12 ஜூலை 2022

நலம்பெற வாழ்த்துவோம்

  


     மெய்யறம்.

     மெய்யறிவு.

     பாடல் திரட்டு.

     இவையெல்லாம் இவர் எழுதிய கவிதை நூல்கள்.

     திருக்குறளுக்கும், சிவஞான போதத்திற்கும் உரை எழுதியுள்ளார்.

    

திருக்குறளை மணக்குடவர் உரையுடனும், தொல்காப்பியத்தை இளம்பூரணர் உரையுடனும் பதிப்பித்துள்ளார்.

     மனம் போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம்.

      இவையெல்லாம் இவரது மொழி பெயர்ப்பு நூல்கள்.

     இதையெல்லாம் விட, இவர் தனது சுயசரிதையையே,  கவிச்சரமாகத்தான் தொகுத்துக் கொடுத்துள்ளார். 

     இவர் தமிழறிஞர் மட்டுமல்ல.

     இந்தியா முழுமையும் நன்கு அறிந்த சுதந்திரப் பேராட்ட வீரர்.

     சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்.

இவர்தான்,

கப்பலோட்டிய தமிழன்,

செக்கிழுத்த செம்மல்


வ.உ.சிதம்பரனார்.

---

     இவர் ஒரு தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர்.

     ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர்.

     இழந்த தமிழின் பெருமைகளை மீட்கத் தோன்றிய தமிழ்ச் சங்கத்தின் ஒப்பிலாத் தலைவர்.

     வடமொழியும், தமிழும் கலந்து பேசும் மணிப்பிரவாள நடையைத் தகர்த்து, தனித் தமிழ் நடையை, கரந்தை நடையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியவர்.

     1919 ஆம் ஆண்டிலேயே, தமிழ் மொழியை உயர் தனிச் செம்மொழியாய் அறிவிக்க, முதன் முதலாய் தீர்மானம் இயற்றியவர்.

     1921 ஆம் ஆண்டிலேயே, தமிழுக்குத் தேவை, தனியே ஒரு பல்கலைக் கழகம் என முதல் தீர்மானத்தை இயற்றியவர்.

     அனைத்துத் துறைத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும் என முழங்கியவர்.

     இந்திய வகுப்பறைக்குள் இந்தி, நுழைய முயற்சித்தபோது, எதிர்த்து முதல் குரல் கொடுத்து, முதல் தீர்மானமும் இயற்றி, களம் கண்டுப் போராடியவர்.

     அன்று தஞ்சையில் இருந்த 40 பள்ளிகளை, 170 பள்ளிகளாக உயர்த்தியவர்.

     சத்திரங்கள் அனைத்தையும், பள்ளிக் கூடங்களின் இலவச உணவு விடுதிகளாய் மாற்றியவர்.

     திருவையாற்று வடமொழிக் கல்லூரியை, தமிழ்க் கல்லூரியாய், அரசர் கல்லூரியாய் உரு மாற்றி, தமிழைப் புகுத்தியவர்.

இவர்தான்,

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

முதற்றலைவர்

செந்தமிழ்ப் புலவலர்,


தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்.

---

     இவர் ஒரு நாளிதழின் நிறுவுநர்.

     தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப் படுத்தி, தன் இதழை நடத்தியவர்.

     சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில்,  எளிய தமிழ் நடையில் இதழை நடத்தியவர்.

இவர்தான்

தினத் தந்தி இதழின்

நிறுவுநர்


ஆதித்தனார்.

---

     இவர் இருபதுக்கும் மேற்பட்ட உரைநடை நூல்களின் ஆசிரியர்.

     பதினான்கு கட்டுரைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டவர்.

     தமிழக வானொலி நிலையங்களில் தொடர்ந்து உரையாற்றி, தன் உரைகளுக்கு எல்லாம், நூல் வடிவம் கொடுத்தவர்.

     இவர் படைத்த நூல்களுள் தலை சிறந்ததாகவும், வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, இவரது

தமிழகம் ஊரும், பேரும்

என்னும் நூலாகும்.

இவர்தான்


ரா.பி.சேது பிள்ளை.

---

     இவர் இந்திய அரசின் முதல் நிதி அமைச்சர்.

     இந்திய நாடாளுமன்றத்தின், முதல் தமிழ் சபாநாயகர்.

     தமிழ் மொழித் திறனோடு, ஆங்கில மொழிப் புலமையும் கைவரப் பெற்றவர்.

     சிலப்பதிகாரத்திற்கும், குற்றாலக் குறவஞ்சிக்கும் உரை எழுதியவர்.

     தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்து, தேவாரப் பண் ஆராய்ச்சிக் கருத்தரங்கங்கள் நடத்தி, தேவாரப் பண்ணிசை இராகங்களை முறைப் படுத்தியவர்.

இவர்தான்


ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

---

     இவர் 1891 ஆம் ஆண்டிலேயே, சுகுண விலாச சபா என்னும் பெயரில், ஒரு நாடக சபையைத் தோற்றுவித்து, தானே நாடகங்களை எழுதி, தானே நடித்ததோடு, பிற அறிஞர்களையும் நடிக்க வைத்தவர்.

     ஐந்து சேக்ஸ்பியர் நாடகங்களை, அதன் சுவை குன்றாமல், தமிழுக்கு அழைத்து வந்தவர்.

     தமிழில் முப்பது, ஆங்கிலத்தில் முப்பது நூல்களை எழுதியவர்.

இவர்தான்,

தமிழ் நாடகத் தந்தை


பம்மல் சம்பந்த முதலியார்.

---

     இவர் 1805 ஆம் ஆண்டு முதல் 1861 ஆம் ஆண்டுவரை, 56 ஆண்டுகால, தென்னிந்திய நீதி மன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

     நீதி மன்ற மொழியாகத் தமிழ், நுழையும் பொழுதுதான், தமிழ் மொழி முழுமையடையும் எனக் கருதிச் செயலாற்றியவர்.

பிரதாப முதலியார் சரித்திரம்

என்னும்

முதல் தமிழ் நாவலின் ஆசிரியர்

இவர்தான்


மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

---

     இவர் திருக்குறளுக்காகவே வாழ்ந்தவர்.

     திருக்குறள் தமிழக மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் பின்னிப் பிணைந்து தொடர வேண்டும் என்று கருதி, தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறளைப் பரப்பியவர்.

     1941 ஆம் ஆண்டில், திருக்குறளக்கு என்றே தனியாக ஒரு மாநாடு நடத்தியவர்.

     வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் ஏன் எழுதினார், வள்ளுவர் காட்டிய வழி, வாள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

இவர்தான்


திருக்குறள் வீ.முனுசாமி.

---

இவர்

தரசதன் குறையும் கைகேயி நிறையும்,

தமிழும் தமிழரும்

பழந்தமிழ் நாடு

நற்றமிழ் நாடு

என பல நூல்களை எழுதியவர்.

மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத் தலைவர்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்

முன்னனியில் நின்றவர்

இவர்தான்

வ.உ.சி அவர்களின் வழக்கறிஞர்


ச.சோமசுந்தர பாரதியார்.

---

இவர்

தமிழ் இலக்கிய வரலாற்றை

முதன் முதலாக எழுதிய பெருமைக்கு உரியவர்.

     தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் முதலான மொழிகளை நன்கு அறிந்த பன்மொழிப் புலவர்.

அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

இவர்தான்


கா.சு.பிள்ளை.

---

     இவர், தமிழ் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், தமிழின் பெருமையை, அருமையை, தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்னும் உன்னத நோக்குடையவர்.

     எழுத்தும், எண்ணமும் நூல் வடிவம் பெறும் பொழுதுதான், அது சமூகத்தைச் சென்றடையும் என்ற உயர்ந்த எண்ணம் உடையவர்.

     பழைய தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து அச்சிட்டு வாழவைத்தவர்.

தமிழ் பதிப்புத் துறையில் முன்னோடி

இவர்தான்


சி.வை.தாமோதரம் பிள்ளை.

---

     இவர்களுள் பலரை, நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

     சிலர் அனைவரையும் நன்கு அறிந்திருப்பார்கள்.

     தமிழ் மொழி தழைக்கவும், தமிழர்தம் வாழ்வு செழிக்கவும், தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து பாடுபட்டவர்களின் பட்டியலில், ஒரு சிலரை மட்டுமே இங்கு நினைவு கூர்ந்துள்ளோம்.

     ஆனால், இவர்களுக்குள், தமிழறிஞர்கள் என்பதையும் கடந்து, சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்பதையும் தாண்டி, ஒரு ஒற்றுமை உள்ளதை அறிவீர்களா?

     ஆம்.

     இவர்களை அனைவரும் சட்டம் பயின்ற வழக்கறிஞர்கள்.

---

கடந்த 10.7.2022

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்,

தஞ்சை வழக்கறிஞர்


திரு வே.முத்து மாரியப்பன் அவர்கள்

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

என்னும் தலைப்பில்

சொற்பெருக்காற்றி அமர்ந்தபோது,

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

இவ்வளவு பேர் இருக்கிறார்களா?

இன்னும் இருக்கிறார்களா?

என்னும் வியப்புதான் எற்பட்டது.

திருவேதிகுடி, பெருநிலக்கிழார்


திரு பால.துரையரசன் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற

இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,

ஏடகம், சுவடியியல் மாணவர்


திரு நா.நந்தகிஷோர் அவர்கள்

வரவேற்றார்.

ஏடகம், சுவடியியல் மாணவர்


திரு கா.வெங்கடேஷ் அவர்கள்

நன்றி கூற, விழா இனிது நிறைவுற்றது.

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி எஸ்.சபீதா அவர்கள்

விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

 

சாலைகள்

பயணிப்பதற்கே அல்ல,

பறப்பதற்கு – என்னும்

கொள்கையுடைய

பொறுப்பற்ற – ஒரு

இரு சக்கர வாகன ஓட்டியின்

வெகுவேகத் தாக்குதலால் – மெல்லப்

பயணித்த

தந்தையும், மகளும்

ஆளுக்கு ஒரு பக்கம்

பந்தாய் பறந்து விழுந்தனர்.

 

தந்தைக்கு இடது கையிலும்,

துறைத் தேர்வு எழுதிட,

அல்லும் பகலும் அயராது படித்துத்

தயாராய் காத்திருந்த மகளுக்கு

வலது கையிலும் மாவுக் கட்டு.

 

சொல்லொன்னா துயர்

உள்ளத்தைப்

பெரும் புயலாய் தாக்கியபோதும்,

அடுத்த நாளே,

ஏடகப் பொழிவைச்

செறிவாக்கப்

புறப்பட்டு வந்துவிட்ட

தந்தை

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம்.

 

தந்தையும், மகளும்

விரையில் நலம்பெறவும்,

மகள்

தேர்வில்

வாகை சூடவும் வாழ்த்துவோம்.