24 மே 2021

குப்பண்ணா

 


 

     ஆண்டு 1932.

     செந்தமிழ்க் கைத்தொழிற் கலாசாலை.

     கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி.

     கல்லூரி என அழைக்கப் பட்டாலும், இது ஒரு தொடக்கப் பள்ளிதான்.

     1916 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றப் பள்ளி.

    

இப்பள்ளியில் 1927 ஆம் ஆண்டு, இவர் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றவுடன், பள்ளியான்து முன்னேற்றப் பாதையில், வெகுவேகமாய் பயணிக்கத் தொடங்கியது.

     மாணவர் எண்ணிக்கை படிப்படியாய் 500 ஆக உயர்ந்தது.

     ஆசிரியர்களின் எண்ணிக்கையோ இருபதைத் தொட்டது.

     இப்பள்ளிக்கு அரசினர் வழங்கும் நன்கொடையும் பெருகிக் கொண்டே சென்றது.

     சென்னை மாநில மாதிரிப் பள்ளிகளில், இதுவும் ஒன்று என்ற தனித்துவ நிலையை அடைந்தது.

     மாணவர்களுக்கு உடற் பயிற்சி, தொழில் பயிற்சி, இசைப் பயிற்சி மற்றும் நாடகப் பயிற்சிகள் முறையாகக் கற்றுத் தரப்பட்டன.

     இவர் பள்ளியின் தலைமையாசிரியர்தான்.

     இருப்பினும், கரந்தைத் தமிழ்ச் சங்க வேலைகள் அனைத்தையும், இழுத்துப் போட்டுக் கொண்டுச் செய்வார்.

     இவரது வீடு பள்ளிக்கு மிக அருகிலேயே இருந்தும் கூட, பல நாட்கள் வீட்டிற்குக் கூடச் செல்லாமல், இரவு பகலாய் கண்விழித்து, பள்ளியிலேயே இருந்து பணியாற்றுவார்.

     காலையில் பள்ளி மாணவர் உடற்பயிற்சியை மேற்பார்வையிடல், தொடர்ந்து தோட்ட  மேற்பார்வை, சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாருடன் உரையாடல்.

     மாலையில், கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், கள்ளர் சீரமைப்பு விடுதி, கூட்டுறவு அச்சகம் முதலியவற்றின் வரவு செலவு கணக்குகளை எழுதுதல்.

     இவ்வேலைகள் முடிந்தால், வீடு திரும்புவார், இல்லையேல் வேலை முடியும் வரை பள்ளியிலேயே தங்குவார்.

     பள்ளி ஆண்டு விழாவோ, கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவோ வந்துவிடுமானால், வீடு என்று ஒன்றிருப்பதையே மறந்து பள்ளியே கதியென்று கிடப்பார்.

     இவர் நாடகம் எழுதுவதில் வல்லவர்.

     இவர் எழுதிய ஏழு நாடகங்களும் மேடையேறியதோடு, நூலாக்கமும் பெற்றுள்ளன.

     இவர் அக்கால வழக்கப்படி, புராண இதிகாசக் கதைகளை, நாடகம் ஆக்காமல், பழந்தமிழ் இலக்கிய வரலாற்றினைக் கதைக் கருவாகக் கொண்ட நாடகங்களையே வடிவமைத்து இயற்றியுள்ளார்.

     வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி, வள்ளல் பேகன், சோழன் கரிகால வளவன், வள்ளல் ஆய் அண்டிரன், வள்ளல் மலையமான் திருமுடிக்காரி, வள்ளல் கண்டீர கோப்பெரு நள்ளி, கோப்பெருந் தேவி ஆகியோரை நாயகர்களாகக் கொண்ட நாடகங்களையே எழுதியுள்ளார்.

     சங்கத்தின் பல பணிகளை, இவர் தனியொருவராகத் தன் தலையில் சுமப்பதால், சில சமயம், நாடகம் அரங்கேற்றம் காண்பதற்கு, முதல் நாள் வரை, நாடகத்தை எழுதிக் கொண்டே இருப்பார்.

     இந்நாடகத்தில் நடிப்பதற்காகத் தேர்வு செய்யப் பெற்று, காத்திருப்பவர்களில் யாரும், தொழில் முறைக் கலைஞர்கள் அல்ல.

     அனைவரும் பள்ளி மாணவர்கள்.

     இவர் முதல் நாள் எழுதுவார்.

     மறுநாளே நாடகம் அரங்கேறும்.

     காண்பவர்கள் மெய் மறந்து ரசித்துப் பாராட்டுவார்கள்.

     காரணம் இவரது இரண்டு ஆசிரியர்கள்.

     இலக்குமணாச்சாரியார், இரத்தினம் பிள்ளை எனும் இரு ஆசிரியர்கள்.

     பள்ளி மாணவர்களுக்கு நாடக வசனங்களை விளக்கிச் சொல்லி, நடிக்க வைப்பதில் வித்தகர்கள் இவர்கள்.

     நாடகம் எழுதத் தலைமையாசிரியர்.

     பயிற்றுவிக்க இரு ஆசிரியர்கள்.

     நடிக்கப் பள்ளி மாணவர்கள்.

     நாடகம் ஒவ்வோர் ஆண்டும் களைகட்டும்.

     சங்கத்தின் புகழ் உச்சியில் ஏறும்.

     இப்படித்தான் ஒருமுறை, வேலைப் பளு காரணமாக, நாடகத்தின் கடைசி காட்சி முதல் நாள் வரை எழுதி முடிக்கப் பெறவில்லை.

     இயக்குநர்களும், மாணவர்களும் தவித்துக் காத்திருந்தனர்.

     முதல் நாள் இரவு, ஒரு மணியளவில், மறுநாள் அரங்கேற இருந்த நாடகத்தின், இறுதிப் பகுதியை, நிறைவுப் பகுதியை எழுதிக் கொண்டிருந்தார்.

     திடீரென்று மின் விசிறி நின்று விட்டது.

     ஒரே புழுக்கம்.

     உடனே இவர், நன்றாக உறங்கிக் கொண்டிருந்த, தோட்டக்காரர் சின்னதுரை என்பாரை எழுப்பி, அழைத்து வந்து, சிறிது விசிறி விடு என்றார்.

     அவரும் ஒரு விசிறியை எடுத்து வந்து விசிற ஆரம்பித்தார்.

     இவரோ நாடகத்தின் முடிவை எழுத ஆரம்பித்தார்.

     ஒரு மணி நேரத்தில், நாடகப் பகுதி நிறைவு பெற்றுவிட்டது.

     விசிறியது போதும், நிறுத்தி விடு என்று கூறிவிட்டு, எழுதிய வசனங்களை ஒரு முறை படித்துப் பார்த்தார்.

     காற்று தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

     போதும் என்ற பிறகும் ஏன் வீசுகிறாய்? என்றவர் தலை நிமிர்ந்து பார்த்தார்.

     எதிரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், மலர்ந்த முகத்துடன் விசிறிக் கொண்டு நிற்பதைப் பார்த்தார்.

     தாங்களா, எனப் பதறி எழுந்தார்.

     தமிழவேள் சிரித்துக் கொண்டே கூறினார், இப்பொழுது, இதுதான் என் வேலை.

---

     இவர் தலைமையாசிரியராய் அமர்ந்தபின், அவ்வப்போது ஏதாவது புதுமைகளை புகுத்திக் கொண்டே இருப்பதைக் காணும், தமிழவேள், இவரை ஆரத் தழுவிப் பாராட்டுவார்.

     ஒரு முறை, தமிழவேளின் உறவுக்காரர் ஒருவர், சங்க வளாகத்தில் கிடந்த, ஒரு பெரும் கருங்கல்லைத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றார்.

     துணி துவைப்பதற்கு இக்கல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம்.

     தலைமையாசிரியரான இவரோ, இக்கல் சங்கத்திற்கு உரிமையானது என்று கூறி தடுத்து விட்டார்.

     உறவுக்காரரோ தமிழவேளிடம் என்று முறையிட்டார்.

     தமிழவேள் அமைதியாய் பதில் கூறினார்.

     எனக்கே அக்கல் வேண்டும் என்றாலும், குப்பண்ணா கொடுத்தால்தான் உண்டு.

     உறவினர் வாயடைத்துப் போனார்.

     தலைமையாசிரியர் குப்பண்ணாவுக்கோ, இக்கல்லை, இனி எப்படிக் காப்பது என்ற கவலை வந்தது.

     அடுத்த நொடி, இக்கல்லைக் காப்பதற்கான  வழியும் தெரிந்தது.

     உடனே கல் தச்சர் ஒருவரை அழைத்து வந்து, அக்கருங்கல்லைக் காட்டினார்.

     செய்ய வேண்டிய செயலையும் கூறினார்.

     கல்தச்சர் பணியில் இறங்கினார்.

     பல நாள் உழைப்பில், அக்கருங்கல் மெல்ல மெல்ல, உருமாறியது.

     சங்க கணபதியாய் புது உரு பெற்றது.   

     கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்துள் இருந்த, அரச மரத்தடியில் குடியும் புகுந்தது.

     சங்க கணபதி பிறந்தார்.

கரந்தை வளர் தமிழ்ச்

சங்கக் கணபதி காப்பு.

கரந்தை வளர்தமிழ்ச்

சங்க கணபதி காப்பு.

சிறந்த கல்வியும் செழித்தநல் லறிவும்

வளர்ந்து எங்கள் வாழ்வது மலர்ந்திட

கரந்தை வளர் தமிழ்ச்

சங்கக் கணபதி காப்பு

செந்தமிழ் வளர்க்கும் சங்கம் ஓங்கவும்

சங்கம் வளர்க்கும் சான்றோர் வாழவும்

கரந்தை வளர் தமிழ்ச்

சங்கக் கணபதி காப்பு

என்ற பாடலும் தோன்றியது, நாள்தோறும் சங்க கணபதியின் முன் ஓதும் கணபதிக் கவசமாய் மாறியது.

    

சங்க கணபதி (தற்போது சங்க வளாகத்தில் அரச மரம் இல்லை. எனவே சங்க வளாகத்தில் தனி கோயிலில் வீற்றிருக்கிறார்)

இதுமட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டு கண்ட ஈடு இணையற்ற தமிழறிஞரான, ஈழம் பெற்றெடுத்த, சுவாமி விபுலாநந்த அடிகளார் அவர்கள், தமிழவேளின் வேண்டுகோளுக்கு இணங்க, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து, அமர்ந்து, பல்லாயிரம் ஆண்டுகளாய் மறைந்து கிடந்த பழந்தமிழிசைப் பரப்பின் எல்லை கண்டு, படைத்திட்ட இசைத் தமிழ் இலக்கண நூலான யாழ் நூலை, இந்த சங்கத்தின் மூத்த பிள்ளையாருக்கு வணக்கம் கூறித்தான் தொடங்கினார்.

சங்கத்தினின்று

ஒரு கல் கூட வெளியே செல்லக் கூடாது என்று

கண்ணும் கருத்துமாய் காத்தவர்,

சிறந்த நாடக ஆசிரியர்,

தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால்,

குப்பண்ணா, குப்பண்ணா என

அன்பொழுத அழைக்கப் பெற்ற,

இந்தத் தலைமையாசிரியர் யார் தெரியுமா?

இவர்தான்.


கரந்தை சிவ.குப்புசாமி பிள்ளை

குப்பண்ணாவை

வணங்குவோம், வாழ்த்துவோம்.


நண்பர்களே, வணக்கம்.

     மேலும் எனது இரு நூல்கள், அமேசான் தளத்தில் இணைந்துள்ளன. இவ்விரு நூல்களையும், நாளை செவ்வாய்க் கிழமை (25.5.2021) பிற்பகல் முதல் வியாழக் கிழமை (27.5.2021) பிற்பகல் வரை கட்டணம் ஏதுமின்றி தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.வலைச் சித்தருக்கு ஜெ

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்

26 கருத்துகள்:

 1. அற்புதமான வரலாறு தெரிய வைத்தமைக்கு நன்றி நண்பரே...

  மின்நூல்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. தமிழுக்குப் பெரும் சேவை செய்தும் அவ்வளவாக அறியப்படாத தமிழ் அறிஞர்கள் பற்றி எழுதும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் . மின்நூல்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. அற்புதம்... தமிழின் பெருமையே பெருமை... மின்னூல்கள் தொடரடவும் வாழ்த்துகள் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 4. திரு.குப்புசாமி அவர்களைப்பற்றிய தகவல்கள் அருமை! கரந்தை தமிழ்ச்சங்க வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் கொலு வீற்றிருக்கும் சங்க கணபதியை இங்கு புகைப்படமாகக் காணவில்லையே?
  நூல்கள் வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சங்க கணபதியின் படத்தினை இப்பொழுது இணைத்துள்ளேன். இன்று சங்க வளாகத்தில் அந்த அரச மரம் இல்லை.
   சங்க வளாகத்தில் ஒரு தனி ஆலயத்தில் சங்க கணபதி இருக்கிறார்.
   நன்றி சகோதரி

   நீக்கு
 5. திரு குப்புசாமி பிள்ளை பற்றி அறிந்தேன்.  மின்னூல்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. தமிழுக்கு தொண்டாற்றிய வள்ளல் பலர். தமிழ்வேளும் ஒருவர். செய்திகளைத் தேடி ஆவணமாக்குவதில் ஈடுபாடு அளப்பரியது. தொடரட்டும். தங்கள் மின்னூலுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. திரு குப்புசாமி பிள்ளை அவர்களௌக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
  அருமையான பதிவு.

  உங்கள் மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. தமிழுக்குச் சேவை செய்த, உலகிற்கு அவ்வளவாக அறியப்படாத திரு குப்புசாமி/குப்பண்ணா பற்றிய தகவல்கள் அருமை. அறிந்து கொண்டோம். மின்னூல்களுக்கு வாழ்த்துகள்!

  துளசிதரன்

  கீதா

  பதிலளிநீக்கு
 9. திரு. குப்பண்ணா அவர்களை பற்றி அற்புதமான தகவல்கள் தந்தமைக்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 10. திரு குப்பண்ணா பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தன. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  மின்னூல்கள் - தங்களது நூல்கள் மேலும் தொடர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. திரு.சிவ.குப்புசாமி அய்யா அவர்களின் எழுத்தாற்றல், அய்யா உழைப்பு, நேர்மைத்திறன், தன் பணிக்கு உண்மையாக இருத்தல் போன்ற பொன்னான பண்புகள் அவர் புகழை வானுக்கு நிகராக உயர்த்தி உள்ளன. மிக நல்ல பதிவு சகோ.

  பதிலளிநீக்கு
 12. சிறந்த மனிதர்களை குறித்து சிறப்பான நினைவுகூறும் பதிவு.
  வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி, வள்ளல் பேகன், சோழன் கரிகால வளவன், வள்ளல் ஆய் அண்டிரன், வள்ளல் மலையமான் திருமுடிக்காரி, வள்ளல் கண்டீர கோப்பெரு நள்ளி, கோப்பெருந் தேவி - இவர்களுள் சிலரை மட்டுமே அறிந்திருகின்றேன் பலரையும் பகிர்ந்தமை சிறப்பு.
  குப்பண்ணாவிற்கு சிரம்தாழ்ந்த வணக்கங்களும் கரந்தையாருக்கு மனமகிழ் பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 13. வரலாறு அறிந்தோம். நன்றி

  பதிலளிநீக்கு
 14. கரந்தை சிவ.குப்புசாமிப்பிள்ளை பற்றிய பதிவுகள் அருமை. வாழ்த்துகள்

  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு-இலங்கை

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு