21 மார்ச் 2021

கும்ப முனி

 


     ஆண்டு 1937.

     மார்ச் 27 ஆம் நாள்.

     சென்னை.

     பாரதீய சாகித்திய பரிஷத் மாநாடு.

     தலைமை.

     மகாத்மா காந்தி.

     மாநாடு தொடங்கியது.

   

  முதல் நிகழ்வாக வரவேற்புரை.

     தமிழின் தொன்மையினையும், தமிழர்களின் பெருமையினையும், சங்க இலக்கியப் பாடல்களின் வழி, சான்றுகளோடு, கேட்போர் உள்ளம் இனிக்கும்படி, மனம் மகிழ்ந்து வானில் மிதக்கும்படி எடுத்துரைத்த வரவேற்பாளர், இத்தகு பெருமை வாய்ந்த தமிழ் மண்ணுக்கு, மகாத்மா காந்தி அடிகளை வரவேற்பதில் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் என்று கூறி, வருக வருக என வரவேற்றார்.

     தமிழ் மொழியை அறிந்தவர்தான் மகாத்மா காந்தி.

     தமிழில் பேசும் வல்லமையும் பெற்றவர்தான் மகாத்மா காந்தி.

     தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி நடத்தியப் போராட்டங்களில் எல்லாம், முன்னிலையில் நின்றவர்கள் தமிழர்கள்.

     எனவே தமிழ் மொழியின் மீதும், தமிழர்கள் மீதும் ஆழ்ந்த அன்பு கொண்ட மகாத்மா காந்தி, தமிழைப் பேசவும், தன் பெயரினைத் தமிழில் கையெழுத்தாய் இடவும் அறிந்தே இருந்தார்.

     இருப்பினும், இவ்விழாவில் திரு கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்பையும் தன் தாய் மொழியில் கேட்டு மகிழ்ந்தார்.

     உள்ளத்தால் நெகிழ்ந்தார்.

     நிகழ்ச்சியின் நிறைவில், தலைமையுரையாற்ற எழுந்த காந்தி,

     தமிழின் மறுவடிவமாகவே இருக்கும், வரவேற்புரை ஆற்றியவரின் திருவடியில் இருந்து, தமிழ் பயில வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டாகிறது.

     பலவேலைகளை உடைய எனக்கு, அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ? என்ற தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினர்.

     மாநாடு கைதட்டல்களால் அதிர்ந்துபோனது.

      தன் சுந்தரத் தமிழால் காந்தியைக் கவர்ந்தவர் யார் தெரியுமா?

---

     இவர் இதற்கும் 31 ஆண்டுகளுக்கு முன்னரே, தன் தமிழ்ப் பணிகளுக்காக, ஆங்கில அரசால், ஆம் ஆங்கிலேய அரசாலேயே விருது வழங்கிப் பாராட்டப் பெற்றவர்.

     ஆங்கிலேய அரசிடம் விருது பெற்றமைக்காக, இவருக்கு ஒரு பாராட்டு விழா, சென்னை மாநிலக் கல்லூரியில்,  1906 ஆம் ஆண்டு மார்ச்சு 17 ஆம் நாள் நடைபெற்றது.

     இவ்விழாவினை முன் வரிசையில் அமர்ந்து ரசித்தவர் யார் தெரியுமா?

    


பாரதி.

     ஆம், மகாகவி பாரதி.

     பாரதி, ஆசு கவியல்லவா.

     நினைத்த நேரத்தில், நினைத்த பொருள் பற்றி, கவி எழுதும் வல்லமை வாய்ந்த ஆசு கவி அல்லவா.

     பாரதி, தன் சட்டைப் பைக்குள் கையை விட்டு, ஒரு சிறு பென்சிலை எடுத்தார், விழா குழுவினரிடமிருந்து, ஒரு வெள்ளைத் தாளைப் பெற்றார்.

     வார்த்தைகள் வரிசை கட்டி வந்து, வெள்ளைத் தாளில் எழுத்துக்களாய் இறங்கின.

 

செம்பரிதி ஒளிபெற்றான், பைந்தறவு

     சுவைபெற்றுத் திகழ்ந்தது, ஆங்கண்

உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று

     எவரேகொல் உவத்தல் செய்வார்?

கும்பமுனி எனத்தோன்றும் சாமிநா

     தப்புலவன் குறைவில் கீர்த்தி

பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்

     பேருவகை படைக்கின்றீரே?

 

அன்னியர்கள், தமிழ்ச்செல்வி அறியாதார்

     இன்றெம்மை ஆள்வோ றேனும்,

பன்னியசீர் மகாமகோ பாத்தியா

     ப்பதவி பரிவின் ஈந்து,

பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா

    தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,

முன்இவன் அப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்

     இவன்பெருமை மொழிய லாமோ?

 

நிதியறியோம், இவ்வுலகத் தொருகோடி

     இன்பவகை நித்தம் துய்க்கும்

கதியறியோம் என்றுமனம் வருந்தற்க,

     குடந்தைநகர்க் கலைஞர் கோவே,

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

     காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்

     இறப்பின்றித் துலங்கு வாயே.

 

     மேடையேறி வாசித்தார்.

     அரங்கு ஆர்ப்பரித்து எழுந்தது.

 

நண்பர்களே,

இவர் யார் தெரியுமா?

பாரதியின் பாடலைப் பரிசாய் பெற்றவர்.

யார் தெரியுமா?

மகாத்மா காந்தி அவர்களே,

திருவடியில் இருந்து தமிழ் பயில ஆசைப்பட்டவர்

யார் தெரியுமா?

நடையாய் நடந்து, அலையாய் அலைந்து,

ஓலைச் சுவடி வடிவில் சிதறிக் கிடந்த

பழங்காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்களுக்குப்

புத்துயிர் ஊட்டி, புது உரு கொடுத்து

அச்சு நூலாக்கிய மாமனிதர்

ஆங்கிலேயர்களால்

மகாமகோபாத்யாய

விருது வழங்கிப் பாராட்டப் பெற்றவர்


மகாமகோபாத்யாய

தமிழ்த் தாத்தா டாக்டர் .வே.சாமிநாதய்யர்

---

கடந்த 19.2.2021 வெள்ளிக் கிழமை மாலை,

ஏடகத்தின்

.வே.சா., இருக்கையின் சார்பில்

நடைபெற்ற


.வே.சாமிநாதய்யர் 167வது பிறந்த நாள்

விழாவிற்குத்

தலைமையேற்ற

.வே.சா., இருக்கைத் தலைவர்

ஏடகப் புரவலர்


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்களின்

பொழிவு கேட்டு

அரங்கே மகிழ்ந்துதான் போனது.

 

முன்னதாக

விழாவிற்கு வந்திருந்தோரை

ஏடகப் புரவலர் மற்றும் பொறுப்பாளர்


திரு .அப்பாண்டைராஜ் அவர்கள்

வரவேற்றார்.

இந்நிகழ்வில்

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக

மேனாள் துணைப் பதிவாளர்


திரு இரா.சுப்பராயலு அவர்கள்

சிறப்புரையாற்றினார்.

ஏடகப் புரவலர் மற்றும் கல்வியாளர்


திரு எம்.வேம்பையன் அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

 

ஏடு

என்றாலே

உ .வே.சா., அல்லவா

எனவேதான்

ஏடு அகத்தில்

ஏடகத்தில்

உ.வே.சா., இருக்கைக்கு

முதலிடம் தந்து

முத்தானப் பொழிவை

தமிழமுதாய்ப்

பொழிய வைத்த

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.


27 கருத்துகள்:

  1. என்னே தமிழ்ப் பற்று...

    பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்களுக்கு வணக்கங்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. அற்புதமான மனிதரைப் பற்றி மேலும் அறியவும் உதவிட்ட பதிவு. அவருடைய புகழைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  3. அருமை பதிவு நண்பரே. உங்களுக்கும் ஏடகத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அரிய நிகழ்வை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் அருமையான பதிவு. வாழ்த்துகள்

    உடுவை.எஸ்.தில்லைநடராசா
    கொழும்பு
    இலங்கை

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சி, சிறப்பான பதிவிற்கு நன்றி, வாழ்த்துகள் சார்

    பதிலளிநீக்கு
  7. அருமை. தமிழ் வாழ்க.

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல் சார்.
    கோ.விஜயராமலிங்கம் அவர்களின் தமிழ் பணியை கண்டு வியக்கிறோம்.
    உ.வே.சா அவர்களின் என் சரித்திரம் உட்பட்ட நூல்களை விரைவில் வாசிக்கும் ஆர்வமும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பு அண்ணா! அரிய தகவல்களைத் தேடித்தரும் உங்களுக்கும் ஏடகத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. ஏடகம் நிகழ்வின் வழி சிறப்பான விஷயங்களை பகிர்ந்து வரும் நண்பர்களுக்கு நன்றி. பதிவாக இங்கே பகிர்ந்து வரும் உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்களின்
    பொழிவு கேட்டு

    அரங்கே மகிழ்ந்துதான் போனது.//

    எங்களுக்கும் அந்த பாக்கியம் உங்களால் கிடைக்கிரது.
    அருமையான பகிர்வு. நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அருமையான உரை. பகிர்ந்தவிதம் சிறப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கரந்தையாரே! நும் எழுத்து அருமை! நடை அருமை! புதுமை! உமக்கு நான் சொல் தச்சர் என்னும் பட்டத்தை வழங்குகிறேன். வாழ்க நீடு!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு