14 ஏப்ரல் 2020

அறம்
     அறம்

     அறம் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகச் சொல்லுவார்கள்.

     அறம் என்றால் என்ன?


     ஒழுக்கம், நடத்தை, பழக்க வழக்கம், ஒரு மரபைப் பின்பற்றுதல் இவையே அறமாகும்.

     உலகு முழுவதும் அறம் பேசப்படுகிறது.

     கிரேக்க அறம்

     கிறித்துவ அறம்

     ப்ரோடஸ்டண்ட் அறம்

     ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் காரணமாக, பிரெடெரிக், நீட்சே போன்றோர் கூறிய அறம்.

     மனிதன் இயற்கையை ஆட்கொண்டிருக்கிறான், இயற்கை மனிதனை ஆட்கொண்டிருக்கிறது என்று சொல்லக் கூடிய, உற்பத்தியும், மறு உற்பத்தியும் சார்ந்த, காரல் மார்க்ஸ் கூறிய அறம்.

     கன்ஃப்யூசியஸ் கூறிய இனக்குழு அறம்

     சீனா போன்ற நாடுகளிலே பரவியிருக்கக் கூடிய பௌத்த அறம், சமண அறம்.

     இந்த அறங்கள் யாவுமே மனிதனுடைய ஒழுங்கு முறையைப் பேசுகின்றன.

     இந்த அறங்களால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     இந்த அறங்கள்தான் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன.

     மனிதர்களை, குழுக்களை, அவர்களுக்கு இடையே உள்ள சமூக உறவை இணைப்பதற்கான, நெறிமுறைகள், நியதிகள், அறங்கள், பண்பாடுகள் சொல்லப்படுகின்றன.

     இந்த அறம் எதோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதை தொல்காப்பியர் அழகாகக் கூறுவார்.

ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே
தாயென் கிளவி ஒப்போன் கூற்றே
கொடுயென் கிளவி உயர்ந்தோன் கூற்றே

     ஈ என்று சொன்னால், ஒருவர் தனக்குக் கீழாக இருப்பவர்களுக்குக் கொடுப்பது.

     தா என்று சொன்னால் நமக்குச் சமமாக இருப்பவர்களுக்குக் கொடுப்பது.

     கொடு என்று சொன்னால் உயர்ந்தோர்கள் அனைவருக்கும் கொடுப்பது.

     இதைத்தான் கொடை என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

     மழையின் மேகக் குறியினைக் கண்டு, ஆடிய மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன்.

     படர்வதற்குக் கொடியின்றித் தவித்த முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி.

     அமிழ்தினும் இனிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்த அதியமான்.

     இவைகள்தான் அறங்கள்.

     கொடை அறங்கள்.

     அறம் இருவகைப்படும்

     ஒன்று அக அறம்.

     மற்றொன்று புற அறம்.

     போர் முடிந்து திரும்பிக் கரம் பற்றுவேன் என்று கூறிச் சென்ற காதலன், தான் சொன்னபடி காதலியின் கரம் பற்றுவது அக அறம்.

     தேர் ஏற்றிப் பசுவின் கன்றைக் கொன்றான் என்பதற்காகத், தன் மகனையே தேர்க்காலில் இட்டு நீதி காத்தது புற அறம்.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

     மன்னன் என்பவன் மக்களை மட்டுமல்ல, பிற உயிரினங்களையும் காக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.

     இப்படி எல்லாவற்றையும் காக்கக் கூடிய மாபெரும் அரசியல் அறம் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது.

     கொரோனா

     வெறுங்கண்களால் பார்க்க இயலாத, சிறிதினும் சிறிதான, கொரோனா இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

     அரசு, தேவையான அனைத்தையும் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கிறது.

     இருப்பினும் அரசின் கண்களுக்கு எட்டாத சில இடங்களில், சில மக்கள் பசி, பசி என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

     கொரோனாவின் தாக்குதல் ஒரு புறம்.

     பசியின் வேதனை மறுபுறம்.

     ஊரடங்கு என்பது இன்று பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாய் சிதைத்திருக்கிறது.

     காவல் துறை, தன் கடமையை மிகவும் சரியாக, மிகவும் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிற இந்த நேரத்திலும், எதற்கும் செவிமடுக்காமல், வேடிக்கை பார்ப்பதற்காக, வெளியில் சுற்றும் சில இளைஞர்களின் போக்கு, முற்றிலும் அறமற்ற செயலாகும்.

     இந்த நோய்க்குப் பலியாகக் கூடிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், மருத்துவர்கள் கடவுளாகக் காட்சி அளிக்கிறார்கள்.

     மருத்துவ அறம், இன்று பெரிதாகப் பேசப்படுகிறது.

     மருத்துவர்கள் மட்டுமல்லாது, செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், அனைவரும், தங்களுடைய கடமையினைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.

     இதுதான் கடமை அறம்.

     கடமை என்ற அற உணர்வை தார்மீகமாக ஏற்றுச் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற, இந்த நேரத்திலும் பசிப்பிணி மருத்துவமும் முக்கியமானதாகிறது.

     இலக்கியத்தில்  பார்த்திருக்கிறோம்.

     அமுதசுரபியின் மூலம், உலக உயிர்களின், பசிப்பிணி அகற்றிய மகத்துவத்தை மணிமேகலையில் பார்த்திருக்கிறோம்.

     இதனை முழுவீச்சில் அரசு இன்று செய்தாலும்கூட, தன்னார்வலர்களின், தர்ம சிந்தனையால், பசிப்பிணி நீக்க, நீளும் கரங்கள்கூட, இன்றைக்கு மருத்துவ அறமாகத்தான் பார்க்கப்படுகிறது.

அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்
மறவாது  இதுகேள், மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்

என்கிறது மணிமேகலை. இந்த அடிப்படைத் தேவைகளைத் தரவேண்டியது ஒரு அரசனின், ஒரு  மன்னனின், ஒரு அதிகாரியின் கடமை.

     மக்களையும் காப்பாற்ற வேண்டும், மன்னிலுள்ள உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும்.

     இதுதான் அரசியல் அறம்.

---

ஏடகம்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவு

கடந்த 12.4.2020 ஞாயிற்றுக் கிழமையன்று,
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி
தமிழ் இலக்கியத் துறைத் தலைவர், பேராசிரியர்


முனைவர் அரங்க.மல்லிகா அவர்களின்,

இலக்கியத்தில் தமிழர் அறம்

என்னும் தலைப்பிலானப் பொழிவு கேட்டு மகிழ்ந்தேன்.
அறம் என்றால் என்னவென்று அறிந்தேன்.

ஞாயிற்றுக் கிழமை பொழிவு கேட்டீர்களா?

ஊரே, ஏன் உலகே அடங்கிக் கிடக்கையில், வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கையில்
பொழிவா? எப்படி? என்னும் கேள்வி எழுகிறதல்லவா?

இணைய வழிக் காணொலிச் சொற்பொழிவு.

ஏடகம் அமைப்பின் 31 வது சொற்பொழிவு வீடு தேடி வந்தது.

கடந்த முப்பது மாதங்களாய்
முத்தாய் – ஏடகத்தின்
தனிச் சொத்தாய் நடைபெற்ற
ஞாயிறு முற்றப் பொழிவு
இம்மாதம் தடைபட்டுவிடுமோ – எனத்
தவித்திருந்த வேளையில்,

கொரோனாவிற்குத் தலைணங்காமல்
தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல்
முகமூடி அணிந்து முகம் மறைக்காமல்

இணையவழி எழுந்து
காற்றில் தவழ்ந்து
உலகெங்கும் பறந்து
அலைபேசி வழி முழங்க

அரும்பாடு பட்ட
ஏடக நிறுவுநர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்
போற்றுவோம், வாழ்த்துவோம்.

அறம் செவி கொடுத்துக் கேளுங்களேன்

54 கருத்துகள்:

 1. ரசித்தேன். அனைத்து அறங்களும் காக்கப்பட வேண்டும். அரசு அக்கறை எடுக்கும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 2. அறம்தான் திருக்குறளின் மையம் என்று சொல்லலாம்...

  அறம் என்பதற்கு நீதி என்று தோராயமாக சொல்லலாம்... ஆனால் அறம் நீதியை விட மிகவும் மேம்பட்ட சொல்... நீதி தமிழ் சொல் கிடையாது...

  அறம் என்றால் "மனத்துக்கண் மாசிலன் ஆதல்"

  இந்த ஒற்றை வரியில் அறத்தின் ஒட்டுமொத்த விளக்கத்தையும் சொல்லி விட்டார் ஐயன்...

  பதிலளிநீக்கு
 3. மிகவும் மகிழ்ச்சி சார்,தங்களுடைய பதிவு வழக்கம் போல் சிறப்பு என்றென்றும் என்னுடைய நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அறம்.. அதுதான் மனிதனின் திறம்...

  பதிலளிநீக்கு
 5. முனைவர் அரங்க.மல்லிகா அவர்களின்,

  இலக்கியத்தில் தமிழர் அறம்

  பற்றி பேசியதை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு விடயத்தை தொடர்ந்து நிகழ்த்தி வரும் முனைவர் மணி.மாறன் அவர்களைப் போற்றுவோம், வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 7. //படர்வதற்குக் கொடியின்றித் தவித்த முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி.

  அமிழ்தினும் இனிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்த அதியமான்.

  இவைகள்தான் அறங்கள்.//

  அறம் பற்றிய விளக்கங்கள் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 8. வேறுபட்ட சிந்தனைகளையும் அரவணைத்து செல்வதும் அறமல்லவா

  பதிலளிநீக்கு
 9. அறம் பற்றி மிகச் சிறப்பாக சொன்ன பதிவு. அறம் காப்போம்.

  பதிலளிநீக்கு
 10. அருமை ஜெயக்குமார். பேரா.அரங்க மல்லிகா பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த நூலாசிரியருங்கூட. பேச்சாளரைவிட அந்தப் மொழியை நீங்கள் தரும் விதம் அழகு.ஏடகத்திற்கென்று தனிவரலாறு உருவாகிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. அறம் பற்றி மிகவும் சிறப்பான பதிவு.

  //மக்களையும் காப்பாற்ற வேண்டும், மன்னிலுள்ள உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும்.//

  அரசு காப்பாற்றும் என்று நம்புவோம்..

  கீதா

  பதிலளிநீக்கு
 12. அறம் பற்றிய தெளிவை சிறப்பாக தந்துள்ளீர்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
  இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 13. சிறப்பு. தங்கள் பதிவில் பல்வேறு புதிய விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. வாழ்வில் அறம் காத்து வாழ வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தோம். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. தங்கள் பதிவில் குறிச் சொற்களை ஆக்குவதிலும் கவனம் செலுத்தலாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி வரும் பதிவுகளில் குறிச் சொற்களைச் சேர்க்கிறேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 15. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை பொது அல்லது அரசியல் என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

  இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னைப் பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையினை விரைவில் எழுதி அனுப்புகின்றேன் ஐயா

   நீக்கு
 16. தமிழ் முனிவரை போல நீங்கள் அறம் பற்றி விளக்கிய விதம் மிக அருமை நண்பரே.

  பதிலளிநீக்கு
 17. அருமையான பொழிவு. ஏடகத்தின் மற்றொரு புதிய பரிமாணம் ஆரம்பம். மகிழ்ச்சி. உங்கள் பாணியில் படித்ததும் இன்னும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   ஏடகப் பொழிவு ஒரு மாதம் விடுபட்டுவிடாமல் இருக்க, முனைவர் மணி.மாறன் ஐயா அவர்கள் எடுத்த முயற்சி போற்றுதலுக்கு உரியது ஐயா

   நீக்கு
 18. அருமை...
  அறம் கிரேக்க மூலம் என்பது புதிய தகவல் நன்றி

  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பு போல் தாங்கள் தொடர்ந்து எழுதுவதில்லையே
   தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

   நீக்கு
 20. பலவகையான அறத்தை தெளிவுபடித்தியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   கோரோனா எச்சரிக்கையாக இருங்கள் நண்பரே

   நீக்கு
 21. ஒன்னு ஈய மாட்டான் என்று கூட எங்க ஊர்ல ஒரு பேச்சு வழக்கு இருக்கு. இப்போதான் புரியுது.

  களப்பணியாளர்கள் நன்றியோடு வணக்கப்பட வேண்டியவர்கள்
  நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 22. மகிழ்ச்சி நண்பரே.நானும் உரையைச் செவிமடுத்தேன்.

  பதிலளிநீக்கு
 23. அறம் எனப்படுவது எவையெவை என அழகாக அற்புதமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்!
  உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு