07 பிப்ரவரி 2021

எழுத்துக்காரக் குடும்பம்


     பல தடைகளைக் கடந்து, திருமணமான மகிழ்ச்சியில், புகுந்த வீட்டிற்குள்  காலடி எடுத்து வைக்கிறார், அந்த மருமகள்.

     அடுத்த நொடி, மாமியார் மயங்கி விழுகிறார்.

     சகுனமே சரியில்லை.

     ஜாதகத்துல தோஷம்

     ஆளுக்கு ஆள், மனம் போன போக்கில், குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போக, யாரோ ஒருவர், தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க, மாமியார், கண் விழிக்கிறார்.

    

பயந்துட்டியா? எனக்கு இப்டிதான், அடிக்கடி வரும். அதான் நீ வந்துட்டல்ல, இனி ஒன்னும் ஆகாது.

     மாமியாரின் வார்த்தைகளைக் கேட்டதும்தான், மணப்பெண்ணைப் போலவே, நமக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வருகிறது.

     இந்த லீப் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில், ஒரு நாள் கூடுதலாக கிடைத்திருககிறது. அதில் என்னவெல்லாம் பண்ணப் போறீங்க? என ஆசிரியர் கேட்டார்.

     ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தனர்.

     செந்தில் மட்டும் வாடிப் போனான்.

     சென்ற மாதத்தைவிட, இம்மாதம் ஒரு நாள் குறைவு. அம்மாவுக்கு மாதக் கடைசியில் சம்பளம். வேலை பார்த்த நாட்களுக்குத்தான் சம்பளம். இம்மாதம் ஒரு நாள் சம்பளம் குறையும். எனவே சம்பளத் தேதியில் வாங்கி வரும் தீனி, இந்த மாதம் கிடையாது.

     மாத ஊதியம் பெறுபவர்களுக்கும், வேலை பார்க்கும் நாட்களுக்கு மட்டும், ஊதியம் வாங்கும் வர்க்கத்தினருக்குமான, வித்தியாசத்தை, அது அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் பெரும் தாக்கத்தை பக்குவமாய் எடுத்துரைக்கிறார்.

     இக்கொரோனா காலகட்டத்தில், தொழில் இழந்து, உண்ண உணவிற்கே வழியின்றி, கூட்டம் கூட்டமாய், சொந்த மாநிலங்களைத் தேடி, கால் நடையாய் நடந்து சென்ற உழைப்பாளர்கள், மனக் கண்ணில் தோன்றி நெஞ்சைப் பிழிகிறார்கள்.

     என் பையன் அனுப்பிய லேப் டாப், என் பையன் அனுப்பிய வாட்ச், என் பையன் அனுப்பிய 55 இன்சு டிவி என்று, சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவர், இறந்தபோது, அமெரிக்காவில், கிரீன் கார்டு வாங்கிய மகனுக்கு வர முடியவில்லையாம்.

     அவன் வாங்கித் தந்த ஃபோன் வழியே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

     அப்பாவின் இறுதிச் சடங்குகள் முடிந்தன.

     பணம், பணம் என, பணம் மட்டுமே வாழ்வின் குறிக்கோளாய் மாறி, நாடு விட்டு நாடு சென்று, பணத்தோடு மட்டும் வாழும் மாக்களின் நிலையினைப் பொட்டில் அறைந்ததுபோல் கூறுகிறார் இவர்.

     குழந்தைக்காக, ரெஜிஸ்டரில் பதிந்து, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து கிடைத்திருக்கும் குழந்தை. உலகின் ஜனத் தொகையைக் குறைப்பதற்காக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், இயற்கையான பிரசவம் தடைசெய்யப்பட்டு, ஜனத் தொகை கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம், இறப்பு விகிதத்தின் அடிப்படையில், அம்மா அப்பாக்களின் உயிரணுக்களைக் கொண்டு, செயற்கையாக உருவாக்கப்பட்டு, வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும் குழந்தைகள்.

     படிக்கப் படிக்க, உண்மையிலேயே, வெகுவிரையில், இதுபோன்ற நிலை வந்துவிடுமோ என்று மனது படபடக்கிறது.

     எந்தக் கலர் பட்டுப் புடவை எனப் பாட்டி.

     பட்டுச் சேலையா? ஃபேன்ஸி சேலையா? என அம்மா.

    சேலையா? சுடிதாரா? என மகள்.

     பெர்முடா டிரவுசரும், டி சர்ட்டும் மட்டுமே அணிந்திருந்த தாத்தா கேட்டார், வீடியோ கான்ஃபரன்சிங்ல பாக்கப்போற கல்யாணத்துக்கு ஏன் இவ்ளோ படோடோபம்.

     படிக்கும்போது சிரிப்பு வந்தாலும், இன்று கொரோனா கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் பாடமும், துக்கத்திற்கு 50 பேர், திருமணத்திற்கு 100 பேர் என்ற கட்டுப்பாடு தொடருமேயானால், நினைக்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது.

     வீட்டிற்கு வெளியே, பல வாகனங்கள் அந்த அந்த இடத்திலேயே இருந்தன.

     கடந்த சில மாதங்களில், எரி சக்தி மூலங்கள் அனைத்தும் தீர்ந்திருந்தன.

     வசதி படைத்த சிலர் மட்டும், மாட்டு வண்டிகளிலும் , குதிரைகளிலும் சென்றனர்.

     இவனும் ஒரு புதிய மாட்டு வண்டி ஆர்டர் செய்து, ஒரு மாதம் ஆகிறது. இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடுமாம்.

     படிக்கும்போதே பக்கென்கிறது. எதிர்காலத்தில் இப்படியும் ஒரு நிலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறதல்லவா?

     ஆர்கானிக்னா, இயற்கை முறையில் விளஞ்சததானே அனுப்பனும்? நம்ம கடையில் உரம் வாங்கி, விவசாயம் பண்றவங்க பொருள் எப்படி இயற்கை முறையில் விளஞ்சதா இருக்கும்?

     மெட்ராஸ்ல வாங்கறவனுக்கு என்ன இந்த வித்தியாசம் தெரியவா போது? என்று சிரித்தார்.

     லட்சம் ரூபாய்க்கு புதிதாய் ஒரு இம்போர்டட் டி.வி ஆர்டர் செய்தார் உரக்கடை முதலாளி.

     என்ன சார், இம்போர்டட் டிவி கேட்டவருக்கு, ரீ அசெம்பில்ட் செட்ட அனுப்பச் சொல்றீங்க? என்றாள் அந்தக் கடை பணிப்பெண்.

     தஞ்சாவூர்ல வாங்குறவனுக்கு எது ஒரிஜினல், எது டூப்ளிகேட்னு வித்யாசம் தெரியவா போகுது? என்றார் அவளுடைய முதலாளி.

     படிக்கும்போதே வேதனையாக இருக்கிறது அல்லவா? உண்மை, நேர்மை,  என்பதெல்லாம் வெற்று வார்த்தையாகிப் போய்விட்டதோ என, நாம் ஒவ்வொருவரும் பல நேரங்களில் வருந்தி, மனம் நொந்து போயிருப்போமல்லவா? அதனை அழகாய்  படம் பிடித்துக் காட்டுகிறார் இவர்.

     இவரது ஒவ்வொரு கதையும், நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கத்தான் செய்கிறன.

     இளையவர்தான், ஆனாலும் எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது.

     உலகியலை நன்கு அறிந்தவர் என்னும் உண்மை புரிகிறது.

     எழுத்துலகில் சாதிக்கத் துடிக்கும், இவரது மனநிலை தெளிவாய் தெரிகிறது.

     சாதிப்பார் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.

     ஏனெனில், இவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் களம் அப்படிப்பட்டது.

     தமிழில் யாரும நுழையாத தளத்திற்குள் நுழைந்து, தனித்து நின்று வாளெடுத்துச் சுழற்றி, வெற்றி வீரராய் வெளி வந்திருக்கிறார்.

     யாரும் நுழையாத தளமா?

     புரியவில்லைதானே?

     இவரது ஒரு கதையினை, தொடக்கம் முதல், முடிவு வரை, முழுதாய் எடுத்து வைக்கிறேன், வாசித்துப் பாருங்கள்.

     பரிசுகளை வழங்க சாண்டா வருகிறார்.

     ஊரெல்லாம் ஒரே விளம்பரம். பெரிய பெரிய நியான் ஃப்ளெக்ஸ் முதல், பிட் நோட்டீஸ் வரை, எல்லாவற்றிலும், சிவப்பாக சிரித்துக் கொண்டிருந்தார் வெண்தாடி சாண்டா.

     இந்தமாதிரியான விளம்பரம் புதிதாய் இருந்தது. யாருக்கும் காரணம் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

     டிசம்பர் 24 வந்தது.

     அனைவரும் பெரிய எதிர்பார்ப்போடு தூங்கிப் போயினர்.

     டிசம்பர் 25 விடிந்ததும், அனைவரது வீட்டு வாசலிலும், பெரிய சிவப்பு சிலிண்டர்கள். பக்கத்தில் ஒரு சிறிய மூட்டையுடன், ஒரு கடிதம்.

     இதுவரை தந்த பரிசுகள் எல்லாம் வீணாய்தான் போயின. கடைசி வாய்ப்பு. அடுத்த ஒரு ஆண்டுக்கான ஆக்சிஜன் வாயுவும், அதைப் பெருக்க மண்ணும், மர விதையும் உடன் இருக்கிறது.

     மரம் வளர்த்து, மனிதருடன் இயைந்து, அன்பைப் பெருக்கி, பகிர்ந்துண்டு வாழ பெரும் வாய்ப்பே இந்த ஆண்டு பரிசாக.

     ஹேப்பி கிறிஸ்துமஸ்

நம்பிக்கையுடன்,

உங்கள் சாண்டா

25 டிசம்பர் 2098

     அவ்வளவுதான் கதை முடிந்து விட்டது.

     ஒவ்வொரு கதையும் இதே அளவுதான்.

     கவிதை என்று எடுத்துக்  கொண்டால், அவற்றை இருவகையாகப் பிரிக்கலாம்.

     மரபுக் கவிதை

     புதுக் கவிதை

     மரபுக் கவிதையில், குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என பல வகைகள் இருக்கின்றன.

     புதுக் கவிதையில் ஹைக்கூ, சென்றியூ, லிமரைக்கூ, லிமரிக், லிபுன், ஹைபுன், கஸல் எனப் பல வகைகள் இருக்கினறன.

     அதேபோல கதைகள் என்று எடுத்துக் கொண்டால், நெடுங்கதை, குறுங்கதை, சிறுகதை, ஒரு பக்கக் கதை எனப் பல வடிவங்கள் இருக்கின்றன.

     ஆனால், நண்பரோ, தமிழில் இதுவரை இல்லாத, ஒரு புது வடிவத்தை, புது உருவத்தை, தமிழுக்குக் கொண்டு வந்து, அறிமுகம் செய்திருக்கிறார்

     இங்கிலாந்து, பர்மிங்காம் பல்கலைக் கழகத்தின், அறிவியல் புனைகதை மன்றமானது, 1980 ஆம் ஆண்டு வாக்கில், சிறு கதை வடிவத்தில், ஒரு புதுமையைப் புகுத்தி, உருவாக்கிய ஒரு புது வடிவத்தை, தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

     Drabble

     Drabble  என்றால் என்ன?

     நூறு வார்த்தைகளில் ஒரு கதை.

     நூறு என்றால், மிகச் சரியாக, நூறே நூறு வார்த்தைகளில், ஒரு கதை.

     99 வார்த்தைகள் கூடாது.

     101 வார்த்தைகள் கூடவே கூடாது.

     மிகச் சரியாக 100 வார்த்தைகள் இருக்க வேண்டும்.

     ஒரு எழுத்தாளரின் திறமையைச் சோதிப்பதற்காக, சுருங்கச் சொல்லி, விளங்க வைக்கும் திறமையைச் சோதிப்பதற்காகத், தோற்றுவிக்கப்பட்ட வடிவம் இது.

     நூறே நூறு வார்த்தைகள்.

     ஆர்வத்தைத் தூண்டவேண்டும்.

     பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும்.

     இந்த உருவத்தைத்தான், இந்த கதையின் வடிவத்தைத்தான், தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இவர்.

     புதிய வடிவம்.

     புதிய முயற்சி

     ஏதோ ஒன்றிரண்டு கதைகள் அல்ல.

     முழுதாய் நூறு கதைகளை எழுதியிருக்கிறார்.

     நூறு, நூறு வார்த்தைகளில் நூறு கதைகள்.

     இவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

     இவரைப் பாராட்டும்போதே, இவரது தாயும், தந்தையும் கண்முன் வந்து நிற்கின்றனர்.

     எழுத்துக்காரக் குடும்பம்

     தாய் எழுத்தாளர்

     தந்தை எழுத்தாளர்

     அண்ணன் எழுத்தாளர்

     பிறகு, இவர் மட்டும் எப்படி எழுதாமல் இருப்பார்.

புது களத்திற்குள் துணிவாய் புகுந்து,

வெற்றி வாகை சூடியிருக்கும் இவர்,

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக

மேனாள் உதவிப் பதிவாளர்

பௌத்த ஆய்வாளர்,

விக்கிப்பீடியாவில் தனித் தடம் பதித்தவர்

பல நூல்களின் ஆசிரியர்,

வலைப் பதிவர்

முனைவர் பா.ஜம்புலிங்கம்

பயண எழுத்தாளர், வலைப் பதிவர்

திருமதி பாக்கியவதி ஜம்புலிங்கம்

இணையர்களின்

இளைய புதல்வர்,

மண் வாசனை நூலின் ஆசிரியர்

திரு. பரத் ஜம்புலிங்கம் அவர்களின்

அருமை இளவல்

 


திரு ஜ.சிவகுரு.

 


இவரது சாதனை நூல்

100 நூறு வார்த்தை கதைகள்.

 


வாழ்த்துகள் சிவகுரு

தொடர்ந்து எழுதுங்கள்.

15 கருத்துகள்:

  1. புதுமைக்கு வரவேற்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் பரத். தொடர்க உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    நல்ல மனிதரை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்... அந்த நூலை படிக்க ஆர்வமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  4. நூலினை படிக்கும் ஆவலைத் தூண்டும் விமர்சன விவரிப்பு அருமை நண்பரே...

    முனைவர் அவர்கஙளின் புதல்வர் திரு. ஜ. சிவகுரு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான அறிமுகம். நூலை வாசிக்க நானும் காத்திருக்கிறேன். ஆசிரியருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  6. மிக சிறப்பான அறிமுகம் பதிவை படிக்கும் போது இப்படி எல்லாம் எழுதியவர் யார் என்று யோசிக்கும் வேளையில் அவர் நமக்கெல்லாம் தெரிந்த ஜம்புலிங்கம் சார் அவர்களின் புதல்வர் என்று படிக்கும் போது வந்த ஆச்சிரியத்திற்கே அளவே இல்லை. இந்நூல் எங்கே ஆன்லைனில் கிடைக்கும் என்று சொல்லுங்க சார்


    அழகாக அறிமுகப்படுத்திய உங்களுக்கும் எழுத்தாளருக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  7. அமேசானில் தேடி வாங்கி டவுன் லோடு செய்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான விமர்சனம்.
    ஆசிரியர் கதையில் சொன்ன விஷயங்கள் எல்லாம் மிக அருமை.
    எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  10. சிறந்த நூல் அறிமுகம். முழு ெழுத்தாளர் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள். புத்தகம் வாங்கும் கிண்டில் சுட்டியை வழங்கவும்.

    பதிலளிநீக்கு
  11. எங்கள் இளைய மகன் திரு சிவகுருவின் முதல் நூலைப் பற்றிய பதிவு சிறப்பு. இந்நூலிக்கு உங்கள் அணிந்துரை மிகவும் அழகு சேர்க்கின்றது. உங்களைப் போன்றோர் தரும் ஊக்கம் எங்கள் மகனை மென்மேலும எழுத வைக்கும் என நம்புகிறேன். எங்கள் குடும்பத்தார் சார்பாக நன்றி.

    பதிலளிநீக்கு
  12. திருமிகு ஜ. சிவகுரு அவர்களுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  13. எழுத்துக்கார குடும்பம் மிக நல்ல பதிவு. வாழ்த்துகள்

    உடுவை.எஸ்.தில்லைநடராசா, கொழும்பு-இலங்கை

    பதிலளிநீக்கு
  14. ஜம்புலிங்கம் ஐயா அனுப்பிய மின்மடலில் அவர்தம் இணையர் பாக்கியவதி அவர்களும் திருமகன்கள் பரத், சிவகுரு ஆகியோரும் நூல்கள் எழுதியிருப்பது கண்டு வியந்தேன். பொதுவாக எழுத்து, சமுகம் எனப் பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு அந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வாழ்க்கைத்துணை அமைவதே கடினம். அப்படியே அமைந்தாலும் குழந்தைகளும் அப்படி அமைவது இன்னும் கடினம். ஆனால் ஐயா அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் மட்டுமில்லாமல் தாங்களும் அதே போல் எழுத்துப்பணி ஆற்றும் வகையில் குடும்பமே அமைந்திருப்பது உண்மையில் அவருக்குக் கிட்டியிருக்கும் தமிழ்த்தாயின் அருள் என்றே கூறுவேன்.

    தந்தையைப் போலவே இந்தப் பிள்ளைகளும் தமிழ்ப் பணியில் பெரும் புகழ் ஈட்ட என் நெஞ்சம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு