24 ஆகஸ்ட் 2019

இதுதான் காதலா?
     ஆண்டு 1904

     ஜுலை 15

     கட்டிலில் அம்மனிதர் கண் மூடிப் படுத்திருக்கிறார்.

     அருகினில் அவர் மனைவி

     காதல் மனைவி

     நாள்தோறும் இவரைப் பார்ப்பதற்காக, பூங்கொத்துடன் வரும் ஒரு சிறுவன், இதோ இன்றும் வருகிறான்.

     இன்று மட்டும அந்தப் பூங்கொத்தை, நீயே அவரது தலைமாட்டில் வைத்துவிடு.

     இன்று அவர் தானேஎழுந்து, வழக்கம்போல், வாங்கும் நிலையில் இல்லை


     சிறுவன் திகைத்துப் போகிறான்

     ஆம், அம்மனிதர் மீளா உறக்கத்திற்குச் சென்றுவிட்டார்.

     அன்று இரவு, வீட்டில், கணவனின் உடல் அருகில், யாரையும் அனுமதிக்கவில்லை, அவர் மனைவி.

     நிறையப் பேச வேண்டியிருக்கிறது

     இன்று இரவு இவரோடு, என்னைத் தனிமையில் விடுங்கள்

     அன்று இரவு முழுவதும், தனது கணவனின் உயிரற்ற உடலோடு, அவர் தனித்தே இருந்தோர்.

      காதலின் உச்சம் என்பதே இதுதானோ?

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

      இவருக்குப் பல பெண் நண்பர்கள் உண்டு

      எனினும் இறுதியில் இவரைத்தான் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார்

     இவரது காதலி ஒரு நாடக நடிகை

      ஒல்கா நிப்பர்

      திருமணத்திற்குத் தயார்

      ஆனால்  ஒரு நிபந்தனை விதித்தார்

      ஒல்கா எப்பொழுதும் போல், மாஸ்கோவிலேயே வசிக்க வேண்டும்

      இவரோ எப்போதும்போல் யால்டாவில் வசிப்பார்

      கணவன் ஒரு ஊர்

      மனைவி ஒரு ஊர்

      இருவரில் எவர், எப்போது விரும்பினாலும், மற்றவரைத் தேடி வரலாம்.

      சில நாட்கள் தங்கலாம்

      ஆனால் ஒரே வீட்டில் வசிப்பது என்பது மட்டும் கூடவே கூடாது.

      விசித்திரமாக இருக்கிறது அல்லவா?

      ஒரே வீட்டில், பல காலம் வசிக்கும் கணவனும், மனைவியும், ஒருவருக்கு ஒருவர், மேசை நாற்காலி போல் அலுப்பூட்டும் பொருளாகி விடுவார்கள்.

      சேர்ந்து வாழ்ந்தால், ஒருவருக்கு ஒருவர், நிரம்ப விட்டுக் கொடுக்க வேண்டும்

      நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டும்

      இருவரின் சுதந்திரமும் பறிபோகும்

      என் மனைவி, கடைசி வரை என் காதலியாகவே இருக்க வேண்டும்

      இதற்குத் தனித்து வாழ்வதுதான் வழி

      காதலி ஏற்றுக் கொண்டார்

      மனைவியானார்

      காதலியாகவே வாழ்ந்தார்

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

      மாபெரும் எழுத்தாளர்

      இவர் தனது அனைத்துப் படைப்புகளிலும், மொத்தமாக எட்டாயிரம் கதை மாந்தர்களைப் படைத்துளளார் எனில், இவரது எழுத்திக் வீச்சு புரிகிறதல்லவா

இவர்தான்,

முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் சாத்தியமில்லை

சமூகத் தடைகளும், பண்பாட்டு ஒடுக்கு முறைகளும், சமய அதிகாரமும் இருக்கும் வரை, மனிதர்கள் பிளவுபட்டுததான் இருப்பார்கள்

நெருக்கடிக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள்,
சகமனிதன் மீது எவ்வாறு அன்பு செலுத்துகிறார்கள்,
என்பதை அடையாளம் காட்டுவதே
கலை, இலக்கியத்தின் பணியாகும் என்றவர்.

இவர்தான்
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்ஆன்டன் செகாவ்.