24 ஜூலை 2021

பரிபூரணம்

 


      நாற்பதிற்கும் மேலான மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்றுத் தேர்ந்து, சொல்லாராய்சி செய்த வித்தகர்.

1.      மாந்தன் பிறந்தகம், மறைந்த குமரிக் கண்டமே

2.      அவன் பேசிய மொழி தமிழே

3.      தமிழே உலக முதன் மொழி

4.      தமிழே திராவிடத்திற்குத் தாய்

5.      தமிழே ஆரியத்திற்கு மூலம்

எனத் தரவுகளோடு நிறுவுவதையே, தன் வாழ்வின் குறிக்கோளாய் கொண்டு, செயலாற்றி வென்றவர்.

   

  இந்திய வரலாறு என்பது, தெற்கில் இருந்து தொடங்கப் பெற வேண்டும் என முழங்கியவர்.

     50 ஆய்வு நூல்களின் ஆசிரியர்.

     ஆயினும் வாழ்வில் வறுமையினை மட்டுமே சந்தித்தவர்.

     என் மனைவியார், 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 27 இல் இறந்தார். அன்று மருத்துச் சாலைக்கு, வாடகை இயங்கியில் அனுப்ப என்னிடம் ரூ.10 இல்லாதிருந்தது.

     அனுப்பியிருந்தால் பிழைத்திருப்பார்.

     வேதனையாக இருக்கிறது அல்லவா?

     வறுமை பற்றி, இவர் மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

     எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு.

     அழகிய மணவாளன்

     பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்

     நச்சினார்க் கினிய நம்பி

     சிலுவையை வென்ற செல்வராயன்

     அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்

     மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி

     மணிமன்ற வாணன்

என தன் மக்களுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தவர்.

     இவர் தமிழ் மக்களிடத்தில் முன்வைத்த வேண்டுகோள் மிகவும் எளியது.

     தமிழை மேன்மையடையச் செய்ய, தமிழில் பேசுங்கள்

     இவர் ஓர் ஆசிரியர்.

     தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம், தன் மாணவர்களை, தமிழ் மொழியின்மீது பற்று கொண்ட மாணவர்களாய் வளர்த்து, உயர்த்தி, பாவாணர் பரம்பரை என்னும், புதியதொரு தமிழ்ப் பரம்பரையை உருவாக்கியவர்.

இவர்தான்

மொழிஞாயிறு

தேவநேயப் பாவாணர்.

---

    


   கடந்த 23.7.2021 வெள்ளிக் கிழமை காலை, நானும், நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும், மதுரை, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்துள் நுழைந்தோம்.

     எதிரில் தேவநேயப் பாவாணரின் நெடிதுயர்ந்த திருஉரு.

     உள்ளத்தோடு, உடலும் சிலிர்த்தது.

     வணங்கினோம்.

     மணிமண்டபத்தின் நாற்புறமும், பாவணரின் படங்கள், பாவாணரின் தமிழ்ப் பணிகள், காட்சிகளாய் கண் முன் விரிந்தன.

     பார்த்துப் பரவசமடைந்தோம்.

     பின்னர், அங்கிருந்த, மணிமண்டபப் பொறுப்பாளராய் பணியாற்றி வரும், அம்மையாரைச் சந்தித்தோம்.

    
நாங்கள், தஞ்சாவூர்,  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வருகிறோம்
என்றோம்.

     அம்மையாரின் முகம் மலர்ந்தது.

     நான் பாவாணரின் பெயர்த்தி என்றார்.

     மீண்டும் ஒருமுறை உடல் சிலிர்த்தது.

     பாவாணரின் பெயர்த்தியா?

     வியப்போடு வினவினேன்.

     பாவாணரின் மூத்தமகன் அழகிய மணவாளனின் புதல்வி.

     என் பெயர் பரிபூரணம்.

     என் தாத்தா, பாவாணர், தன் தாயின் பெயரையே, எனக்கு சூட்டி மகிழ்ந்தார் என்றார்.

     பரிபூரணம்.

     சில நிமிடங்கள், தன் தாத்தாவின் நினைவலைகளில் மூழ்கிப் போனார்.

     பல நிமிடங்கள் கடந்த நிலையில், விடைபெறும் பொழுது, தன் விருப்பம் ஒன்றினைத் தெரிவித்தார்.

    


பாவாணர் மணி மண்டபத்தில், பாவாணர் பெயரில், நூலகம் ஒன்றும் இயங்கி வருகிறது.

     இந்நூலகத்திற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் மிகவும் சிறியது.

      கணினி அறைபோன்று, கண்ணாடிகளால் சூழப்பெற்ற சிறு அறை.

      இந்நூலகத்தில் இருக்கும் நூல்களின் எண்ணிக்கையும் குறைவு.

     மணி மண்டப வளாகமோ பெரியது.

     மணிமண்டபத்திற்கு இடது புறமும், வலது புறமும் போதிய இடம் இருக்கிறது.

     எனவே இவ்விடத்தில், தனியொரு கட்டிடமாக, நூலகம் கட்டப் பெற்று, அதிக எண்ணிக்கையில் நூல்கள் இடம்பெறுமானால், ஆய்வு மாணவர்களுக்கும், போட்டித் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

     தமிழக அரசு இதனைச் செய்திட முன்வரவேண்டும் என்றார்.

     பாவாணரின் பெயர்த்தியல்லவா.

     பாவாணரைக் கருவில் சுமந்த பரிபூரணத்தம்மாளின், பெயரினையே, தன் பெயராய் பெற்றிருக்கும், இப்பெயர்த்தி பரிபூரணத்தின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என நம்புவோம்.

வாழ்க பாவாணர்.

   

    

 

 

 

 

24 கருத்துகள்:

 1. அன்பு நண்பருக்கு, அறிஞர்களின் வாழ்க்கையும் வறுமை சூழலும் ஒன்றுக்கொன்று இரட்டையர் போன்று ஒன்றாக பிறப்பெடுத்து ஒன்றாக வளர்ந்து ஒன்றாக முக்தியாகும் என்ற சோகமான பல நிகழ்வுகளையே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். கண்களில் வழியும் கண்ணீருடன் பகிர்கிறேன் சகோ.

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான சந்திப்பு ஐயா... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 3. தேவநேயப்பாவாணரின் பணிகள் பற்றி அழகான தமிழில் அறிந்து கொண்டேன்.பல வருடங்களுக்கு முன் குடும்பப் பெயர்கள் வழக்கில் இருந்தன. வேலுப்பிள்ளையின் மகன் முருகுப்பிள்ளை. முருகுப்பிள்ளையின் மகன் வேலுப்பிள்ளை. பலரது பெயர்கள் ஏதோ ஒரு வகையில் தெய்வத்தின் பெயராக இருந்தது. தமிழர்கள் வழிபடும் தெய்வமாகிய முருகனின் பெயரை வேலன் ஆறுமுகம் சரவணன் என்று தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோரும் எங்களிடையே இருந்திருக்கிறார்கள். இன்று அந்த நிலை மாறிவிட்டது.
  பாவாணரின் பெயர்த்தி என்பதைப் பார்த்ததும் மனதில் தோன்றியதை எழுதினேன்.நன்றி
  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு-இலங்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை ஐயா
   இன்று பெயர் வைக்கும் முறை வெகுவாக மாறித்தான் போய்விட்டது.
   தங்கள் வருகையும், கருத்துரையும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன
   நன்றி ஐயா

   நீக்கு
 4. பரிபூரணத்தம்மாளின் விருப்பம் நிறைவேற வேண்டும்.
  அருமையான பதிவு. படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 5. நாட்டுக்காக உழைத்தவர்களின் சந்ததிகள் எங்கும் கஷ்டப்பட்டுத்தான் வாழ்கின்றனர்.

  அவரது எண்ணம் நிறைவேறட்டும்.

  பதிலளிநீக்கு
 6. பரிபூரணம் அவர்களின் விருப்பம் பரிபூரணம் அடைய வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 7. தேவநேயப்பாவணரைப்பற்றி இப்போது தான் அதிகம் அறிந்தேன். வழக்கம்போல தமிழை கெளரவப்படுத்தியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 8. வாழுங் காலத்தில் அறிஞர்களையும், பொதுநலனுக்காகப் போராடியவர்களையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழர்களின் சாபம். தமிழைச் சொல்லி வாழ்பவர்கள், ஆள்பவர்கள், இனியாவது தமிழுக்குப் பணி செய்பவர்களுக்கு அணி செய்யட்டும். நினைவூட்டும் கட்டுரை. நன்றி ஐயா.!

  பதிலளிநீக்கு
 9. பெயர்த்தியின் எண்ணம் ஈடேறும் என நம்புவோம். அதற்கு உங்களின் எழுத்தும் துணை நிற்கும்.

  பதிலளிநீக்கு
 10. பெயர்த்தியின் எண்ணம் நிறைவேறட்டும்

  பதிலளிநீக்கு
 11. நூலகம் கட்ட வேண்டும் என்ற நல்லெண்ணம் நிறைவேறட்டும்.

  சிறப்பான பதிவும் தகவல்களும்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு