22 ஆகஸ்ட் 2021

எழுத்து

      உலக மொழிகளுக்கு, இரண்டு வடிவங்கள் உண்டு.

     ஒலி வடிவம்.

     வரி வடிவம்.

     ஒலி முன்னது.

     வரி பின்னது.

     ஒலிகூட ஒழுங்கு படுத்தப்படாத ஒலியாகத்தான், முதலில் இருந்திருக்கும்.

    

பின் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும்.

     ஒழுங்கு படுத்தப்பட்ட ஒலிகள், மானுட சமூகத்திற்குப் போதுமானதாக இல்லை.

     பேசினால் மட்டும் போதுமா? என்ற எண்ணம், ஒரு கட்டத்தில் எழுந்திருக்க வேண்டும்.

     படங்கள் வரைய முற்பட்டான்.

     எண்ணங்களைப் படமாக்கினான்.

     படம்.

     ஓவியம்.

     ஓவியம்தான் உலகின் முதல் கலை.

     ஓவியத்தில் இருந்துதான் எழுத்து பிறந்தது.

     ஆனால் ஒரு முரண்.

     ஒலி முன் தோன்றியது.

     எழுத்து பின்னர் வந்தது.

     ஆனால் எழுத்துதான் முதலில் பதிவு செய்யப்பட்டது.

     ஒலிப் பதிவு மிக, மிகப் பிற்காலத்தியது.

     இந்த எழுத்து இல்லை என்றால், நாம் நம்  வரலாற்றை அறிந்திருக்க முடியாது.

     எழுத்து என்பது பதிவு.

     எழுத்து என்பது ஆவணம்.

     எழுத்து என்பது வரலாறு.

     எழுத்தைக் கழித்துவிட்டால், உலகின் அனைத்து மனித இனங்களும், தங்களின் வரலாற்றை இழக்கும்.

     தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் எழுத்து.

     நமக்கு கிடைத்திருக்கிற இலக்கியங்களிலேயே, மிகப் பழமையானது, மிகத் தொன்மையானது தொல்காப்பியம்.

     தொல்காப்பியத்தின் முதல் அதிகாரமே எழுத்துதான்.

     எழுத்து.

     அதுமட்டுமல்ல, எழுத்ததிகாரத்தின், முதல் நூற்பாவே, எழுத்து என்றுதான் தொடங்குகிறது.

எழுத்தெனப் படுப

அகரமுதல் னகர இறுவாய்

முப்பஃது என்ப

     எனவே, எழுத்து என்பது, ஒரு மொழியின் மிக அடிப்படையான, இரண்டு கூறுகளில் ஒன்றாக இருக்கிறது.

     இந்த எழுத்து என்பது எங்கெல்லாம் இருக்கிறது?

     எங்கெல்லாம் இருந்தது?

     இன்றைக்கு எழுத்துகள் தாள்களில் இருக்கின்றன.

     தாளும், தாளில் எழுத்தும் மிகப் பிற்காலத்தவை.

     கல்வெட்டுகள்.

     செப்பேடுகள்.

     பனை ஓலைகள்

     இம்மூன்றிலும் எழுத்துகள் இருந்தன.

     இன்று எழுத்தின் வடிவம் மாறியிருக்கலாம்.

     இருப்பினும் அவை எழுத்துகள்.

     எழுத்துதான் எல்லாவற்றையும் கொண்டு வந்தது.

     தலைமுறை, தலைமுறையாய் சுமந்து வந்தது.

     தலைமுறைகளைப் பதிவு செய்தது.

     இன்றைய தொழில் நுட்பம், எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், எழுத்தைப் புறந்தள்ள முடியாது.

     தொழில் நுட்பம் வளர்ந்தாலும், நம் பேச்சும், எழுத்தும் ஓய்வதே இல்லை.

     இயந்திரங்கள் பேசுவதில்லை.

     அப்படியே பேசினாலும், நம்முடைய குரலைத்தான் அவை எதிரொலிக்கின்றன.

     இன்று எழுதுவது குறைந்துவிட்டது.

     ஆனாலும் எழுத்து இருக்கிறது.

     கணினியில் அமர்ந்து தட்டச்சு செய்தாலும், எழுத்து எழுத்துதான்.

     தொழில் நுட்பம் உச்சத்தைத் தொட்டாலும் எழுத்து நமக்குத் தேவைப் படுகிறது.

     ஒவ்வொரு மொழியிலும் எழுத்துக்களின் எண்ணிக்கை கூடுதல், குறைவு என்ற ஒரு சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது.

     தமிழைப் பற்றிக் கூறும்போது பலர், ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்தான்.

     கற்க எளிது.

     தமிழிலோ 200 க்கும் மேற்பட்ட எழுத்துக்கள்.

     உயிர் எழுத்து 12.

     மெய் எழுத்து 18.

     இரண்டையும் பெருக்கினால் உயிர் மெய் 216.

     ஆய்த எழுத்து ஒன்று.

     அனைத்தையும் கூட்டினால் 247.

     247 எழுத்துகளைக் கற்பது கடினம்.

     எனவே ஆங்கிலம் எளிதாக இருக்கிறது என்கிறார்கள்.

     இது உண்மையா?

     உண்மையில்லை.

     நாம், நம் தமிழில், வரி வடிவத்தில் கூடுதல் எண்ணிக்கையில் எழுத்துகளை வைத்திருக்கிறோமே தவிர, தமிழ் எழுத்து என்பது அடிப்படையில், பெறும் முப்பதுதான்.

     இதனைத்தான் தொல்காப்பிய நூற்பா, அகரமுதல னகர இறுவாய் முப்பஃது என்கிறது.

     ஆனால் கவனமாக முப்பஃது என்கிறது.

     அந்த முப்பஃது என்பது ஆய்த எழுத்தையும் உள்ளடக்கியது.

     எனவே 31 எழுத்துகளை, தமிழின் அடிப்படை எழுத்துகள் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்றால் தேவையில்லை.

     முப்பதுதான்.

     காரணத்தையும் தொல்காப்பியரே கூறுகிறார்.

     தமிழில் முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகை இருக்கிறது.

     30 எழுத்துகள்தான் அடிப்படை.

     மற்றவை எல்லாம் சார்ந்தவை.

     குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்

     இவை சார்பெழுத்து என்கிறார் தொல்காப்பியர்.

     ஆகையினால் முப்பதுதான்.

     ஆனாலும், ஆய்தம் என்பது, தமிழனின் தோலைநோக்குப் பார்வைக்கான ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.

     காரணம், எல்லா மொழிகளிலும், ஒரே குறிப்பிட்ட ஒலிகள்தான் இருக்கும் என்று கூறு முடியாது.

     சில மொழிகளில் இருக்கின்ற, சில ஒலிகள், சில மொழிகளில் இருக்காது.

     கரம் என்பது நம்மிடத்தில் மட்டும்தான் இருக்கிறது.

     நம்மிடத்தில் இருந்து பிரிந்துபோன மொழி என்பதால், மலையாளத்தில் இருக்கிறது.

     எனவேதான், இதனை சிறப்பு கரம் என்கிறோம்.

     கரம் என்பது தமிழருக்கே உரிய சிறப்பு ஒலி என்பதைப் போல, ஆங்கிலத்திலே  f  என்ற ஒரு எழுத்து இருக்கிறது.

      f    என்ற ஒலிக்கு இணையான ஒலி உள்ள சொல் தமிழில் இல்லை.

     தமிழில் f   என்ற  ஒலி இல்லையே, அதை எப்படி எழுதுவது?

     Coffee  என்ற சொல்லை எப்படி எழுதுவது?

     File  என்ற சொல்லை எப்படி எழுதுவது என்று கேட்கிறார்கள்?

     File என்பதை, தமிழில் file என்றே ஏன் எழுத வேண்டும்?

     கோப்பு என்ற சொல் இருக்கிறதே.

     எல்லா மொழிகளிலும், எல்லா ஒலிகளும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

     எல்லா ஒலிகளையும் எழுத்திற்குள் கொண்டு வந்துவிடவும் முடியாது.

     ஒரு ஒலி, நம் பேச்சில் தொடர்ந்து வருமானால், அந்த ஒலிக் குறிப்பிற்கு உரிய எழுத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

     Coffee  என்ற சொல்லின் ஒலியை உச்சரிக்க தமிழில் எழுத்தில்லை.

     ஆனால் நம் முன்னோர், இதற்காகத்தான், இதுபோன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்தத்தான், ஆய்தம் என்கிற ஆய்த எழுத்தை வழங்கி இருக்கிறார்கள்.

     அறிவியலின் வளர்ச்சிப் போக்கில், சில சொற்களைக் கூறவேண்டும், ஆனால் அந்த சொற்களுக்கான, அந்த ஒலிக்கான, எழுத்து வரி வடிவம், தமிழில் இல்லையெனில், ஆய்த எழுத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

     எனவேதான் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் மூன்றையும் சார்பெழுத்து என்கிறார் தொல்காப்பியர்.

     ஆங்கிலத்தைக் கூட வெறும் 26 எழுத்துகள்தான் என சுருக்கிவிட வேண்டாம்.

     அவர்கள், தேவையான பொழுது, எழுத்துகளை சேர்த்து எழுதிக் கொள்கிறார்கள்.

     என்று நாம்,  ஒரு வரி வடிவம் வைத்திருக்கிறோம்.

     ஆங்கிலத்திலோ  ka  என்ற இரண்டு எழுத்துக்களைச் சேர்த்தால்தான், அந்த வரும்.

     சில நேரங்களில் மூன்று எழுத்தைக் கூட சேர்த்து எழுதுவார்கள்.

     நாம் கீ என்று சொன்னால், அவர்கள் kee, Key  என்று எழுத வேண்டும்.

     Key  என்றால் சாவி என்பதை  அறிவோம்.

     Key  என்பது ஒரு போர்ச்சுக்கீசியச் சொல்.

     திறவுகோல் என்பதுதான் தமிழ்ச் சொல்.

     Key என்பது போச்சுக்கீசியர்கள் இலங்கையை ஆண்டு பொழுது, அவர்களோடு சேர்ந்து நுழைந்த சொல்.

     ஆனால் ஈழ மக்கள் சாவியை விட்டு விட்டார்கள்.

     திறப்பு என்றுதான் கூறுவார்கள்.

     நாம்தான், திறவுகோலைத் தொலைத்துவிட்டு, சாவியை பத்திரப் படுத்தி வைத்திருக்கிறோம்.

     குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் இம்மூன்றையும் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் என்று குறிப்பிட்டதைப் பார்த்தோம்.

     ஆனால், தொல்காப்பியருக்குப் பிறகு, சில நூற்றாண்டுகள் கடந்து வந்த, பவணந்தி முனிவரோ, தனது நன்னூலில், சார்பெழுத்துகள் பத்து என்கிறார்.

உயிர்மெய், ஆய்தம், உயிரளவு, ஒற்றளவு

ஆஃகிய இ, உ, ஐ, ஔ, மஃகான்

தனி நிலை பத்தும் சார்பெழுத்தாகும்.

     ஆய்தம் என்பதை தொல்காப்பியமும், நன்னூலும் சார்பெழுத்து என்கிறது.

     ஆனால் நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர், தொடங்கும்போதே, உயிரெழுத்து சார்பெழுத்து என்கிறார்.

     அடிப்படையான எழுத்துகளை முதலெழுத்துகள் என்கிறோம்,

     முதலெழுத்து உயிரும், மெய்யும்தான்.

     30 எழுத்துகள்தான் தமிழில்.

     ஆங்கிலத்தில் 26.

     ஆங்கிலத்தில் குறில், நெடில் கிடையாது.

     அ, ஆ

     ஆங்கிலத்தில் a  என்று ஒன்றுதான் இருக்கிறது.

     a, e, i, o, u என்கிற உயிர் எழுத்துகளுடம், அதற்கு நெடில் எழுத்துகளும் வருமானால், இன்னும் ஐந்து எழுத்துகள் கூடும்.

     ஆங்கிலத்தில் குறில், நெடில் வேறுபாறு இல்லாததால், நமக்குப் பல நேரங்களில் குழப்பம் ஏற்படுவதுண்டு.

     Rama -  ரமா, ராமா

     இதில் எது என்ற குழப்பம்.

     ஆனால், இந்தக் குழப்பம் ஆங்கிலேயர்களுக்கு வர வாய்ப்பில்லை.

     ஆங்கிலத்தில் குறில் பாகுபாடு கிடையாது.

     தமிழில் குறில், நெடில் உட்பட மொத்தம் 30.

    இந்தியிலே இருக்கிற எழுத்துகளை எடுத்துக் கொண்டால், என்பதே நான்கு இருக்கிறது.

     தமிழில ஒரே ஒரு தான்.

     இது குறையில்லை.

     நாம் இயல்பாகவே, ஒரே வரி வடிவத்தைப் பயன்படுத்தினாலும், ஒலிப்பு முறையில், நாமாகவே மாற்றிக் கொள்கிறோம்.

     கப்பல் என்பது வேறு.

      கடம் என்பது வேறு.

     அகம் என்பது வேறு.

     இயல்பாக நமக்கு அந்த  ஒலிப்பு முறை கை வந்திருக்கிறது.

     எனவே, வரி வடிவத்தில், எழுத்து  வடிவத்தில், வேறு வேறு விதமான வடிவங்கள் இருக்க வேண்டும் என்பது இல்லை.

     ஆனால், இந்த எழுத்து வடிவங்களையோ, எண்ணிக்கையினையோ, ஒரு நாளும் மாற்றி விடக்கூடாது என்பதும் இல்லை.

     எல்லாம் மாறும்.

     உலகத்தில் மாறாதது மாற்றம் ஒன்றுதான்.

     தமிழில எழுத்துகள் எவ்வளவோ மாறுதல்களைச் சந்தித்திருக்கின்றன.

     என்றும் என்றும் ஒரே ஒரு எழுத்துதான் இருந்திருக்கிறது.

     குறில், நெடில் இல்லாமல் இருந்திருக்கிறது.

     வீரமா முனிவர்தான், இந்த இரண்டு எழுத்துக்களின் தலையிலும் ஒரு புள்ளி வைத்தார்.

     புள்ளி இருந்தால் குறில்.

     புள்ளி இல்லாவிட்டால் நெடில் என்று ஒரு முறையைக் கொண்டு வந்தார்.

     பிறகு அதுவும்  மாறிற்று.

     என்ற எழுத்திற்குக் கீழ் ஒரு சாய் கோடு போட்டால் என்றும், என்ற எழுத்தின் அடிப்பகுதியை சுழித்து என்றும் மாறிற்று.

     1930 களில் தந்தைப் பெரியார், பல எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தார்.

     அதற்கு முன்பு லை என்றால், வுக்கு முன், பாம்பு படமெடுத்தது போல், ஒரு கொம்பு இருக்கும்.

     அண்ணா என்றால், வுடன் இணைந்து கீழ்ப் புறம் ஒரு வட்டம் போட வேண்டும்.

     இவற்றையெல்லாம் பெரியார்தான் மாற்றினார்.

     எம்,ஜி.ஆர்., ஆட்சியில் இச்சீர்திருத்தங்கள் 1977 இல் எற்றுக் கொள்ளப் பட்டன.

     எழுத்துகள்.

     எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார் ஔவையார்.

     இதே கருத்தைதான், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, முன் வைத்தார் வள்ளுவர்.

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு.

     எழுத்து.

     எழுத்துதான் இலக்கியம்.

    எழுத்துதான், நம் கருத்துகளின் வெளிப்பாடு.

    எழுத்து, நம் உணர்வுகளை, உள்ளக் கிளர்ச்சிகளைக் கொண்டு வந்து கொட்டுகிற சாதனம்.

     எழுத்தை யாருக்கு ஆளத் தெரிகிறதோ, அவனே எழுத்தாளன்.

     பொதுவாக, நாம் அறிவுதான் வலிமை என்போம்.

     Knowledge is Power.

     ஆனால், இஸ்ரேலைச் சார்ந்த யுவால் நோவோ ஹராரி என்னும் அறிஞர் கூறுகிறார்.

     Clarity is Power.  

     தெளிவுதான் வலிமை.

     எழுத்திலும், பேச்சிலும் இருக்கிற தெளிவுதான் வலிமை.

     ஐந்து சொற்களில் சொல்லக் கூடியதை, ஆறு சொற்களில் சொல்லக் கூடாது என்பார்  கவிக்கோ அப்துல் ரகுமான். இவர் மேலும் கூறுவார்.

ஒரு சிற்பத்தின்

அழகு

கீழே விழுந்த

கல்லில் இருக்கிறது.

     சிற்பத்தைச் செதுக்குவது போலத்தான், ஒன்றை எழுதுவதும் இருக்க வேண்டும்.

     எழுத்தின அளவு.

     எழுத்தின் கூர்மை.

     எழுத்தின தெளிவு.

     இவை மூன்றும் இருந்தால், எழுத்தை ஆளலாம்.

     எழுத்தை ஆள முடியுமானால்,

     உலகை ஆளலாம்.

     எழுத்துதான் எல்லாம்.

---

     நாம், இலக்கியப் பொழிவுகள் பலவற்றைக் கேட்டு மகிழ்ந்திருப்போம்.

     உலகையே மறந்து ரசித்திருப்போம்.

     ஆனால், பள்ளிக் காலத்தில் இருந்தே, இலக்கணம் என்றால் விலகியே நின்றிருப்போம்.

     காரணம், சரியான புரிதல் இல்லாமைதான்.

     இலக்கியப்  பேச்சிலும், இனிமையாய், ஓர் இலக்கண மழையில் நனைந்தேன் என்று சொன்னால் நம்புவீர்களா?

     உண்மை.

     நம்பித்தான் ஆக வேண்டும்.

     எழுத்து.

     எழுத்து பற்றியப் பேச்சு.

     பேச்சில் எழுத்து இனித்தது.

     தேன் பாகாய் சுவைத்தது.

     எழுத்து.

     பேச்சின் தலைப்பே இந்த நான்கு எழுத்துகள்தான்.

     எழுத்து.

மக்கள் சிந்தனைப் பேரவையின்

சிந்தனை அரங்கம்


கடந்த 5.8.2021 வியாழக் கிழமை மாலை

இணைய வழி எழுந்து,

இப்பேருலகை வலம் வந்த அற்புதப் பொழிவின்,

சில துளிகளைத்

தங்களுடன் பகிர்ந்து கொள்வதில்

பெரு மகிழ்வு அடைகிறேன்.

எ ழு த் து

எழுத்து பற்றி இனிக்க, இனிக்கப் பேசியவர்,

இலக்கியம், தமிழ், அரசியல்,

சமூகம்

இவற்றின் வளர்ச்சிக்காகவே,

தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டவர்.

இளம் வயது முதலே,

எழுத்து இவர் கை வசமாகிப் போனது.

இவரது பேச்சு,

உலகையே உற்று நோக்க வைத்தது.

இவரது எழுத்தையும், பேச்சையும் சுமந்து

இதுவரை ஐம்பது நூல்கள் வெளிவந்துள்ளன.

அச்சு வாகனம் ஏற, பலப்பல நூல்கள் அணிவகுத்து நிற்கின்றன.

ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல

ஓராண்டு, ஈராண்டு அல்ல

முழுதாய் 14 ஆண்டுகளைக் கடந்தும்

நாள்தோறும்,

காலைப் பொழுதில்

ஒவ்வொரு வீட்டு வரவேற்வறையிலும்

தொலைக் காட்சி வழி ஒலிக்கும்

ஒன்றே சொல், நன்றே சொல்

நிகழ்வின் நாயகர்.

      கடந்த ஆறு ஆண்டுகளாக, தினமும், காலை ஆறு மணிக்கு, இலட்சோப இலட்சம் அலைபேசிகளை வந்தடையும், ஒரு நிமிடச் செய்தி யின் குரலுக்கும், கருத்திற்கும் சொந்தக்காரர்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின்

நிறுவுநர்,

பொதுச் செயலாளர்.

கருஞ்சட்டைத் தமிழர்

இதழின்

ஆசிரியர்,

தமிழ்நாடு பாடத்திட்ட அறிவுரைக்குழு

உறுப்பினர்

இவையாவற்றிற்கும் மேலாக

பேச்சை ஆள்பவர்,

எழுத்தை ஆள்பவர்


பேரா சுப.வீரபாண்டியன்