06 ஜூன் 2020

ஹோ


நம் மலைகள் எப்பொழுதும் நம்முடையவை

நம் ஆறுகள் எப்பொழுதும் நம்முடையவை

நம் மக்கள் எப்பொழுதும் நம்முடன் இருப்பார்கள்

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முறியடிப்போம்

நம் நாட்டை மீண்டும் அமைப்போம்

இன்னும் பத்து மடங்கு அழகுடன்.


     எவ்வளவு இடர்களும், துயர்களும் வழிமறித்தாலும், இறுதி வெற்றி நமதே என்று நம் மக்கள் உறுதியாய் இருக்கிறார்கள். தெற்கிலும், வடக்கிலும் உள்ள நம் சகோதரர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து, ஒரே கூரையின் கீழ் வாழ்வார்கள்.

     நமது நாடு சின்னஞ்சிறிய நாடுதான்.

     ஆனால், நாம், வீரம் செறிந்த போராட்டத்தின் மூலம், பிரஞ்சு மற்றும் அமெரிக்கா ஆகிய இருபெரும் ஏகாதிபத்தியங்களை தோற்கடித்து தனிப் பெருமையைப் பெறப்போகிறோம்.

கண்ணுக்கெட்டிய தூரம் மலைகளும் ஆறுகளும்

இதற்குமேல் இடம் தேவையா?

இங்கே லெனின் ஓடை

அங்கே மார்க்ஸ் மலை

வெறும் கைகளைக் கொண்டு

ஒரு நாட்டை நிர்மாணிக்கிறோம்.

     எந்த வசதியுமில்லாத சூழ்நிலையில் வசித்து, பாடுபட்ட இவரின் கண்களுக்கு ஓடையும், மலையும்கூட கொள்கையாகத்தான் காட்சியளித்தது

     1942 ஆம் ஆண்டு சீனாவில் வாழ்ந்து கொண்டிருந்த, தன் நாட்டுமக்களைச் சந்தித்து, ஐப்பானிய எதிர்ப்பு சக்திகளை உருவாக்கச் சென்றபொழுது கைது செய்யப்பட்டார்.

     ஓராண்டிற்கும் மேல் சிறை.

     13 மாவட்டங்களின் 18 சிறைச்சாலைகளில் இவரை மாற்றி, மாற்றி அடைத்தார்கள். உணவு இல்லை, உடை கூட இல்லை. ஒவ்வொரு சிறையிலும் கிடைத்த கனிவான கவனிப்பால், பற்கள் பல விழுந்தன. இருப்பினும் மனிதர் அசைந்து கொடுக்கவில்லை.

பிடிவாதமும் விடாமுயற்சியும்

என்னுடன் பிறந்தவை

நான் ஒரு அங்குலம் கூடப்

பின்வாங்க மாட்டேன்.

என் உடல் வலி தாங்க  முடியவில்லை

ஆனால் என் உணர்ச்சி

ஒருபோதும் துவளாது.

     1949 ஆம் ஆண்டில், இவருக்கு ஐம்பத்து ஒன்பது வயது நிறைவுற்றபோது, அவருடைய பிறந்தநாளை, சிறப்பான முறையில் கொண்டாடிடப் பலரும் விரும்பினர். தோழர்களின் விருப்பத்திற்குத் தன் கவிதையாலேயே பதிலளித்தார்.

நாட்டுக்காகப் போராடிய நான்

என்னைப் பற்றி நினைக்கவில்லை

ஐம்பத்தொன்பது முதிய வயதல்ல.

எதிர்ப்பு இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு

என் பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்.

     போர் முனைக்குச் சென்று இளைஞர்களைச் சந்தித்து ஊக்குவிப்பார். தன் கவி வரிகளால் உத்வேகமூட்டுவார். முயன்றால், முடியாதது இல்லை, இல்லவே இல்லை என்பதை அழகாய் எடுத்துரைப்பார்.

மலைகளைத் தட்டையாக்குவது

சமுத்திரத்தை மூடுவது

கடினமான வேலையல்ல.

விடாமுயற்சி வெற்றி தரும்

மன உறுதி வெற்றி சூடும்.

     சிலர் இவரது போராட்டத்தை, யானையை வெட்டுக்கிளி எதிர்க்கிறது என்று கிண்டல் செய்தனர்.

     அவர்களுக்கு, இவரது பதில் என்ன தெரியுமா?

     எதிரிகளிடம் போர் விமானங்களும், சக்திமிக்க துப்பாக்கிகளும் இருக்கலாம். ஆனால் நாங்கள் கூர்மையான மூங்கில் கழிகளைக் கொண்டே அவர்களை எதிர்ப்போம், வெல்வோம்.

வெட்டுக்கிளி சிறிய உருவமே

ஆனால் விடா முயற்சியால்

யானையின் குடலையும் கிழிக்கும்.

     பிரான்ஸைத் தோற்கடிக்க எங்களுக்கு, எட்டு கடினமாக ஆண்டுகள் தேவைப்பட்டன.

     அமெரிக்காவுடனான இந்தப் போர் ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள், இருபதாண்டுகள், ஏன் அதற்கு மேலும் கூட நீடிக்கலாம். நகரங்களும், நிறுவனங்களும் அழிக்கப்படலாம்.

     ஆனால் எங்களைப் பணிய வைக்க முடியாது. சுதந்திரத்தையும், விடுதலையையும் காட்டிலும் அரிய பொருள் வேறொன்றும் கிடையாது.

     ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டால் நமது மக்கள், தங்களுடைய நாட்டை, மீண்டும் கட்டிவிடுவார்கள், முன்பிருந்ததைவிட, வளமிக்கதாகவும், அழகானதாகவும் மாற்றிவிடுவார்கள்.

     நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம். ஆனால் அதற்காக அமெரிக்காவிடமோ அல்லது வேறு எவரிடமோ, எங்கள் சுதந்திரத்தை விற்று, அதன் மூலம், அமைதியைப் பெறுவது எங்கள் நோக்கமல்ல.

     எங்கள் மன உறுதியை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இத்தனை நீண்ட, வன்முறை பொதிந்த யுத்தத்தைப் பார்த்துவிட்டோம்.

     இனி உங்களுடைய அணு ஆயுதங்கள் கூட, எங்களைச் சரணடையச் செய்துவிடாது.

     இப்படியும் ஒரு மனிதரா? வியப்பாக, மலைப்பாக இருக்கிறதல்லவா.

     வீரம் செறிந்த வாழ்க்கையை வாழ்ந்தவர், தன் நாட்டைத் தட்டியெழுப்பி, போர்க்களம் ஆண்டாண்டுகளாய் நீடித்தபோதும், தளராமல், துவளாமல் பார்த்துக் கொண்டவர் யார் தெரியுமா?

     ஒட்டிய கன்னங்கள், ஒளிவீசும் கண்கள், மெலிந்த உருவம், ஆயினும் உறுதியான உடல், அதனினும் உறுதியான உள்ளம்.

     போராட்டக் களங்களிலேயே தன் வாழ்வை அமைத்துக் கொண்ட இவரின் உடல்நிலை தளர்ந்து, 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாள், இவர் மீளா உறக்கத்தில் ஆழ்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

     ஆறு ஆண்டுகள் கடந்துதான், இவரது கனவு பலித்தது.

     சுதந்திரம் பெற்ற மக்கள், தங்களின் தலைநகருக்கு, இவரது பெயரைத்தான் வைத்தனர்.


ஹோ சி மின் நகரம்.

     இவர்தான் வியட்நாமின் ஹோ சி மின்.

     இவர்தன் வாழ்நாள் முழுவதும், பல்வேறு புனைப் பெயர்களில் வலம் வந்தவர்.

     ஹோ சி மின் என்பது கூட, இவரது புனைப் பெயர்தான்.

     இவரது இயற்பெயர், இன்றுவரை யாருக்கும் உறுதியாய் தெரியாது.

     இன்றும் ஹோ சி மின்னை வியட்நாமியர்களும், வியட்நாமைக் கடந்து பல இலட்சக் கணக்கான மக்களும் நினைவில் வைத்திருப்பதற்குக் காரணம், அவர் ஒரு மார்க்சிஸ்ட் என்பதற்காக அல்ல. அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்காக அல்ல.

     ஹோ சி மின் ஏழைகளையும், விவசாயிகளையும், உழைக்கும் மக்களையும், மூன்றாம் உலக நாடுகளையும், காலனியாதிக்கத்திற்கு உட்பட்டுக் கிடந்த, அடிமை நாடுகளையும் மனப்பூர்வமாக நேசித்தார்.

     இதனால்தான் உலகம் இவரை, இன்றும் அங்கிள் ஹோ என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.


ஹோ சி மின்.

     இவர் தன் இறுதிக் காலத்தில், மரணத்தருவாயில், தன் இறுதி ஆவணத்தை இப்படித்தான் எழுதினார்.

     என் வாழ்க்கை முழுவதும் இதயப் பூர்வமாகவும், முழு பலத்துடனும், நமது தாயகத்துக்காகவும், புரட்சிக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன்.

     இந்த உலகில் இருந்து நான் போகும் பொழுது, இன்னும் அதிக நாள்கள், சேவை செய்ய முடியவில்லையே என்ற ஓர் ஏக்கத்தைத் தவிர, வேறு எதற்காகவும், நான் வருந்தவில்லை.

     நான் இறந்த பின்னால், மக்களுடைய நேரத்தையும், பணத்தையும், வீணாக்காது இருக்கும் பொருட்டு, எனது இறுதிச் சடங்கு பெருமளவில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

     இறுதியாக மக்கள் அனைவருக்கும், கட்சி முழுவதற்கும், ராணுவம் முழுவதற்கும், இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும், குழந்தைகளுக்கும் என்னுடைய எல்லையற்ற அன்பை விட்டுச் செல்கிறேன்.

     உலகம் முழுவதிலும் உள்ள, நம்முடைய தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், வாலிபர்களுக்கும், குழந்தைகளுக்கும் என்னுடைய நேசப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

45 கருத்துகள்:

 1. //ஹோ சி மின் என்பது கூட, இவரது புனைப் பெயர்தான்.

  இவரது இயற்பெயர், இன்றுவரை யாருக்கும் உறுதியாய் தெரியாது.//

  ஆச்சர்யம்.

  பதிலளிநீக்கு
 2. அவருடைய இறுதி ஆவணம் அவரின் புகழை உச்சிக்கு எடுத்துச் சென்றுவிட்டது. அதனை நீங்கள் கூறியவிதம் இன்னும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன் நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர்
   நன்றி ஐயா

   நீக்கு
 3. முழுக்க முழுக்க மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஹோ சி மின் தொடர்பான சுருக்கமான பதிவு என்றாலும் முக்கியமான விடயங்களைச் சுவையாகத் தொகுத்து அளித்தது பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   தன் நாட்டிற்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மாமனிதர்
   நன்றி ஐயா

   நீக்கு
 4. அன்பு நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, ஹோ சி மின் அவர்களின் தளராத, உறுதியான மனப்பாங்கினை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஹோ சி மின் அவர்கள் பற்றிய சிறப்பான பதிவு. மிகவும் அழகாக தொகுத்து வெளியிட்ட உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 6. பிரமிப்பான மனிதர்தான் அரிய வரலாறு அறிந்தேன் நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 7. சிறப்பாகப் பகிர்ந்த வரலாற்றுப் பதிவு
  சிறந்த தலைமைப் பண்பைக் காணமுடிகிறது.

  பதிலளிநீக்கு
 8. ஹோ சி மின் அவர்களின் தகவல்கள் தங்கள் மிகவும் சிறப்பு ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 9. மக்களுக்கு தொண்டாற்றிய ஹோ சி மின் பற்றி அறிந்தேன்.. நன்றி சகோதரரே

  பதிலளிநீக்கு
 10. ஹோ சி மின் வியட்நாம் தலைவர் என்பதுமட்டும் தெரிந்த எனக்கு அவர் பற்றியதகவல்கள் தந்த உங்களுக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 11. ஹோ சி மின், சர்வதேச அரங்கில் கௌரவம் மிக்க தலைவராவார். வியட்னாமின் மூச்சுக்காற்றோடு இணைந்துவிட்டவர் அவர். நல்லவர்களைப் பற்றி மட்டுமே எழுதும் தங்கள் பேனாவிடம் அவர் அகப்பட்டது மிகவும் பொருத்தமே!

  பதிலளிநீக்கு
 12. ஹோ சி மின் அவர்கள் பற்றிய அருமையான பதிவு.
  சிறப்பான தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அருமையான பதிவு.
  முதலில் இருந்த தலைநகரமான சைகோன் வீழ்ந்து தெற்கும் வடக்கும் இணைந்தபோது சைகோன் ஹோசிமின் நகரமானது. ஆனாலும் பல வருடங்களாகியும் இன்னும் சைகோன் என்ற பெயரும் புழக்கத்தில் இருக்கிறது. இது நான் அங்கே போயிருந்தபோது தெரிந்து கொண்ட விஷயம்.

  பதிலளிநீக்கு
 14. அன்பின் ஜெயக்குமார் அய்யா அவர்களுக்கு 

  இனிய வாழ்த்துகளும் வணக்கங்களும்....

  வியத்நாம் வீர வரலாற்று நாயகன் குறித்த சித்திரத்தை மிக எளிய ஆனால் கவித்துவ மொழியில் பளீர் என்று வடித்துள்ளீர்கள்... மக்களின் உண்மை புரட்சித் தலைவர் அவர்...இங்கோ அந்தப் பட்டம் மட்டுமே விலை போயிற்று.

  நம்பிக்கை ஊட்டி மக்களைத் தாய் நாட்டைக் காக்கும் மிகவும் சிக்கலான போரில் எழுச்சியுற வழி நடத்தி, உலகின் மிகப் பெரிய தேசத்து இராணுவத்தை விரட்டி அடித்த காவியப் புதல்வர் அவர்...
  மிக்க நன்றி...தொடர்ந்து இத்தகு செய்திகளை அருமையான மொழியில் எடுத்துச் சொல்லுங்கள்...


  எஸ் வி வேணுகோபாலன்.
  சென்னை 24
  94452 59691 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்து மிகுந்த மகிழ்வினை அளிக்கிறது ஐயா
   நன்றி

   நீக்கு
 15. விமர்சனங்களில் வரும் எழுத்துரு பரவாயில்லை. ஆனால் உங்கள் பதிவுக்கு பயன்படுத்தும் எழுத்துரு மற்றும் அதன் போல்டு நன்றாக இல்லை. வாசிக்க உகந்ததாக இல்லை. உங்கள் தகவலுக்காக. ஹோ சி மின் முழு வரலாற்றையும் படித்துள்ளேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்தப் பதிவிலிருந்து எழுத்துருவை மாற்றிவிடுறேன் ஐயா
   வாசிக்கவே பிறந்தவர் அல்லவா தாங்கள்
   நன்றி ஐயா

   நீக்கு
 16. பிஞ்சுக் கமக்கார அதிரா:)

  இதுக்கு ஏதாவது அர்த்தம் உள்ளதா? இல்லை ச்சும்மா ஜாலியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா ஜாலிக்காகத்தான் இருக்கும் என்ற எண்ணுகிறேன்

   நீக்கு
 17. ஹோ கி மின் பற்றி கொஞ்சம் அறிந்திருந்தாலும் மேலும் அறிய முடிந்தது.

  மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு. நல்ல தொகுப்பு.

  துளசிதரன், கீதா

  //இவர்தான் வியட்நாமின் ஹோ சி மின்.

  இவர்தன் வாழ்நாள் முழுவதும், பல்வேறு புனைப் பெயர்களில் வலம் வந்தவர்.

  ஹோ சி மின் என்பது கூட, இவரது புனைப் பெயர்தான்.

  இவரது இயற்பெயர், இன்றுவரை யாருக்கும் உறுதியாய் தெரியாது.//

  மிக மிக வியப்பான செய்தியாக உள்ளது.

  //இதனால்தான் உலகம் இவரை, இன்றும் அங்கிள் ஹோ என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.//

  அட!!

  கீதா

  பதிலளிநீக்கு
 18. இப்படியும் தலைவர்கள் இருந்திருக்கின்றனர் என்பது இன்றைய இளைஞர்களும் நாளைய தலைவர்களும் அறியும் வண்ணம் பகிர்ந்தமை சிறப்பு.

  கோ.

  பதிலளிநீக்கு
 19. சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 20. ஹோ சி மின் இவரது புனை பெயர் என்பது ஆச்சரியமான தகவல். வழக்கம் போல தாங்கள் சொல்லிய விதம் அருமை நண்பரே.

  பதிலளிநீக்கு
 21. மக்களை நேசித்த மகத்தான தலைவன்
  வடக்கு தெற்கு பிரியாமல் தன் இன மக்களை ஒருக்கிணைத்தவன்
  பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு