12 மார்ச் 2019

தெருவில் படி
     ஆண்டு 1911.

     டிசம்பர் 13.

      இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த, ஆங்கிலேய நாட்டின், இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வந்திருந்தார்.

      இளவரசர் அல்லவா

      வரவேற்பு தடபுடலாக நடந்தது.


      இளவரசரை வரவேற்கும் பொழுது, ஒரு பாடலைப் பாடி வரவேற்றால், சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய, இந்திய வரவேற்புக் குழுவினர், முதல் நாளே, ஒரு கவிஞரை அணுகி, ஒரு பாடலைப் பெற்று வந்திருந்தனர்.

       இதோ இளவரசர் வந்துவிட்டார்.

       வரவேற்புப் பாடல் இசையோடு அரங்கேறியது.

ஜன கண அதிநாயக ஜய ஹே
     பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
     திராவிட உத்கல பங்கா

………………………………………………………………….
…………………………………………………………………

---

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்

என்று தமிழின் பெருமையைப் பாடுவார் மனோன்மணீயம் சுந்தரனார்.

     தமிழும், தமிழ் மொழியில் இருந்து தோன்றிய கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், துளுவும் திராவிட மொழிக் குடும்பம் எனப்படும்.

     இதுபோல் வங்காள மொழியை, இந்தோ ஆரிய மொழிக் குடும்பம் சார்ந்தது என்பர்.

     வங்காளத்திற்கும் தமிழகத்திற்கும் தொலைவு மிக அதிகம் இருந்தாலும், தமிழின் தாக்கம் வங்காள மொழியில் அதிகம் உண்டு.

     தூரம் என்றால் தமிழ்

     தூர் என்றால் வங்காளம்

     ஆனாலும் வங்காள மொழி பலவிதங்களில் வித்தியாசமான மொழி.

     அவன்

     அவள்

     அவன், அவள் என்று தமிழில் பாலின வேறுபாட்டைக் குறிக்கின்றோம் அல்லவா, அந்த வேறுபாடு வங்காளியில் கிடையாது.

     அவன் வந்தான்

     அவர்கள் வந்தார்கள்

     இந்த ஒருமை, பன்மையும் வங்காளியில் கிடையவே கிடையாது.

     தமிழ் எழுத்தின் தொடக்கமாம் அ என்ற எழுத்தின் உச்சரிப்பே, வாங்களியில் இல்லை என்பது வியப்பல்லவா.

     நடராஜன்

     இந்தப் பெயரை வங்காளிகள் எப்படி உச்சரிப்பார்கள் தெரியுமா

     நொடராஜன்

     ஆம், நடராஜன் என்னும் பெயரை, வங்காளிகள், நொடராஜன் என்றுதான் உச்சரிப்பார்கள்.

      ஆனால் நம்மிடம் இருக்கும் மூடப் பழக்கங்கள் வங்காளிகளிடம் அப்படியே இருக்கிறது.

       சகுனம் பார்ப்பதில் நம்மையும் மிஞ்சுவார்கள்

      ஒருவர் போகும் பொழுது, அவர் பின்னால் இருந்து, அவரைக் கூப்பிடக்கூடாது என்பதில் கருத்தாய் இருப்பார்கள்.

     அதே போல் எந்த ஒரு வேலைக்குச் சென்றாலும், மூன்று பேர், சரியாக மூன்று பேர் சேர்ந்து செல்வது என்பது, இவர்களுக்கு ஆகவே ஆகாது.

      இருந்த போதிலும் நம்மைவிட நல்ல பழக்க வழக்கங்கள் பல இவர்களிடத்து இருக்கின்றன.

      எழுத்தாளர்களைப் போற்றுதல்

      சினிமாவைப் பொழுதுபோக்காக மட்டுமே பார்த்தல்.

      1982 ஆம் ஆண்டில், வங்காளிகளிடம் பேச, கவிஞர் கண்ணதாசனை அழைத்திருந்தார்கள்.

      கவிஞர் வருகிறார்

      கவிஞர் வருகிறார் என விளம்பரம் செய்திருந்தார்கள்.

      அரங்கு நிரம்பி வழிந்தது

      கண்ணதாசனும் வந்தார்

      கண்ணதாசனை அறிமுகப்படுத்தியவர், இவர் எண்ணற்ற திரைப் படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கிறார், தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத சக்தி எனப் பேசப் பேசக் , கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலையத் தொடங்கியது.

      கண்ணதாசன் பற்றிய அறிமுகத்தை முடிக்கும் பொழுது, பாதி அரங்கிற்கும் மேல் காலியாகிவிட்டது.

      காரணம், திரைத்துறைக்கு இந்த அளவிற்குத்தான் மதிப்பு கொடுப்பவர்கள் வங்காளிகள்.

      சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியின் பழமையை, வளமையை, பெருமையைப் பறைசாற்றினாலும், நவீன இலக்கியத்தில் வங்காளம்தான் முன்னனியில் இருக்கிறது.

      தமிழ் பற்றியும், வங்காள மொழி பற்றியும், இம்மனிதர் பேசப் பேச, தன்னிலை மறந்துதான் அமர்ந்திருந்தேன்.

      இவர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராய் சேர்ந்த பொழுது, அன்றிருந்த பாடத்திட்டப்படி, அயல் மொழி ஒன்றினைக் கற்பதற்காக வங்காளத்திற்கு அனுப்பப்பட்டவர்.

      அன்றைய தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்

      வ.அய்.சுப்ரமணியன்

      தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர்

      எனக்கு வங்காள மொழியின் ஒரு எழுத்துக்கூடத் தெரியாதே, எப்படி வங்காளம் செல்வேன், எப்படி வங்காளம் கற்பேன் என இவர் தயங்கியபோது, துணை வேந்தர் கூறினார்

      தெருவில் படி

      ஆம்

      தெருவில் படி என்றார்.

      வகுப்பறையில் அமர்ந்தோ, புத்தகத்தைப் பக்கம் பக்கமாய் புரட்டியோ, ஒரு மொழியினைக் கற்றுக் கொள்ள இயலாது.

       தெருவிற்குப் போ

       மக்களோடு மக்களாய் கலந்து  பழகு

       பேசிப் பேசிப் பழகு

       தெருவில் படி

       இப்படித்தான் இவரும் வங்காளியைப் படித்தார்.

      இன்று வங்காளம் இவர் நா நுனியில் களி நடனம் ஆடுகிறது.

      இவர்தான், தன் உரையின் நிறைவில், 1911 இல் இங்கிலாந்து இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னிலையில் பாடுவதற்காக, இயற்றப்பட்டப் பாடல்தான், ஜன கண மன என்னும் பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார்.

      திகைத்துப் போய்விட்டோம்

      ரவீரந்திர நாத் தாகூர் அவர்களே தன் நூல் ஒன்றில், இச்செய்தியினை எழுதியிருப்பதாகவும், அக்காலத்தில் வெளிவந்த, Salesman  என்னும் ஆங்கில நாளிதழில், இச் செய்தி வெளிவந்திருப்பதாகவும் கூறியபோதும், நம்பத்தான் முடியவில்லை.

      ஆங்கிலேய இளவரசரைப் போற்றிப் புகழ்ந்த பாடலா ஜன கண மன

      மனம் நம்ப மறுக்கிறது.

---

ஏடகம்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில்
கடந்த 10.3.2019 ஞாயிறு மாலை

சென்னை, வைஷ்ணவா கல்லூரி
ஓய்வுபெற்ற தமிழ்த்துறைத் தலைவர்

முனைவர் பா.நடராசன் அவர்கள்,

பண்பாட்டு நோக்கில் தமிழர்களும் வங்காளிகளும்
என்னும் தலைப்பில் பொழிவினைப் பொழிந்து,
சுமார் ஒன்றரை மணிநேரம்,
தன் பேச்சு வன்மையால் அரங்கையே கட்டித்தான் போட்டுவிட்டார்.

திருச்சி, பிஷப்ஹீபர் கல்லூரி
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்


முனைவர் மு.ஜோதிலட்சுமி அவர்கள்
தலைமையில்
நடைபெற்ற பொழிவிற்கு,
வந்திருந்தோரை
மாநகர மாற்றுத் திறனாளிகள் சங்கச் செயலாளர்


திரு சி.ராஜன் அவர்கள்
வரவேற்றார்.

ஏடகம் அமைப்பின்,
சுவடியியல் மாணவி


செல்வி செ.அபிநயா அவர்கள்
நன்றி கூட விழா இனிது நிறைவுற்றது.


தஞ்சாவூர், ராஜலட்சுமி அச்சக உரிமையாளர்
லயன் கே.கோபி கிருஷ்ணா அவர்கள்
விழா நிகழ்வுகளைத் திறம்பட தொகுத்து வழங்கினார்.ஒவ்வொரு திங்களும்
புதுப்புது பொருண்மைகளில்,
பொழிவுகளை அரங்கேற்றி
ஏடகத்திற்கு
மெருகூட்டிவரும்,
ஏடகம் அமைப்பின் நிறுவுநர்

திரு மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம் வாழ்த்துவோம்.


21 கருத்துகள்:

 1. உண்மை ஐயா,
  இன்று நாம் பாடிக் கொண்டிருக்கும் தேசிய ககீதம் இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ்-V அவர்களை வரவேற்கும் வகையில் இயற்றப் பட்டப் பாடலேயாகும்.

  பதிலளிநீக்கு
 2. வங்காளிகளில் பிராமணர்களின் விருப்ப உணவு மீன். அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் ஜலபுஷ்பம்.

  பதிலளிநீக்கு
 3. சுவாரஸ்யமான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஸ்வாரஸ்யமான தகவல்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. பொழிவினை உங்களுடன் ரசித்த நான், இன்று இப்பதிவு மூலமாக மறுபடியும் பொழிவினைக் கேட்டதுபோன்ற உணர்வு. நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் முனைவர் நடராஜன் அவர்கள் ஆய்வாளராக இருந்தார். 35 ஆண்டுகள் கழித்து அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேச ஆரம்பித்தபின்னர்தான் அவருடைய நினைவு வந்தது. இவரைப்போல பல மொழிகளைக் கற்க அப்போதைய துணைவேந்தர் பல ஆய்வாளர்களை பல மாநிலங்களுக்கு அனுப்பிவைத்திருந்தார். அவர்களுக்கெல்லாம் கடிதம் தட்டச்சு செய்தது நான்தான் என்பதைப் பெருமையோடு நினைவுகூற விரும்புகிறேன். இதனைக் கூறியவுடன் அவருக்கு என் நினைவுவந்து மிகவும் நெகிழ்ந்தார். ஏடகம், 35 ஆண்டுகளுக்குப் பின்னர் எங்களை இணைத்தது.

  பதிலளிநீக்கு
 6. அரிய தகவல் நண்பரே

  //சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்ப்பது//

  உண்மை நண்பரே நானறிந்த விடயமே

  பதிலளிநீக்கு
 7. மிகவும் சுவாரஸ்யமான செய்திகளை தந்திருக்கிறீர்கள்!!

  பதிலளிநீக்கு
 8. தேசியகீதம் தகவல் புதுசு. பகிர்வுக்கு நன்றிண்ணே

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு தடவையும் நிறைய புது விசயங்களை அறியத் தருகிறீங்க.. வாழ்த்துக்களோடு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 10. அரிய தகவல் அறிந்து கொண்டேன் .நன்றி
  ஜலபுஷ்பம் ----தண்ணீர் மலர்கள் மீன் .

  பதிலளிநீக்கு
 11. இவ்வளவு நாட்களும் ரவீந்திர நாத தாகூர் தான் தேசிய கீதம் பாடினார் என்று இருந்தேன்.ஆங்கிலேய இளவரசனைப் புகழ்ந்து பாடப்பட்டது என்னும்போது ஆச்சரியமாக இருக்கின்றது

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் !

  சினிமா மோகம் இல்லாத வங்காள மக்கள்
  அகரம் வாய் நுழையாது போனாலும். அறிவு இருக்கிறது

  தெருவில் படி ! உண்மை

  அரிய தகவல்கள் சிறப்பு.
  வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
 13. தேசிய கீதம் குறித்த தகவல் பள்ளி நாட்களிலேயே அறிந்திருந்தேன். நான் படிக்கையில் ஹிந்தியும் ஒரு பாடம் என்பதால் அப்போதே இது குறித்துப் படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. தேசிய கீதத்தின் உண்மை வரலாற்றை தெரிவித்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 15. போற்றுவோம் வாழ்த்துவோம்.
  எனது வலைக்கும் வாருங்கள் கருத்திடுங்கள் ஐயா.
  நன்றி
  புளோ ஸ்பொட்டில் உள்ளேன்
  என் பெயரை அழுத்தினால் என் வலை வருகிறது தானே!

  பதிலளிநீக்கு
 16. தேசிய கீதம் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்.. தங்கள் வலைதளத்தில் மட்டுமே இத்தகைய செய்திகள் அணிவகுப்பது தானே வாடிக்கை.

  பதிலளிநீக்கு
 17. முழுவதிலும் எனக்குப்பிடித்த வரிகள்-“சினிமாவைப் பொழுது போக்காகப் பார்க்க வேண்டும்“ என்பதே....இன்று சினிமாவுக்காக முழுநாளையும் முழுப்பொருளையும் விரயமாக்கி பலர் தங்களை இழந்து வருவதை எண்ணிப்பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு