23 ஜனவரி 2021

பட்டத்து யானை


அன்புநிறை சிவா,

     அளவு கடந்த மகிழ்ச்சி.

     எண்ணிலடங்காத் துறைகளில் தேர்ச்சி, திறமை உடையவர் நீங்கள்.

     கண்டு மகிழ்வார் இல்லாக் கலைப் படைப்பைப் போலவே இருந்து கொண்டிருந்தீர்கள்.

     ஒரு பரிசு, எப்படியோ, திடுக்கிட்டு விழித்து, உங்களை கட்டி அணைத்திருக்கிறது.

     ஓர் ஆறுதல், அவ்வளவே.

     பட்டத்து யானைக்கு, ஒரு பொட்டலம் கடலை கிடைத்திருக்கிறது.

     எனினும் இது உங்களோடு உள்ளவர்களுக்கு, உவப்பைக் கொடுத்து, உங்களை உணர சிறு வாய்ப்பு.

     ஆயினும், பெரு மகிழ்ச்சி.

     வாழ்க சிவா.

    

கடிதத்தின் ஒவ்வொரு சொல்லிலும், சொல்லின் ஒவ்வொரு எழுத்திலும், அன்பும், பண்பும், பாசமும், நேசமும் நிரம்பித் ததும்பி வழிகிறது அல்லவா.

     கடிதத்தை எழுதியவர் சிவாவிற்கு என்றுமே செகன்தான்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த நட்பு இவர்களுடையது.

     பட்டத்து யானைக்கு, ஒரு பொட்டலம் கடலை.

     பாராட்டப் படுபவரின் திறமையை, பெருமையை உணர்த்த, இதைவிட சிறந்த, வார்த்தைகளை யாரால் படைக்க முடியும்.

     எளிமையான, அதே சமயம் வலிமையான வார்த்தைகள்.

     பாராட்டியவர் சாதாரண மனிதரல்ல.

     கவி.

     பெருங் கவி.

     கண்டு மகிழ்வார் இல்லாக் கலைப் படைப்பாகவே இருந்த, தன் நண்பர், இப்பொழுதாவது, கண்டுபிடிக்கப் பட்டாரே என்னும் பெரு மகிழ்ச்சி இக் கவிஞருக்கு.

     இவரது நண்பர் தமிழ்ப் பற்றும், தமிழ் உணர்வும், உதிரத்தோடு ஒன்றெனக் கலந்த பெரும் புலமை மிக்கப் பேராசிரியர்.

     தமிழோடு ஆங்கில மொழிப் புலமையும் கைவரப் பெற்ற ஆற்றலாளர்.

     ஆசிரியர் பயிற்சியோடு, சட்டப் படிப்பையும் பயின்றவர்.

     ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் வழியாக, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை, தமிழாசிரியர்களாக, தமிழ் உணர்வு மிக்கவர்களாக உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.

     இவரது மாணவர்கள் இன்று, தமிழகம் முழுவதும், பறந்து பரவி, தமிழாசிரியர்களாக, தமிழறிஞர்களாக, சொற்பொழிவாளர்களாக, தமிழைக் காத்து வளர்த்து வருகின்றனர்.

     1959 ஆம் ஆண்டிலேயே, தமிழகத் தமிழாசிரியர் கழக மாநாட்டில், தமிழ்க் கல்லூரிகளையும், கலைக் கல்லூரிகளுக்கு நிகராகக் கருத வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்.

     தமிழகம் முழுவதும், ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி, சிதறிக் கிடந்த, தமிழ்க் கல்லூரிகளை எல்லாம் ஒன்று திரட்டி, ஒருங்கிணைத்து, தமிழக மொழிக் கல்லூரிகள் மன்றம் உரு பெற, உயிர் பெற வித்தாய் இருந்தவர்.

     பிற துறை பேராசிரியர்களுக்கு இணையாய், தமிழ்ப் பேராசிரியர்களும் ஊதியம் பெற அரும்பாடு பட்டவர்.

     தமிழ் பயிலும் மாணவர்களுக்கு, வித்துவான் பட்டத்திற்குப் பதிலாக, பி.லிட்., பட்டம் வழங்க பெரு முயற்சி மேற்கொண்டு, வெற்றி வாகை சூடியவர்.

     நேர்மை, கண்டிப்பு, யாருக்கும் வளைந்து கொடுக்காத போக்கிற்குச் சொந்தக்காரர் இவர்.

     1965 இல், தளர்ந்திருந்த கரந்தைப் புலவர் கல்லூரியைத் தூக்கி நிறுத்தியவர்.

     1969 இல், நெல்லை மாவட்டம், பாவநாசத்தில் இயங்கி வந்த, வள்ளுவர் செந்தமிழ்க் கல்லூரி, தத்தித் தள்ளாடி, பல்கலைக் கழகத்தின் ஏற்புடைமையை இழந்த சூழலில், உள் நுழைந்து, பெரு முயற்சி எடுத்து, புத்துணர்வூட்டி, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாய் வளர்த்தெடுத்தப் திறமைக்கு உரியவர்.

     இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், திறனாய்வு நூல்கள், அகராதிகள், மொழி பெயர்ப்பு நூல்கள், புதினங்கள், கட்டுரை நூல்கள், கவிதை நூல்கள், நாடகங்கள், என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றி, அன்னைத் தமிழுக்கு நற்கொடையாய் வழங்கிய வித்தகர்.

     இதுமட்டுமல்ல, தமிழக அரசின், தமிழ்நாடு சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் மொழி பெயர்ப்பாளராகவும், புதுச்சேரி அரசின் சட்டத் துறையில் மொழி பெயர்ப்பு அலுவலராகவும் செம்மாந்தப் பணியாற்றியவர்.

     இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை, இந்திய அரசுக்காக, தமிழ்நாடு ஆட்சி மொழி ஆணையத்தின் சார்பில், தமிழில் மொழி பெயர்த்த பெருமைக்கு உரியவர்.

    


மேலும் புதுவை அரசிற்காக, இவர் உருவாக்கிய, சட்ட ஆட்சியச் சொற் களஞ்சியம், இவரது வாழ்நாள் சாதனையாகும்.

     பண்டித ரத்தினம், கவிஞர்கோ, திருக்குறள்மணி, முத்தமிழ் மாமணி, புலவர் மாமணி, பல்கலைக் குரிசில், தமிழவேள் விருது, தொல்காப்பியர் விருது முதலானப் பல விருதுகள் இவரை நாடி வந்து, பெருமை அடைந்திருந்தாலும், இப்பொழுதுதான், தமிழக அரசானது, இவரை விருதிற்கு உரியவராய் அறிவித்துப் பெருமை படுத்தி இருக்கிறது.

     தமிழ்நாட்டு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில், வழங்கப்பெற இருக்கின்ற, முதல் விருதே, இந்தப் பட்டத்து யானைக்குத்தான்.

தேவநேயப் பாவாணர் விருது.

ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கம்.

மற்றும்

தங்கப் பதக்கம்.

விரைவில்,

தமிழக அரசு விழாவில் வழங்கப்பட உள்ளது.

தேவநேயப் பாவாணர் விருது

பெற இருக்கின்ற,

இந்தத் தமிழறிஞர்

யார் தெரியுமா?

இத்தமிழறிஞரை வாழ்த்திய

அன்பு நண்பர் செகன்

யார் தெரியுமா?

---

சிவாவை வாழ்த்தியவர்

தன் கவி வரிகளால் உலகை வலம் வருபவர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

மேனாள் மாணவர்.

கவிஞர், கல்லூரிப் பேராசிரியர், மொழி பெயர்ப்பாளர்,

உரை வீச்சாளர், கட்டுரையாளர், திரைப்படப் பாடலாசிரியர்,

செய்தி வாசிப்பாளர், ஓவியர், வர்ணனையாளர்,

திராவிடம், பெரியாரியம்

மார்க்சியம், தேசியம்

தமிழ் உணர்வு

மானுடப் பற்றாளர்.

உலகனாய் இருக்கும் நான்

நிச்சயமாய் இந்தியன் …

அதைவிடச் சத்தியமாய்

தமிழன்.

 

தமிழனாக இருப்பதற்குத்

தடை போட்டால்

இந்தியனாகத் தொடர்வது பற்றிச்

சிந்திக்க வேண்டிவரும்.

என்று முழங்கியவர். ஈரத் தன்மையும், இரக்கமும் மட்டுமல்ல, எழுச்சியின் குரலாகவும் ஒலிப்பவர்.

இவர்தான்

செகன்

செகதீசன்

ந.செகதீசன்

ஈரோடு ந.செகதீசன்

ஆம், இவர்தான்


மகாகவி

ஈரோடு தமிழன்பன். 

இவரால் பாராட்டப் பெற்றவர்

தேவநேயப் பாவாணர்  விருது

பெற இருப்பவர்,

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

கரந்தைப் புலவர் கல்லூரியின்

மேனாள் முதல்வர்

89 வயது இளைஞர்


முனைவர் பேராசிரியர் கு.சிவமணி அவர்கள்.

 

தேவநேயப் பாவாணர் விருது

பெற இருக்கின்ற

திருக்குறள் மணியை, புலவர் மாமணியை

முத்தமிழ் மாமணியை

நாமும்

வாழ்த்துவோம், போற்றுவோம்

வ ண ங் கு வோ ம்.

 

20 கருத்துகள்:

  1. தேவநேயப் பாவாணர் விருது பெற இருக்கிற மாமனிதற்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. பாவாணரின் படைப்புகள் ← முழுவதையும் (ஓரளவு) வாசித்த பின், திருக்குறள் எந்தளவு மாற்றி அமைக்கப்பட்டது என்பதையும் உணர்ந்தேன்...! அதற்கு காரணமும், அதில் முக்கியமான ஒன்று → தமிழன் எப்படிக் கெட்டான்...?

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவாணரின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாகவே உண்டு
      படிக்கத் தொடங்க வேண்டும்
      நன்றி ஐயா

      நீக்கு
  3. நல்ல புதுமையான தகவல்கள்..

    தலைப்புப் பார்த்ததும், சந்தானத்தின் படப்பெயராக இருக்கே என நினைச்சேன்:).

    பதிலளிநீக்கு
  4. விருது பெறும் பேரறிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். அன்னாரைப் பெருமைப்படுத்துகின்ற இப்பதிவிற்காக உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தகவல்கள் அடங்கிய பதிவு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் செய்து கொண்டிருக்கும்எழுத்துப் பணி என்பது ஆவணம். என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. தேவநேயப் பாவாணர் விருது அறிவிக்கப்பட்டது முதலே அடிக்கடி கண்ணில் பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் இன்னாருக்கு அறிவிக்கப்பட்டது என்பது தெரியும். எப்பேர்ப்பட்ட தமிழ்த் தொண்டர்களையெல்லாம் அறியாமல் இருக்கிறோம் என்கிற உணர்ச்சியே உங்கள் பதிவிலும் மேலிடுகிறது. அவ்வகையில் தமிழுக்கும் தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கும் அவர்கள் பணியாற்றும் தமிழ்க் கல்லூரிகளுக்கும் எனத் தமிழுக்கு இத்தனை வகைகளிலும் சேவையாற்றியிருக்கும் பெருமகனார் ஒருவரை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. அருமை நடை வழக்கம் போலவே நண்பரே.
    திரு. சிவமணி அவர்கள் எனது பாட்டானாரின் பேரன்பை பெற்றவர் என்பதில் மேலும் மகிழ்கிறேன்

    பதிலளிநீக்கு
  10. நல்ல பல தகவல்களைப் படித்து அறி்து கொண்டேன். நன்றி பல.

    உடுவை.எஸ்.தில்லைநடராசா...இலங்கை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு