07 ஜனவரி 2021

திருவண்ணாமலை நாடார்



     12 வயதில் தந்தையை இழந்து, படிக்க வசதியின்றி, வறுமையில் இருந்து விடுபட, சமையல் வேலைக்காக, பர்மா செல்வதற்காக, சென்னை சென்று, எப்படியோ, பர்மா செல்லும் கப்பலில் டிக்கெட்டும் எடுத்துவிட்டார்.

 

    இவரது ஊரைச் சார்ந்த பெரியவர் ஒருவர், எதிர்பாராத விதமாக இந்தச் சிறுவனைப் பார்க்கிறார்.

     எங்கேடா செல்கிறாய் என்று கேட்கிறார்.

    சமையல் வேலைக்குப் பர்மாவிற்குப் போகிறேன் எனச் சிறுவன் கூற பெரியவர் திடுக்கிட்டார்.

     இந்த வயதில் பர்மாவா? வேண்டாம் எனக்கூறி, திரும்ப ஊருக்கே அழைத்து வந்து, ஒரு பாத்திரக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

---

இது காமராஜ்

---

     1950 ஆம் ஆண்டில், 23 வது வயதில் திருமணம்.

     திருமண விழாவிற்கான மொத்த செலவு 174 ரூபாய்.

     மனைவியோடு தஞ்சையில் உள்ள மாடி வீட்டில், குடியேறியபோது, வீட்டின் வாடகை மூன்று ரூபாய்.

     குடும்பம் மெல்ல, மெல்லப் பெருகியது.

     மொத்தம் 13 குழந்தைகள்.

---

இது முருகேச பாண்டியன்

---

     அவரின் பெயரைச் சொன்னதுமே, என் பெற்றோர் மற்றும் சித்தப்பாக்கள், தைரியமாக பெண்ணைக் கொடுக்கலாம் என்றனர். அந்த அளவிற்கு அவரின் பெயர், புகழ் பெற்றிருந்தது.

---

இது தீபா.

---

     வயதான காலத்தில், கழிவறைக்கு யாருடைய கைகளையாவது பிடித்துக் கொண்டு போவார்.

     நிறைய நாட்கள் அவரை, யார் கையைப் பிடித்துக் கொண்டு போவதென்று எனக்கும் குமரனுக்கும் போட்டி இருந்துள்ளது.

     ரெண்டு பேரும் கூப்புட்டுப் போங்கடான்னு, ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு கையை கொடுப்பார்.

---

இது சிவகுரு

---

     நான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது, என்னுடைய முதல் கடிதம், தி ஹிந்து நாளிதழில் வெளியாகி இருந்தது.

     அதைக் காட்டியபோது, அதை வாங்கித் தடவிப் பார்த்தவர், நீயும் நல்லா படிக்கனும்.

      உங்க அப்பாவைவிட அதிகமாகப் படி என்றார்.

---

இது பாரத்

---

     உன் கல்யாணத்தைப் பார்ப்பேனா என நினைத்தேன். ஆனால் உன் பையன் வந்து என்னை கை பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று இருந்திருக்கிறது என்பார்.

---

இது செல்வராஜ்

---

     நண்பர்களே, இப்படியாக, நிறைய பேர், இந்நூலில், தங்களது நினைவுகளை எழுத்தாக்கி இறக்கி வைத்திருக்கிறார்கள்.  

     இவர்கள் அனைவரும், தங்கள் எழுத்தின் வழி, தூக்கிப் பிடிப்பது ஒரே ஒருவரைத்தான்.

     ஒருவர் தன் தந்தையை

     ஒருவர் தன் தாத்தாவை

     ஒருவர் தன் கொள்ளு தாத்தாவை

     ஒருவர் தன் மாமனாரை

     ஒருவர் தன் மாமனாரின் தந்தையை என உறவுகளின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.

     எழுபத்தியோரு ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்து, இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னரே மறைந்த பிறகும், நினைவுகளில் நீங்காது வாழும், தன் தந்தையைப் பற்றி ஒரு நூலினை வெளிக் கொணர வேண்டும் என்ற ஆவல் மகளுக்கு.

     மாப்பிள்ளையின் சம்பளத்துக்குத் தகுந்தாற்போல் செலவு செய்யனும்.

    கடன் எதுவும் வாங்கி அகலக்கால் வைத்துவிடக்கூடாது என்று, தனக்கு அறிவுறுத்திய அப்பாவைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல்.

     மாமியார் வீட்டை போட்டுவிட்டு, இங்கே அதிகம் தங்கக் கூடாது என்று தன்னை நெறிப்படுத்திய தன் தந்தையைப் பற்றி எழுத வேண்டும என்ற ஆவல்.

     ஏடெடுத்து எழுதத் தொடங்கினார்.

     உறவுகளை எல்லாம் அலைபேசி வழி அழைத்து, வேண்டுகோள் விடுத்தார்.

     உள்ளத்து உணர்வுகளுக்கு உரு கொடுத்து, எழுத்தாக்குங்கள் என்றார்.

     அம்மா, அப்பா எல்லாத்துக்கும் நல்லதைத்தான் செஞ்சுருக்காங்க. செஞ்சதை சொல்லிக் காமிக்கக் கூடாது. சொல்லிக் காமிக்கிறது அம்மா, அப்பாவுக்குப் பிடிக்காது.

     என் தங்கச்சி பாக்கியம், அவங்களைப் பத்தி எழுதணும்னு ஆசைப்படுது என்று கூறி, தன் தங்கையை உற்சாகப்படுத்தி, அக்கா வசுமதி எழுதி அனுப்பினார்

     அஞ்சலில், மின்னஞ்சலில், வாட்ஸ்அப்பில் எனப் பல வழிகளிலும் நினைவுகளை ஏந்திய எழுத்துக்கள் பறந்து வரத் தொடங்கின.

     தன் மனைவியின் எண்ணவோட்டத்தையும், அவர், தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை ஆவணமாக்கி, வருங்காலத் தலைமுறையினருக்கு விருந்தளிக்க நினைக்கும் உயர் உள்ளத்தையும், புரிந்து கொண்ட, இவரது கணவர், தானும் களத்தில் இறங்கி, தன் திருமண ஏற்பாட்டு நிகழ்வுகளை, நினைவுகளை எழுதினார்.

     பெண்ணின் அப்பா, திருமணம் தொடர்பாகப் பேசுவதற்கு, எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    அவரைப் பொறுத்தவரை, மாத சம்பளத்தை வைத்து நான், குடும்பத்தை சமாளித்து விடுவேன் என்று எண்ணியிருப்பார் போலும்.

     என்னைப் பற்றிய ஒரு நல்ல மதிப்பீடு அவருக்குக் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

     அவர் அலுமினியத்தில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கலாம்.

     மாப்பிள்ளை அழைப்பு மிகவும் விமர்சையாக வைக்கலாம்.

     பெரிய மண்டபத்தினைப் பிடிக்கலாம் என்றார்.

     அப்போது, நான் அவரிடம், முடிந்தவரை அனாவசியச் செலவுகள் செய்ய வேண்டாம்.

     திருமணத்தை விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் வைக்கலாம் என்றேன்.

     உழைத்துச் சம்பாதித்தப் பொருளை செலவு செய்வதில் மட்டுமல்ல, உதட்டில் இருந்து உதிரும் சொல்லில் கூட, சிக்கனத்தைக் கடை பிடிப்பவரான, இந்த மாப்பிள்ளை, தன் மனைவிக்காக, தன் நினைவுகளை எழுத்தாக்கியதோடு, தன் சேமிப்பில் இருந்தும் தாராளமாய் அள்ளி, அள்ளிக் கொடுத்து, நூலாக்கம், செயலாக்கம் பெற செயலாற்றி இருக்கிறார்.

     தன் தந்தைக்கு, எழுத்துக் கற்களால், காகித பூமியில், ஓர் ஆலயம் எழுப்பியிருக்கும் இவர் யார் தெரியுமா?

     கோயில்களுக்குச் சென்று இறைவனை வணங்குவதோடு, நிறைவு பெறாமல், பார்த்ததை, படித்ததை, கேட்டதையெல்லாம், பயணக் கட்டுரையாய் எழுதி தினமணி இதழிலும், பத்திரிக்கை.காம் தளத்திலும் வெளியிட்டு வருபவர்.

பாக்கியவதி பக்கங்கள்

என்னும் வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருபவர்.

இவர்தான்,


திருமதி பாக்கியவதி ஜம்புலிங்கம்.

இவரை மனைவியாய் பெற்ற பாக்கியவான்தான்

திரு ஜம்புலிங்கம்

ஆம்,

இவர்

நாம் நன்கறிந்த


முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின்

வாழ்க்கை இணையர் ஆவார்.

 

இவரது நூல்


அப்பாவுக்காக . . .

எங்கள் பார்வையில் திருவண்ணாமலை நாடார்.

     திருவண்ணாமலை நாடார் பற்றிய தங்களின் எண்ண ஓட்டங்களை, எத்தனை பேர், இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிய, முதல் பக்கம் தொடங்கி, இறுதி பக்கம் வரை, விரல் விட்டுக் கூட்டிப் பார்த்தேன்.

மகன்கள்

மகள்கள்

மருமகன்கள்

மருமகள்கள்

பெயரன்கள்

பெயர்த்திகள்

கொள்ளுப் பெயரன்கள்

கொள்ளுப் பெயர்த்திகள்

என 69 உறவுகளின்,

நீங்கா நினைவுகளைச் சுமந்து நிற்கிறது இந்நூல்.


அ ப் பா வு க் கா க  . . .

இந்நூல்

ஒரு

நினைவுப் பெட்டகம்.

 

20 கருத்துகள்:

  1. ஆகா...! அருமையான சிறப்பான வித்தியாசமான விமர்சனம்...

    // கடன் எதுவும் வாங்கி அகலக்கால் வைத்துவிடக்கூடாது // நேற்று என் அப்பா இதைப் பற்றி பேசினது ஞாபகம் வந்தது ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமரிசனம்.  நானும் வாங்கி வைத்திருக்கிறேன்.  வீட்டில் நடக்கும் உள்வேலைகளில் பாதிதான் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் அழகிய குடும்பத்தை மேலும் அலங்காரப் படுத்தி இருக்கிறது இந்த நூல் விமர்சனம்.

    நூலக குடும்பத்தினருக்கு எமது வாழ்த்துகளும் கூடி...

    பதிலளிநீக்கு
  4. என் மனைவி தன் தந்தையைப் பற்றிய நினைவுப்பகிர்வுகளை கடின முயற்சி எடுத்து ஆவணப்படுத்தியதை நீங்கள் உங்கள் பாணியில் சிறப்பாக மதிப்பீடு செய்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. என் சார்பாகவும், எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. எழுத்தாளர் என்றால் என்ன? என்று கேட்கும் தமிழக சூழலில் எழுத்தாளர் குடும்பம் என்பது மிகப் பெரிய பெருமை ஆச்சரியம். இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான நூல் அறிமுகம். உங்கள் பாணியில் படிக்க ஸ்வாரஸ்யம்.

    தொடரட்டும் தங்கள் சிறப்பான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  7. அப்பாவுக்காக விமர்சனம் படித்தேன். ஒவ்வொருவரின் நினைவுகளை படித்து அந்த கருத்துக்களை அருமையாக விமர்சித்துள்ளீர்கள். உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போற்றுதலுக்கு உரிய முயற்சி சகோதரி
      22 இரண்டு ஆண்டுகளுக்கு முன் மறைந்துபோன தங்களின் தந்தையின் நினைவினைப் போற்றும் வகையில் தாங்கள் முன்னெடுத்து முயற்சி, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை
      வாழ்த்துகள் சகோதரி

      நீக்கு
  8. நல்ல பதிவு நண்பரே. வாசிக்கும் அனைவரையும் அவர்களின் பெற்றோர் பற்றி யோசிக்க வைக்கிறது. எழுதவும் தூண்டுகிறது நண்பரே. அருமையான மகளையும் மருமகனாரையும் பெயரன்களையும் கொள்ளுப்பெயரன்களையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்து மறைந்த அந்த மகானும் போற்றுதலுக்குரியவர் எனில் அது மிகையில்லை நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை
      போற்றுதலுக்கு உரிய மனிதர்தான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  9. இயக்குனர் பாக்கியராஜ் அவர்களின் கதை சொல்லும் திறனை பற்றி நிறைய படித்துள்ளேன். உங்களின் கதை சொல்லும் திறனும் அது போலவே அருமை நண்பரே

    பதிலளிநீக்கு

  10. சிறப்பான நூல் அறிமுகம் அதைவிட சிறப்பு நூலாசிரியர் பற்றிய தகவல் , பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான எழுத்தில் நூல் விமரிசனம். படித்தவுடன்
    ஆவல் எழுகிறது.
    மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.

    நூல் எழுதியவருக்கு அன்பு வாழ்த்துகள்.
    உங்களுக்கும் குடும்பத்தவர்க்கும் இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. வித்தியாச விமர்சனம்...makilchchy

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு