில் இன்று நம்மை யாரேனும் அறிமுகம் செய்து, நம் பதிவை வெளி உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டமாட்டார்களா, என ஏங்கிய காலம் ஒரு காலம்.

      வலைச்சரம் இன்று வாடிப் போய்விட்டது.

      ஏன் இந்த நிலை?

      நான் சற்றேரக்குறைய ஐநூறு வலைப்பதிவர்களின் பதிவுகளை, அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்.

      ஆனால், நான் தொடரும் பதிவர்கள், கொஞ்சம் கொஞ்சமாய், வலையை விட்டு விலகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

      ஏன் இந்த நிலை?

       நேரமின்மை

       வாழ்வியல் பிரச்சனைகள் என ஏராளமானக் காரணங்கள் இருக்கலாம்.

      ஆனாலும், என் மனதில் ஒரே ஒரு காரணம் மட்டுமே முன் வந்து நிற்கிறது.

      எழுதுபவர்களை உற்சாகப்படுத்தத் தவறிவிட்டோம்.

      பாராட்ட மறந்து விட்டோம்.

      சபாஷ்

      பலே

      அருமை

      ஒரே ஒரு வார்த்தை போதும், எழுதுபவர்களுக்கு உற்சாகம் ஊட்ட, மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை ஊட்ட.

      பாராட்டுகள் குறைந்து விட்டன

      கை தட்டல்கள்  ஒலி இழந்து விட்டன.

      வலைப் பூவின் கருத்துரைப் பெட்டியில் ஐம்பது, நூறு எனக் குவிந்தப் பாராட்டுரைகள், கை தட்டல்கள், இன்றோ பத்து, இருபது என இளைத்துப் போய்விட்டன.

      வலையில் எழுதுபவர்கள்கூட, மற்றப் பதிவர்களை உற்சாகப் படுத்தத் தவறுகிறார்களோ என்ற எண்ணம், மேலெழுந்து நிற்கிறது.

      நண்பர் ‘ஸ்ரீராம் அவர்களின் எங்கள் பிளாக் போன்ற, ஒரு சில வலைப் பூக்கள் மட்டுமே, எனக்குத் தெரிந்தவரை, தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, மலர்ந்து மணம் வீசுகின்றன.

     இதற்குக் காரணம், நண்பர் ஸ்ரீராம் போன்றவர்கள், தங்கள் வலை உறவுகளிடம் காட்டும் தனி நேசம், பாசம்.

      வலையில் கோலேச்சியவர்கள் பலர், இன்று முகநூலின் கரையில் ஒதுங்கிவிட்டனர்.

      காரணம். ஒரு சிறு பதிவு, ஒரு ஒற்றை வார்த்தை, ஒற்றைப் படம் முக நூலில், முகம் காட்டிய அடுத்த நொடி, லைக்குகள் மலை மலையாய் குவிகின்றன.

      முக நூல் பதிவர்களுக்கு இந்தப் பாராட்டுகள் உற்சாகத்தை வாரி வழங்குகின்றன.

       முக நூல் மலந்து கொண்டே இருக்கிறது

       வலைப் பூ வாடி வதங்கிக் கொண்டே இருக்கிறது.

---

    

வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்

     வலைப் பதிவர்களின் உற்சாக பாணம்

     வலைப் பதிவர்களைப் பாராட்டுவதற்கென்றே அவராதம் எடுத்த அற்புத மனிதர்.

      இவரால்தான் என் போன்ற பலர், இன்னும் வலைப் பூவில் ஒட்டிக் கொண்டிருக்கிறோம்.

      அன்று முதல் இன்று வரை, இவர் தன் கரங்களால் கை தட்டிக் கொண்டே இருக்கிறார்.

      நாமும் இவரோடு சேர்ந்து, நம் கரங்களையும் இணைத்து ஒலி எழுப்பினால், இணையமே அதிருமல்லவா?

      புத்துணர்ச்சி பிறக்குமல்லவா?

       புது ரத்தம் சுரக்குமல்லவா?

       என்ன செய்யப் போகிறோம்???????????
     

     

     

34 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.

    இன்று காலை முதலே எனக்கும் ஒரு எண்ணம். தினம் தினம் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தாலும், முன்பு போல பதிவர்கள் வருகை இல்லை. கருத்துரைகளும் குறைவு தான். “இன்றே கடைசி” போட்டுவிடலாமா என்ற எண்ணம் வந்தது இன்று காலை முதலே.

    தொடர்ந்து பதிவு எழுதுபவர்கள் குறைந்து விட்டார்கள். பதிவர்கள் பலரும் முகநூல், வாட்ஸப் என வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள். சில சமயங்களில் எத்தனை எத்தனை பேர் எழுதிக்கொண்டிருந்தார்கள், இப்போது இப்படி ஆகிவிட்டதே என நினைப்பதே வேலையாகி விட்டது.

    பிறந்த நாள் கொண்டாடும் வலைச்சித்தர் தனபாலன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பல வருடங்களாக தொடர்ந்து எல்லோருடைய பதிவுகளுக்கும் சென்று படித்து, கருத்திட்ட அவரே கூட இப்போதெல்லாம் எல்லோருடைய பதிவுகளும் படித்து கருத்துரைப்பதில்லை.

    இன்னும் பல பதிவெனும் பூக்கள், நம் வலைப்பூக்களில் பூத்துக் குலுங்கட்டும். விரைவில் நல்ல மாற்றம் அமைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இன்று வலைப்பதிவுகள் பெருமளவு குறைந்துதான் விட்டன. ஒருவரை ஒருவர் பாராட்டி உற்சாகப்படுத்தி, மேலும் புதிய பதிவர்களை உருவாக்கி, எழுதாமல் இருப்பவர்களையும் மீண்டும் எழுதச்செய்வோம்.

    தனபாலன் அவர்களுக்கு இங்கேயும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா, இன்று வலைச் சித்தரின் பிறந்த நாளா ...
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  4. நன்றி... நன்றி... நன்றி...

    என்றைக்கு வியாபாரம் ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து மனதில் சின்ன கலக்கம் இருந்தது - "என்னால் இனி பதிவு எழுத முடியுமா" என்று... இருந்தாலும் சில பதிவுகள் பகிர்ந்துள்ளேன்...

    எழுத முடியாவிட்டாலும், கிடைத்த நேரத்தில் நண்பர்களின் தளங்களுக்கு சென்று வாசிக்கிறேன்... ஊரில் இருக்கும் போது கருத்துரை இட முடிகிறது, பயணத்தில் போது அவ்வாறு முடிவதில்லை...

    முத்துநிலவன் ஐயா பயிற்சிப்பட்டறை நடத்த திட்டமிட்டு உள்ளார்... பது பதிவர்கள் உருவாகுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது...

    காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலையுலகம் இருக்கும் வரையிலும் தனபாலன் பெயர் இருந்து கொண்டே இருக்கும். அவரின் உழைப்பு பலருக்கும் செய்யும் உதவி மகத்தானது. தனபாலனுக்கு என்இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  5. வணக்கம் நண்பரே...
    முதலில் திண்டுக்கல் ஜி அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    எல்லோருடைய மனஓட்டத்தையும் அழகாக சரம் தொடுத்து விட்டீர்கள் நண்பரே.

    இன்று வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டது உண்மையே.

    பாராட்டுகள் உடனுக்குடன் கிடைக்கிறது என்பதால்தானோ என்னவோ பெரும்பாலான பதிவர்கள் வதனநூலில் குடி கொண்டு விட்டனர்.

    பதிவர்களில் பலரும் வயதில் மட்டுமே உயர்வானவர்களாக இருக்கின்றார்கள் மன எண்ணங்களில் தாழ்வாகவே இருக்கின்றார்கள்.

    நான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில்தான் எழுதுகிறேன் ஆனால் இன்று எனது வருகையாளர்கள் பத்தில் ஒரு மடங்கே வருகின்றார்கள். இதன் காரணமாகவே நானும் எழுதுவதில் மனதளவில் தளர்கிறேன்.

    தான் எழுதவில்ஸை என்பதால் பிறருக்கும் கருத்துரை இடவேண்டாம் என்று கருதுபவர்கள் ஒரு ரகம்.

    நாமெல்லாம் கருத்துரை இட்டால் நமது கிரீடம் இறங்கி விடுமோ என்று நினைக்கும் மற்றொரு ரகம்.

    ஜொள்ளு விட்டு வரும் இடங்களுக்கு சென்று வருபவர்கள் வேறொரு ரகம்.

    நாமெல்லாம் தனி என்ற கோட்பாட்டை உருவாக்கி (ரிசர்வ் தொகுதி போல) தங்களுக்குள் பதிவுகளுக்கு சென்று வருவது இன்னொரு ரகம்.

    இவர் பக்தியை மட்டுமே எழுதுவார் என்று நினைத்து அவரும் தமிழில்தானே எழுதுகிறார் என்பதை மறந்து ஓரம் கட்டும் பெரியோர் ரகம். (கவனிக்க பெரியார் அல்ல)

    பதிவர்களில் கூட சமூகத்தை (சாதி) பார்க்கும் ரகம்.

    தாங்கள் சொன்னதுபோல வலைச்சரம் என்ற ஆலமரம் உறங்கி கிடப்பதும் காரணமாக இருக்கலாம் ?

    திரு. சீனா ஐயா அவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் ஆலமரத்தை உலுப்பி விடலாம் என்று நினைக்கிறேன்.

    மீண்டும் வலைப்பதிவர் மாநாடு நடந்தால் பதிவர்கள் மனதில் உற்சாகம் பெறலாம். பதிவுலக பிரம்மர்கள் கவனிக்க... நானும் அணிலாக இருப்பேன்.

    இதனைக்குறித்து திண்டுக்கல் ஜி பதிவு இடுவார் என்று நம்புவோம்.

    குறிப்பு - இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல
    வலையுலகை பண்படுத்தும் நோக்கமேயன்றி வேறில்லை.

    அன்பன்.
    கில்லர்ஜி தேவகோட்டை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனம் வெள்ளை. இங்குள்ள கருத்துக்களும் வெள்ளந்தியாக அப்படியே சொன்னதற்கு என் வாழ்த்துகள். உலகே பல ரகம். இங்கே ஒவ்வொருவரும் ஒரு ரகம்.

      நீக்கு
    2. வணக்கம் தங்களது வாழ்த்துகளைவிட எனது கருத்தை ஆதரித்த வகையில் மகிழ்ச்சியோடு நன்றி நவிழ்கிறேன் ஜி

      நீக்கு
  6. பதிவர்கள் பலரும் இப்போது அவரவர் வாழ்க்கையில் ஆழ்ந்து போய்விட்டனர். சுமார் பனிரண்டு வருடங்கள் முன்னர் வரையிலும் இளைஞர்கள் பலரும் எழுதிக் குவித்தனர். அவரவர் குடும்ப வாழ்க்கையில் அமிழ்ந்த பின்னர் பலரும் காணாமல் போய்விட்டனர். என்ன செய்யலாம்! :(

    பதிலளிநீக்கு
  7. டிடிக்கு அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துகள்.
    நானும் சில பெண:மணிகள் பக்கமும் சென்றேன்இ
    கருத்திட யாரும் வருவதில்லை.
    மிகவும் கவலை தான்

    பதிலளிநீக்கு
  8. ஒரு சிறு திருத்தம்சொல்லலாமா சார் தலைப்பில் வலை உலக உறவுகள் என்பது வலை உலக அறி முகங்கள் என்று இருந்தால் சரியாக இருக்குமோ

    பதிலளிநீக்கு
  9. வருகின்ற பின்னூட்டங்களுக்கு மறுமொழி எழுதினால் வருகை அதிகமாகலாம் என்று நினைக்கிறேன் நம் கருத்துகள் எவ்வாறு ஏற்கப்படுகின்றனஎன்பதுதெரியுமே

    பதிலளிநீக்கு
  10. டிடி அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    நீங்களே எல்லாமும் சொல்லிவிட்டீர்கள். தற்போது குறைந்துவிட்டதுதான். பலரும் எழுதுவதிலிருந்து விலகிவிட்டனர்தாம்.

    எங்களுக்கும் எழுதுவதில் பல பிரச்சனைகள் வந்துள்ளன. மீண்டும் எழுத முயற்சி செய்கிறோம்..

    துளசிதன, கீதா

    பதிலளிநீக்கு
  11. புன்னகை பூத்த முகம் .இணையம் பற்றிய விரிவான அறிவு தெளிவு,பாடல்கள் மூலம் நல்லதொரு கருத்துக்களை நயம்பட வெளியிடும் பாங்கு.அனைவரையும் உற்சாகப்படுத்தும் ஆளுமை. எல்லாம் ஒருங்கே அமைந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன் என் வலைப்பதிவில் தினமும் கருத்துக்களை தெரிவித்தவர் இன்று எப்போதாவது ஒரே சொல்லில் இடுகை இடுகிறார்

    மனிதர்களின் இயல்பு எப்போதும் தங்களை யாராவது கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது. ஆனால் உண்மையில் அது என்றும் நடக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மனிதர்களின் ரசனைகள்,மாறிக்கொண்டே இருக்கின்றன

    விமரிசனங்கள் உண்மையாக இருக்குமானால் வலையில் தொடர விருப்பம் ஏற்படும். ஆனால் இன்று அது வெறும் கண்துடைப்பாக மாறிவிட்டது.

    யாரும் தங்கள் மீது வைக்கப்படும் எதிர்மறையான விமரிசனங்களை எதிர்கொள்ள தேவையான பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுவதில்லை

    கில்லேர்ஜி என் மீது வைக்கும் விமரிசனம் நான் எல்லா பதிவர்களின் பதிவுகளுக்கும் கருத்து தெரிவிப்பதில்லை. அதனால்தான்யாரும் உங்கள் பதிவிற்கு வருவதில்லை என்று

    எனக்கென்று விருப்பமான சிலவற்றிற்கு மட்டும்தான் என்னால் கருத்து தெரிவிக்க முடியும்.என்னுடைய மாறுபட்ட கருத்தை தெரிவித்த மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்க விருப்பமில்லை. அதே நிலைமைதான் அனைவருக்கும்.

    யாரையும் குற்றம்சுமத்தி பயனில்லை.

    வலைப்பூந்தோட்டத்தில் பலவிதமான பூக்கள் மலரும் .வெவ்வேறுவிதமான மணங்களுடன்
    அனைத்தையும் ரசிக்கக்கற்றுக்கொள்பவனே இங்கு நிலைக்க முடியும்

    9 ஆண்டுகளுக்கு முன் 9 பதிவு தளங்களை துவக்கிய நான் இன்று இன்று 2 தளங்களில் மட்டும் வெளியிடுகிறேன்.

    ஒட்டி உறவாடிய பல நண்பர்களை காணவில்லை.பலர் எட்டா உயரத்திற்கு சென்றுவிட்டார்கள். மகிழ்ச்சி

    வேற்றுமையில் ஒற்றுமை காண பழகிக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம்

    இணையம் என்பது தகவல் சிறப்பங்காடி.அதில் அவரவருக்கு தேவையான பொருட்களையே எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் நிதரிசனம் ஒவ்வாமை . இருந்தாலும் தொடர்ந்து பயணிப்போம்.
    நன்றி கரந்தையார் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  12. சரியான அலசல். வருத்தத்திற்குரிய நிலைமை. பிற சமூக வலைத்தளங்களின் ஈர்ப்பு ஒரு பக்கம் இருப்பினும் பல காரணங்களால் பலராலும் முன் போல் செயல்பட முடியவில்லை. வலைச்சரம் போலவே பத்தாண்டுகள் இயங்கிய PiT புகைப்படக்கலை வலைப்பூவும் இப்போது நேரமின்மையால் செயல்படவில்லை.

    வலைப்பூக்களில் காலம் மீண்டு வருமாயின் மகிழ்ச்சியே.

    தனபாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. எதையும் எதிர்பார்க்காமல் கருத்திடுவது, வலைச்சரத்தில் இடம்பெற்ற வலைப்பூவுக்கே சென்று அறிவிப்பது, புதுசா வருபவர்களுக்கு ஆலோசனை, வலையுலக நண்பர்களுக்கு உதவி, முதல் கருத்துன்னு தனபாலன் அண்ணா சேவை அளப்பறியது..
    அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. அது ஒரு கானக்காலம் ...நிறைய இது பற்றி எழுதலாம் ஆனால் நேரம் இல்லை...

    பதிலளிநீக்கு
  15. ஆழ உழுதது போய் அகல உழுக ஆசை வந்துவிட்டதும் ,
    சிறுக எழுதி நிறைய புகழ் பேர் வாங்க ஆசைப்படுவதும் ஒரு மிகப்பெரிய காரணம் என நினைக்கிறேன்.
    அதன் ஒரு பகுதிதான் புத்தக வாசிப்பும்,
    புத்தகங்களின் வெளீயீடும் குறைந்து போகக்
    காரணமாகிப் போனது எனலாம்,
    விடாப்பிடியாய் இன்னும் எங்கள் பிளாக்,
    சிறுகதை டாட் காம் மற்றும் பிரதிலிபி போன்றவர்கள்
    எழுத்தை கட்டி காப்பாற்றிவருகிறார்கள்,அவர்களூக்கு வாழ்த்துக்கள்,முடியும் நம்மாலும் அணி திரள்வோம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆவோம்,பேசுவோம்,பகிர்வோம், செய்ல்படுவோம்,தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு மாற்றம் வித்திடச்செய்வோம்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவிர எழுதுவதல்ல எழுத்து,எழுவதுதான் எழுத்து என்கிறார்கள்,அது வாஸ்தவமே எனத்தோணுகிறது,எழுத்து என்பது ஒரு இயக்கம்,சவாசம் போன்ற இன்னொரு விஷயம்,படைப்பு மனம் இதற்கு முக்கியம் என்கிறார்கள் எழுத்துலகவாதிகள்,அதையும் கொஞ்சம் அபரிசீலனை செய்துதான் பார்ப்போமே,,/

      நீக்கு
  16. டிடி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    புளொக் எழுதும் ஆர்வம் பலருக்குக் குறைவதுக்கு காரணம் பின்னூட்டங்கள் இல்லாமைதான். பின்னூட்டங்கள்தானே வலைப்பூவுக்கு பூஸ்ட்.. கஸ்டப்பட்டு ஒரு போஸ்ட் எழுதினால்.. ஒரு வரியில் அருமை, சபாஸ், சூப்பர் எனப் போட்டால் அதனால் என்ன உற்சாகம் பிறக்கப்போகிறது, இவர் படித்துவிட்டுத்தான் போட்டாரா இல்லை படிக்காமல் போட்டாரா, இவ்வளவும் எழுதியிருக்கிறேனே.. எதுவும் சொல்லவில்லையே எனும் ஆதங்கம் உருவாகும்.

    இன்னொன்று, மற்றவர்கள் நம்மிடம் தொடர்ந்து வரவேண்டும் பின்னூட்டமிட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர் ஆனா அதேபோல தாமும் போக வேண்டும், உற்சாகம் கொடுக்க வேண்டும் என எண்ணுவதில்லை.

    ஸ்ரீராமை உண்மையில் வாழ்த்த வேணும்.. அவர் அயராது எல்லோருக்கும் ஓடி ஓடிக் கொமெண்ட்ஸ் போடுவதாலும், ஒழுங்காக கொமெண்ட்ஸ்க்குப் பதில்கள் போடுவதாலுமே.. அங்கு ஓடிப்போய் கும்மியடிச்சு உற்சாகப் படுத்தோணும் எனும் எண்ணம் உருவாகுது.

    இதில் அங்கு போகிறார்களே ஏன் என்னிடம் அப்படி வருவதில்லை எனப் புலம்புவோர் ஒரு பக்கம்:) ஹா ஹா ஹா.. தன்னிடம் என்ன குறை இருக்கு, ஏன் தன்னிடம் வரத் தயங்குகிறார்கள் என்பதனைக் கண்டுபிடிச்சு சரி செய்தாலே எல்லோரும் வருவார்கள்.

    உண்மையைச் சொன்னால், பதில் கிடைக்கும் எனத்தெரியும் இடங்களில் மட்டுமே எனக்கு அதிகம் கொமெண்ட்ஸ் போடும் எண்ணம் வருது.... கொமெண்ட்ஸ்க்குப் பதில் ஒழுங்காகக் கொடுக்காட்டில்.. ஏதோ நம்மை வரவேற்கவில்லை.. மதிக்கவில்லை எனும் எண்ணம் வரப்பார்க்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்னொன்று, மற்றவர்கள் நம்மிடம் தொடர்ந்து வரவேண்டும் பின்னூட்டமிட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர் ஆனா அதேபோல தாமும் போக வேண்டும், உற்சாகம் கொடுக்க வேண்டும் என எண்ணுவதில்லை//

      அதிரா நான் இதில் மற்றவர் வரவேண்டும் என்பதை விரும்புகிறேன். அதேநேரம் பிறருக்கு கருத்துரை சொல்ல முதல் நபராக இருந்து இருக்கிறேன்.

      நாம் போனால்தான் பிறரும் வருவார்கள் என்பதை நான் 2014-ல் தான் படித்துக் கொண்டேன்.

      ஆகவேதான் அதற்கு முன் நான்கு வருடமாக ஈ ஓட்டிக் கொண்டு இருந்தேன் அப்பொழுதும்கூட எனக்கு வந்யவர் டி.டி அவர்கள் மட்டுமே ஆனாலும் அவர் பதிவுக்கு நான் போனதில்லை காரணம் எனக்கு வழி தெரியாது. கருத்துரையை செலுத்தும் முறை தெரியாது. மின்னஞ்சலை திறக்காமல் அனுப்பினால் எப்படி போகும் ?
      அன்று எனக்கு அம்பூட்டு தெளிவு

      நீக்கு
    2. //நாம் போனால்தான் பிறரும் வருவார்கள் என்பதை நான் 2014-ல் தான் படித்துக் கொண்டேன்.///
      கில்லர்ஜி நீங்க அப்போ என்னிடம் ஜெல்ப்:) கேட்டிருக்கலாமெல்லோ ஹா ஹா ஹா.

      தெரியும் நீங்க எல்லா இடமும் போவது.

      எனக்குள் இன்னொரு குமுறலும் இருக்கு... சிலர் அடிக்கடி போஸ்ட் போடுவார்கள்.. நாம் இடைக்கிடை போடுவோம்... ஆனா அந்த அடிக்கடி போடுவோரின் போஸ்ட்டுக்கு நாங்க ஒழுங்காப் போகாட்டில்.. இடைக்கிடை போடும் போஸ்ட்டுக்கு வர மாட்டினமாம் கர்ர்ர்ர்ர்ர்:))..

      இன்னொரு ரகம்.. ஓடிவந்து ஒரு கொமெண்ட் போட்டு விட்டு... போய்விடுவார்கள்.. பின்பு வந்தார்களே என நாம் முண்டி அடிச்சு அவர்கள் பக்கம் ஓடினால்.. நாம் தான் போவோம் அவர்கள் வர மாட்டினம்.. வரவிலையே என நாமும் ஒதுங்கினால்ல்.. பின்பு ஓடிவந்து ஒரு சுரண்டல்:) ஹா ஹா ஹா...
      பறவைகள் பலவிதம்..
      ஒவ்வொன்றும் ஒருவிதம்....:)

      நீக்கு
    3. உண்மை அதிரா இந்த கண்ணாமூச்சி விளையாட்டில் சில அல்ல!பல பதிவர்கள் உண்டு

      நீக்கு
  17. தமிழ்மணம், வலைச்சரம் போன்றோர்.. நம் பதிவுகளை வெளிஉலகுக்கு அதிகம் காட்டும் வகையில் இயங்கினால் எழுதுபவருக்கு இன்னும் உற்சாகம் அதிகமாகும்.. நாம் சொல்வது சுலபம்.. செய்வது அவர்களுக்கும் கஸ்டம்தானே..

    பதிலளிநீக்கு
  18. வலைப்பக்கம் என்றால் திண்டுக்கல் தனபாலன் இல்லாமலா? தற்போதைய நிலையைப் பகிர்ந்த விதம் அருமை. இதுதான் உண்மை. மாற்று ஏற்படுகிறதா என்று பார்ப்போம். எழுதுபவர்களுக்கும்கூட ஆசை குறைந்துவிடும்போலுள்ளதே?

    பதிலளிநீக்கு
  19. அண்ணா, முதலில் இந்த தலைப்பைக் கொண்டுவந்ததற்கு நன்றி. எனக்கும் வலையுலகம் முன்போல இல்லையே என்ற ஏக்கம் அதிகமாய் இருக்கிறது..நானும் இடையில் தளர்ந்து போனாலும் மனம் மட்டும் எழுத வேண்டும் என்று அடித்துக் கொண்டேயிருக்கும்.
    வலைப்பதிவர் மாநாடு, தொடர் பதிவுகள் என்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்..நீங்கள் பதிவே இட்டுவிட்டீர்கள. நண்பர்கள் பலரும் இதே கருத்தினைக் கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது. வலைத்தளம் முன்போல மலரும் என்ற நம்பிக்கை வருகிறது. என் கரமும் இணைகிறது அண்ணா.

    டிடி அண்ணாவிற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் என் தளத்திற்கு வருகைதரவில்லையென்றாலும் தொடர்ந்து வருவேன், என்று வந்து முதலில் கருத்துக்கள் இட்டு அவர் தளத்திற்கு வரவழைத்து விட்டார்கள் தேவகோட்டையார். அன்பு வென்றது.

    தனபாலன் அவர்களும், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களும் அனைத்து தளங்களுக்கும் சென்று கருத்து அளித்து விடுவார்கள்.

    திருமதி இராஜராஜேஸ்வரி
    அவர்கள் மறைந்தது வலைத்தளங்களுக்கு இழப்பே.

    என்னால் முடிந்தவரை படித்து கருத்து சொல்வேன், பல கடமைகளால் எல்லா பதிவளார்கள் பதிவுக்கும் போய் கருத்திட முடியவில்லை.

    உங்கள் விருது பதிவை தேவகோட்டையார் தவறாக பதிவிட்டேன் என்றார் ஆனால் அது இந்த பதிவுக்கு பொருத்தமே!

    முன்பு ஒவ்வொருக்கு விருது அளித்துக் கொண்டு தொடர் அழைப்பு விடுத்து என்று வலை உலகம் மிக சுறு சுறுப்பாய் இருந்தது.
    தமிழ்மணத்தில் நடசத்திரம், வலைச்சர ஆசிரியர் பொறுப்பு என்று எவ்வளவு எழுத வைத்த உற்சாக காரணிகள்.

    மீண்டும் வரும் அந்தக் காலம்.

    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. அருமையான அலசல்! மீண்டும் வலச்சரம் ஆரம்பித்து செயல்பட வேண்டும். இது பற்றி, சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் முன்பே பேசியிருக்கிறேன். வலச்சரம் மீண்டும் துவங்கினால் நிச்சயம் புதிய வலைப்பதிவுகள் பெருகும்.

    திரு.தனபாலன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. பதிவில் கூறியது அனைத்தும் மறுக்க முடியாத உண்மைகள்..

    பதிலளிநீக்கு
  23. மீண்டும் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா நடத்துவது நல்ல யோசனை..

    பதிலளிநீக்கு
  24. ஆர். கண்ணன்11 ஜனவரி, 2019

    முற்றிலும் உண்மை. இந்த காரணத்தினால் தான் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் மின்னிதழ் வடிவில் தொடங்கினோம்‌.அதிலும் அதிக பார்வையாளர்கள் வருகின்றனர் ஆனால் அதிக கருத்துக்கள் விமர்சனங்கள் வருவதில்லை. தாங்கள் கூறியதுபோல முகனூல் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாக்கம் தான் காரணம். இவை விரைவில் மாறும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  25. உண்மைதான்
    பல்வேறு இடர்பாடுகள் காரணமாக இப்பக்கம் வர இயலவில்லை
    ஆனால் மூடுவிழாவெல்லாம் கூகிள் செய்தால்தான்

    பதிலளிநீக்கு
  26. பாராட்டுவதும்- உற்சாகப்படுத்துவதும் அங்கீகாரத்துக்க ஒப்பானது. அங்கீகாரம் இல்லாவிட்டால் பதிவாளர்கள் சோா்ந்து விடுவாா்கள். காலப்போக்கில் நல்ல படைப்புகள் முயற்கொம்பாலாம்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு