07 ஜூலை 2022

வள்ளியம்மை

      ஆண்டு 1913.

     தென்னாப்பிரிக்காவின் மாரிட்ஸ் பர்க்.

     இது ஒரு சிறைச்சாலை.

     இந்தச் சிறைச்சாலையில் வாடி வதங்கிக் கொண்டிருந்தார் ஒரு இளம் பெண்.

     தமிழ்ப் பெண்.

   

  காரணம் உயர் நீதி மன்ற உத்தரவு.

     1913 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் நாள், தென்னாப்பிரிக்காவின் கேப் உயர்நீதி மன்றம் ஓர் உத்தரவினைப் பிறப்பித்தது.

     இந்தியர்கள் தங்கள் பரம்பரை வழக்கப்படி திருமணம் செய்து கொண்டால், அந்தத் திருமணம் செல்லவே செல்லாது என அடித்துச் சொன்னது.

     கிறித்துவ மதச் சம்பிரதாயப்படி, கிறித்துவ தேவாலயங்களில்தான் திருமணங்கள் நடத்தப்பெற வேண்டும், கிறித்துவ தேவாலயங்களில் திருமணங்கள்  பதிவு செய்யப்பெற்றே ஆக வேண்டும்.

     போராட்டம் வெடித்தது.

     போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு வழக்கறிஞர்.

     பதினைந்து வயது சிறுமியாய், இவரும் போராட்டத்தில், முன்னனியில் நின்றார்.

     கைது செய்யப்பட்டார்.

     சிறையில் அடைக்கப் பட்டார்.

     சரியான உணவு கிடையாது.

     தூக்கம் கிடையவே கிடையாது.

     கடுமையான வேலைகள்.

     உடல் மெலிந்தார்.

     சிறையில் ஒரு நாள், ஒரு வெள்ளைக்கார அதிகாரி, இவரை பார்த்துக் கத்தினார்.

     எதற்காக இந்த வீண் போராட்டம்.

     பேசாமல் தென்னாப்பிரிக்கராய்  பதிவு செய்து, பிழைக்கும் வழியைப் பார்.

     உங்கள் இந்தியாவிற்கு ஒரு கொடி கூட கிடையாது.

     மேலும், அது ஒரு நாடே அல்ல.

     எதற்காக, இல்லாத இந்தியாவிற்காகப் போராடுகிறாய்.

     பேச்சைக் கேட்டுக் கொதித்து எழுந்தாள் அந்த இளம் பெண்.

     கண்கள் நெருப்பைக் கக்கின.

     வீறு கொண்டு எழுந்தவர், தன் புடவையின் ஒரு பகுதியை வெறியுடன் கிழித்தார்.

     கிழிக்கப் பட்ட தனது புடவையினையே, கொடியாக, அவ்வெள்ளையன் முன் ஆட்டினார்.

     இதோ எங்கள் கொடி.

     எங்கள் தாய் திருநாட்டின் வெற்றிக் கொடி.

     இதோ எங்கள் கொடி.

     பாரடா வெள்ளையனே, பார்.

     இதோ எங்கள் கொடி.

     காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அடுத்தடுத்து அமைந்திருந்த சேலை அது.

     இவர்தான், நம் தேசியக் கொடியை முதன் முதலில் நமக்கு அளித்த பெருமைக்கு உரியவர்.

   


  தில்லையாடி வள்ளியம்மை.

     தில்லையாடி சிறையில் இருந்ததோ சில மாதங்கள்தான்.

     ஆனால் அதற்குள், அவர் அனுபவித்த  சித்திரவதைகள் ஏராளம், ஏராளம்.

     1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் விடுதலை செய்யப் பெற்றார்.

     நடக்கக் கூட இயலாத நிலை.

    தன் குடிசைக்கு வந்து படுத்தவர்தான், பின் எழவேயில்லை.

     படுக்கையில் கண்களைத் திறந்து பார்க்கக்கூட வலுவின்றிப் படுத்திருந்தபோது, போராட்டத் தலைவர், வழக்கறிஞர் வந்தார்.

     பாயில் படுத்திருந்த உருவத்தைப் பார்த்துக் கண் கலங்கினார்.

     எப்படி இருந்த பெண். இப்படி ஆகிவிட்டாரே?

     இனி இவர் பிழைக்கப் போவதில்லை.

     நான்தானே இதற்குக் காரணம்.

     என்னால்தானே, இவர் போராட்டத்தில் குதித்தார்.

     வள்ளியம்மையின் அருகில் குனிந்தார்.

     நீ சிறை சென்றதை எண்ணி வருத்தப்படுகிறாயா?

     அவ்வளவுதான், குழி விழுந்த கண்களில் தீப்பொறி பறந்தது.

     ஒரு பரவசம், ஒரு ஆவேசம்.

     உங்கள் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமைப் படுகிறேன்.

     நீங்கள் மீண்டும் ஆணையிட்டால், அடுத்தப் போராட்டத்திலும் முதல் ஆளாக முன் நிற்பேன்.

     அதற்கு மேல் பேச முடியவில்லை.

     மூச்சு வாங்கியது.

     உடலில் வலு சிறிதும் இல்லை.

     உள்ளமோ உறுதியாய், இரும்பாய் இருந்தது.

      சிறையில் இருந்து வெளிவந்தபின், அவர் உடலில் உயிர் தங்கி இருந்தது என்னவோ, வெறும் எட்டே எட்டு நாள்கள்தான்.

     1914, பிப்ரவரி 22.

     மூச்சு அடங்கியது.

     தில்லையாடி முனுசாமி, ஜானகியம்மாளின் மகளாய், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, வளர்ந்து, போராடி, தமிழ் மண்ணையே மிதிக்காமல், தென்னாப்பிரிக்காவிலேயே உயிர் துறந்தார், தில்லையாடி வள்ளியம்மை.

     வழக்கறிஞர் துடிதுடித்துப் போனார்.

     இவ்வழக்கறிஞர்தான்,

     மோகன்தாஸ் கரம்சன் காந்தி.

     மகாத்மா காந்தி.

     அடுத்த ஆண்டே, இந்தியாவிற்கு வந்த காந்திக்குத் தணியாத ஓர் ஆசை,

     வள்ளியம்மையின் தில்லையாடி மண்ணைப் பார்க்க வேண்டும்.

     அம்மண்ணைத் தொட்டு மகிழவேண்டும் என்ற ஆசை.

     1915 மே மாதம் ஒன்றாம் நாள் தில்லையாடிக்கு வந்தார்.

     தில்லையாடியில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.

     வள்ளியம்மையை நினைத்தபடி, நேரம் நகர்வது தெரியாமல் அமர்ந்திருந்தார்.

     காந்தியின் உள்ளத்தில் ஓர் நிம்மதி.

     காந்தி அமர்ந்திருந்த இடத்தில், இன்று ஓங்கி உயர்ந்து நிற்கிறது ஒரு நினைவுத் தூண்.

---

     கடந்த 23.6.2022  வியாழக்கிழமை நண்பகல் வேளையில், தில்லையாடி மண்ணில் கால் பதித்தபோது, உடலும், உள்ளமும் ஒரு சேர சிலிர்த்தது.

    நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர்கள் திரு அ.சதாசிவம், இரும்புத்தலை ஈன்றெடுத்த இனிய நண்பர் திரு துரை.நடராசன், ஆடுதுறை திரு டி.கோபால், திருக்கடையூர் திரு காளிதாசு ஆகியோருடன் இணைந்து தில்லையாடிக்குச் சென்றேன்.

     தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபப் பொறுப்பாளர் திரு ஹைதார் அலி அவர்கள் மகிழ்வோடு வரவேற்றார்.

    

      தென்னாப்பிரிக்கப் பேராட்டக் காட்சிகள்.

     தில்லையாடி வள்ளியம்மை இடம்பெற்றிருக்கும் மகளிர் அணி படம்.

     தென்னாப்பிரிக்காவில் வள்ளியம்மை நினைவுச் சின்னம்.

     வள்ளியம்மைக்கு காந்தி ஆறுதல் கூறும் காட்சியின் வரைபடம்.

     1914 இல் காந்தியின் உருவம்.

     மகத்தான டிரான்ஸ்வால் அணிவகுப்பு.

     நாகப்பன், காந்தியடிகள் சாத்வீக எதிர்ப்புப் போராட்டக் காட்சி.

     துப்பாக்கிக் குண்டிற்கு இரையான பச்சையப்பனின் மனைவி, குழந்தை.

     அறப் போராட்டத்தை முன்னின்று நடத்திய வீரர்கள்.

     தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு கடத்தப் பட்டவர்கள்.

     சிறைசென்ற வீராங்கனைகள்.

     காந்தி தமிழில் எழுதிய கடிதம் என வரலாற்றுச் சிறப்பு மிக்க படங்களால் நிரம்பி வழிந்தது நினைவு மண்டபம்.

     நெகிழ்ந்துபோய், ஒவ்வொரு படத்தின் முன்னும் நின்றோம்.

     போராட்டக் காட்சிகள் மனதுள் திரைப்படமாய் ஓடின.

    பின்னர், நினைவு மண்டபத்திற்கு  வெளியே,  1915 ஆம் ஆண்டு காந்தி அமர்ந்திருந்த இடத்தில் நின்றோம்.

     மனதில் ஓர் இனம் புரியா உணர்வு.

    தனது இன்னுயிரை துச்சமாய் மதித்துப் போராடிய தில்லையாடி வள்ளியம்மையை மனதார வணங்கினோம்.

     தில்லையாடி வள்ளியம்மை புகழ் ஓங்குக.