23 அக்டோபர் 2019

ரோசெட்டோ
    

நாமெல்லாம் இறைவனை, மலர் கொண்டு, தீப ஆராதனை செய்து வழிபாடு செய்து வருகிறோம் அல்லவா,

     அவர்களும் இப்படித்தான் இறைவனை வணங்கியிருக்கிறார்கள்.


     ஆனால், இன்று நேற்றல்ல, ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்.

     பாண்டிய மன்னர்களின் இலட்சினையை கவனித்திருக்கிறீர்களா,

     இரண்டு மீன்களுக்கு நடுவே, ஒரு சென்டுகோல் காணப்படும்

     இவர்களும் சென்டுகோலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்

    

செங்கோல் என்று கூறுவோமல்லவா, இந்த செங்கோலுக்குப் பதிலாக, சென்டுகோலை ஏந்தித்தான் இம் மன்னர்கள் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்.

     இன்று நேற்றல்ல 5000 வருடங்களுக்கும் முன்

     மன்னார்குடி, ராஜகோபால சுவாமி கோயிலுககுச் சென்றிருக்கிறீர்களா?

     இக்கோயிலின் முன், ஓங்கி உயர்ந்த கல் தூண் ஒன்று காணப்படும்.

    
55 அடி உயர கல் தூண்

     ஒரே கல்லினால் ஆன தூண்

     பார்த்து வியந்திருப்பீர்கள்

     இவர்கள் நாட்டிலும், இவர்களது வழிபாட்டிடங்களில், இதே போன்ற கல்தூண்கள் நூற்றுக் கணக்கில் காணப்படுகின்றன.

    


     அனைத்தும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.

     தூண் முழுவதும் சித்திர எழுத்துக்கள்

     ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று எச்சங்கள்

     இவற்றுள் பல தூண்கள், பல நாடுகளின் படையெடுப்பின்போது, கொள்ளையடிக்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் கம்பீரமாய் எழுந்து நின்று காட்சியளிக்கின்றன.

     ரோம், இஸ்தான்புல், நியுயார்க், பாரிஸ், இலண்டன் என பல நாடுகளில் இத்தூண்கள் பாரம்பரியச் சின்னங்களாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

     ஒரு நாட்டின் கல் தூண்களைப் பல நாடுகள் போற்றிப் பாதுகாப்பது வியப்பினும் வியப்பல்லவா

    இந்நாடு எது தெரியுமா?

     நம்மைப் போலவே தீபம் ஏற்றி வணங்கிய நாடு எது தெரியுமா?

     நீண்ட நெடிய கற்தூண்களை வழிபாட்டிடங்களில், நட்டு வைத்த நாடு எது தெரியுமா?

     எகிப்து

     ஆம், எகிப்து நாடுதான்

    

எகிப்து நாட்டில் அஸ்வான் என் இடத்தில் காணப்படும், மிகப் பெரிய மலையில் இருந்து, மிகப்பெரும் கல்லூண்களை, 50 அடி, 55 அடி உயர கல் தூண்கள், முழுதாய், ஒரே ஒரு கல்லாய், வெட்டி எடுத்து, சித்திர எழுத்துக்களையும் பொறித்திருக்கிறார்கள்.

    பின்னர் இத்தூண்களை 400 மைல் முதல் 1500 மைல் தொலைவு வரையிலான பல பகுதிகளுக்குக் கொண்டு சென்று, மிகப்பெரும் கோயில்களின் முன் அமைத்திருக்கிறார்கள்.

     நினைத்துப் பாருங்கள்

     தொழில் நுட்ப வசதி ஏதுமில்லாத அக்காலத்தில், 5000 ஆண்டுகளுக்கும் முன், 55 உயர கற்தூண்களை, 1500 மைல் தூரத்திற்கு, எவ்வித சேதாரமுமின்றி நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்கள்.

     இன்றும் அஸ்வான் என்ற இடத்தில் உள்ள மலையில், பாதி வெட்டப்பட்ட நிலையிலான துண்கள் காணப்படுகின்றன.

---
    

எகிப்து என்றாலே நம் நினைவிற்கு வருவது பிரமீடுகளும், மம்மிகளும்தான்.

     எகிப்தியர்கள் மருத்துவத் துறையில், அக்காலத்திலேயே உச்சம் தொட்டிருக்கிறார்கள்

     இன்று நமக்கு என்பாமிங் என்றால் என்னவென்று தெரியும்.

     ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, என்பாமிங் முறையில் எகிப்தியர்கள் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்.

     விண்ணைத் தொடும் பிரமீடுகள் காண்பவரை மெய்மறக்கச் செய்யும்

     இப்பிரமீடுகளை அமைக்க இவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு கருங்கல்லும், ஒரு ஆள் மட்டத்தினும் உயரமானவை

     மலைகளே இல்லாதப் பகுதியில் பிரமீடு அமைக்க, பலநூறு மைல்களுக்கு அப்பால் உள்ள மலைகளை வெட்டி கற்களைக் கொண்டு வந்து அடுக்கி, பிரமீடுகளை எழுப்பி இருக்கிறார்கள்.

     கால் வட்ட வடிவிலான இரு பலகைகளை, இரும்புக் கம்பிகள் மூலம் இணைத்து, அதன்மேல், கல்லினை ஏற்றி, நகர்த்தி வந்திருக்கிறார்கள்

     மணற்பாங்கான இடங்களில் முழு வட்ட வடிவிலான சக்கரங்களைப் பயன்படுத்துதல் மிகவும் கடினமான செயல் என்பதால், கால் வட்ட வடிவிலான அமைப்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

---

     நண்பர்களே, எகிப்தியர்கள், தங்கள் நாட்டின் ஐயாயிரம் ஆண்டு கால வரலாற்றையும், அதன் எச்சங்களையும், இன்றுவரை மிகச் சரியாகவும், முறையாகவும் பாதுகாத்து வருகிறார்கள்.

     வழிபாட்டிடங்கள், கல்தூண்கள் என அனைத்திலும சித்திர எழுத்துக்கள் நிரம்பி வழிகின்றன.

     சரி ஐயாயிரம் ஆண்டு பழமையான சித்திர எழுத்துக்களைப் இன்று படிப்பதும், அதன் பொருளை உணர்வதும் கடினமல்லவா?

     எவ்வாறு படித்தார்கள்?

     சித்திரங்களின் பொருளை எவ்வாறு உணர்ந்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

     இதன் விடை அறிய, இலண்டன் அருங்காட்சியகத்திற்குச் செல்வோம் வாருங்கள்.

    

      ரோசட்டோ கல்வெட்டு

     எகிப்திய கல்வெட்டு

     1799 இல் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு

     112 செமீ உயரமும், 76 செமீ அகலமும், 28 செமீ கனமும் உடைய கல்வெட்டு.

     இக்கல்வெட்டு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

     மேல் பகுதியில் அக்காலச் சித்திர எழுத்துக்கள்

     நடுப்பகுதியில், பிற்காலத்திய எகிப்திய சித்திரம் அல்லாத எழுத்துக்கள்

     கீழ்ப் பகுதியில் கிரேக்க எழுத்துக்கள்

     சித்திர எழுத்துக்களும், எகிப்திய, கிரேக்க எழுத்துக்களும் ஒரே செய்தியைத்தான், மூன்று வழிகளில் உரைக்கின்றன

     நடுப்பகுதியிலும், கீழ்ப் பகுதியிலும் உள்ள எழுத்துக்களின் துணையுடன், மேற்பகுதியில் உள்ள சித்திர எழுத்துககளைப் படிக்கும் முறையினை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

---

     சுமார் ஒரு மணிநேரம், நாங்கள் யாரும் தஞ்சையிலேயே இல்லை.

     எகிப்தில் இருந்தோம்

      பாஸ்ப்போர்ட் இல்லாமல், விசா எடுக்காமல், ஒரு பைசா செலவு செய்யாமல், எகிப்தையே, ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டோம்.

     அழைத்துச் சென்றவர்

    

வரலாற்றுப் பேரறிஞர் 
     முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள்.

---

கடந்த 13.10.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற
ஏடகம்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில்
எகிப்து நாட்டுக் கலைச் செல்வங்கள்
என்னும் தலைப்பில்
ஒளிக் காட்சியுடன்
உரையாற்றிய
குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள்
எகிப்திய சின்னங்களை, தமிழக வரலாற்றுச் சின்னங்களோடு ஒப்பிட்டதோடு, எகிப்து நாட்டு வரலாற்றை, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, எழுத்துகலை என்னும் தலைப்புகளில் கண் முன்னே கொண்டு வந்து காட்டினார்.

     பல மாதங்கள் எகிப்து நாட்டில் சுற்றித் திரிந்து, ஆய்ந்து, தான் கண்ட காட்சிகளையெல்லாம், எங்களுக்கு விருந்தாக்கி மகிழ்ந்தார்.

நன்றி ஐயா

---சிங்கப்பூர், மேனாள் தமிழ் விரிவுரையாளர்
திரு ப.திருநாவுக்கரசு அவர்கள்
தலைமையில்
நடைபெற்றப் பொழிவிற்கு வந்திருந்தோரை,


ஏடகம் நிறுவுநர், தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்கள்
வரவேற்றார்.


தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலவம்
திருமதி அ.ரம்யா அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.


தஞ்சாவூர், சாஸ்த்ரா பல்கலைக் கழகத்
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் இரா.ஜெயஸ்ரீ அவர்கள்
விழா நிகழ்வுகளைத் திறம்பட சுவைபடத்
தொகுத்து வழங்கினார்.

ஏடகம் அமைப்பின்
25 வது பொழிவு
இப்பொழிவு

ஏடகம்
இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து
மூன்றாம் ஆண்டில்
காலடி எடுத்து வைத்திருக்கிறது.

25 மாதங்கள்
25 தலைப்புகள்
ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு சுவை
புதுப் புது சுவை என
ஏடகத்திற்குத்
தன் அயரா, தளரா உழைப்பால்
மெருகூட்டிவரும
ஏடகம் அமைப்பின்

நிறுவுநர், தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது

போற்றுவோம், வாழ்த்துவோம்.


12 கருத்துகள்:

 1. அன்று நேரில் கேட்ட பொழிவினை மறுபடியும் கேட்டதுபோன்ற உணர்வு, இதனைப் படிக்கும்போது.

  பதிலளிநீக்கு
 2. அருமை... அருமை ஐயா... தங்களை சந்தித்ததும், அதன் பின் பேசியதும் மனதிற்கு மகிழ்ச்சி... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. என்றும் எனது பெருமதிப்பிற்குரிய திருமிகு கரந்தை ஜெயக்குமார் ஐயா, சில நிமிடங்கள் தங்கள் வியத்தகு எழுத்தும் அதன் வழியாக வரலாற்றுப் பேராசிரியர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்த தகவல்களும் எகிப்தில் இருப்பது போன்ற உணர்வைத்தந்த அதே நேரம் பழந்தமிழர் புரிந்த விந்தைகளை அறிந்து ஆச்சரியமும் ஆனந்தமும் அடைய வைத்தது.நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்------இலங்கையிலிருந்து உடுவை.எஸ்.தில்லைநடராசா

  பதிலளிநீக்கு
 4. நாம் தஞ்சை பெரிய கோவில் மலைகள் இல்லாத இடத்தில் இருக்கும் அதிசயம் எனப் பேசுகிறோம் இம்மாதிரி அயல் தேசப் பெருமையை அறியதந்ததற்கு நன்றியும் பாராட்டுகளும் சார்

  பதிலளிநீக்கு
 5. அரிய தகவல்களை அருமையாகத் தொகுத்துத் தந்தீர்கள்.
  பாராட்டுக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 6. அரிய பெரும் தகவல்களை தந்தமைக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. வழக்கம் போல உங்கள் வசீகர விமர்சனம் நேரில் கண்டு ரசிப்பது போன்று. அருமை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு