14 ஜனவரி 2021

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

 

தமிழ் இலக்கியப் பதிப்புத் துறையின்

முன்னோடி

ஈ ழ ம்.

தமிழ் அகராதியியல் முயற்சிகளின்

முன்னோடி

ஈ ழ ம்.

மொழி பெயர்ப்பு முயற்சிகளின்

முன்னோடி

ஈ ழ ம்.

தமிழ் வழி மருத்துவக் கல்வியின்

முன்னோடி

ஈ ழ ம்.

ஈ ழ ம்,   ஈ ழ ம்,   ஈ ழ ம்.

 

வாருங்கள்,

சற்று பின்னோக்கிப் பயணித்து,

ஈழத் தமிழ் இலக்கிய முயற்சிகள் குறித்து

ஒரு பருந்துப் பார்வைபார்ப்போம்

வா ரு ங் க ள்.

---

தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்

கங்கை வாரியும், காவிரிப் பயனும்

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

     தென் கடலில் இருந்து முத்துக்களும், குணக் கடல், குணக்கு என்றால் கிழக்கு, எனவே கிழக்குக் கடலில் இருந்து சீனப் பட்டும், கங்கையில் இருந்து வாரியும், வருவாயும், காவிரியாற்றால் விளைந்த பொருள்களும், ஈழத்தில் இருந்து வந்த உணவும், காழகத்து, காழகம் என்றால் கடாரம், கடாரத்துப் பொருள்களும் வந்து குவிந்து கிடக்கும் தெருக்களை உடையது காவிரிப் பூம்பட்டினம் எனப் பெருமை பொங்க முழங்குகிறது பட்டினப்பாலை.

     ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

     ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான உறவானது, சங்ககாலம் தொட்டே, தொடர்ந்துவரும், தொப்புள் கொடி உறவாகும்.

     சங்க இலக்கியங்களான அகநானூறு, குறுந்தொகை மற்றும் நற்றினையில், ஈழத்து பூதந்தேவனாரின் பாடல்களும் இணைந்திருப்பது, ஈழத்து இலக்கியச் செழுமையையும், அதன் தொன்மையையும் உணர்த்துகிறது.

     சங்க காலத்திற்குப் பிறகு, 13 ஆம் நூற்றாண்டு வரை, எவ்விதமான ஈழ இலக்கியப் பாடல்களோ, பதிவுகளோ, எங்கு தேடியும் கிடைத்த பாடில்லை.

      சங்க காலத்திலேயே எழுந்த, ஈழத்து இலக்கியம், அதன் பின்னரும் தோன்றாமலா இருந்திருக்கும்?

     நிச்சயமாக தோன்றியிருக்கும், அப்படித் தோன்றிய நூல்கள் எல்லாம் திட்டமிட்டே அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

     சரசோதி மாலை.

     கி.பி.14 ஆம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த போசராசர் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூல்தான், ஈழத்தில் தோற்றம் பெற்ற, முதல் தமிழ் நூலாக இன்று போற்றப் படுகிறது.

     இந்நூல் ஒரு சோதிடம் சார்ந்த நூல்.

     சரசோதி மாலை என்னும் இந்த முதல், தமிழ் நூலானது, ஒரு வரலாற்று உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.

     இந்நூலானது, கி.பி.1310 இல் தம்பை என்னும் ஊரில் வாழ்ந்த, பராக்கிரம பாகு என்னும் அரசனின் அவையில் அரங்கேறியதாக, இந்நூலின் ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

     இன்று தம்பதெனிய என்று அழைக்கப்படும், பகுதிதான், அன்றைய தம்பை என்று ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

     தம்பதெனிய என்னும் பகுதி, இன்று முழுக்க முழுக்க, சிங்களவர்கள் வாழும் பகுதியாகவே காணப்படுகிறது.

     முழுவதும் சிங்களவர் மட்டுமே வாழும் பகுதியிலா, தமிழ் நூல் எழுந்திருக்கும்.

     இருக்காது, அன்றைய தமிழர் பகுதியானது, இன்று சிங்களவர் மட்டுமே வாழும் பகுதியாக மாறியிருக்க வேண்டும் அல்லது மாற்றப் பட்டிருக்க வேண்டும்.

     சரசோதி மாலைக்குப் பின்னர்தான், ஈழத்தின் செழுமையான இலக்கிய வரலாறு தொடங்குகிறது.

     குறிப்பாக, தமிழ் மன்னரான, ஆரிய சக்கரவர்த்திகளின் ஆட்சி, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பிறகு, தொடர்ச்சியாக இலக்கிய ஆக்கங்கள் தோற்றம் பெறத் தொடங்கின.

     வரலாற்று நூல்கள்.

     புராண நூல்கள்.

     இலக்கிய முயற்சிகள்.

     மொழி பெயர்ப்பு முயற்சிகள் என ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பு பரந்து, விரிவடையத் தொடங்கியது.

     யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்களுடைய ஆட்சிக்குப் பிறகு, போர்ச்சுகீசியர்களின் ஆட்சி தொடங்குகிறது.

     போர்ச்சுகீசியர்களின் காலத்தில், இறுக்கமான சமயப் பிரச்சாரமும், சுதேசியப் பண்பாடுகளை அழித்து, ஒழிக்கும் முயற்சியும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

     ஈழத் தமிழ் இலக்கியம் சிதைக்கப் பட்டது.

     இக்கால கட்டத்தில் இரண்டே இருண்டு தமிழ் நூல்கள் மட்டுமே உரு பெற்றன, உயிர் பெற்றன.

1.       ஞானப் பள்ளு

2.       அர்ச்.யாகப்பர் அம்மானை

     இவ்விரண்டு நூல்களும் கூட, கிறித்துவ மதத்தை, சமயத்தைப் பேசுகின்ற நூல்களே ஆகும்.

     இவ்விரு நூல்களின் மொழி அமைப்பையும், இலக்கிய வளத்தையும் ஆய்ந்த ஆய்வாளர்கள், இக்கால கட்டத்தில் அதிகமானத் தமிழ் நூல்கள் நிச்சயம் தோன்றியிருக்கும், தோன்றியவை திட்டமிட்டு அழிக்கப் பட்டிருக்கலாம் என்றே கூறுகிறார்கள்.

     போர்ச்சுகீசியர்களுக்கு அடுத்த காலம், ஒல்லாந்தர்களின் காலமாகும்.

     ஒல்லாந்தர்களின் காலம் மிக நீண்ட காலமாகும்.

     முழுதாய் 137 ஆண்டுகள், இலங்கை, ஒல்லாந்தர்களின் கையில் இருந்தது.

     இவர்கள் காலத்தில், சுதேசியப் பண்காடுகளுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்தது.

     எனவே, காதல், தூது, அம்மானை, ஊஞ்சல் இலக்கியங்கள் என சிற்றிலக்கியங்கள் தோன்றி, கொடி கட்டிப் பறக்கத் தொடங்கின.

     ஒல்லாந்தர்களை அடுத்து, இலங்கையைக் கைப் பற்றியவர்கள் ஆங்கிலேயர்கள்.

     ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அமைந்த, 19 ஆம் நூற்றாண்டுதான், ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றின் உண்மையான, மிக வளமான நூற்றாண்டு ஆகும்.

     இதன் முதல் காரணம், அச்சு இயந்திரத்தின் வருகையும், பயன்பாடுமே ஆகும்.

     இதுமட்டுமல்ல, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உருவான, புதிய சமூகப் பண்பாட்டு, பொருளாதாரக் காரணங்களும், புதிய கல்விச் சிந்தனைகளும், ஈழத்து தமிழ்ச் சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.

     பாரம்பரியமான கல்வி முறையும், ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட, புதியக் கல்விச் சிந்தனையும் இணைந்த, பழமையும், புதுமையும் இணைந்த, ஒரு கல்வி முறை, யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்றது.

     நகரம் முதுல் கிராமப் புறம் வரை, புதிது புதிதாய் கல்லூரிகள் முளைத்தன.

     இக்கால கட்டத்தில், ஈழத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் போக்குகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

     முதலாவது, மரபு சார்ந்த இலக்கியப் போக்கு.

     இரண்டாவது, நவீன மரபும், பழமை மரபும் இணைந்த இலக்கியப் போக்கு.

     மூன்றாவது, நவீன இலக்கிய முயற்சிகளாகும்.

     சமயம் சார்ந்த சிந்நதனைகளை வெளிப்படுத்துகின்ற இலக்கியங்களாகவும், காலம் காலமாக பின்பற்றப்படுகினற சமூக மரபுகளை, மீண்டும் மீண்டும் பதிவு செய்கிற இலக்கியங்களாக மரபு சார்ந்த இலக்கியங்கள் தோன்றின.

     இந்நூல்கள், பொதுவாகவே மிக இறுக்கமான செய்யுள் நடை கொண்டதாகவே அமைந்தன.

     இரண்டாம் பிரிவில், கண்ணகி புராணம், கோர்ட்டு புராணம், தத்தை விடு தூது போன்ற இலக்கியங்கள் தோன்றின.

     ஆங்கிலேய காலனியவாதிகளால் உருவாக்கப்பட்ட புதிய நிருவாக முறைகள், எவ்வாறு பாரம்பரிய சமூக அமைப்பில், மாற்றங்களை, தாக்கங்களை ஏற்படுத்தின என்பதை இவ்விலக்கியங்கள் முன் வைத்தன.

     உதாரணமாக, கோர்ட்டு புராணம் என்பது, வக்கீல்கள், நீதிபதிகள் என ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட, கோர்ட்டு நடைமுறைகள், புதிய கலாசாரமாக, பாரம்பரிய கலாசாரத்திற்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்குகிறது.

     இக்காலகட்டத்தில், சரவண முத்து பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட, தத்தை விடு தூது நூல்தான், பாரதியின் பெண் விடுதலை தொடர்பான கருத்துக்களுக்கு, முன்னோடியாக அமைந்த நூல் என்கிறார், தமிழகப் பேராசிரியர் கைலாசபதி.

கணைனை மறைத்தே கொண்டு போய்

காட்டில் விடும் பூனையைப் போல்,

பெண்ணை மனையடைத்து வைத்து

பின்னொருவர் கை கொடுப்பார்,

கண்ணால் முன் கண்டுமிலர்

காதற் சொல் கேட்டுமிலர்,

எண்ணாது மெண்ணி இருந்தயர்வர் மங்கையர்கள்

இக் கொடுமைக்கு யாது

செய்வதிசையாய் பசுங்கிளியே.

     இந்நுல், பெண் விடுதலையைப் பேசிய முதல் தமிழ் நூலாகக் கொண்டாடப் படுகிறது.

     மூன்றாவதாக, நவீன இலக்கிய முயற்சிகள் என்பது,

பதிப்புத் துறை முயற்சிகள்

பத்திரிக்கைகளின் தோற்றம்

மொழிபெயர்ப்பு முயற்சிகள்

அகராதி முயற்சிகள்

வசன நூல்கள்

இலக்கிய வரலாற்று எழுதுகை

ஆய்வு நூல்கள்

கதை நூல்கள்

கலைக் களஞ்சிய முயற்சிகள்

எதிர்ப்பிலக்கிய முயற்சிகள் எனப் பல்வகையான முயற்சிகளைக் குறிக்கும்.

இவற்றுள் மிக முக்கியமானது, பதிப்புத் துறை முயற்சிகளாகும்.

     அச்சு இயந்திரத்தின் வருகை, ஈழத்தில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது.

     ஓலையில் ஒடுங்கியிருந்த தமிழ் இலக்கியங்கள், அச்சு வாகனம் ஏறத் தொடங்கின.

     பதிப்புத் துறையின் மூலம், தமிழை செழுமைப் படுத்திய, வளப்படுத்திய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர் ஆறுமுக நாவலர் ஆவார்.

    


தமிழும், சைவமும் என் இரு கண்கள். அவ்விரண்டும் ஒளி குன்றாது காத்து, பயன் கொள்வதே என் கடன். அது வளர பணி புரிவதே என் வாழ்நாள் குறிக்கோள்
என முழுங்கி, தமிழுக்கென்றே தன் வாழ்வை வழங்கியவர் ஆறுமுக நாவலர்.

     இவர் எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தார்.

     இவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்கும் முன்னோடி ஆவார்.

     திருக்குறளை பரிமேலழகர் உரையோடு, முதல் முதலில் அச்சிட்டவர் இவர்தான்.

     திருவாவடுதுறை ஆதீனம், முதன் முதலில் நாவலர் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியதும் இவரைத்தான்.

     யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக, நவீன கல்வி முறையில், பாடசாலைகளை நிறுவியவரும் இவர்தான்.

    யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தை அறிவுச் சமூகமாய மாற்ற, உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றி பெற்றவரும் இவர்தான்.

     இவர்காலத்தில், யாழ்ப்பாணமானது, தென்னாசிய நாடுகளிலேயே அறிவுச் சமூகத்தை நோக்கி நகர்ந்த, முதல் சமூகமாக விளங்கியது.

     இன்றைக்கு, இலங்கையில் உரு பெற்றுக் கொண்டிருக்கும், அரசியல் முரண்பாடுகளுக்கு எல்லாம், இதுவே முதன்மைக் காரணம் எனலாம்.

     அறிவுச் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

     அறிவுச் சமூகத்தை, அறிவின் மூலம் எதிர்கொள்ள முடியாமல்,

    அழிப்பு,

     அழிப்பின் மூலம் எதிர் கொள்ளுதல்.

     இதுதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

     தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின், அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் தலைவர், முனைவர் இராம.சுந்தரம் அவர்கள், அறிவியல் தமிழின் தாயகம் ஈழம் எனப் போற்றுவார்.

காரணம்,

மருத்துவத்தை, மருத்துவப் படிப்பை,

தமிழ் வழியின் வழங்கிய முதல் மண், ஈழம்.

ஈழத் தமிழ் மண்.

இதற்குக் காரணம்,


சாமுவேல் பிஸ்க் கிரீன் பாதிரியார்.

     மருத்துவ நூல்களை எல்லாம், தமிழாக்கி, தமிழ் வழி பாட நூல்களாக்கி, தமிழ் வழியில் மருத்துவத்தைக் கற்பித்ததும் இவர்தான்.

     இந்த

     கிரீன் பாதிரியார்தான்.

     ஈழத் தமிழ்ச் சமூகத்தை, அறிவுச் சமூகமாக ஆறுமுக நாவலர் மாற்றினார் என்றால், இந்தி கிரீன் பாதிரியாரோ மருத்துவச் சமூகமாவ வளர்த்தெடுத்தார்.

     ஆறுமுக நாவலரும், கிரீன் பாதிரியாரும் போதாதென்று, அடுத்துத் தோன்றினார் ஒருவர்.

     ஏடு எடுக்கும்போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும்போது இதழ் முறிகிறது. ஒன்றைப் புரட்டும்போது, துண்டு துண்டாய் பறக்கிறது. எழுத்துக்களோ, வாலுந், தலையுமின்றி நாலா புறமும் சிதிலமடைந்து உள்ளது.

     பழைய சுவடிகள் யாவும் அழிந்து போகின்றன.

     எத்தனையோ அரிய நூல்கள் காலப் போக்கில் அழிகின்றன.

     சீமான்களே, இவ்வாறு இறந்தொழியும் நூல்களில், உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா?

     இவர் அழிய நமக்கென்ன? என்று வாளாவிருக்கிறீர்களே.

     தேசாபிமானம், பாஷாபிமானம் என்று இல்லாதவர் பெருமையும் பெருமையா?

     இதனை தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக.

     சொத்தை சேர்த்துவிடலாம், எழுத்தை சேர்ப்பது எளிதல்ல.

     மண்ணை அளந்து வரப்புகள் வகுத்துவிடலாம்,

பொன்னை போன்ற எழுத்துக்களுக்கு அணைகட்டிப் பார்ப்பது முடியாத காரியம்.

     கடுமையான உழைப்பு மட்டும் போதாது.

     ஆண்டவன் அருளும் இருந்தால்தான், அடுத்த ஓலை, முன் ஓலைக்கு, உண்மையாகவே அடுத்த ஓலையாக இருக்கும்.

     இடம் பெயர்ந்து இருந்தால், இலக்கியம் உயிர் புரண்டு நிற்கும் என முங்கி, பதிப்புப் பணிக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உரிமையாக்கியவர்.

இவர்தான்


சி.வை.தாமோதரம் பிள்ளை.

சுருக்கமாய்,

அன்பாய்

சி.வை.தா.,

இவர் ஓர் ஆசிரியர், வழக்கறிஞர்.

     நீதி நெறி விளக்கம், திருத்தணிகை புராணம், கலித்தொகை, சூளாமணி, ஆதியாகம், தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, பொருளதிகாரம் நச்சினார்கினியர் உரை என இவர் பதிப்பித்த நூல்கள் ஏராளம், ஏராளம்.

     இவ்வாறான ஆற்றல் மிகு அடலேறுகளால், தமிழ் தழைக்க, மறு புறம், பத்திரிக்கை உலகும் எழுச்சி பெற்று எழுந்தது.

     தமிழ் பத்திரிக்கைகளும், தமிழ்ப் பண்பாடு பேசுகின்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளும் தோன்றின.

     இதுபோதாதென்று மொழி பெயர்ப்பு முயற்சிகளும் புதிதாய் தொடங்கி, இறக்கைக் கட்டிப் பறக்கத் தொடங்கியது.

     சங்க இலக்கியங்கள் ஆங்கில உரை நடையில் மொழி பெயர்க்கப்பட்டு, அச்சு வாகனம் ஏறி, உலகை வலம் வரத் தொடங்கின.

     இதுமட்டுமல்ல, தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதற்கான அடிப்படையை உருவாக்கிய நூற்றாண்டாகவும், 19 ஆம் நூற்றாண்டு மெருகேறியது.

     சுருங்கச் சொல்வதானால், 19 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்பது, பல்வேறு அடிப்படைகளில், நவீனத்துவ சிந்தனைகளை உள்வாங்கிய முயற்சிகளாக, தமிழகத்து, தமிழ் இலக்கிய முயற்சிகளுக்கு முன்னோடியாக அமைந்து, வழிகாட்டியது என்றால் மிகையாகாது.

---

கடந்த 10.1.2021 ஞாயிற்றுக் கிழமை மாலை,

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்,

இலங்கைத் தமிழ் இலக்கியம் (19 ஆம் நூற்றாண்டு)

எனும் தலைப்பில்,

இலங்கை, பேராதனைப் பல்கலைக் கழகத்

தமிழ்த்துறை, முதுநிலை விரிவுரையாளர்திருமிகு பெருமாள் சரவணக்குமார் அவர்கள்,

தன் பேச்சாற்றலால்,

19 ஆம் நூற்றாண்டு ஈழத் தமிழ் மண்ணுக்கே

எங்களை அழைத்துச் சென்றார்.

பொழிவு

நிறைவு பெற்றபோது,

ஈழத் தமிழ்க் காற்றை

சுவாசித்த

ஓர் உணர்வு.

தஞ்சாவூர், சிங்கப்பூர் தங்க மாளிகை நிறுவனர்


குறள் நெறிச்செல்வர் இராம.சந்திர சேகரன் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற,

இப்பொழிவிற்கு வந்திருந்தோரை

ஏடகப் புரவலரும்,

புதிய தலைமுறை பத்திரிக்கையாளருமாகிய


திரு சு.வீரமணி அவர்கள்

வரவேற்றார்.

தஞ்சாவூர், விவசாயத் தொழில் நுட்ப

அமைப்பின் நிறுவனர்


திரு பி.கு.முகமது நிசார் அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி

தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் சா.கிருத்திகா அவர்கள்,

விழா நிகழ்வுகளை

திறம்பட, சுவைபடத்

தொகுத்து வழங்கினார்.

 

ஈழத்துத் தமிழ்க் காற்றை

தஞ்சைக்கு

இறக்குமதி செய்து,

தமிழ் ஈழ இலக்கியத்தின்

அருமையை

பெருமையை

தொன்மையைப்

புரிய வைக்கப்

அரு முயற்சி எடுத்து

பெரு வெற்றிபெற்ற,

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

 


 

 

16 கருத்துகள்:

 1. பிரமிக்க வைக்கும் சிறப்பான தகவல்கள் ஐயா...

  இனிய பொங்கல் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. ஈழம் எனும் எழுத்துப் பார்த்ததும் உன்னிப்பாகக் கவனித்துப் படித்தேன்.. உண்மைதான் அங்கு தமிழ் இடமெல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது...

  அழகிய தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 3. அரிய, அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான தலைப்பு. வழக்கம்போல் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த ஏடகத்திற்கும், பொழிவாளருக்கும் வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. இதனைப் படிக்கும்போது 1980களின் ஆரம்பத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது பெற்ற ஓர் அனுபவம் மனதிற்கு வந்தது.
  பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் Literary History in Tamil என்ற ஆங்கில நூலின் தட்டச்சுப்பணியினை மேற்கொண்டோரில் நானும் ஒருவன். சில சமயங்களில் அவரும் அருகே அமர்ந்திருப்பார். இதனைப் பற்றி அவரிடம் Literary History in Tamil என்பது Literary History of Tamil என்றல்லவா இருக்கவேண்டும் என்று நான் கேட்டதற்கு அவர் Literary History of Tamil என்பதிலிருந்து வேறுபட்ட, இதுவரை அதிகம் விவாதிக்கப்படாத பொருண்மையே Literary History in Tamil என்று கூறினார். பின்னாளில் தமிழில் இலக்கிய வரலாறு என்ற தலைப்பிலும் அவருடைய நூல் வெளிவந்தது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது பின்னர் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த பல ஆசிரியர்களின் நட்பு கிடைத்தபோது பல அரிய செய்திகளை அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 4. முக்கியமான தகவல்கள். ஈழ வரலாற்றில் இது குறித்து ஒரளவிற்கு எழுதி உள்ளேன். கடைசியாக பேசி யூ டியூப் ல் மேலோட்டமாக பேசி உள்ளேன். ஈழத்தவர்கள் உருவாக்கிய தாக்கம் அதிகம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று உலகு முழுக்க தமிழ் பரவி இருப்பதற்கு ஈழத் தமிழர்கள்தான் காரணம்
   நன்றி ஐயா

   நீக்கு
 5. வாசிப்பவரை பிரமிக்க செய்யும் செய்திகள் அடங்கிய ஒரு பதிவு.அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 6. தகவல்கள் பிரமிக்கச் செய்தன ஐயா. இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான தகவல்கள் Nanry.

  பதிலளிநீக்கு
 8. போராட்ட காலத்தில் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஈழத்திலிருந்து பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். பொருளாதாரத்தை வளப்படுத்த பல நாடுகளுக்கு சென்ற ஈழத்தவரும் உள்ளனர். அவர்களில் அநேகமானோர் தாய்நாட்டையும் தாய் மொழியான தமிழ்மொழியையும் தங்களின் இஷ்ட தெய்வ வழி பாட்டையும் மறக்க வில்லை. பாரதி பாடிய வண்ணம் திறமான தமிழ்ப்புலமையை பிற நாடுகளில் பரப்பி வருகிறார்கள். பிறநாட்டு நல்லறிஞர் நூல்களை தமிழாக்கம் செய்தும் வருகிறார்கள்.தாய் நாட்டிலும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தமிழை வளர்ப்பவர்களை இறைவன் காப்பாற்ற வேண்டும்
  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு-இலங்கை

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு