16 ஆகஸ்ட் 2021

பெயர்த்திக்காக

  

     கோடை காலம் தொடங்கியது.

     குளத்து நீர் மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியது.

     இருவருக்கும் கவலை வந்தது.

     குளத்தை நீரின்றி வற்றாமல் காப்பது எப்படி?

     யோசித்தனர்.

     ஓர் எண்ணம் தோன்றியது.

     அன்று மாலை, குளத்திற்கு கை, கால் கழுவ வந்த, அந்த ஊரின் தலைவரைக் கண்டு இருவரும் வணங்கினர்.

     குளத்தைத் தூர்வாரிக் கரைகளை உயர்த்துங்களேன் என வேண்டினர்.

     குளம் தூர்வாரப் பட்டது.

     கரை உயர்த்தப்பட்டது.

     கோடையிலும் குளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

     ஊர் தலைவரிடம் கோரிக்க வைத்தவர்கள் யார் தெரியுமா?

     ஒருவர் நண்டு.

     மற்றொருவர் நத்தை.

---

     ஒற்றுமையோடு வாழ்ந்தவர்கள்தான் இவர்கள்.

     ஆனாலும் தற்பொழுது, வேற்றுமை தலை தூக்கத் தொடங்கியது.

     உதவும் மனப்பான்மை குறையத் தொடங்கியது.

     மனிதர்களாய் மாறியவுடன், குணமும் மாறிவிட்டது.

     வேறு வழியின்றி, மீண்டும் கடவுளைச் சந்தித்தனர்.

     எங்களது பழைய உருவைக் கொடுங்கள்.

     மனிதப் பிறவி வேண்டவே வேண்டாம் என மன்றாடினார்கள்.

     கடவுளும் சம்மதித்தார்.

     மீண்டும் பழைய உருவைப் பெற்றனர்.

     காக்கைகளாய் மகிழ்வோடு பறந்தனர்.

---

     இருவரும் நண்பர்கள்.

     ஒருவர் உருவில் பெருத்தவர்.

     மற்றவரோ சின்னஞ் சிறியவர்.

     சின்னவருக்கு எப்பொழுதுமே, தான் சிறியவராக இருப்பதில் வருத்தம்.

     ஒரு நாள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெருங் கழுகு, மேலிருந்து விரைந்து கீழிறங்கி, தன் கூரிய கால்களால் இருவரையும் பிடிக்க முயன்றது.

     சின்னவரோ, ஓட்டமாய் ஓடி, ஒரு சிறு பொந்தில் ஒளிந்து கொள்ள,  அந்தப் பொந்திற்குள் நுழைய முடியாத,  பெரியவரோ கழுகிற்குப் பலியானார்.

     அன்று அதன் தாய் சொன்னது.

     நம்மை  மற்றவர்களோடு ஒப்பிடுதல் தவறு.

     சிறியவனாய் இருந்ததால்தான் இன்று தப்பினாய்.

     உன்  சிறிய உருவம்தான் உன்னைக் காப்பாற்றி இருக்கிறது.

     சுண்டெலி உண்மையை உணர்ந்தது.

---

     நடக்கவே முடியவில்லை.

     காலில் பயங்கர வலி.

     காரணம் ஒரு முள்.

     எவ்வளவோ முயன்று பார்த்தது.

     முள்ளை எடுக்க முடியவில்லை.

     பெருத்த உருவம் என்பதால், குனியவோ, முள்ளை எடுக்கவோ முடியவில்லை.

     நான் பெரியவன் என்று அதுநாள் வரை இருந்த எண்ணம் தொலைந்தது.

     அப்பொழுதுதான் அந்தச் சிறுவன் வந்தான்.

     முள்ளை எடுத்தான்.

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை உணர்ந்தது யானை.

    பூனைக்கு நன்றி கூறியது.

---

     நண்பன் கதிருக்குப் பிறந்தநாள்.

     பணக்கார வீட்டுப் பிள்ளையான, தன் நண்பன்  கதிருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்தான் குரு.

     மூன்று செடிக் கன்றுகளைக் கொடுத்தான்.

---

     நல்ல மதிப்பெண்களைப் பெறவும், அதன் மூலம், ஓர் உயர்ந்த வேலையில் அமர்ந்து, கை நிறைய சம்பாதிப்பதற்காக மட்டுமே புத்தகங்களைப் புரட்டும்,  மனிதர்களிடமிருந்து, முற்றிலும் வேறுபட்டவர் இவர்.

     தன் பணி ஓய்விற்குப் பிறகுதான் தேடித் தேடி படிக்கத் தொடங்கினார்.

     கூட்டுக் குடும்பம் என்பது வெற்றுச் சொல்லாய், அர்த்தமற்ற வார்த்தையாய் மாறிப் போய்விட்ட இக்காலத்தில், இவர் தன் பெயர்த்திக்காகப் படிக்கத் தொடங்கினார்.

     தாத்தா, பாட்டி என்பதெல்லாம், தூரத்து சொந்தமாய் மாறிவிட்ட, இன்றைய சூழலில், தன் பெயர்த்திக்காகப் படிக்கத் தொடங்கினார்.

     தெனாலி ராமன்

     முல்லா

     பீர்பால்

     பஞ்ச தந்திரக் கதைகள் என இவரது தேடல் தொடர்ந்தது.

     படித்த கதைகளைப் பெயர்த்திக்குச் சொல்லிச், சொல்லி மகிழ்ந்தவர், நாளடைவில், தன் கற்பனையில் உதித்த கதைகளையும் சொல்லத் தொடங்கினார்.

     யானை, பூனை, கரடி, மான், மயில் என ஒவ்வொரு விலங்கையும், தன் கதைக்குள் அழைத்து வந்து, உலாவ விட்டு, ஒரு நீதியோடு கதையை முடித்தார்.

     விலங்குகளை மட்டுமல்ல, சின்னஞ் சிறுவர்களையும், இவர், தன் கதையின் நாயகர்களாய் மாற்றினார்.

     சுருதிகா.

     இவர் பெயர்த்தி.

     கொடுத்து வைத்தவர்.

     சுருதிகாவிற்காக, சுருதியோடு அருவியாய் இறங்கிய கதைகள், இன்று வெள்ளைத் தாளில் இடம் பிடித்திருக்கின்றன.

     மொத்தம் 16 சிறு கதைகள்.

     நேர்மையை, நியாயத்தை, இலட்சியத்தை, கருணையை, உன்னத உறவை உணர்த்தும் கதைகள்.

     இவர் கரந்தையில் பிறந்தவர்.

     சிறு வயதில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்றவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்த்தியையும், கண்ணகிக் கோயிலைக் கண்டு பிடித்ததற்காக, குடியரசுத் தலைவர் விருது பெற்ற, கரந்தைப் புலவர் கல்லூரியின் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் மகளையும், தன் உற்ற தோழியாய் பெற்றவர்.

     கரந்தையில் படித்ததனால், தமிழின் மீது பற்றும், எழுத்தின்மீது பாசமும் கொண்டவர்.

    

இவர்

அஞ்சலகத் துறையில்

பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தன் பெயர்த்திக்காக ஓயாமல் கதை சொல்லி வருபவர்.

தன் பெயர்த்தி பெயரிலேயே ஒரு பதிப்பமும் தொடங்கியிருக்கிறார்.

இவர்தான்

நீலாவதி

இவரது நூல்


சுட்டிக் கதைகள்

 

படிப்பதற்கோ, எழுதுவதற்கோ

வயது என்றுமே

ஒரு தடையல்ல

என்பதை நிரூபித்திருக்கிறார்.

வாழ்த்துகள்.

தொடர்ந்து எழுதுங்கள் சகோதரியாரே.

 

 

வெளியீடு

சுருதிலயம்,

14, வைகை தெரு, பாரத் நகர்,

ஆதம்பாக்கம்,

சென்னை – 600 088.

அலைபேசி 94441 24285

மின்னஞ்சல் balajothi1949@gmail.com

விலை ரூ.125