17 பிப்ரவரி 2021

நண்டு செய்த தொண்டு

 

     திருமணம்.

     காதல் திருமணம்.

     திருமணத்திற்கு முன்பே, காதலன் காதலியிடம் உறுதியாய் கூறினார்.

     உடுத்திய உடையோடு, நீ மட்டுமே வரவேண்டும்.

     உன் வீட்டு, செல்வத்தின் நிழல் கூட உன்னோடு வரக் கூடாது.

  காதலி மட்டும், தனித்து வந்து, காதலனின் கரம் பற்றினார்.

    இருவரின் திருமண வாழ்வில், இறுதி வரை நீக்கமற நிறைந்திருந்தது வறுமை மட்டுமே.

     குழந்தை பிறந்தபோது, உடுத்தி மகிழ புதுத் துணிக்கு வழியில்லை.

     கடும் குளிரில் குழந்தையைப் போர்த்திக் காக்க, கம்பளியும் இல்லை.

    உடல் நலம் குன்றியபோது, மருத்துவம் பார்க்க, பணமும் இல்லை.

     மருத்துவமின்றி, குழந்தை இறந்து, குழந்தையின் உடலைச் சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும் பொழுது, குழந்தையின் உடலில் சுற்ற, கிழியாத நல்ல துணி இல்லவே இல்லை.

     ஏழ்மையை, வறுமையின் கொடுமையை முழுதாய் அனுபவித்தக் காதலன், நூலகத்தின் புத்தகக் குவியலுக்குள் மூழ்கி, ஆராய்ந்து, தெளிந்து, உலகில் ஏழை மக்கள், ஏழை மக்களாகவே வாழ்வதற்கானக் காரணத்தைக் கண்டறிந்து, நூலாய் வெளியிட்டார்.

     மூலதனம் கிடைத்தது.

     படித்தவனுக்கு வேலை.

     படிக்காதவனுக்குப் படிப்பு.

     பசித்தவனுக்குச் சோறு.

     இல்லாதவனுக்கு வீடு.

     பொதுவுடமை அறிக்கை பிறந்தது.

     ஒன்றல்ல, இரண்டல்ல, ஐநூறு உலக மொழிகளில், உலகையே வலம் வந்தது.

     அறிவியல் சார்ந்த, பொதுவுடமையை வகுத்தவர்களுள் முதன்மையானவர் இவர்.

     காரல் மார்க்சு.

---

     காரல் மார்க்சு வழி பிறந்த, பொதுவுடமைச் சிந்தனை, இந்தியாவிற்குள் நுழைந்து, தமிழகத்திலும் கால் பதித்தது.

     பொதுவுடமைச் சார்ந்த கருத்துக்கள், மார்க்சு காலத்திற்கும் முன்னே, தமிழக இலக்கியங்களில் மலர்ந்திருந்தாலும், பொதுவுடமை என்ற சொல்லை, முதன் முதலாய் பயன்படுத்தியவராக, மகாகவி பாரதியே அறியப்படுகிறார். இதுமட்டுமல்ல,

தனியொருவனுக்கு உணவில்லை எனில்

ஜகத்தினை அழித்திடுவோம்

     என்று பாரதி பாடியதும் பொதுவுடமைக் கருத்துதான் அல்லவா. மேலும்

எல்லோரும ஓர் குலம்

எல்லோரும் ஓர் இனம்

எல்லோரும் இந்திய மக்கள்

எல்லோரும் ஓர் நிறை

எல்லோரும் ஓர் விலை

எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனவும் பாடியவரல்லவா பாரதி.

     பொதுவுடமைக்குப் பகைவனா நான்? பொது உடமைக்காரர் எனக்குப் பகைவரா? இல்லவே இல்லை. இரண்டும் சரியல்ல.

     பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடமைத் தீ என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து, கொளுந்து விட்டெரிந்து, தொழிலாளரிடத்தும, உழைப்பாளரிடத்தும, உணர்வில், உணர்ச்சியில் மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரோ? என வீறு கொண்டு எழுந்து, முழங்கிய புரட்சிக் கவி பாரதிதாசன், உலகின் மூன்று வகைப் பொருளியல் சித்தாந்தங்களை எளிதாய் விளக்குவதைக் கேளுங்கள்.

இரண்டு கறவை மாடுகள் உன்னிடம் இருந்தால்

அண்டை வீட்டானுக்கு ஒன்று அளித்தல் சோஷலிசம்.

கறவைகள் இரண்டில் கடிதொன்றை விற்று

காளை வாங்குவது காபிடலிசம்.

அவ்விரண்டினையும் ஆள்வார்க்கு விற்றுத்

தேவைக்குப் பால்பெறச் செப்பல் கம்யூனிசம்.

     இதனையே, தன் பாடலில்,

உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்

புகல்வோன் உடைமை மக்களுக்குப் பொது

புவியை நடத்துப் பொதுவில் நடத்து

     எனப் பொதுவுடமைப் பாடியவரல்லவா பாவேந்தர்.

     பாட்டுக்கோட்டை எனப் போற்றப்படும், பட்டுக்கோட்டையார், 1955 ஆம் ஆண்டிலேயே, நண்டு செய்த தொண்டு என்ற தன் பாடலில், மார்க்சியக் கருத்துக்களை முன் மொழிந்து பாடுகிறார்.

 

மச்சான் மச்சான் கதையைக் கேட்டியா

வாரக் குத்தகை தர்ரதாச் சொல்லி

வாம்பலில் கொஞ்சம் நட்டு வச்சோமே.

 

ஆமா, ஆமா அதுக்கென்ன இப்போ?

நேத்தைக்கு தண்ணி நிறைய இருந்ததே

பின்னாடி நட்டதால் பிஞ்சாயிருக்கும்

இன்னும் பத்து நாள் எல்லாம் பழுத்திடும்.

 

அதுக்கில்லே மச்சான் நான் சொல்ல வந்தது

அடுத்த வயல்லே நின்னாரு

ஆத்து வாய்க்காலை அடைச்சுத் திருப்பணும்

ஐம்பது காசுக்குத் தண்ணி பாய்ச்சணும்

 

ஆருவந்தாலும் அடிப்பேன் உதைப்பேன்

அப்படி இப்படீன்று அலறிக் குதிச்சாரு

இதுக்கும் நமக்கும் எட்டாதுன்னு

இருட்டும் முன்னே வீட்டுக்கு வந்துட்டேன்.

 

பொழுது விடிஞ்சு போய்ப் பார்த்தா

பொங்கித் ததும்புது நம்ப வயலு.

வாய்க்காலும் வெட்டலே, மடையும் திறக்கலே

வழியும் அளவுக்குத் தண்ணி யேது?

 

நண்டு செஞ்ச தொண்டு மச்சான்

நாட்டு நிலைமையை நல்லாப் பாத்தது

ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில்

போட்டது வளையைப் புரட்சி நண்டு.

பாய்ந்தது தண்ணி பரவி எங்குமே

காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின.

 

ஆகா, ஆகா அருமை நண்டே

உனக்கு இருக்கும் உயர்ந்த நோக்கம்

உலக மனிதர்க்கு உண்டா நண்டே

பெரு நிலக்காரன் வரப்பைக் குடைந்து

சிறுநிலங் காத்துச் சிறந்த நண்டே.

 

     சிறு நண்டை வைத்து, எளிமையாய், வலிமையாய், மார்க்சியச் சிந்தனைகளை முன்னிறுத்தும், பட்டுக்கோட்டையாரின் பாட்டுத் திறன் வியக்க வைக்கிறது அல்லவா.

 

வாயற்ற நாய் கழுதை மலம் தின்னும்

பன்றியும் வழியோடு செல்லலாமாம்

மனிதர்கள் நாம் சென்றிடில் புனிதமற்றுத் தீட்டு

வந்துலகு முழுகிப் போமாம்.

 

     மனிதர்கள் ஏற்றத் தாழ்வின்றி வாழ வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும், தோழர் ஜீவாவின் வார்த்தைகளில்தான் எத்துணை கோபம் கொப்பளிக்கிறது பாருங்கள்.

காலுக்கு செருப்பு மில்லை

கால் வயிற்றுக் கூழுமில்லை

பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே

பசையற்றுப் போனோ மடா.

 

குண்டிக்கொரு துண்டு மில்லை

கொல்வறுமை தாள வில்லை

ஒண்டக் குடிசை யில்லை – என் தோழனே

உழைத்திளைத்துப் போனோ மடா.

 

பாலின்றிப் பிள்ளை அழும்

பட்டினியாய் தாய ழுவாள்

வேலையின்றி நாம ழுவோம் – என் தோழனே

வீடுமுச் சூடும் அழும்.

 

கையிலொரு காசு மில்லை

கடன் கொடுப்பாரு மில்லை

செய்யும் தொழில் கிட்டவில்லை ? என் தோழனே

திட்டாட்டம் கொல்லுதடா.

 

வாங்கிய கடன் தீர்க்க

வக்கில்லை யானாலும்

ஏங்கி யிரந்துண்ண வோ – என் தோழனே

எங்கள் மனம் கூசுதடா.

 

கொச்சைப் பிழைப்பறி யோம்

கொலை திருட்டும் அறியோம்

இச்சகப் பேச்சறி யோம் – என் தோழனே

எத்தும் புரட்டறி யோம்.

 

கோணல் மாணல் திட்டங்களால்

கோடி கோடி யாய்க் குவித்தே

வீணர் சிலர் கொழுக்கக் கண்டால் – என் தோழனே

வெஞ்சினம் பொங்கு தடா.

 

மாடமாளிகைய வர்க்கு

மன்னர்மகுடம வர்க்கு

வாட வறுமை நமக்கு – என் தோழனே

வந்திடல் வாழ்வெதற்கு.

 

ஒன்றுபட்டுப் போர்புரிந் தே

உயர்த்துவோம் செங்கொடியை

இன்றுடன் தீருமடா – என் தோழனே

இம்சை முறைக ளெல்லாம்.

 

     படிக்கப் படிக்க, மனம் விம்மி வெடித்துப் போகிறதல்லவா. இதுவும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி உழன்ற தோழர் ஜீவாவின் பாடல்தான்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

கடந்த 14.2.2021 ஞாயிற்றுக் கிழமை மாலை

நடைபெற்றப் பொழிவில்,

தஞ்சை மாவட்ட வங்கி ஊழியர் சங்கப்

பொதுச் செயலாளர்


திரு க.அன்பழகன் அவர்களின்

பொழிவு,

மார்க்சியம் பற்றியப் புரிதலையும்,

பொதுவுடமைப் பற்றியத் தெளிதலையும்

என்னுள் ஏற்படுத்தியது.

     நான்கு வகை நிலங்களில் பயணித்த மனிதன், நான்கு வகை நிலங்களில் , தன் வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன், தனக்குக் கிடைத்தவற்றை, சமமாய் பகிர்ந்துண்டு வாழ்ந்த மனிதன், தனக்கு வேண்டியது போக, மீதம் இருப்பவற்றை, இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவிய மனிதன்தான், நமது பாட்டனும், முப்பாட்டனும் என, பொதுவுடமைத் தழைத்த காலத்தைக் குறிப்பிட்டு, பெரும் ஏக்கத்தை ஏற்படுத்தினார், பொழிவிற்குத் தலைமையேற்ற,

தஞ்சாவூர், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி

தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் சீ.மகேசுவரி அவர்கள்.

 

தமிழ்ச் சுவடியியல் மாணவி


செல்வி வ.நர்மதா அவர்கள்

நன்றி கூற, விழா இனிது நிறைவுற்றது.

முன்னதாக,

விழாவிற்கு வந்திருந்தோரை,

தமிழ்ச் சுவடியியல் மாணவி


செல்வி சோ.விஜயலட்சுமி அவர்கள்

வரவேற்றார்.

தமிழ்ச் சுவடியியல் மாணவர்


திரு சு.சரவணன் அவர்கள்

விழா நிகழ்வுகளைச் சுவைபடத்

தொகுத்து வழங்கினார்.

 

வற்றாத

தமிழ் இலக்கியச் சுவையை

திங்கள்தோறும்

வாரி, வாரி வழங்கி,

கேட்போர் மனம் மகிழ,

உளம் நெகிழ

விருந்து வைக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.