07 செப்டம்பர் 2019

குளம் தொட்டுக் கோடு பதித்து




மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் – உண்ணுநீர்க்
கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய் தினார்.

     இம்மண் உலகத்தில், மிகுதியானப் புகழை நிலை நிறுத்தியவனும், கற்புடையப் பெண்ணைப் பெற்றவனும், உண்ணப் படுகின்ற நீர் குறைவு படாதபடிக் கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும், இறவாதப் புகழ் உடம்புப் பெற்றவராவார் என்கிறது திரிகடுகம்.


குளந் தொட்டுக் கோடுபதித்து வழிசீத்து
உளந்தொட்டு உழுவயலாக்கி வளந் தொட்டுப்
பாடுபடும் கிணற் றோடென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகுஞ் சுவர்க்கத் தினிது

     பொருள் புரிகிறதல்லவா?

     சொர்க்கத்திற்குப் போக வேண்டுமா? இதைச் செய் என்கிறது சிறுபஞ்சமூலம்.

     என்ன செய்ய வேண்டும்?

     உண்ணாமல், உறங்காமல் இறைவனை நினைத்துக் கடுந்தவம் செய்ய வேண்டுமா?

     வேண்டாம்

     ஏரி வெட்டுங்கள்

     குளம் வெட்டுங்கள்

     சுவர்க்கம் கிட்டும்.

1.   குளம்
2.   கலிங்கு
3.   வரத்துககால், மதகுகள், மிகை நீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல்
4.   பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆயக்காட்டுப் பகுதிகளை உருவாக்குதல்
5.   பொதுக் கிணறு அமைத்தல்

      நம் முன்னோர், நீரின் அருமையினை, நீரின் முக்கியத்துவத்தினை நன்கு அறிந்து, வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புரிகிறதல்லவா,

     படிக்கப் படிக்க, நம் முன்னோர் கடைபிடித்த நீர் மேலாண்மை, கண்முன் காட்சியாய் விரிவடைகிறது.

தமிழரின் நீர் மேலாண்மை

     தஞ்சை மாவட்டம், பாறைகள் இல்லாத பகுதி என்றுதான், இவ்வளவு நாள் எண்ணியிருந்தேன்.

     என் கருத்தைத் தன் களப் பணியால் தகர்த்தெறிந்துவிட்டார் இந்நூலாசிரியர்.

     கச்ச மங்கலம்

     தஞ்சையில் இருந்து பூதலூர், விண்ண மங்கலம், ஒரத்தூர் வழியே கல்லணை செல்லும் சாலையில், வெண்ணாற்றின் வட கரையில் அமைந்துள்ள சிற்றூர் கச்சமங்கலம்.

     இவ்வூரில் ஒரு தடுப்பணை

     கல்லணையில் இருந்து பிரிந்து வரும் வெண்ணாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை.

     இத்தடுப்பணையினை ஒட்டி, ஆற்றின் இரு கரைகளிலும் இரு மதகுகள்.

     தென் கரையில் ஒரு மதகு

     வட கரையில், அடுத்தடுத்து, சிறு இடைவெளியில், இரு மதகுகள்.

     இக்கட்டுமான அமைப்பினை ஆராய விரும்பிய, நூலாசிரியர், ஒரு கோடை காலத்தில், நீர் வரத்து இல்லாத காலத்தில், கச்சமங்கலத்திற்குச் சென்று, தடுப்பணையினை கூர்ந்து ஆய்ந்திருக்கிறார்.

     அப்பொழுதுதான் கண்டுபிடித்திருக்கிறார்

     தடுப்பணையானது இயற்கையாக சிறு, சிறு குன்றுகள் உள்ள பகுதியில், ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலாக உள்ள, கற்பகுதிகள், அகற்றப்பட்டு, கிடைமட்ட நிலையில், செவ்வக வடிவில் அமைந்த பெரிய பெரிய கருங்கற் பாறைகளை, அவ்விடத்தில் இட்டு நிரப்பி, தடுப்பணையினை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்.

     ஆற்றின் குறுக்காக, இயற்கையாக அமைந்த, குன்றுப் பகுதிகளாலும், மனித முயற்சியால் அங்கு இடம் பெற்ற கருங்கற் பாறைகளாலும் அமைந்த, இந்த தடுப்பணையின் மேற்குப் பகுதியானது, மணல் நிறைந்த ஆற்றுப் பகுதியாக உள்ளது.

     தடுப்பணையின் கிழக்குப் பகுதியானது, மேற்குப் பகுதியின் மணற் பகுதியைவிட, பத்து அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

     அதாவது தடுப்பணைக்கு மேற்கே மணல் பகுதி

     தடுப்பணைக்கு கிழக்கே, சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை, மணல் பகுதியே இல்லாத, கற்பாறைகளுடன் கூடியத் தரைப்பகுதி.

     இப்பகுதியினை அடுத்து, வெண்ணாறு கடலில் கலக்கும் வரை மணற் பகுதி.

     வியப்பாக இருக்கிறதல்லவா

     நம் முன்னோர், தகுதியானத் தரைப் பகுதியினைத் தேர்வு செய்து, தடுப்பு அணையினை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைத்திருக்கிறார்கள் என்பது வியப்பினும், வியப்பல்லவா.

-----

     இந்நூலினைப் புரட்டப் புரட்ட, படிக்கப் படிக்கப், பக்கத்துக்குப் பக்கம், நீர் கசிந்து, விரல்களை நணைக்கிறது.

தஞ்சாவூர், சரசுவதி மகால்,
தமிழ்ப் பண்டிதர்
ஏடகம் அமைப்பின் நிறுவுநர். தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களின்

தமிழரின் நீர் மேலாண்மை

நூலின் வெளியீட்டு விழா,
கடந்த 31.8.2019 சனிக்கிழமை மாலை, 6.00 மணியளவில்.
தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில் நடைபெற்றது.



சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்
மாண்புமிகு இரா.சுரேஷ் குமார் அவர்கள்
நூலினை வெளியிட்டுச்
சிறப்புரை ஆற்றினார்.

விழாவிற்குத் தலைமையேற்றிருந்த
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்
துணைவேந்தர்
முனைவர் கோ.பாலசுப்ரமணியன் அவர்கள்,
நூலின் முதற் படியினைப் பெற்றுத்
தலைமையுரை ஆற்றினார்.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழக,
தமிழியற் துறைத் தலைவர்
முனைவர் உ.அலிபாவா அவர்கள்,

தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி
மேனாள் வணிகவியல் துறைத் தலைவர்
பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்கள்,

தஞ்சாவூர், மன்னர் சரபோசி கல்லூரி,
தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர்
முனைவர் வி.பாரி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.

நூலாசிரியர்
முனைவர் மணி.மாறன் அவர்கள்
ஏற்புரையாற்றினார்

ஏடகப் பொருளாளர்
திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்கள்
நன்றிகூற விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், தஞ்சை எழுத்தாளர் களஞ்சியம் நிறுவுநர்
கவிஞர் ராகவ் மகேஷ் அவர்கள்
நிகழ்ச்சிகளை
கவியோடு, சுவைபட தொகுத்து வழங்கினார்.

முன்னதாக,
இவ்விழா, இனிது அரங்கேற
கடந்த ஒரு மாதகாலமாக
அல்லும்,பகலும் அயராது பாடுபட்ட
தஞ்சாவூர், கரந்தை, சமண ஆலயத்தின்
அறங்காவலர் குழுத் தலைவரும்,
ஏடகப் புரவலரும்,
ஏடகம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய
திரு ச.அப்பாண்டைராஜ் அவர்கள்
விழாவிற்கு வந்திருந்தோரை
மகிழ்ச்சி பொங்க வரவேற்றார்.

இலக்கியம், வரலாறு, தொல்லியல்
போன்ற தளங்களில்
தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும்
ஏடகம் அமைப்பின் நிறுவுநர்


முனைவர் மணி.மாறன் அவர்களின்
18 வது படைப்பு இந்நூல்.

வாழ்த்துவோம், போற்றுவோம்.


 ------------


கண் புரை அறுவை சிகிச்சை


நண்பர்களே, வணக்கம்.

     எதிர்வரும் திங்கட்கிழமை (9.9.2019), அன்று காலை, மதுரை, அரவிந்த் கண் மருத்துவமனையில், கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கின்றேன்.

     எனவே, சில நாட்களுக்கு வலைப் பூவின் பக்கமோ, முக நூலின் அருகிலோ, வர இயலா நிலை.

     சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

என்றென்றும் தோழமையுடன்,
கரந்தை ஜெயக்குமார்.




15 கருத்துகள்:

  1. தமிழர்களின் நீர் மேலாண்மை - வியக்க வைக்கும் செய்திகள். நூல் குறித்த தகவல்கள் சிறப்பு.

    சிகிச்சை நல்ல படியாக முடிந்து நலம்ம் பெற எனது பிரார்த்தனைகள்.

    தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

    பதிலளிநீக்கு
  2. குளம் தொட்டு வளம் பெருக்கும் விடயங்கள் ஒரு புறம்....தங்கள் கண் சிகிச்சை நலமாக நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். எல்லா உறுப்புகளிலிலும் கண் மிகப்பிரதானமானது. மீண்டும் மீண்டும் கண்ணும் ஏனையவையும் நன்றாக இயங்க இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. அரிய தகவல்கள் நீர் மதகுகள் குறித்து...

    கண் சிகிச்சை நலமுடன் முடிந்து வர எமது பிரார்த்தனைகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா...

    விரைவில் சந்திப்போம்...

    பதிலளிநீக்கு
  5. இந்நூல் வெளியீட்டு விழா மிகவும் அருமையாக இருந்தது. சொற்பொழிவாளர்கள், நூலினைப் பற்றி பகிர்ந்த கருத்துகள், நூலின் முக்கியத்துவத்தினையும், இக்காலத்திற்கான அதன் தேவையினையும் உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. விழாவிற்கு வந்திருந்தோர் நூலின் அருமை பெருமைகளை விவாதித்ததை அரங்கில் காணமுடிந்தது. அரிய தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு, களப்பணியினையும் ஒருங்கிணைத்து, முனைவர் பட்டம் பெற்று, அதனை நூலாக்கம் செய்த நூலாசிரியரின் முயற்சி பிற ஆய்வாளர்களுக்கும், சாதிக்கத் துடிப்போருக்கும் ஒரு முன்னுதாரணமாகும். முனைவர் மணி.மாறன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நூலைப்பற்றியும், விழாவைப் பற்றியும் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். சிகிச்சை முடிந்து நலமாக திரும்பி, எழுத்துப்பணியைத் தொடருங்கள். காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. கண்புரை நீக்கல் இப்போதெல்லாம்வெகு எள்தாகி விட்டது திருச்சி தஞ்சை சாலையில் பல இடங்களின் பெயர்கள் ஏதோ ஒரு ஏரியாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
  8. தமிழரின் நீர் மேலாண்மையை பற்றி கூறும் அருமையான நூல்.
    அழகாக எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.

    கண் அறுவை சிகிச்சை செய்து நலம் பெற்று வந்து மீண்டும் வலம் வரலாம் பதிவுகள் இட.

    பதிலளிநீக்கு
  9. வியப்பூட்டும் தகவல்கள்.
    கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அறிய தகவல் நண்பரே.
    கண் சிகிச்சை வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. மிக மேன்மை மிகுந்த தகவல்கள். அளித்த திரு மணிமாறனுக்கும், எடுத்து இயம்பிய உங்களுக்கும் மிக நன்றி. மிக மிகப் பெருமையாக இருக்கிறது நம் நாட்டை நினைக்கையில்.
    இப்போது சிகிட்சை முடிந்து
    தாங்கள் நலம் பெற்று வருகிறீர்கள் என்று நம்புகிறேன்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. நண்பர் மணி.மாறனுக்கு வாழ்த்துகள். நீங்கள் சுட்டிய இரு வெண்பாக்களும் இதுவரை நான் அறியாதவை. அருமை.
    கண் புரை அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல வியப்பான தகவல்கள்.

    கண்புரை அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.


    கீதா

    பதிலளிநீக்கு
  14. விரைந்து குணமடைய வாழ்த்துக்கள்,,,,/



    www.katrinpakkangal.blogspot.com

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு